articles

img

கொடுங்கோல் ஆட்சியை எதிர்கொள்ளுதல் - பேரா.அரவிந்த் நாராயண்

அறிவிக்கப்படாத அவசர நிலை...

அரவிந்த் நாராயணன் பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர்.அவர் “இந்தியாவின் அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலம்” (India’s Undeclared Emergency)என்ற புத்தகத்தின் ஆசிரியர். அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் “அரசு கொள்கைகள் மற்றும் அரசு நிர்வாகம்” துறையில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிகிறார்‌. “அன்பே போன்ற சட்டம்” (Law Like Love)(2011) என்ற தொகுப்பின் கட்டுரையாளர்களில் ஒருவர். “அரசியலமைப்புச் சட்டத்திற்கு புத்துயிர் அளித்தல்” (2016) என்ற புத்தகத்தினை மற்றொரு எழுத்தாளருடன் சேர்ந்து எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான அவரது” கொடுங்கோல் அரசை எதிர்கொள்ளுதல்” (Facing the Totalitarian Regime) புத்தகத்தில் இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக கூறியுள்ளார். நரேந்திர மோடி 2014 இல் பிரதமர் ஆனதிலிருந்தே நாடு அவசரநிலை காலத்திற்கு மத்தியில் இருப்பதாக கூறுகிறார். வரலாற்றுரீதியான மற்றும் சமகாலத்திய ஆதாரங்களை முன்வைத்து அவரது வாதங்களை நிறுவுகிறார். அவரது புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ள பல்வேறு விசயங்கள் குறித்து ஃப்ரண்ட்லைன் இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார்.

உங்களது புத்தகத்தில் 2014 இல் இருந்து இந்தியா அறிவிக் கப்படாத அவசர நிலை ஆட்சியை  சந்தித்து வருகிறது என் கிறீர்கள். இந்திரா காந்தியின் பிரகடனம் செய்யப்பட்ட அவசர நிலைக்கால ஆட்சியில் (1975-77) இருந்து மோடி யின் அறிவிக்கப்படாத அவசரநிலைக்கால ஆட்சி எவ்வாறு வேறுபடுகிறது?

இந்திரா காந்தியின் அவசர நிலைக்கால ஆட்சியில்  அடிப்படை உரிமையை அமல்படுத்தக் கோரி நீதி மன்றத்தை நாடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரி மைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திடுவதைப் போன்று நீதித்துறையும் அரசியல மைப்புச் சட்டத் தலையீடே இல்லாத அரசாங்க நிர்வாக ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்தது. இது இந்திய ஜனநாயக அமைப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலை   ஏற்படுத்தியது. இந்திரா காந்தியின் அவசர நிலை திரும்பப் பெறப் பட்ட பின்னரும்கூட அரசியல்சட்ட உரிமை மீறல்கள் தொட ரத்தான் செய்தன. ஆனால் மோடி ஆட்சியில் அமரும் வரை யில், இன்று உள்ளது போன்ற கடுமையான நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை .திட்டமிட்ட வகையில்  அரசியல மைப்பு சட்ட உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.

நசுக்கப்படும் பேச்சுரிமை

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) 2018 இல் வெளி யிட்ட பத்திரிகை செய்தியில் தேசபக்தி மற்றும் கலாச்சார தேசியத்தின் பெயரால் குடிமக்கள் உரிமைகள் பறிக்கப் படுகின்றன. அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுவ தாகக் குறிப்பிட்டது. இன்று பேச்சுரிமை ,எழுத்துரிமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அரசை விமர்சிப்பவர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருண்ட கால யதார்த்தத்தை பார்க்கிறோம். 1975 அவசரநிலைக்கால ஆட்சியில் ஆட்சியை விமர்சிப்பவர்களை  கட்டுப்படுத்த மிசா எனும் “உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம்” (Misa மிசா) பயன்படுத்தப் பட்டது.  இன்று உபா எனப்படும் “சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்” பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தின்படி பீமாகோரேகான் 16 எனப்படும் 16 மனித உரிமை செயல் பாட்டாளர்கள் பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளனர். இதே சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கருத்துரிமை மறுக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். பேச்சுரிமை அரசியல் சட்டத்தின் படி பாது காக்கப்பட வேண்டும். ஆனால் குற்றவியல் சட்டத்தின்படி அரசு அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது.

