articles

img

ஜனவரியில் பாராட்டு! மே-யில் வெளியேற்றம்!! - அ.அன்வர் உசேன்

பா.ஜ.க. தலைமை திரிபுராவில் தனது முதலமைச்சரை மாற்றியுள்ளது. பிப்ளப் தேப் வெளியேற மாணிக் சாஹா முதல்வர் ஆகியுள்ளார். திரிபுராவில் சட்டமன்ற தேர்த லுக்கு இன்னும் 9 மாதங்கள்தான் உள்ளன. பா.ஜ.க. ஆட்சி மீது கடும் அதிருப்தி நிலவுகிறது என்பதை கணித்த தலைமை முதல் அமைச்சரை மாற்றுவதன் மூலம் இந்த அதிருப்தியை போக்க முயல்கிறது. ஏனெனில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக திரிபுரா சட்ட மன்ற தேர்தல்கள் என்பது மட்டுமல்ல; 2018 திரிபுரா வெற்றி சாதாரண வெற்றி அல்ல; அது கம்யூனிச சித்தாந்தத் தின் மீது பெறப்பட்ட வெற்றி என மோடி அப்பொழுது கூறினார். எனவே 2023இல் சித்தாந்த தோல்வியை தவிர்ப் பது பா.ஜ.க.வின் முக்கிய இலக்காக ஆகியுள்ளது.

ஜனவரியில் பாராட்டு; இன்று கல்தா!

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திரிபுரா சென்ற பிரதமர் மோடி திரிபுரா பிப்ளப் தேப் ஆட்சியை வானளாவ புகழ்ந்தார். “நானும் பிப்ளபும் இரட்டை இன்ஜின்” என வும் இரட்டை இன்ஜின் ஆட்சிகளில் திரிபுரா பீடுநடை போடுகிறது எனவும் முழங்கினார். ஆனால் ஐந்தே மாதங்களில் பிப்ளப் தேபுக்கு கல்தா கொடுக்கப் பட்டுள்ளது. என்ன காரணம்? பா.ஜ.க.மாநில அரசாங் கம் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அந்த அதிருப்தி எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக இடது முன்னணிக்கு சாதகமாக மாறக்கூடாது; அதே சமயம் பா.ஜ.க.வின் ஆட்சியை தொடர வைக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு முக்கியமான நகர்வு முதல் அமைச்சரை மாற்றுவது!  மக்களின் அதிருப்திக்கு காரணம் என்ன? 2018ஆம் ஆண்டு தேர்தலுக்கு 8 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும் பொழுது திரிபுராவுக்கான “நீண்ட கால திட்டம்” எனும் ஒரு ஆவணத்தை அன்றைய பா.ஜ.க. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டார். இடது முன்னணிக்கு இந்த ஆவணத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை பறிக்கவே குறுகிய காலத்தில் இந்த ஆவணம் வெளியிட்டனர். இதுவே அவர்களது தேர்தல் அறிக்கையாகவும் முன்வைக்கப்பட்டது. இந்த ஆவணத் தில் சுமார் 300 வாக்குறுதிகள் தரப்பட்டன. திரிபுராவை சொர்க்கபுரியாக மாற்றுவது போல பிரமைகளை உரு வாக்கும் வகையில் இந்த வாக்குறுதிகள் பிரச்சாரம் செய்யப்பட்டன. 

அந்த வாக்குறுதிகளில் சில  முக்கியமானவை:

  1.     ஆண்டுக்கு 50,000 வேலை வாய்ப்புகள்
  2.     முதல் ஆண்டிலேயே 50,000 அரசு பணிகளுக்கு நியமனம்
  3.     அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய ஆணைய பரிந்துரைகள் அமலாக்கம்
  4.     நீதிமன்ற தீர்ப்பால் வேலை இழந்த 10,400 ஆசிரியர்களின் பிரச்சனைக்குத் தீர்வு
  5.     அனைவருக்கும் ஸ்மார்ட் அலைபேசி
  6.     விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு
  7.     விவசாயிகளுக்கு விளைச்சல் செலவில் 150% 
  8.     மூங்கில் உற்பத்திக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்
  9.     தகவல் தொழில்நுட்பம் உட்பட புதிய தொழில்கள்
  10.     அனைத்து ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரம்
  11.     ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கல்லூரி
  12.     தடையற்ற மின்சாரம்
  13.     எய்ம்ஸ் உட்பட மருத்துவக் கல்லூரிகள் 
  14.     அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த வீடு
  15.     குற்றங்கள் இல்லாத திரிபுரா 
  16.     கிராமப்புற மக்களின் வருமானம் இரட்டிப்பு
  17.     பெண்களுக்கு முதுநிலை கல்வி வரை இலவசம்

