articles

img

மதச்சார்பின்மை எனும் தேசத்தின் அஸ்திவாரம் - சுனில் பி.இளயிடம்

மதரீதியான அடையாளம் உள்ளதும், இதிகாசத் தன்மையுள்ளதுமான பெயர்களுக்குப் பதில் நிலப்பிரதேச அடிப்படையில் நடைமுறைக்கு வந்ததும் வரலாற்றுப் பரிணாமங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதுமாகிய ‘இந்தியா’ என்ற பெயர்தான்  தேசத்தின் பெயராக அங்கீகரிக்கப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி வடிவமைப்பிலேயே உள்ளார்ந்த மதச்சார்பின்மையின் முத்திரையைக் காணமுடியும்.

மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக மதச்சார் பின்மைதான் இந்தியா எனும் தேசத் திற்கு அஸ்திவாரம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சம்பந்தமாக அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களில் டாக்டர் அம்பேத் கர் குறிப்பிட்டது போல் மதச்சார்பின்மை இல்லை யென்றால்  அரசியல் அமைப்புச் சட்டம் முன்வைக்கிற மற்ற எல்லா சிறப்பு அம்சங்களும் பொருளற்றதாகப் போகும். அந்த அளவுக்கு ஆழமாக மதச்சார்பின்மை என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இரத்த சம்பந்தமுள்ளதாக இருக்கிறது - உயிருள்ள உடலின் சுவாசக் காற்று போல!

அரசியல் அமைப்புச் சட்டம் இந்துத்துவவாதி களுக்கு கண்ணில் தூசியாக உறுத்துகிறது. வேறு காரணம் ஏதும் இல்லை. மதச்சார்பின்மைச் சிந்த னையை ஒழிப்பதற்குக் கடந்த எழுபது ஆண்டுகளாக அவர்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். மதச்சார்பின்மை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய மான அம்சம் அல்ல என்று வாதிப்பதற்கு இந்துத்துவ  மதவாதிகள் காலங்காலமாக எழுப்பி வருகிற ஒரு  வாதம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ஆரம்பத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல் இருக்க வில்லை என்பதாகும். 1975-ல் 42-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திராகாந்திதான் அதை முகவுரையில் சேர்த்தார் என்றும், அது மேற்கத்திய சிந்தனை என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையின் அடிப்படை அம்சத்திற்குச் செல்வதற்கு உதவுகிற  இரண்டு விஷயங்கள் நம் முன் உள்ளன. அவற்றில் முதலாவது 1973-ன் கேச வானந்த பாரதி வழக்காகும். 1975-ல் செய்யப்பட்ட திருத்தத்திற்கு முன்புதான் உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நாடாளுமன்றத்தில் இருக்கிற பெரும்பான்மையின் பேரால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் திடமான தீர்ப்பு வழங்கியது. இந்த அடிப்படை அம்சத்தின் பகுதிதான் மதச்சார்பின்மை என்று உச்சநீதிமன்றம் உறுதியாகச் சொல்லவும் செய்தது. பாபர் மசூதியைத் தகர்த்ததைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவாகச் செயல்பட்ட மாநில அரசுகளைக் கலைத்தது சரிதான் என்று நீதிமன்றம் சொன்னதும் இதன் அடிப்படையில்தான்.  

