articles

img

இடஒதுக்கீடு : இடைக்கால தீர்வைத் நிரந்தர தீர்வுடன் இணைப்போம்! - அ.அன்வர் உசேன்

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அரசியல் சட்ட அடிப்படையில் சரியானதே எனும் மிக முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. சமூக நீதி ஆதரவு சக்திகளிடையே இந்த தீர்ப்பு உற்சாகத்தை தோற்றுவித்துள்ளது. அதே சமயத்தில் ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து தமது ஆத்திரத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.  இடஒதுக்கீடு எப்பொழுதுமே பிற்போக்கு சக்திக ளால் எதிர்க்கப்பட்டே வந்துள்ளது. வர்ணாசிரமம் சாதியம் இரண்டையுமே உயர்த்திப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். இடஒதுக்கீடு கொள்கைகளில் தனது  எதிர்ப்பை மறைத்தது இல்லை.  இடஒதுக்கீடுக்கு எதிரான தொடர் நடவடிக்கைக ளின் ஒரு நீட்சியாகவே மருத்துவக் கல்லூரி அகில இந்திய ஒதுக்கீடுகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

உச்சநீதிமன்றம் பல்வேறு வாதங்களுக்கு பிறகு 07.01.2022 அன்று 27% ஒதுக்கீடு நியாயம் என தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்புக்கான காரணங்களை 20.01.2022 அன்று ஒரு விரிவான தீர்ப்பாக முன்வைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு அர சியல் சட்டத்தின்படி சரியானதே என்பது நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வின் நிலைபாடு ஆகும். இந்த மிக முக்கிய தீர்ப்பு சமூகநீதியின் ஒரு அம்சமான இடஒதுக்கீடுக்கு கிடைத்த பெரிய வெற்றி எனில் மிகை அல்ல. இட ஒதுக்கீடு மட்டுமல்லாது வேறு சில அம்சங்கள் குறித்தும் இந்த தீர்ப்பு முக்கிய கருத்துகளை முன்வைத்துள்ளது.

இந்த தீர்ப்பு கூறுகிறது:

“தகுதி என்பதை போட்டி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே என குறுக்கி பார்க்க முடி யாது. ஏனெனில் போட்டி தேர்வுகள் பெயரள வுக்கான சமவாய்ப்பை தருகின்றன. ஆனால் சமூக/பொருளாதார/பண்பாடு ஆகிய கூறுகளின் சாதகமான அம்சங்கள் போட்டி தேர்வுகளில் சில பிரிவினரின் வெற்றிக்கு எப்படி காரணமாக இருக்கின்றன என்பதை இந்த தேர்வுகள் பிரதி பலிப்பது இல்லை” 

நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற்ற எவர் ஒரு வரும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கலாம் எனும் நிலை அனைவருக்கும் சமவாய்ப்பை அளிக்கிறது. ஆனால் இந்த சமவாய்ப்பு உண்மையானது அல்ல. ஏன்? இதோ தீர்ப்பு சொல்கிறது:

“கல்வி வசதிகள் கிடைப்பதிலும் அவற்றை பெறுவதிலும் நிலவும் பரவலான சமத்துவமின்மை சில பிரிவினரின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதற்கு வழிகோலுகின்றன. எனவே இவர்கள் போட்டி தேர்வுகளில் சமமான அளவுக்கு பங்கேற்பது இயலாத ஒன்றாக அமைகிறது”

முற்பட்ட பிரிவினருக்கு கிடைக்கும் சாதகமான அம்சங்கள் என்ன? தீர்ப்பு பட்டியலிடுகிறது:

தரமான பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு, டுடோரி யல் வகுப்புகளுக்கு செல்லும் வசதி, பயிற்சி மையங்க ளில் விசேட திறமை பெறும் வாய்ப்புகள் - இவை மட்டு மல்லாது சமூக தொடர்பு வலைப்பின்னல்களும் கலாச்சார மூலதனமும் இந்த பிரிவினருக்கு கிடைக்கின் றன எனவும் நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர். கலாச்சார மூலதனம் எனில் என்ன?

தரமான புத்தகங்கள், உச்சரிப்புகளுக்கான பயிற்சி கள், தகவல் தொடர்பு திறமை (எழுதும்/பேசும் திறமை), கல்வியில் சாதிப்பதற்கான இதர பல ஏற்பாடு கள்.

