articles

img

‘சீர்திருத்தம்’ எனும் நாசகர சொல்....சு.வெங்கடேசன் எம். பி.....

மிக அதிகமான ஜனநாயகம் இருப்பதால் இந்தியாவில் சீர்திருத்தங்கள் கடினமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கந்த். வரவர ராவ், உமர் காலித்,சுதா பரத்வாஜ், இன்னும் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஒற்றை காரணத்துக்காக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் மக்கள் போராளிகளிடம் கேட்போம், அதிக ஜனநாயகம் பற்றி.  பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 83 வயது ஸ்டான் சுவாமி வயது மூப்பு காரணமாக பயன்படுத்த  கோரிய உறிஞ்சும் (sipper) கிளாஸ் மறுக்கப்பட்டதிலும், அதேபோல கைது செய்யப்பட்டு கண் கண்ணாடி மறுக்கப்பட்ட கௌதம்நவ்லகாவின் கோரிக்கைகளிலும் பல்லிளித்துக்கொண்டி ருக்கிறது ‘மிக அதிகமான ஜனநாயகம்.’ அவ்வளவு ஏன்? தில்லிஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறையில் அதைதூண்டியவர்களை பாதுகாத்து, பாதுகாத்தவர்களை  பழி வாங்கிய மாண்பு தானே உங்கள் அதிகப்படியான ஜனநாயக மாண்பு! 

மூன்று வேளாண் மசோதாக்களின் மீது ஓட்டெடுப்பு நடத்தாமல் நடத்தியதாக கூறி,  நடத்த கூறியவர்களை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்தது தானே உங்கள் ஜனநாயகம்.பிரிட்டிஷாரின் பேயாட்சியில் கூட இத்தனை லட்சம்மனிதர்கள் டிசம்பர் மாத தில்லி குளிரில் இருப்பிடமல்லா இடத்தில் உறைந்து கிடந்தது கிடையாது. ஜனநாயகத்தின் பேருருவை அவர்கள் உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ நெடுஞ்சாலைகளின் குறுக்கே முள்வேலிகளால் சுவரெழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.தன் உரிமைக்காக போராடும் கடைசி மனிதரும் மாண்பிழந்து சிறையில் அடைக்கப்படும் வரை ஒரு துளி ஜனநாயகம் கூட உங்களுக்கு அதிகப்படியான ஜனநாயகமாகத்தான் இருக்கும். ஜனநாயகத்தின் முனையை உடைத்து எளிய மக்களின் ரத்தத்தில் நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதுதான் இந்த சீர்த்திருத்தங்கள்.

;