அவசரநிலை சகாப்தம் நாட்டை விழுங்கி உள்ளது.ஒருவர் தனது கருத்தை தெரிவித்தால் கைதாக நேரிடும் என்ற அச்சம் 1975 இல் நிலவியதை போன்றே இன்று அச்ச மான சூழல் நாட்டைச் சூழ்ந்துள்ளது. 1975 அவசரநிலைக் கால ஆட்சியில் காவல்துறையினர்  நள்ளிரவில் வீடுகளின் கதவைத் தட்டி  கைதுசெய்தனர். அன்றைய அவசரநிலை ஆட்சியின்  கருவியாக காவல்துறை இருந்தது.இன்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியப் புலனாய்வு நிறுவனம்  (என்ஐஏ)உபா வில் கைதான வர்களை விசாரிக்கும் கருவியாக உள்ளது. தேசிய புல னாய்வு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப் படுபவர்கள் பிணையில் வெளிவரவே முடிவதில்லை. இந்த வழக்குகள் ஒரு அவசர உணர்வுடன்  விசாரிக்கப்படு வதில்லை. இதுபோன்ற அநீதியான நெடுங்கால சிறை வாசம் ஒன்றே நாட்டில் அச்சமான சூழலை நிலை நிறுத்துவதற்கு போதுமானது.

தோல்வியடைந்த  ஜனநாயகத்தின் தூண்கள்

ஒன்றிய அரசானது, அரசியல் சட்டப்படியான நான்கு ஜனநாயகத் தூண்களுக்குள் செயல்பட வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டியவைகள் ஊடகம், குடிமைச் சமூகம் மற்றும் நீதித்துறை ஆகும். ஆனால், இன்றைய  அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியில் இந்நிறுவ னங்கள் யாவும் படுமோசமாகத் தோல்வி அடைந்துவிட்டன. அதிலும் அரசியல் சட்ட மீறல்கள் நடைபெறும் போது நீதித்துறை மௌனம் சாதிக்கிறது.அரசியல்சட்ட முக்கியத் துவமிக்க பிரச்சனைகளை விசாரித்து முடிவெடுப்பதில் நீதித்துறை  தோல்வி அடைந்துவிட்டது. இதுவரையிலும் , அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அரசியல் சட்டப்பூர்வமான செல்லுபடித் தன்மை மற்றும் தேர்தல் பத்திரங்கள் போன்ற அவசர அவசிய பிரச்சனைகளைப் பற்றி இதுவரை யில் விசாரிக்கவில்லை.

கொடுங்கோல் ஆட்சியின் நோக்கங்கள்

தனிநபர் வழிபாட்டுத் தன்மையிலும் எதேச்சதிகாரத் தலை வரின் கீழ்  உருவாக்கப்பட்டுள்ள முற்று முதலான சர்வாதி காரத்திற்கும்  மேலதிகமான கொடுங்கோல் ஆட்சிக்கான (Totalitarian Regime) எல்லா தன்மைகளையும் மோடி யின் அரசு பெற்றுள்ளது என்கிறீர்கள்?

சர்வாதிகாரத்தை. விட  அதிகமான கொடுங்கோல் ஆட்சியின் நோக்கங்கள் மக்களின் வாழ்க்கையை கட்டுப் படுத்தும் தன்மையிலானது. எந்த கடவுளை வணங்க வேண்டும், யாரை காதலிக்க வேண்டும், எதை உண்ண வேண்டும் போன்ற மக்களின் வாழ்க்கை அம்சங்கள் ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்த விரும்புகிறது.பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட மதமாற்றத் தடுப்புச் சட்டம், லவ் ஜிகாத் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை வைத்தே பாஜக அரசின்  நோக்கங்க ளைப் புரிந்து கொள்ளலாம்.