கலாச்சார மூலதனம் எத்தகைய தாக்கத்தை விளை விக்கிறது என்பதும் தீர்ப்பில் குறிப்பிடப்படுகிறது:

“ஒரு குழந்தை தனது குடும்ப சூழல் காரணமாக தன்னை அறியாமலேயே தனது குடும்பத்தின் கவுர வத்துக்கு ஏற்ப கல்வியில் உயர்ந்த இடத்துக்கு அல்லது பணியில் உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும் என பயிற்றுவிக்கப்படுவதை கலாச்சார மூலதனம் உத்தரவாதப்படுத்துகிறது.”

இத்தகைய வசதி வய்ப்புகள் முதல் தலைமுறை கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு கிடைப்பது இல்லை. அல்லது  சமூகத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களில் அவர்கள் பணியாற்றும் தொழில் காரணமாக மேற் கண்ட திறமைகள் அவர்களின் குழந்தைகளுக்கு பெற் றோர்கள் மூலமாக கிடைப்பது இல்லை.  எனவே இத்த கைய குழந்தைகள் போட்டி தேர்வுகளில் வெல்ல கூடு தலான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு முயன்றாலும் பல சமயங்களில் அவர்க ளால் வெற்றி பெறமுடிவது இல்லை. ஆகவே சில பிரிவினரின் குடும்ப சூழல்கள்/சமூக தொடர்புகள்/பாரம்பரிய திறமைகள் ஆகிய அனைத் தும் ஒன்றிணைக்கப்பட்டு அதனை “தகுதி” என வகைப் படுத்தப்படுகிறது. “தகுதி” என்பது உண்மையில் என்ன என்பதை தீர்ப்பு தோலுரிக்கிறது. இது “தகுதியை” பெற்றி ருக்கும் ஒரு வழி வழி வாரிசுத் தன்மையை மறு உற்பத்தி செய்கிறது. இந்த வட்டத்துக்கு வெளியே இருப்பவர்கள் “தகுதி” இல்லாதவர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர். 

எனவே “மதிப்பெண் தகுதி” என்பது முற்றிலும் தனி நபர் சார்ந்த ஒரு விளைவு அல்ல என்பதை தீர்ப்பு குறிப் பிடுகிறது. “தகுதி” என்பது பற்றி உரக்க முன்வைக்கப் படும் வாதங்களில் ‘தகுதி’க்கு பின்னால் உள்ள குடும்ப பின்னணி/சிறந்த பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு/பெற் றோர்களிடமிருந்து வழிவழியாக கிடைக்கும் திறமை எனும் பரிசுகள் போன்றவையும் ஒரு முக்கிய பங்கு ஆற்றுகின்றன என்பதை மறைத்துவிடுகின்றன. மதிப் பெண்கள் மட்டுமே ஒரு மனிதனின் தகுதியை நிர்ண யித்துவிடுவது இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிடு கின்றனர்.  “தகுதி” என்றால் என்ன என்பதையே ஆய்வுக்கு உட் படுத்த வேண்டும் என நீதிபதிகள் சம்மட்டி அடி போல கூறுகின்றனர். உதாரணத்துக்கு ஒருவர் மிக அதிக மதிப் பெண்கள் பெற்றிருந்தாலும் அவர் தனது திறமையை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தவில்லை எனில் அந்த மதிப்பெண்களால் என்ன பலன் எனவும் கேள்வி எழுப்புகிறது இந்த தீர்ப்பு. “தகுதி” என்பதன் உள்ளடக்கம் நாம் சிறந்த சமூக விழுமியங்கள் என எவற்றை கருதுகிறோமோ அவை இல்லாமல் வெறு மையாக இருக்க முடியாது எனவும் நீதிபதிகள் ஆணித் தரமாக கூறுகின்றனர். 

