articles

img

இந்தியா ஒரு மொழியியல் நாகரீகம் - பேரா ஜி.என்.டேவி

ஐரோப்பாவைப் போல் அல்லாமல், மற்ற மொழிக்குத் தீங்கு விளைவிக்காமல் மாநில மொழிகளை ஊக்குவிக்க, மாநிலங்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்ததன் காரண மாக, இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் அனைவரும், தாங்கள் ஒரே தேசத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை ஏகமன தாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தியா என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்துப வர்கள் கூட அரிதாக அதை விளக்கினாலும், அக்கருத்து இந்த நாட்டில் ஒரு நீண்ட நெடிய விவாதமாகி இருக்கிறது. இதனுடைய பல்வேறு அர்த்தங்களை உட்கிரகித்துக் கொள்வது என்பது அது பயன் படுத்தப்படுகிற சூழலின் கற்பனைக்கும், எடுத்துச் சொல்லப்படும் பார்வையாளர்களுக்கும் விடப்படு கிறது. அந்த நேரங்களில், அது அரசியல் அமைப்பின் மேல் நிறுவப்பட்ட இந்திய குடியரசைக் குறிக்கி றது. மற்ற நேரங்களில், இந்தியாவின் கடந்தகால எல்லாவிதமான சகாப்தங்கள் மற்றும் அனைத்துவித மான பன்மைத்துவமும் கொண்ட ஒரு காலவரம்பற்ற இந்தியா என்ற மாபெரும் தொலைநோக்குப் பார் வையை நினைவுபடுத்துகிறது. இது இந்தியாவின் பல்வகைப்பட்ட மக்களையும், அவர்களின் கலாச்சா ரத்தையும் குறிக்கலாம் அல்லது இந்திய நாகரீகம் என்று நாம் எதை நம்புகிறோமோ அல்லது நம்பினோ மோ அதன் பொருளாகவும் பயன்படுத்தப்படலாம்.

நகர நாகரீகம்

ஒரு நாகரீகம் குறித்து சிந்திப்பது என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. ஒருவர், ஒரு அகராதியின் வழியாக நாகரிகம் என்ற சொல்லைத் தேடினால், நாகரீகம் என்ற சொல்லானது இலத்தீன் மொழியில் உள்ள ‘சிவிடாஸ்’ அல்லது ஆங்கிலத்தில் உள்ள ‘சிவில்’ என்ற சொல்லில் வேரூன்றியுள்ளது. இச்சொற் கள், நாகரீகத்தின் அடிப்படையாக நகரத்தை உறுதி யான முறையில் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் கி.மு.24 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு.19ஆம் நூற்றாண்டு வரைக்குமான 6 நூற்றாண்டுகளில் உச்சத் தில் இருந்த சிந்துச் சமவெளி நாகரீக காலத்தில், நகரம்  அல்லது நகர்ப்புற சமூகக் கட்டமைப்பு இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட மிகக்குறுகிய காலமாக நாம் அறிகிற 50 நூற்றாண்டு கால நீண்ட இடைவெளி ஏற்பட்டது. இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அடுத்த கட்டம், கி.மு. 14ஆம் நூற்றாண்டையொட்டி ரிக் வேதத்துடன் தோன்றியது. அப்போது இந்தியா ஒரு புது முறைக்குள் நுழைந்தது. அம்முறையில் நகரங்கள் வளர்ந்தன என்றாலும் கூட, இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் தங்களின் நாகரீக விருப்பமாக கிராமப்புற கட்டமைப்பை தேர்வு செய்தனர். அப்போதிலிருந்து, காலனியம் மீண்டும் ஒருமுறை நகரங்களை முக்கியத்துவப்படுத்தும் வரை, எப்பொழு தும் இல்லாத வகையில் 32 நூற்றாண்டுகளாக, நகரங்க ளுக்கு மாறாக தொலைதூர மற்றும் தனித்திருந்த பகுதிகளில் பெரும்பாலான அறிவு உற்பத்தி, கலை வெளிப்பாடு மற்றும் மனோதத்துவ தியானம் ஆகி யவை தொடர்ந்து வளர்ந்தன. அந்த கண்ணோட்டத் தில் பார்த்தால், இந்தியாவின் கடந்த காலத்தை உள்ள டக்குவதற்கு ‘நாகரீகம்’ என்ற சொல் போதுமானதாக இல்லை.