2018ஆம் ஆண்டு சிறு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி க்கு வந்த பா.ஜ.க. அரசாங்கம் தனது எந்த வாக்குறு தியையும் நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்ல; ஒவ்வொரு அம்சத்திலும் திரிபுரா பின்னுக்கு சரிந்துள் ளது. சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து தளங்களி லும் இது மிகப்பெரிய பிரச்சாரமாக மக்களிடையே பேசு பொருளாக வலம் வருகிறது. இது தொடர்ந்தால் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த பா.ஜ.க.வுக்கு பிப்ளப் தேபை பலி தர வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.  புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாணிக் சாஹா முன்னாள் காங்கிரஸ் தலைவர். 2016ஆம் ஆண்டில்தான் பா.ஜ.க.வில் இணைந்தார். திரிபுரா பா.ஜ.க.வின் தலை வராக இருந்தார். எனவே பிப்ளப் தேபின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளித்தவர். திரிபுரா உள்ளாட்சி தேர்தல்களில் கடும் வன்முறையும் முறை கேடுகளும் நடக்க காரணமாக இருந்தவர். இடது முன்னணி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஆசி வழங்கியவர். இப்பொழுது சாஹா முதல்வராகவும் பிப்ளப் தேப் மாநில பா.ஜ.க.வின் தலைவராகவும் பதவிகளை மாற்றிக் கொண்டுள்ளனர். இருவரும் ஜாடிக்கேற்ற மூடிகளாக உள்ளனர். எனவே இந்த மாற்றம் என்பது உண்மையில் மாற்றம்தானா எனும் கேள்வி எழுகிறது.

பொருளாதாரச் சீரழிவுகள்

கடந்த 50 மாதங்களாக “இரட்டை என்ஜின்” ஆட்சி இருந்தும் திரிபுரா எவ்வித பொருளாதார முன்னேற் றத்தையும் சந்திக்கவில்லை. இடது முன்னணி ஆட்சியை ஒப்பிடும்பொழுது கடன் 300 சதவீதம் அதிகரித்துள் ளது. வரலாற்றில் முதல் முறையாக பகிரங்கச் சந்தை யில் கடன் வாங்க திரிபுரா நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடன் மாநிலத்தின் மக்களுக்கோ அல்லது வளர்ச்சித் திட்டங்களிலோ பிரதிபலிக்கவில்லை. ஒரு ஆண்டுக்கு சுமார் 5000 பேர் வீதம் 20,000 அரசு ஊழியர் கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இந்த பணிகள் நிரப் பப்படாதது மட்டுமல்ல; ஊழியர் பற்றாக்குறையால் அரசின் நிர்வாகப் பணிகள் கணிசமாக பாதிப்படைந் துள்ளன. இடது முன்னணி ஆட்சியில் தேசத்திலேயே முதல் இடத்தை மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வகித்த திரிபுரா இன்று தள்ளாடுகிறது.  அனைத்துத் திட்டங்களிலும் பா.ஜ.க. ஊழியர்கள் லஞ்சம் பெறுவதால் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. “எங்கே எனது வேலை?” எனும் கேள்வியுடன் இளை ஞர்கள் பெரும் கோபத்தில் பல இயக்கங்களை  நடத்தி யுள்ளனர். சமூக ஓய்வூதியத் திட்டத்தில் பாதிப் பேர் நீக் கப்பட்டுள்ளனர். மலைவாழ்  மக்களின் வாழ்வாதா ரங்களும் சிதைந்து பட்டினி மரணங்கள் நிகழத் தொ டங்கியுள்ளன. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தை களை விற்கும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். மின் வெட்டு இல்லாத நாள் இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.

பாசிச அடக்குமுறைகள்

திரிபுராவில் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜன நாயகமுறை தொடர்ந்தால் கூட இடது முன்னணி மீண்டும் விசுவரூபம் எடுக்கும் என்பதை உணர்ந்த பா.ஜ.க. ஆட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இந்த கோரத் தாண்டவத்தின் சில வெளிப்பாடுகள்:

  1.     22 கட்சி ஊழியர்கள் படுகொலை
  2.     3254 கட்சி ஊழியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்கள்
  3.     866 கட்சி மற்றும் வெகு மக்கள் அமைப்புகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன
  4.     மாநிலக் குழு அலுவலகம் தீக்கிரை
  5.     கட்சி ஊழியர்களின் 3363 வீடுகளும் 659 கடைகளும் அழிப்பு
  6.     கட்சிக் குடும்பங்களின் மீன் குளங்கள்/இரப்பர் தோட்டங்கள் போன்ற 1500 வாழ்வாதார வசதிகள் நாசம்!
  7.     பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற தோழர் மாணிக் சர்க்கார் மீது கொலை வெறி தாக்குதல்
  8.     302 இடைக்குழுக்களில் 124உம் 24 மாவட்டக்குழுக்களில் 7உம் தமது இடத்தை தவிர்த்து வேறுபகுதிகளில் மாநாடுகளை நடத்த வேண்டிய தேவைஏற்பட்டது. (இத்தகைய அடக்குமுறைச் சூழல்களிலும் மாவட்ட மாநாடுகளில் 100 சதவீதம் பிரதிநிதிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்படி ஏராளமான பாசிசத் தாக்குதல்கள் கட்ட விழ்த்துவிடப்பட்டன. ஊடகங்களும் இந்த தாக்குதலி லிருந்து தப்பவில்லை. பா.ஜ.க. ஆட்சியை விமர்சித்த காரணத்துக்காக 42 ஊடகவியலாளர்கள் நேரடியாகத் தாக்கப்பட்டனர். பல  ஊடகங்களின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு 6 முறை பல உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்துள்ளன. அனைத்திலும் முறைகேடுகள் நடந்தது மட்டுமல்ல;  இடது முன்னணி வேட்பாளர்கள் 50%சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேட்பு மனுக்களை கூட தாக்கல் செய்ய  முடியவில்லை. இதே நிலைதான் ஏனைய எதிர்க் கட்சிகளுக்கும்! வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. வாக்குகளை பா.ஜ.க. குண்டர்களே போட்டுக்கொண்டனர். 

பிளவு நடவடிக்கைகள்

தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க. திரிபுராவில் இருவித பிளவுகளை உருவாக்க  முயல்கி றது. ஒரு பக்கம் மலைவாழ் மக்களுக்கும் ஏனையோருக் கும் இடையே முரண்பாடுகளை உருவாக்குகிறது. மறு புறத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை திரட்ட முயல்கிறது. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி (IPFT) மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது. எனவே திரிபுரா மன்னர் குடும்பத்தால் உரு வாக்கப்பட்ட  “திப்ரா மோதா” எனும் அமைப்புடன் கூட்டு சேர முயற்சிகள் நடக்கின்றன. இந்த அமைப்பு  மலைவாழ் மக்களுக்காக தனி மாநிலம் எனும் முழக்கத்தை முன் வைத்து சுமார் 35 லட்சம் மக்கள் வாழும் திரிபுராவை இரண்டாகப் பிரிக்க முனைகிறது. இதன் மூலம் மலை வாழ் மக்களுக்கும் ஏனையோருக்கும் இடையே முரண் பாடுகளை உருவாக்கி அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த பா.ஜ.க. முயல்கிறது. மறுபுறத்தில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் களை தொடுத்து முஸ்லீம் அல்லாத மக்களின் ஆத ரவை பா.ஜ.க.வுக்கு திருப்பிவிட சங் பரிவார அமைப்பு கள் முயல்கின்றன. சமீபத்தில் சில இடங்களில் மசூதி களும் முஸ்லீம்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. திரி புராவின் வரலாற்றில் மதக்கலவரங்கள் நடந்தது இல்லை. ஆனால் குறுகிய ஆதாயங்களுக்காக இந்த  மத முரண் பாடுகள் கூர்மைப்படுத்தப்படுகின்றன. இப்படி பல முனைகளில் பிப்ளப் தேப் ஆட்சியின் அடக்குமுறைக ளும் முறைகேடுகளும் மக்களிடையே கடும் அதிருப்தி யை உருவாக்கின. பா.ஜ.க.வுக்குள் கடும் கோஷ்டி பூசல்களும் அதிகரித்து வந்தன. 

எனவேதான் பிப்ளப்தேப் தலைமையில் தேர்தலை சந்தித்தால் வெற்றி சாத்தியமில்லை என மதிப்பிட்ட பா.ஜ.க. தலைமை அவரை முதல்வர் பதவியிலிருந்து அகற்றியுள்ளது. ஆனால் முதல்வர் கனவில் இருந்த பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல்வர் பதவி இல்லையெனில் நான் செத்துவிடுவேன் என ஒரு தலை வர் கதறி அழும் காணொளி நாடெங்கும் வைரல் ஆனது. பிப்ளப் தேபை மாற்றி மாணிக் சாஹாவை முதல்வர் ஆக்கிய செயல் பா.ஜ.க.வுக்கு உதவப் போவது இல்லை. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது. சட்டமன்ற தேர்தலில் திரிபுரா மக்கள் சரியான பதிலை பா.ஜ.க.வுக்கு அளிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
 



 



 

;