ஆக்கப்பூர்வமான மதச்சார்பின்மை 

அரசியல் நிர்ணய சபையில் சுதந்திர இந்தியா வின் மதச்சார்பின்மை அம்சம் குறித்து விரிவான அளவில் விவாதங்கள் நடைபெற்றன என்பது உண்மை. தேசம் மதவிஷயங்களிலிருந்து முழுமை யாக விலகியிருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் உள்ள மதச்சார்பின்மைச் சிந்தனை இந்தியாவில் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்ற நிலைபாட்டையே  அரசியல் நிர்ணயசபை ஆரம்பத்தில் பின்பற்றியது. 565 குறுநில மன்னர்களின் பிரதேசங்களும், 13 பிரிட்டிஷ் மாகாணங்களும் எட்டு மதங்களும் எண்ணற்ற சாதிகளும் மொழிகளும் இனக்குழுச் சமூகங்களும் உள்ள இந்தியாவில் அரசாங்கம் மதவிஷயங்களில் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை என்ற நிலை வந்தால் அது சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமை களையே இல்லாமற் செய்துவிடும்; அரசியல் சட்டம் தீண்டாமைக்குத் தடைவிதித்ததும், நாடாளுமன்றம் இந்து கோட் மசோதாவை அங்கீகரித்ததும் எல்லாம் நல்ல மாற்றத்திற்கான வாய்ப்பின்  அடிப்படையில்தான். எல்லா மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சமமான உரிமை அதிகாரங்கள் உள்ள தேசமாக இந்தியா நிலைப்பெற்றி ருக்க வேண்டுமென்றால் வெறும் மதச்சார்பின்மை க்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான மதச்சார்பின்மைக் கொள்கையை தேசம் உயர்த்திப் பிடிக்க வேண்டியிருந்தது. 

1920கள் வரை நடைமுறையில் இருந்ததும், பாலகங்காதர திலகர் போன்றவர்கள் தலைமை வகித்த துமாகிய மதம் சார்ந்த தேசிய சிந்தனையைப் புறந் தள்ளிக் கொண்டு காந்திஜியின் தலைமையில் உரு வாகிவந்த மதச்சார்பற்ற தேசிய சிந்தனைதான் இந்தி யாவைச் சுதந்திரத்தை நோக்கி இட்டுச்சென்றது. அதன் சிறப்பு அம்சங்கள்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் பிரகாசிக்கிறது. “நாம் இந்திய மக்கள்” என்கிற பிரசித்திப் பெற்ற  ஆரம்ப வாக்கியத்திற்குப் பதில் தெய்வத்தின் பெயருடன் அரசியல் அமைப்புச் சட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தி அதைத் தோல்வியுறச் செய்துதான் முகவுரைக்கு இறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டது என்கிற விஷயமும் கவனிக்கத்தக்கதாகும். தெய்வத்தினுடையதோ, மதத்தினுடையதோ அல்ல; மாறாக எல்லா பிரிவுக ளையும் சேர்ந்த மக்களுடையதுதான் இந்த தேசம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் அறிவிக்கப்படுகிறது என்பதே இதன் அர்த்தம். 

மதச்சார்பின்மை குறித்த வெவ்வேறு கண்ணோட் டங்களை மதிப்பீடு செய்துதான் ஆக்கப்பூர்வமான மதச்சார்பின்மை என்ற சிந்தனைக்கு அரசியல் நிர்ணயசபை வந்தது. அரசியல் நிர்ணயசபை இது சம்பந்தமான மூன்று கண்ணோட்டங்களையாவது பிரதிபலித்திருக்கும். மதச்சார்பின்மை என்கிற கருத்தை முன்வைத்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் அதற்கு வழங்கிய ‘மதச்சார்பற்ற தார்மீகம்’ என்கிற கருத்துதான் முதலாவது. மேற்கத்திய மதச்சார் பின்மை சிந்தனைக்கு அஸ்திவாரம் போட்ட கருத்தா கும் அது. இதன் மறுபக்கம் கலாச்சார தேசியம் என்ற கருத்தின் மறைவில் மததேசியவாதம் உயர்த்திய இந்துத்துவ மதவாத நிலைபாடும் அரசியல் நிர்ணயசபையில் பிரதிபலித்தது. இத்துடன் ‘காந்திஜி சர்வ தர்ம சமபாவன’ என்று சொல்லப்பட்ட ‘எந்த மதத்தோடும் வெறுப்பு இல்லாமல் இருப்பது’ என்ற கண்ணோட்டமும் உருவானது. மூன்றாவது கண்ணோட்டத்தைத்தான் அரசியல் நிர்ணசபை ஏற்றுக்கொண்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் பூரணமாக ஒன்று கலந்த மதச்சார்பின்மையின் அடிப்படை இதுதான். 