இருந்தபோதும், நாகரீகத்தினால் அங்கு உயர்ந்த தும், உயர்ந்ததல்லாததுமான அனைத்தும் இருக்கி றது என்று பரவலாக பின்னப்பட்ட ஒரு கலாச்சார நூலி ழையாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. தெற்காசியா வைப் பொறுத்தமட்டில், இந்தியா எனும் கருத்தாக் கத்தின் கொள்கையாகவும், உந்து சக்தியாகவும், உள்ளடக்கமாகவும், சாராம்சமாகவும் மொழியையே கொண்டிருக்க வேண்டியுள்ளது. மொழியியல் அறிஞர் கள் இந்திய மொழிகளை அதன் தனித்த மொழியியல் குடும்பங்கள் என்ற அடிப்படையில் குறிப்பிட விரும்பு வதில்லை. உலகின் பெரும்பாலான மற்ற பகுதிகளில் மொழிகளை விடவும், ஒரு மொழிக்கும் அதனைச் சுற்றியிருக்கின்ற மொழிகளுக்குமிடையேயான ஒரு பரந்துபட்ட - பரஸ்பரம் உறவு கொண்டுள்ள -  நுண்ண றிவை சுவீகரித்துக் கொண்டுள்ள ஒரு மொழியியல் பரப்பாக இந்திய மொழிகளின் பரந்துபட்ட மக்கள் திரளை விவரிக்கவே முயல்கிறார்கள்.

இந்தியச் சூழலில் மொழிகள்

இந்தியாவில் மொழியானது அதனுடைய  மாபெரும் பன்முகத்தன்மையால் மட்டுமல்லாமல், சமூக முரண்பாடுகளைக் களைவதற்கும், சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தவிர்க்கமுடியாத திறவுகோலாக இருக்கிறது. யுனெஸ்கோ மற்றும் உலக மொழிகளின் பட்டியல் சார்ந்த புள்ளிவிபரத் தின் படி 7000 மொழிகள் உலக அளவில் பேசப்படு கின்றன; அவற்றில் 12 சதவிகிதம் மொழிகள்  இந்தி யாவில் பேசப்படுகின்றன. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் குறித்த திட்டவட்டமான எண்ணிக்கை விபரம் தற்போதுவரை இல்லை.

2011ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1369 தாய்மொழிகள் இருப்பதாக பட்டியலிட்டது. ஆனால், கணக்கெடுப்பின் போது மக்களால் தாய்மொழி என தெரிவிக்கப்பட்ட ஒரு பெயரின் ஒவ்வொரு அடையாளமும் ஒரு மொழியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மொழியை எண்ணுவதற்கான பொருத்தமற்ற முறைகளை அறி முகப்படுத்துவதன் மூலம் இலக்கத்தைக் குறைப்ப தற்கு முயற்சி செய்தன என்பதே உண்மை. இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பின் படி (2010-2013) 70 தாய்மொழிகளை, பதிவு செய்யாமல் தவிர்த்து,  780 மொழிகள் என்று மட்டும் கணக்கெடுத்துள்ளனர். ஆக, நாட்டில் கிட்டத்தட்ட 850 மொழிகள் பேசப்பட்டு வருவதாக ஒருவரால் யூகிக்க முடியும்.  இந்த பரந்துபட்ட பன்மைத்துவத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடந்த காலத்தின் எல்லா கட்டங்களிலும் இதே மாதிரியான பன்மைத்து வத்தை நாம் பெற்றிருந்தோம். 35 நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்கிருதம் இந்தியாவில் தோன்றியபோது, பண்டைய திராவிட, பிராகிருதம் மற்றும் பாலி குழு வினைச் சார்ந்த மொழிகள் என பின்னர் அடையாளப் படுத்தப்பட்ட மொழிகள் ஏற்கனவே இங்கிருந்தன. எங்கெல்லாம் நம் முன்னோர்கள் வேரூன்றினார்க ளோ, அங்கெல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டங்கள் வட்டார மொழி எழுவதற்கு வழி வகுத்தன. நாம் வாழ்வதற்கு 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே, பாணினி தனது முறையிலான இலக்கணத்தை வகுக்கிறபோது, இது ஒரு மொழிக்கானது மட்டு மல்லாது; எண்ணிலடங்காத மொழி வகைக ளுக்கானது என்று குறிப்பிட்டார்.

