articles

img

பணவீக்கம்: உழைக்கும் மக்கள் மீது குரூரமான தாக்குதல்!

நாடு, பணவீக்கச் சூழலில் சிக்கி யிருப்பதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தி யாவசியப் பொருள்களின் விலைகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டி ருக்கின்றன. இவ்வாறு விலைவாசிகள் நாளும் உயர்ந்துகொண்டிருப்பது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் வாழ்க்கையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மே மாதத்தில் சில்லரைப் பணவீக்க விகிதம் 7.8 விழுக்காடு அளவிற்கு இருந்தது. கடந்த எட்டாண்டுகளில் இதுவே மிகவும் அதிகபட்ச அள வாகும். உணவுப் பொருள்களின் பணவீக்கமும் 8.38 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதுவும் கடந்த 17 மாதங்களில் அதிகபட்ச அள வாகும். இதே போன்றே மொத்த விலைவாசிக் குறியீட்டெண் பணவீக்கமும் ஏப்ரல் மாதத்தில் 15.08 விழுக்காடாக உயர்ந்தது. இதுவும்நடப்புத் தொடரில் உச்சபட்ச அளவாகும்.

வயிற்றில் ஈரத்துணியை  கட்டிக் கொள்ளச் செய்யும்...

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் சாமானிய மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்க ளுக்குக் கூறுவது என்ன? இவற்றின் உண்மை யான அர்த்தம் என்னவென்றால், கோதுமை, காய்கறிகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கிறது என்றே அர்த்தமாகும். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும், பெயரளவுக்கே உண்ண முடியும் என்றே அர்த்தமாகும். அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வாங்கித்தர இயலாது என்பதும், குறைந்தபட்சம் ஒரு நாகரிகமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவை யான பொருள்களை வாங்க முடியாது என்பதுமே யாகும். வட இந்தியர்களின் பிரதான உணவாக விளங்கும் கோதுமை மாவு (atta) விலை, கடந்த ஓராண்டில் மட்டும் (2021 மே முதல் 2022 மே வரை) 13 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.  பாலின் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு மேலும், சமையல் எண்ணெய்களின் விலைகள் லிட்டருக்கு 200 ரூபாய்க்கு மேலும், காய்கறிகளின் விலைகள் பல மடங்கும் உயர்ந்திருக்கின்றன. பணவீக்கம் என்பதன் அர்த்தம், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங் களில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதாகும்.  வீதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள், சிறிய அளவில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். இது சிறிய மற்றும் நுண்ணிய வர்த்தகப்பிரிவினரையும் பாதித்திருக்கிறது.

முக்கியக் காரணியான  எரிபொருள் விலை உயர்வு

பணவீக்கச் சுழலில் விலைவாசி உயர்வுக்கு மிகவும் முக்கியக் காரணியாக விளங்குவது எரிபொருள்களின் விலை உயர்வாகும். ஒன்றிய  அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்  எரிவாயு ஆகியவற்றின் மீது வரிகளை உயர்த்திக் கொண்டே இருப்பது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் மற்றும்  சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி இருக்கின்றன. உக்ரேன் யுத்தம் துவங்குவதற்கு முன்னரே இவற்றின் விலைகள் உயர்ந்துவிட்டன. உக்ரேன் யுத்தம் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.  பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டே இருப்பது, அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வரியில் 96 விழுக்காடும், டீசல் மீதான வரியில் 94 விழுக்காடும் செஸ் வரி மற்றும் சர்சார்ஜ் வரி என்பதை அடிக் கோடிட்டுக்கொள்ள வேண்டும். இவையெல்லா வற்றையும்விட மிகவும் குரூரமான விலை உயர்வு என்பது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வாகும். சாமானிய குடும்பத்தின ருக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை  கடந்த ஓராண்டில் மட்டும் 431 ரூபாய் 50 காசுகள்  உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது 76 விழுக்காடு உயர்வாகும். வணிகரீதியாக வழங்கப் படும் 19 கிலோ கிராமுக்கான சிலிண்டரின் விலை இப்போது 2,397 ரூபாயாகும். அதாவது 126 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.