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மை மதச்சார்பின்மையில் உறுதியாகக் காலூன்றி யது என்கிற உண்மையை அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட பல பிரிவுகளும் தெளிவுப்படுத்தி யுள்ளன. சட்டத்தின் முன் நாட்டில் உள்ள அனை வரும் சமம் என்று அறிவிக்கிற 14-வது பிரிவும், சாதி யின், மதத்தின் பேரால் வேற்றுமை கூடாது என்று அறிவிக்கிற 15-வது பிரிவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மதச்சார்பின்மையின் வலுவான அஸ்தி வாரத்தைக் கட்டமைத்துள்ளது. அதுபோல்தான் மத நம்பிக்கையாளர் அனைவருக்கும் அவரவர் நம்பிக் கையை அறிவிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் 25-வது பிரிவு உரிமை வழங்குகிறது. இதற்குப் பிறகு வருகிற 26-வது பிரிவு வெவ்வேறு மதப்பிரிவினர்க்கு மத நிறுவனங்கள் நடத்துவதற்கும், சொத்து சேகரிப்ப தற்கும், அதைக் கையாளுவதற்கும் உரிமை வழங்கு கிறது. இந்த இரண்டு பிரிவுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக நிர்ணயிக்கப் பட்ட ஜனநாயகத்தின் மதச்சார்பற்றத் தன்மையை உறுதிபடக் கூறுகிறவை என்று 1962-லேயே உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

அரசியல் நிர்ணய  சபையின் வரலாறு 

உண்மையில் வரலாற்றின் எத்தனையோ கட்டங்களுக்குப் பின்னர்தான் இந்திய அரசியல் சட்டம் என்ற கருத்து அரசியல் நிர்ணய சபையில் வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் உரு வாக்குவதற்கான முயற்சியின் வரலாறு அதன் மிக நீண்ட பயணத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது. 1895-ல் சுதந்திர மசோதா, 1925-ல் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு அஸோஸியேஷன் தயாரித்த அரசியல் அமைப்புச் சட்ட நகல், 1927-ல் சைமன் கமி ஷன் பகிஷ்கரிப்பின்போது தயாரிக்கப்பட்ட  நேரு ரிப்போர்ட், 1935-ல் இந்திய அரசுச் சட்டம், 1944-ல் எம்.என்.ராய் தயாரித்த நகல், 1945-ல் நாராயண் அகர்வால் தயாரித்த காந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என எத்தனையோ முந்தைய கால முயற்சி கள் அரசியல் நிர்ணயசபைக்கு உண்டு.

புதிய தேசத்தின் பெயரைச் சொல்லி அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களிலேயே தேசிய சிந்தனையை மதச்சார்பற்றதாக உறுதி செய்வதன் அடையாளங்களும் உண்டு. பாரதம், இந்துஸ்தான், பாரதவர்ஷம் என்றவாறு பல பெயர்களும் அன்று ஆலோசிக்கப்பட்டன. ஆனால், அம்பேத்கர் முன்வைத்த ‘இந்தியா’ அல்லது ‘பாரதம்’ என்ற பெயரைத்தான் அரசியல் நிர்ணய சபை அங்கீ கரித்தது. மதரீதியான அடையாளம் உள்ளதும், இதி காசத் தன்மையுள்ளதுமான பெயர்களுக்குப் பதில் நிலப்பிரதேச அடிப்படையில் நடைமுறைக்கு வந்ததும் வரலாற்றுப் பரிணாமங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதுமாகிய ‘இந்தியா’ என்ற பெயர்தான் தேசத்தின் பெயராக அங்கீகரிக்கப்பட்டது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி வடிவமைப்பிலேயே உள்ளார்ந்த மதச்சார்பின்மை யின் முத்திரையைக் காணமுடியும். பிரேம்பெஹாரி நாராயண் ரெய்ஸாதாவின் கையெழுத்தில் எழுதித் தயாரிக்கப்பட்டதுதான் இப்போது நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள மூலநூல். 1,17,369 சொற்கள் உள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உலகிலேயே மிகப்பெரிய அரசியல் அமைப்புச் சட்டங்க ளில் ஒன்று. தேசிய இயக்கத்தில் பங்கேற்றதுடன் திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுக்காக  போஸ்டர்கள் வரையவும் செய்த நந்தலால் போஸின் தலைமை யில்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பக்கங்கள்  சித்திர வேலைப்பாடுகளால் அலங்காரம் செய்யப்பட்ட துடன், கோட்டுச் சித்திரங்கள் சேர்க்கவும்பட்டன. 

