articles

img

நீங்கள் நகர்ந்தால் எல்லாம் நகரும்! - சு வெங்கடேசன் எம்.பி.,

உலகமயச் சூழலில் எவ்வாறு தொழிற்சங்க ங்கள் செயல்பட வேண்டியுள்ளது என்ற கேள்வி ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.  மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த கதையில் ஆண்ட வனுக்கே பிரம்படி விழுந்த இடம். இன்று ஆள்பவர்கள்  பொதுத்துறையை சீரழிக்கிறார்கள். போராட்டம் என்ற பிரம்பை தொழிலாளர் இயக்கம் கைகளில் எடுக்க  வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்றுமே போராட்டப் பிரம்பை கை நழுவ விடாத இயக்கம். 

வரலாற்று முரண்

இந்தியா 75 ஆண்டு விடுதலையை கொண்டாடுகிற  நேரம் இது. ஓர் இந்தியக் கனவை நமது விடுதலை இயக்கம் பிரசவித்தது. கல்வி, சுகாதாரம், வேலை, குடிமை உரிமை, வருமான பகிர்வு, பாலின நிகர் நிலை, சமூக நீதி, மக்கள் ஒற்றுமை, ஜனநாயகம், பொதுத் துறை எல்லாமே அக்கனவின் பல்வேறு கூறுகள். இக்கனவே வெகு மக்கள் எழுச்சியின் வேர் களாக அமைந்தன. இக்கனவே உயிரையே தியாகம் செய்த உன்னத மனிதர்கள் சுதந்திரப் பயிருக்கு ஊற்றிய நீராகவும் அமைந்தது. இன்று இந்த விழு மியங்கள் அனைத்துமே ஒரு சேர தாக்கப்படும் காலம். விடுதலைப் போருக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிற பெரும் வரலாற்று முரணை  நமது காலத்தில் காண்கிறோம். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே தொழிற் சங்கங்களின் குவி கவனமாக அமைய வேண்டும்.  

நான் நாடாளுமன்றத்தை மூன்று ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். நாடாளுமன்றத்தில் சட்டங்கள் விவாதமின்றி நிறைவேறும் அவலம். நிலைக் குழுக்கள் சட்ட வரைவுகளை பரிசீலிக்கிற ஜனநாயகப்  பண்பு அறவே கை கழுவப்பட்டுள்ள சோகம். சட்ட வரைவுகளின் ஆங்கில - இந்தி வரைவுகளுக்கு இடையே கூட வித்தியாசம் உள்ளது. கேள்விகளை எழுப்பினால் அவை நீக்கம் என்று கரங்களில் எடுக்கப்படும் ஆயுதம். இச்சூழலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்! நாடாளுமன்றத்தின் உயிர் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் விழிப்பில் இருக்கிறது. மக்கள் கருத்தில் இருக்கிறது. மக்கள் திரட்டலில் உள்ளது. பொது இன்சூரன்ஸ் தேசிய மய சட்டத்திற்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய கருத்து திரட்டல் ஒரு உதாரணம். நீங்கள் உருவாக்கிய சிறு  தீப்பொறி நாடாளுமன்றத்தில் பெருந்தீயாக எழுந்தது. எனது குரலும் அதில் இருந்தது. எதிர்க் கட்சிகள் மத்தியில் ஏற்கெனவே இருந்த கோபம் நீங்கள் ஒரு  பிரச்சினையை கூர் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன்  ஒன்றுபட்ட எதிர் வினையாக வெளிப்பட்டது. மாநிலங்களவையில் கடந்த காலங்களில் நவீன தாராளமயத்தை ஆதரித்த கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே அரசாங்கம் விவாதங்களை தவிர்க்க முனைந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் தான் அவையில் இருந்து நீக்கப்பட்டனர். பொதுத் துறையை பாதுகாக்கிற போராட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான எதிர்த்த போராட்டமாகவும் பரிணமித்தது. 

உங்களின் இந்த அனுபவம் இதர உழைப்பாளி மக்களின் அனுபவமாக மாற வேண்டும். நாடாளு மன்றத்திற்கு வெளியேயான பெருங் களம் சூடாக இருந்தால்தான் அது உள்ளே பிரதிபலிக்கும் என்ற அனுபவம் மக்களுக்கு கிடைக்க வேண்டாமா? 

தலையாய கடமை என்ன?

சமீபத்தில் வெளியாகி இருக்கிற தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கை நம் மனதில் ஆறாக் காயத்தை உருவாக்குகிறது. இந்தியாவில் நடந்த மொத்த தற்கொலைகளில் 25 சதவீதம் அமைப்பு சாரா  அத்தக் கூலி தொழிலாளர்களுடையது என்பது. “Organise the Unorganised” - அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் கடமை, அமைப்பு சாரா  தொழிலாளர்களை திரட்டுவது எனத் தொடர்ந்து பேசுகிறோம். களத்தில் அந்தக் கடமை தீவிரமாகவே காத்திருக்கிறது. 42000 தற்கொலைகள் தினக் கூலி  தொழிலாளர்கள் மத்தியில் நிகழ்ந்து அவர்களின் உயிர்கள் பறி போயிருப்பது உங்கள் தூக்கத்தை தொலைக்கவில்லையா? இது இந்தியத் தொழிற்  சங்க இயக்கத்தின் அமைப்பு அக்கறை தேவைப்படும் இடம். 