சர்வாதிகாரமும் கொடுங்கோன்மையும்

அரசியல் விஞ்ஞானி ஜூவன் ஜே லின்ஸ் என்பவர்  அரசியல் வாழ்க்கை மற்றும் சமூகத்தை முற்றிலும் மாற்றி ஒழுங்கமைப்பதற்கான ஆட்சியை சர்வாதிகாரத்திற்கு மேலதிகமான கொடுங்கோல் ஆட்சி என்கிறார். லின்ஸ் ஆய்வின்படி இந்த அரசாங்கத்தின் நோக்கங்கள் சர்வாதி கார அரசாங்கத்தின் ( Authoritarian)  நோக்கங்களை  விட மிகவும் விரிவானது என்கிறார். இந்த அரசாங்கம் அரசை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மட்டுமல்ல; அரசின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி மக்கள் திரளை அரசியல்மயப்படுத்துகிறது. மக்கள் கூட்டத்தை தனது சித்தாந்தத்திற்கு ஏற்ப வடிவமைக்கிறது.  அரசின் கருவி களை கட்டுப்படுத்துவதில் மட்டும் தனது பலத்தையும் ஆதர வையும் பெறுவதில்லை. சமுதாய அளவில் பல்வேறு அமைப்புகளையும் ஏற்படுத்தி அவைகள் மூலம் தனது சித்தாந்தத்திற்கு ஏற்ப மக்களை மறுவடிவமைப்பு செய்கிறது. இந்துத்துவா  எழுச்சியின் பின்னணியில் இன்றைய இந்தியா, லின்ஸ் விளக்கத்திற்கு மிகவும் ஒத்துப் போகிறது. இந்துத்துவா சித்தாந்தத்தில் வேரூன்றியுள்ள மோடியின் ஆட்சி கண்காணிப்புக் கும்பல்களால் தாங்கிப் பிடிக்கப் படுகிறது. இன்றைய இந்திய அரசியல் அரங்கில் கும்பல்கள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்துத்துவா சிந்தனைக்கு ஏற்ப மக்களின் பொதுப்புத்தி மாற்றம் செய்யப்படுகிறது. மோடியின்  ஆட்சியின் முக்கிய பரிமாணம் என்பது கும்பல் கொடுங்கோன்மை நிறுவனமயமாக்கப்பட்டுள் ளது. இதற்கு முந்தைய அனைத்து அரசுகளில் இருந்தும் இந்த அரசு முற்றிலும் வித்தியாசமானது.

ஜெர்மனி நாஜிச ஆட்சியை புரிந்துகொள்ள நீங்கள் ஹன்னா ஆர்டெண்ட் படைப்புகளைச் சார்ந்து எழுதி யுள்ளீர்கள். 2014 இல் இருந்து இந்தியா சந்தித்து வரும் மாற்றங்களை புரிந்து கொள்வதற்கு இந்த ஜெர்மன் அரசியல் தத்துவ ஞானியின் படைப்புகள் எந்த வகையில் மிகுந்த முக்கியத்துவம் உடையது?

