articles

img

அமித்ஷா வருகையால்  ஆகப்போவது ஒன்றுமில்லை

ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகவிஜயத்தின் மூலம் தமிழகத்திற்கு எந்த லாபமும் இல்லை. மாறாக ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய அதே அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள் என்பதைத் தவிர இதில் குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை.

பொதுவாக மத்திய அமைச்சர்கள் மாநிலங்களுக்கு வருகை தரும் போது முதல்வர் நேரில்சென்று வரவேற்பது மரபு இல்லை. ஆனால் இந்தமுறை அமித்ஷா வந்தபோது முதல்வர் எடப்பாடிபழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றதன் மூலம் தங்களது விசுவாசத்தை போட்டி போட்டு காட்டியுள்ளனர். அமித்ஷாவை வரவேற்க வந்த பாஜகவினரை விட கூட்டப்பட்ட அதிமுகவினரின் எண்ணிக்கை அதிகம் என்று ஊடகங்களில் வரும் செய்திகள்,எந்தவித கூச்சநாச்சமுமின்றி அதிமுகவை அடகுவைக்க இபிஎஸ், ஓபிஎஸ் துணிந்துவிட்டனர் என்பதையே காட்டுகிறது.அமித்ஷாவுக்காகவே மாநில அரசு விழாஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த அரசு விழாவில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக வைத்துள்ள கூட்டணி தொடரும் என்றுமுதல்வரும், துணை முதல்வரும் மாறி மாறி கூறியது அப்பட்டமான விதிமீறலாகும். அமித்ஷாவும் அரசு விழா என்று கூட பாராமல் தங்களதுகூட்டணி உறுதியானது குறித்து பேசியிருக்கிறார்.இரண்டு கட்சிக்காரர்களையும் கூட்டி வைத்துக்கொண்டு கூட்டணி பற்றி கூறலாம். ஆனால் மாநில அரசு விழா என்று கூறிவிட்டு தங்களது கூட்டணி பற்றி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். சமீப காலங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகளை திட்டித் தீர்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்போதும் நடந்து கொண்டுள்ளனர்.

அதன்பிறகு நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியமைக்கும் என்றும் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பதுதான் தனது விருப்பம் என்றும் அமித்ஷா பேசியுள்ளதாக தெரிகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தை ஓரம்கட்டியது போல அதிமுகவை ஒட்டுமொத்தமாக விழுங்கி ஏப்பம் விடுவதே பாஜகவின் நோக்கமாகஉள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆனால்பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள காரணத்தினால் அதிமுகவை தற்போது நடத்திக்கொண்டிருப்பவர்களால் இதை எதிர்க்க முடியவில்லை. 

ஆனால் இந்த நயவஞ்சக கூட்டணியையும், அதன் மலிவான சித்து விளையாட்டுகளையும், தமிழக மக்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தை வஞ்சிப்பதையே நோக்கமாக கொண்ட பாஜகவையும், அதற்கு துணை போவதன் மூலம்
தமிழகத்தின் நலனை தொடர்ந்து அடகு வைக்கும்அதிமுகவையும் அவர்களுக்கு துணை போகும்கட்சிகளையும் தமிழக வாக்காளர்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். பல மாநிலங்களில் பாஜக நடத்திய சித்து வேலைகள் தமிழகத்தில் எடுபடாது என்பதை எதிர்வரும் தேர்தல் முடிவுஎடுத்துரைக்கும்.
 

;