விவசாயிகள் - தொழிலாளர் ஒற்றுமை இன்றைய  முன்னுரிமை கடமையாகும். தில்லி விவசாயிகள் போராட்டம் ஒரு திருப்பு முனை. தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தை விவசாயிகள் அமைப்பு ஆதரித்ததும், விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் குரல் தந்ததும் நல்ல துவக்கம். விவசாயிகள் தில்லியை முற்றுகை இட்டு ஓராண்டு அமர்ந்து இருந்த போது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நேரில் சென்று சகோதர ஆதரவை வெளிப்படுத்தியதும், நிதி ஆதரவு தந்ததும் நல்ல முன்னுதாரணம். இந்த இணைப்பு உடனடிக் கோரிக்கைகளை கடந்தது. அவை இன்னும்  வலுப் பெற வேண்டும். மதுரையில் கிராமங்களுக்கு சைக்கிளில் வந்து விவசாய சங்க உறுப்பினர் பதிவுக்கு  இன்சூரன்ஸ் ஊழியர்கள் 1970, 80-களில் உத வியதை கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போதும் உங்களைப் போன்ற தொழிற் சங்கங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும். 1989 இல் தமிழகத்து தொழிற்சங்க இயக்கம், வேலையின்மை எதிர்ப்பு பிரசாரக் குழுவை (CCAU - Campaign Committee Against Unemploy ment) உருவாக்கி மாநிலம் தழுவிய பயணத்தை நடத்தியது. வேலையற்ற இளைஞர்களும் தொழி லாளர் படையின் அங்கம்தான். வேலை மறுக்கப் பட்டுள்ள அத்தொழிலாளர்கள் உடன் கை கோர்த்து  1989 அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். நீங்கள் நகர்த்தினால் ஒட்டு மொத்த மத்திய தர ஊழியர்களும், அமைப்புகளும் நகர்வார்கள். 

கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணி

கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியை இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசு நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா கைவசப்படுத்தியதன் மூலம் இந்தியர்களின் வெளிநாடு பயணச் சந்தையை கல்ப் ஏர்வேஸ் இடம் இருந்து கைப்பற்ற முடியும் என்று பேசுகிறார்கள். எப்படி நுட்பமாக தனியார்மயத்தை மதவெறி நிகழ்ச்சி நிரலோடு இணைக்கிறார்கள் பாருங்கள். கல்ப் ஏர்வேஸ் என்றால் என்ன பிம்பம் மக்கள் மனதில், யோசித்து பாருங்கள்!  கோவாவில் கட்சி தாவிய ஒரு முன்னாள் முதல்வர் “நான் கோயிலுக்கு சென்று கடவுளிடம் அனுமதி  கேட்டேன், அவர் நினைத்ததை செய், முன்னேறு என்றார்” என்று கூறியுள்ளார். இதை விட மதத்தை யாரேனும் இழிவுபடுத்த இயலுமா?  இதை எல்லாம் யார் பேசுவது? இந்துத்துவா வேறு, இந்து மத நம்பிக்கைகள் வேறு என்பதை பேசுங்கள். மக்களிடம் போவது என்றுமுடிவெடுங்கள்.  தொழிற்சங்க உரிமைகள் தாக்கப்படுகின்றன. ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. உலகமயத்தை எதிர்ப்பவர்களை திசை திருப்புவது என்கிற உத்தியை மட்டும் நம்பாமல் போராட்டங் களையே முடக்குவது என்றும் சிந்திக்கிறார்கள். இரு  முனைத் தாக்குதலை இந்தியத் தொழிற் சங்க  இயக்கம் எதிர் கொண்டு வருகிறது. ஓர் விரிந்த  இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் காலம்கால மாகப் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க களம் காணுங்கள். உங்களின் களப் பிரவேசம் பல பகுதி தொழிலாளர்களையும் கொண்டு வந்து சேர்க்கும். 

மக்கள் கருத்தே மகத்தான ஆயுதம்

எல்லாவற்றுக்கும் மேலாக அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாக்க நீங்கள் நடத்தும் போராட்டம். ஐந்தாவது, ஆறாவது தட்டு ஊர்களுக்கு கூட நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே செல்கின்றன! லாப நட்டக் கணக்கு பார்த்து இன்சூரன்ஸ் பாதுகாப்பு பற்றி சிந்திக்காத, யாருக்கும் மறுக்காத நிறுவனங்கள் உங்களுடையதுதானே. அரசின் மருத்துவக் காப்பீடு  உள்ளிட்ட திட்டங்களை யார் கொண்டு போய் மக்களி டம் சேர்க்கிறார்கள்? அரசுப் பொது இன்சூரன்ஸ்  நிறுவனங்களை பாதுகாக்க நீங்கள் நடத்தும் போராட்டம் உங்கள் பொருளாதார பயன்களுக்கானது மட்டுமல்ல. தேசத்தின் சுய சார்பிற்கானது. மக்கள் நலனுக்கானது. மக்களிடம் செல்லுங்கள். பொதுத் துறை யாருக்கானது என்பதை பேசுங்கள். மக்கள் கருத்தை விட மகத்தான ஆயுதம் வேறு கிடையாது.  உலகமய காலத்தில் “வலதுசாரி திருப்பம்” எல்லா வகை ஒடுக்குமுறைகளையும் ஒரு சேர ஏவுகிறது. அதற்கான எதிர் வினைகளும் பல முனைகளில் நிகழ வேண்டும். பொருளியல் ஒடுக்குமுறை எதிர்ப்பு மட்டுமின்றி பாலினம், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும்.

மதுரையில் ஞாயிறன்று துவங்கிய தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் வரவேற்புக் குழு தலைவர் சு.வெங்கடேசன் ஆற்றிய உரையில் இருந்து


 


 

;