முதல் ஆயிரமாண்டு முழுமைக்கும், மாதங்கா வின் பிரிஹத்தேசி (Brihad-desi), குந்தகாவின் வஹ்ரோக்தி ஜீவிதா ஆகிய இரண்டு படைப்பு களையும் பல மொழிகளினுடைய கூறுகளையும், கருத்துக்களையும் கொண்டு உருவாக்கினார்கள். காளிதாசர் மற்றும் பாவபுத்தி ஆகியோரின் நாடகங்க ளில் உள்ள கதாபாத்திரங்கள் ஒரு காட்சிக்குள்ளா கவே வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தி அறி முகப்படுத்தப்பட்டனர். முதல் ஆயிரமாண்டின் போது, அல்பிருணியும், அமீர் குஸ்ருவும் இந்தியனாக இருப்பது என்பதே பல மொழிகள் பேசிக்கொண்டி ருப்பவன் என்பது தான் என்று குறிப்பிட்டார்கள். கடந்த காலங்களில் சமஸ்கிருதமும், பாரசீகமும் அழகும் வலிமையும் கொண்டவை தான் என்ற போதிலும் வட்டார மொழிகள் மற்றும் துணை தேசிய மொழி களை அழிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சமஸ்கிரு தம் வீழ்ந்த நிலையிலும், பிராகிருதம் தொடர்ந்து இருந்து வந்தது. பாரசீகம் அனைத்தும் மறைந்து போன நேரத்தில், பாரசீக மொழி பேசுகிற ஆட்சியாளர்க ளால் ஆளப்பட்ட பகுதிகளில் நவீன இந்திய மொழி கள் தொடர்ந்து பேசப்பட்டன. நாம் இந்தியா என்று அழைத்து வருகின்ற புவியியல் பரப்பு முழுமைக்கும் ஒரு பொதுவான சட்ட வடிவத்தை திணிப்பதில் காலனிய ஆட்சியானது வெற்றியடைந்தது. இருந்தபோதும், டி.பி. மெக்காலேயின் கல்விக்கொள்ளையைத் தவிர்த்து, ஒற்றை மொழியைத் திணிப்பதற்கு பிரிட்டிஷ்காரர்கள் ஒருபோதும் கனவுகாணவில்லை.

எட்டாவது அட்டவணை

விடுதலைக்குப் பின்னர் ஒரு நீண்டநெடிய விவாதத் திற்குப் பின்பு, அரசியல் நிர்ணய சபை, அங்கீக ரிப்பதற்கு தகுதியான 14 மொழிகள் உள்ளடங்கிய எட்டாவது அட்டவணையை அறிமுகம் செய்திடத் தீர்மானித்த போது, மொழி பன்மைத்துவத்திற்கு ஓர் அரசியலமைப்பு உத்தரவாதம் கிடைத்துவிட்டது. தற்போது இருக்கின்ற விரிவடைந்த பட்டியலானது 22 மொழிகளைக் கொண்டிருக்கின்றது. அப்பட்டியலில் கிட்டத்தட்ட 30 மொழிகள் மேற்கொண்டு இணைக் கப்படும் என்று நம்புகிறோம். மேலும் அதனோடு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி மற்றும் நாடோடி மக்களின் மொழிகளையும், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மொழிகளையும், கடற்கரை சமூ கங்களின் மொழிகளையும் பட்டியலில் இணைக்க வேண்டும்.

ஐரோப்பாவில் மொழி ஒற்றுமையின் அடிப்படை யில் 19ஆம் நூற்றாண்டில் தேசியவாதம் உருவான நேரத்தில், மற்ற மொழிகளை பாதிக்காமல் மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்கு கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக- மாநிலங்களுக்கு அரசிய லமைப்பு உத்தரவாதம் அளித்ததன் காரணமாக, இந்தி யாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழி பேசுகிற மக்கள் யாவரும் தாங்கள் அனைவரும் ஒரே தேசத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியர்கள் அவர்களின் சிந்தனையி லும், வாழ்க்கையிலும், வாழ்விடங்களிலும் பன்மொழியு டையவர்களாக இருந்துவருகிறார்கள். அத்தகைய பெருமையோடு அவர்கள் பாடுகின்ற தேசியகீத மானது திராவிட மொழிகள், வங்கம், பஞ்சாபி, சிந்தி, குஜராத்தி, மராத்தி மற்றும் ஒடியா ஆகிய மொழிக்குடும் பங்களின் சொற்கூறுகளில் இந்தியாவை முதன்மை யாக விவரிக்கிறது. 