அசோக ஸ்தம்ப சிற்பத்தின், தர்மசக்கரத்தின் சித்தி ரங்களுடன்தான் அது ஆரம்பமாகிறது. அடுத்து  அரசி யல் அமைப்புச் சட்டத்தின் புகழ்பெற்ற முகவுரை அமைந்துள்ளது. ஒன்றாம் பாகத்தில் ஹரப்பன் முத்தி ரைகள் ஒன்றின் கோட்டுச் சித்திரம் வரையப் பட்டுள்ளது. இந்தியக் கலாச்சாரத்தின் மிகப் பழமை யான சின்னத்திலிருந்து அரசியல் அமைப்புச் சட்டம் அரம்பமாகிறது. அடுத்த பாகங்களில் வேதகாலத்தின், மகாபாரதம், இராமாயணக் கதைச் சம்பவங்களின் சித்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்தாம் பாகத்தின் ஆரம்பத்தில் புத்தர் சித்திரத்தையும், பதினான்காம் பாகத்தின் ஆரம்பத்தில் அக்பர் சபையின் கோட்டுச் சித்திரத்தையும் பார்க்கலாம். பதினாறாம் பாகத்தின் ஆரம்பத்திலுள்ள சித்திரங்களில் ஒன்று திப்புசுல்தான் சித்திரமாகும். மற்றொன்று ஜான்ஸிராணி சித்திரம். இதற்குப் பின்னால் நந்தலால் போஸ் வரைந்த காந்திஜியின் பிரசித்திப் பெற்ற கோட்டுச் சித்திரம் வருகிறது. பதினேழாம் பாகத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு இந்தியாவின் கலாச்சார வரலாற்றின் வளர்ச்சி நிலையும், அதன் பன்முகமும் மதப்பன்மை யும் ஒன்றுபடுத்தப்பட்ட நிலையில்தான் இந்திய அரசி யல் அமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி வடிவமைக் கப்பட்டுள்ளது.

1946 டிசம்பர் 11 அன்று பகல் 1 மணிக்குப் பிறகு அர சியல் நிர்ணய சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை ஆச்சார்ய கிருபாளனியும் மௌலானா அப்துல்கலாம் ஆஸா தும் சேர்ந்து தலைவர் பதவிக்கு அழைத்து வந்தனர். அப்போது அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கமிட்டனர்: “இன்குலாப் ஜிந்தாபாத்! ஜெய்ஹிந்த்!”

1921-ல் அகமதாபாத் மாநாட்டில் முழு சுதந்தி ரத்திற்கான தீர்மானத்தை முதன்முறையாக முன் வைத்த மௌலானா ஹஸ்ரத் மொஹானி உருவாக்கிய ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்கிற முழக்கமும், சுபாஷ்சந்திர போஸ் கேட்டுக்கொண்ட தற்கு ஏற்ப ஜைனுல் அப்தீன் ஹஸ்ஸன் உரு வாக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்கிற முழக்கமும் எழுப்பப் பட்ட சூழலில்தான் அரசியல்  நிர்ணய சபையின் தலை வராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். இந்தியா என்கிற எதிர்கால தேசத்தின் இயல்பான அடையாளமாகவும் இருந்தது அந்தப் பதவியேற்பு நிகழ்வு. அது இந்திய மதச்சார்பின்மையின் அடையா ளமாகவும் திகழ்ந்தது.

நன்றி : தேசாபிமானி மலையாள நாளிதழ்,
தமிழில்: தி.வரதராசன்

 

 

;