••ஹன்னா ஆர்டெண்ட் ஒரு ஜெர்மானிய யூத (பெண்) அரசியல் தத்துவவாதி. அவர் நாஜிகளின் இனப் படுகொலையில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியவர். அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டவர். அவரது “தீவிர தீமை அல்லது கொடுங்கோல் அரசு  (radical evil or totalitarianism)என்பதை பற்றி அவரது “கொடுங்கோல் அரசின் தோற்றம்”(origin of totalitari anism-1951) புத்தகத்தில் ஆழமாக விவாதிக்கிறார். இந்த புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. இன்றைய இந்தியச் சூழலில்  நாஜிச ஜெர்மனி பற்றிய ஆழமான பார்வையைக் கொண்ட இந்த புத்தகம் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டியதாகும். அரசியலில் கும்பல்களின் பங்கு பற்றி அறிய அவரது படைப்பை வாசித்தேன். கொடுங் கோல்அரசின் தன்மை பற்றியும் அதே சமயத்தில் கொடுங்கோல் அரசை எதிர்கொள்வதற்கான வழிகளைப் பற்றியும் ஆர்டெண்ட் பேசுகிறார். பெரும்பான்மைவாத அடிப்படையில் சிறுபான்மை யினர் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என்று பேசப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்தச் சூழ் நிலையை புரிந்துகொள்ள ஆர்டெண்ட் படைப்புகள் அவசியமானது.

நீதித்துறையின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள்

அரசியல் சட்டப்பூர்வமான ஜனநாயகத்தில்  எதிர்க்கட்சிகள், ஊடகம், குடிமைச் சமூகம் ஆகியவற்றுடன்  சுதந்திரமான நீதித் துறையின் மூலமாக அரசின் நிர்வாக அதிகாரம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. ஆனால் நீங்களோ அரசி யல் சட்டத்தை பாதுகாப்பதில் உச்சநீதிமன்றம் தோல்வி  அடைந்து விட்டது என்பதற்கான பல்வேறு உதாரணங்க ளை விளக்கியுள்ளீர்கள். இது தலைமை நீதிமன்றத்தை பற்றிய கடுமையான விமர்சனமாகும். அரசு நிர்வாகத் திற்கும் நீதித்துறைக்கும் இடையில் கள்ளத் தொடர்பு உள்ள தாக குறிப்பிடுகிறீர்கள். நீதித்துறை அரசு நிர்வாகத்திற்கு  அடிபணிவது  பற்றி விளக்க முடியுமா?

இன்றைய சூழலில் நீதித்துறையின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதித்துறை யில் செயல்படுபவர்களின் மேற்கோள்களை குறிப்பிட் டுள்ளேன். சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள்,குடிமக்கள் ஆகியோரிடம் அதிகரித்துவரும் அதிருப்தியை அந்த நீதிபதிகள் எதிரொலித்துள்ளனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து,  குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதா போன்ற அதிக முக்கியத்துவம் உடைய பிரச்சனைகளை அவசர உணர்வுடன் விசாரித்து முடிவெடுப்பதில் தனக் குள்ள பொறுப்பை உச்சநீதிமன்றம் கைகழுவி விட்டது. நீதிபதி கோபால் கவுடா உச்சநீதிமன்றத்தின் எண் ணற்ற தோல்விகளை பட்டியலிடுகிறார்.

இத் தோல்விகளை அவர்உச்ச நீதிமன்றத்தின் “உச்ச பட்ச தோல்வி”(supreme failure) என்று கடுமையாகச் சாடுகிறார். ஜபல்பூர் கூடுதல் டிவிஷனல் நீதிபதி ஹெச்.ஆர்.கண்ணா மற்ற நீதிபதிகளிடமிருந்து  வரலாற்றுச் சிறப்பு மிக்க மாறுபட்ட கருத்தை பதிவு செய்தார். இத்தகைய அரசியல் சட்ட பாரம்பரியத்திலிருந்து நாம் ஊக்கம் பெற வேண்டும்.