இந்தியாவின் மரபணு

நாம் பல்வேறு மொழிகளை கொண்டிருப்பதன் காரணமாக, பேசுகின்ற மொழிகளில் வேற்றுமை இருப்பினும், அல்லது நாம் ஒரே மொழியை பேசா விட்டாலும், நாம் ஒரே தேசத்தினர் என்பதை இந்தி யர்கள் மிகவும் வெளிப்படையாகவே அறிந்துள்ளனர். இந்த காரணத்திற்காகவே, விடுதலை பெற்ற மிக விரைவிலேயே திட்டமிட்டு ஒன்றிய அரசு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைத்து, மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியது. எந்தவொரு தேசபக்த இந்தியனும் இந்தியர்களாக நம்மை பெருமைப்பட வைக்கும் மொழி பன்மைத்துவத்திற்காகவும், நமது தேசியம் என்ற கருத்தின் இதயமாக இருக்கின்ற அத்தகைய பன்மைத்துவத்திற்காகவும் மன்னிப்புக் கடிதம் கொடுக்கமாட்டான். இந்தியாவின் மொழியி யல் அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவது என்பது இந்தியாவின் கூட்டாட்சிக்கு அடிப்படையாக இருக்கின்ற அரசியல் அமைப்பை உண்மையில் நிராக ரிப்பதாகவே இருக்கிறது.

ஒன்றிய அரசாங்கத்தின் கட்டமைப்பு முரண்பாடு களில் மோசமான ஒன்று என்னவெனில், ஒரு பாடமாக மொழி என்பது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கும் (கல்வி அமைச்சகம் என 2020 ல் பெயர் மாற்றப்பட்டது), உள்துறை அமைச்சகத்துக்கும் இடையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றுரீதியாக, தொடர்ந்து உள்துறை அமைச்சகம் மொழி  பன்மைத்து வத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கி றது. மொழி பிரச்சனையால் நடந்த வங்க தேசப் போருக்குப் பின்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் ஒரு மொழியாக அறிவிக்கப்படுவதற்கு உரிய தகுதி பெற்றிட ஒரு மொழியை 10000 பேர் பேச வேண்டும் என்ற முற்றிலும் தன்னிச்சையான ஒரு நிர்ணயிப்பை அறிமுகப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் கணக்கெடுப்புத்துறையைக் கேட்டுக் கொண்டது. இந்த அபத்தத்திற்கு எந்தக் கருத்தும் தேவையில்லை.

சமீபத்தில்,ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களுக்கிடையிலான இணைப்பு மொழி யாக இந்தி மொழி இருப்பதை நோக்கி நகருங்கள் என மாநிலங்களுக்கு அறிவுரை செய்தார். ஒரு மாநிலம் எந்த மொழியை பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பது என்பது ஒட்டுமொத்தத்தில் அந்த மாநிலத்தின் தனியுரிமையாகும். ஆகவே, இந்த விசயத்தின் மீது ஒரு கருத்தைச் சொல்லுமாறு உள்துறை அமைச்சர் அழைத்திருக்கக் கூடாது. நாட்டின் அதிகப்படியான எண்ணிக்கையில் இந்தி பேசப்பட்டு வருகிறது என்ற பாரதிய ஜனதா கட்சியின் ‘பெரும்பான்மையினரின் அரசியல்’ என்பதன் விரிவாக்கம்; இந்தி-இந்து-இந்துஸ்தான் என்பது தான் உண்மையான தேசியம் என்ற ஆர்.எஸ்.எஸ் கருத்தின் நகர்வு என்று அவருடைய கருத்து பார்க்கப்படு வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்திய நாகரீகத்தின் வித்திற்கு எதிரான ஒரு பார்வை அதற்குள் ஆழமாக இருக்கிறது என்பதை அவர் சிறிதும்  உணரவில்லை.

இந்தியா என்பது ஒரு மொழியியல் நாகரீகம்; அதனுடைய மொழியியல் பன்முகத்தன்மை என்பதே உயிரோட்டமான நாகரீக அடையாளம். அதுதான் இந்தியாவின் மரபணு ஆகும்.

கட்டுரையாளர்: கலாச்சார இலக்கிய விமர்சகர்; 
இந்திய மக்கள் மொழியியல் சர்வேயின் தலைவர். 
-பிரண்ட்லைன் (ஜூன் 3) இதழில் வெளியான கட்டுரை; 
தமிழில்: சோயா காஸ்ட்ரோ