இத்தகைய பல்வேறு வாதங்களை எடுத்துவைத்த நீதிபதிகள் “போட்டி தேர்வுகள் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை தந்தாலும் அந்த சமவாய்ப்புகளின் பலன்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சமமாக கிடைப்பதை இடஒதுக்கீடு உத்தரவாதம் செய்கிறது” எனவும் இடஒதுக்கீடு  “தகுதிக்கு” முரண்பட்டதல்ல  எனவும் ஆணித்தரமாக கூறி பிற்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட அடிப்படை யில் நியாயமே என தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு  பல்வேறு அம்சங்களில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு  என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க இயலாது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும் பா.ஜ.க. அரசு இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிரான கருத்தோட்டம் கொண்டுள்ள சூழலில் இந்த தீர்ப்பு சமூக நீதியின் பயணத்தில் மிக முக்கிய நகர்வு எனில் மிகை அல்ல. அதே சமயம் இன்னொரு தீர்ப்பில் இதே நீதிபதி கள் முற்பட்ட பிரிவினரில் பொருளாதார அடிப்படை யில் நலிந்த பிரிவினருக்கு அளிக்கும் இடஒதுக்கீடுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் சட்டம் அடிப்ப டையில் அது நியாயமானதா என்பது தனியாக விசார ணையில் உள்ளது எனக் கூறியுள்ள நீதிபதிகள்  ஆண்டு  வருமானம் 8 லட்சம் எனும் வரம்பு குறித்து மார்ச் மாதத்தில் விசாரணை நடக்கும் என தீர்ப்பளித்துள்ளனர்.

நிரந்தர தீர்வு அவசியம்!

இடஒதுக்கீடு மிக முக்கியமான ஒன்று என்பதில் இரு  கருத்துகளுக்கு இடமில்லை. குறிப்பாக பா.ஜ.க. ஆட்சி யில் இடஒதுக்கீடு பாதுகாக்க மிகவும் விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகிறது. சிறு வாய்ப்பு கிடைத்தா லும் இடஒதுக்கீடை சிதைக்க இந்துத்துவவாதிகள் தயங்குவது இல்லை. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் இடஒதுக்கீடு அரசு மற்றும் பொதுத்துறைக ளில்தான் அமலில் உள்ளன. பா.ஜ.க. அரசாங்கம் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறைகளையும் தனி யார்மயமாக்க வெறிகொண்டு செயல்படுகிறது. தனி யார்மயமாவது எனில் இடஒதுக்கீடு இருக்கப் போவது இல்லை என்று பொருள். தனியார் துறைகளில் எங்கும் பெயரளவுக்கு கூட இட ஒதுக்கீடு கிடையாது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இடஒதுக்கீடு மீது தாக்குதலை தொடுக்கின்றன. தனியார்மயத்தை யும்  நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை யும் எதிர்க்கும் போராட்டம் இடஒதுக்கீடை பாதுகாக்கும் போராட்டமாகவும் உள்ளது. தனியார் நிறுவனங்களி லும் இடஒதுக்கீடு தேவை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் வலுவான நிலைபாடு ஆகும். தனியார்துறையில் இடஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதி முழுமையாக நிலைநாட்டுவது எப்படி சாத்தியம்?

அதே சமயத்தில் இடஒதுக்கீடு நிரந்தர தீர்வு தருவது சாத்தியமல்ல. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பரிந்துரைத்த மண்டல் ஆணையம் கூட “உற்பத்தி உறவுகள் மாற்றத்தின் மூலம் தீவிரமான நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் கட்டமைப்புக ளை மாற்றியமைக்காமல் பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை” என பதிவு செய் துள்ளது. இடஒதுக்கீடு காரணமாக உருவாகும் முரண் பாடுகள் கல்வி வசதி மற்றும் வேலைவாய்ப்புகள் போது மான அளவு இல்லை என்பதன் பிரதிபலிப்புதான்! ஒரு புறம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக ஏராள மானவர்கள் காத்திருக்கின்றனர். 

மறுபுறம் அத்தகைய வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளன. இந்த குறைவான வாய்ப்புகளை ஆக்கிரமிக்க முற்பட்ட பிரிவினர் முயலும் பொழுது மற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எனவே சமநீதியை நிலை நாட்ட இடஒதுக்க்கீட்டின் அவசியம் உருவாகிறது.  அனைவருக்கும் கல்வி வசதியும் வேலை வாய்ப்பு களும் பொருளாதார சமத்துவம்தான் உத்தரவாதப் படுத்த முடியும்.  

எனவே நிரந்தரமான சமூக நீதி என்பது பொரு ளாதார நீதியுடன் இணைந்துள்ளது. இடஒதுக்கீடுக் கான போராட்டத்தை தொடரும் அதே வேளை யில் பொருளாதார சமத்துவத்துக்கான போராட்டத்தை யும் இணைந்து நடத்துவது அவசியம்.

 

;