ஒரே அரசின் கீழ் செயல்படும்  இரண்டு விதமான அரசுகள்

எர்னெஸ்ட் ஃப்ராங்கெல் (Ernst Frankel)ஜெர்மன் யூத வழக்கறிஞர். தொழிலாளர்களுக்காக வாதாடியவர்.அவரது படைப்புகளையும் வாசித்தேன். அவர் நாஜிச ஜெர் மனியில் இரண்டு விதமான அரசுகள் செயல்பட்டதாக கூறு கிறார். ஒன்று அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்ட (!?) இயல்பான அரசு(normative state)- இன்னொன்று நிறு வனமயப்படுத்தப்பட்ட சட்டவிரோத  தனிச்சிறப்பு அரசு (pre regotive state)..அவரது ஆய்வின் படி , நாஜிச ஜெர்மனி யில் இறுதிவரையில்  இரண்டுவிதமான அரசுகள் செயல்பட்டதாகத் தெரிவிக்கிறார். இந்தியாவில் இன்று  இப்படிப்பட்ட இரண்டு விதமான அரசுகள்  செயல்படுமானால் நம் முன்பு உள்ள சவால் என்பது இயல்பான அரசைஎந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும்.சட்ட விரோதமான தனிச்சிறப்பு அரசை கட்டுப்படுத்த வேண்டும்

பொருளாதார சமத்துவமின்மையே வலதுசாரிகளின் எழுச்சிக்கு காரணம்

இந்திய சமூகத்தையும் மக்களின் கலாச்சாரத்தையும் தனது பெரும்பான்மை வாதத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பது பற்றிய ஆர்எஸ்எஸ்சின் திட்டம் பற்றி நீங்கள் சொல்வதை  புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் முதலாளித்துவத்திற் கும்  இந்துத்துவா தீவிரவாத சித்தாந்தத்திற்கும் இடையில் பலவீனமான இணைப்பே  உள்ளதாக சொல்கிறீர்கள். இது பற்றி விளக்க முடியுமா?

தாமஸ் பிக்கெட்டியின் மகத்தான படைப்பான “மூலதனம்  மற்றும் சித்தாந்தம்” (2019) என்ற புத்தகத்தில் மூலதனக் கட்டமைப்பில் இருந்து உருவாகும் சமத்துவ மின்மை சமூகக் கட்டமைப்பிற்கு  தீங்கானது என்று நம்பத் தகுந்த வகையில் நிரூபிக்கிறார். நீண்ட கால வரலாற்றை ஆய்வு செய்து அதில் 1880 - 1914 க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் சமத்துவமின்மை  திருப்பத்தை அடைந்தது. இது பிரெஞ்சுப் புரட்சிக்கு பிந்தைய காலமாகும். இந்தக் காலத்தில் ஒரு சிலரின் கைக ளில் அதீதமான செல்வம் குவிந்தது. அதன் காரணமாக சமூக, தேசிய பதற்றங்கள் தீவிரமடைந்தன. பாசிச வாதிகள்  இந்த பதற்றநிலையை பயன்படுத்திக் கொண்டு இத்தாலி, ஜெர்மனியில்  ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். இன்றைய உலகம் ஒரு நெருக்கடியான சூழலை  எதிர்கொள்கிறது. நீடித்து நிலைத்து நிற்க முடியாத சமத்துவமின்மை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ள கடுமையான பொருளாதார சமத்துவமின்மை தான் இன்று வலதுசாரி தத்துவம், வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சிக்கு பெரிதும் காரணமாகும். இந்துத்துவாவை எதிர்க்க வேண்டுமெனில்,  சமூக பொருளாதார சமத்துவமின்மையை எதிர்த்தாக வேண்டும்.

உங்களது புத்தகம் இந்தியா எப்படிப்பட்ட அடிப்படையான மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை முன்வைக்கிறது. அரசியல் சட்டத் தின் அடிப்படை நோக்கங்கள், தேசத்தின் லட்சியம் எல்லாம் நசுக்கப்படுகின்றன என்று பல்வேறு வகையான இந்தியர்க ளிடம் விரக்தி ஏற்பட்டுள்ளது. எனில், அதிகரித்துவரும் தாக்குதலை எதிர்கொள்வது எவ்வாறு?

நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியோடு தான் புத்தகத்தை முடித்துள்ளேன்.இந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்ப்பதற்கான சில வழிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளேன். நான் குறிப்பிட்டுச் சொல்வது எதிர்ப்புக் குரல்களை ஒருங்கிணைத்து நாட்டில் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் உயிரோட்டமாக உள்ளது என்று உணர்த் துவது முக்கியமானது என்று சுட்டிக் காட்டியுள்ளேன்..

சமத்துவமின்மைக்கு  எதிரான போராட்டம்

ஆட்சியாளர்களுக்கு எதிரான கேலி- பகடி- நகைச் சுவை விமர்சனரீதியிலான எதிர்ப்புகள், ஆட்சி நிர்வாக வட்டத்தில் எழும் எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். இன்றைய இந்தியாவில் பல்வேறு மாற்றுக் கருத்துக் கள் உள்ளன. குறி வைத்து தாக்கப்படும் எதிர்க்கட்சிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், விவ சாயிகள், அம்பேத்கரியவாதிகள், தலித்துகள், பெண்கள் ஆகிய அனைவரையும் எவ்வாறு ஒன்றிணைக்க வேண்டும் என்பதே நம் முன்பு உள்ள  சவாலாகும். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக எவ்வாறு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது போன்ற கேள்விகளுக்கு புத்தகத்தின் இறுதியில் விடைகாண முயற்சித்திருக்கிறேன்.

இன்றுள்ள மோசமான நிலையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு தாங்கள் வலிமையற்றவர்களாக இருப்ப தாக மக்கள் எண்ணுகின்றனர். இதற்கு பதிலாக ஆர்டெண்டின் ஆய்வுகளை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். இதுபோன்ற மக்களின் நிராதரவான மனநிலை யில்தான் கொடுங்கோல் ஆட்சி செழித்து வளரும். தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற மக்களின் உணர்வு களை பயன்படுத்தி ஒவ்வொரு மக்கள் பகுதியினரும் தனிமைப் படுத்தப்படுகின்றனர்; இதனால் தனித்தனித் தீவுகள் ஆகின்ற னர். இவ்வாறு மக்கள் தனித் தனித் தீவுகளாக இருப்பதால் அவர்களால் ஒன்றுபட முடியாது. ஆர்டெண்ட் சொல்கிறார்; “ஒற்றுமையுடன் செயல்படும் மனிதர்களிடம் இருந்துதான் அதிகாரம் கிடைக்கிறது. பிரிந்து கிடக்கும்  மனிதர்கள் அதிகாரம் அற்றவர்களாகவே இருப்பார்கள்”.

அரசை எதிர்ப்பதற்கான விலை

அரசை எதிர்த்தால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத் தை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவே பினாயக்சென் கைது செய்யப்பட்டார் என்று மனித உரிமை செயல்பாட்டாளர் கே.பாலகோபால் குறிப்பிட்டார். தனிமைப்பட்டு பிரிந்து கிடக்கும் மக்களிடம் இப்படிப்பட்ட அச்ச உணர்வை அகற்றுவதற்கு போராட வேண்டும். ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்கள், விவாதங்கள் போன்ற செயல்பாடுகள் தனிமை உணர்வில் ஒரு முறிவை ஏற்படுத்தும். மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண் டால் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சாத்தி யங்கள் உருவாகும். மக்கள் அவ்வாறு ஒன்றிணைந்து செயல் படத் தொடங்குவது மாற்றத்துக்கான செயல்பாடுகளின் தொ டக்கமாக இருக்கும். உலக சமூக மன்றத்தின் ( World Social Forum) முழக்கமான  “இன்னொரு உலகம் சாத்தியமே “என்ற லட்சியத்தை நனவாக்குவதற்கான சூழலை மனித ஒருமைப்பாடு உருவாக்கும்.

ஃப்ரண்ட்லைன், மார்ச்,25.2022, 
தமிழில் : ம.கதிரேசன்


 

;