அதிர்ச்சியளிக்கும்  அலட்சிய அணுகுமுறை 

பணவீக்கம் தொடர்பாக மோடி அரசாங்கம் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் அலட்சியமான அணுகுமுறையைக் கொண்டி ருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்கான சில்லரைப் பணவீக்கம் தொடர்பான விவரங்கள் வெளி யான அன்றைய தினமே, நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், இது  பணக்காரர்களைப் பாதிப்பதோடு ஒப்பிடும் போது ஏழைகளுக்கு மிகவும் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில், “இந்தியாவில் பண வீக்கத்தின் தாக்கம் உயர் வருமானம் பெறு பவர்களைப் பாதித்த அளவிற்கு, குறைந்த வரு மானம் ஈட்டுபவர்களைப் பாதிக்கவில்லை என்றே  கிடைத்திருக்கும் சாட்சியங்கள் காட்டு கின்றன,” என்று குறிப்பிட்டிருக்கிறது.  மேலும் அந்த அறிக்கையின் முடிவில், நுகர்வு செலவினமானது மக்கள் தொகையில் உயர்நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டினருக்கும், மத்திய நிலையில் உள்ள வர்களில் 60 விழுக்காட்டினருக்கும், அடித்தட்டு நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டி னருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியிருக்கிறது. இந்த அறிக்கை இவ்வாறு முடிவுக்கு வந்திருப்பதில் உள்ள போலித்தனத்தை ஓர்  அம்சத்திலிருந்து தெளிவாக உணர முடியும்.  மாதாந்திர பொருளாதார அறிக்கை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு  நுகர்வு வர்க்கங்களுக்கிடையேயும் பண வீக்கத்தின் பாதிப்பு விகிதம் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை  மிகவும் புத்திசாலித்தனமாக மழுப்பியிருக்கிறது.  

நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் ஏழைகளே!

பணவீக்கம் பணக்காரர்களையே அதிக அளவில் பாதித்திருக்கிறது என்று கூறப்படும் சிந்தனையை நீக்கிட வேண்டும். ஏனெனில் பணவீக்கம் ஊதியம் பெறுவோரையும், குறைந்த சேமிப்பு உள்ளவர்களையும் நேரடி யாகத் தாக்குகிறது. குறிப்பாக உணவுப் பண வீக்கம் அவ்வப்போது உணவுப் பொருள்களை வாங்குபவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. பணக்காரர்களும், உயர் மத்திய வர்க்கத்தினரும் தங்களுடைய நிதி மேலாண்மை மற்றும் பங்குச்சந்தைகள் மூலமாக வருமானங்களுக்கு வேலி கட்டிடமுடியும். அதன் மூலம் தங்கள் வருமானத்தைப் பெரிய அளவில் பாதுகாத்திட முடியும்.   பணவீக்கம் பொதுவாக வருமானத்தை ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மாற்று வதற்கே இட்டுச்செல்கிறது. ஏனெனில் ஏழைகள் தங்கள் உண்மையான வருமானத்தில் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கு, பணக்காரர் களுக்கு இருப்பது போன்று  எவ்விதமான வாய்ப்பும் கிடையாது. கார்ப்பரேட்டுகள் சந்தை யின் மீது கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் பணவீக்கத்தால் ஏற்படும் உயர் இடுபொருள் செலவினங்களின் சுமையை  எளிதாக நுகர்வோருக்கு மாற்றிவிடுவார்கள். அதன்மூலம் அவர்கள் தங்கள் லாப விகிதத்தில் இழப்பு ஏற்படாது தக்க வைத்துக்கொள்வார்கள். மேலும், பணவீக்கத்தின் காரணமாக, சேமிப்பா ளர்களின் உண்மையான வட்டி வருவாயும் வீழ்ச்சி அடைகிறது.

சர்சார்ஜ் வரிகளை ரத்து செய்க!

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பெட்ரோ லியப் பொருட்களின் மீதான அனைத்துவிதமான சர்சார்ஜ் வரிகளையும் ரத்து செய்திட வேண்டும்  என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. இது ஒன்றுதான் பெட்ரோல், டீசல் விலை களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திட வழியாகும். மேலும் அவர்கள், அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும், குறிப்பாக சமையல் எண்ணெய்கள் மற்றும் தான்யங்களை பொது விநியோக முறையில் அளிப்பதன் மூலம் பொது விநியோக முறையை வலுப்படுத்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள். மேலும் கோவிட் பெருந்தொற்று ஈராண்டு காலமாகக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதன் விளை வாக, வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளித்திட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள். விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை யில்லாத் திண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்ச னையைத் தணிப்பதற்கும் இந்நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதுவே இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்திற்கும் முன்னுரிமை நிகழ்ச்சிநிரலாக மாற வேண்டும். இதன் அடிப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அள வில் மே 25-31 தேதிகளுக்கிடையே இக்கோரிக் கைகள் மீது போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக இத்தகைய போராட்டங்களும் இயக்கங்களும் நாடு முழுதும் விரிவாக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

மே 18, 2022
- தமிழில் : ச.வீரமணி

 

;