இந்திய நாட்டில் விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ளது ஜவுளித் தொழிலாகும். ஏறத்தாழ 10 கோடி மக்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக, நூற்பாலைகள், விசைத்தறி, ஆயத்த ஆடைகள், பனியன் மற்றும் இவை சார்ந்த உப தொழில்கள் உள்ளன. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு பகுதியும், சென்னை அருகில் உள்ள மாவட்டங்கள் என 20 மாவட்டங்களில் ஜவுளித் தொழில் நடந்து வருகிறது.
வெற்றுப் பேச்சு
பா.ஜ.க. மோடி ஆட்சிக்கு வந்தபின்பு, ஜவுளித் தொழில் நெருக்கடிகள் தொடர் கதையாக உள்ளது.பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிக்கப்பட்டது. கொரோனா பொது முடக்க காலத்தில் நெருக்கடி இன்னும் மோசமானது. மோடி அறிவித்த திட்டம் எதுவும் இப்பிரிவினரை பாதுகாக்க வில்லை. மாறாக, பல லட்சக்கணக்கில் தொழிலாளர் கள் வேலை இழந்து பட்டினியால் பரிதவித்தனர். கொரோனா காலத்தில் இறந்தவர்களைவிட பசி பட்டினியால் இறந்தவர்கள் மற்றும் வட்டிக்கு கடன் வாங்கி திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்த வர்கள் எண்ணிக்கை ஏராளம். பொது முடக்க காலம் தளர்வு வந்தபின்பு முழுமையாக வேலையில்லை. உற்பத்தி செய்த சரக்குகள் தேக்கம் அடைந்தன. முன்புபோல விற்பனை இல்லை. மக்களிடம் பணப் புழக்கம் இல்லை என்ற குரல் நாடு முழுவதும் ஒலித்து வருகிறது.
மேற்கண்ட வேதனைகளை மோடி அரசுக்கு எடுத்துச் சென்றும், இடித்துரைத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மாறாக, கார்ப்பரேட் முதலாளி களை பாதுகாக்கவும், சேவை செய்யவுமே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பாரம்பரியமான ஜவுளித் தொழிலை பாதுகாக்கவோ, தொழிலாளர்களையும், சிறு உடமையாளர்களையும் நெருக்கடியில் இருந்து மீட்கவோ மோடி அரசுக்கு அக்கறையில்லை. செய லற்ற நிலையில் ஒன்றிய மோடி அரசு உள்ளது. கொரோனா தொற்று உள்ள நாடுகளில் அங்குள்ள ஆட்சியாளர்கள் இது போன்ற தொழில் களை காப்பாற்ற சில நிவாரணங்களை வழங்கி உள்ளனர். இந்தியாவில் பிரதமர் மோடியும் அறி வித்தார். கொரோனா காலத்தில், தொழிலாளர்க ளுக்கு, ஊதியம் வழங்க வேண்டும், வீட்டு வாடகை கேட்கக் கூடாது, சத்தான உணவு உண்ணுங்கள் என்று மோடி ஆலோசனை வழங்கினார். ஆனால் இந்தியாவில் மோடி சொன்ன எதுவும் நடக்கவில்லை. பட்டினிச் சாவுகளும், தற்கொலைகளும்தான் நடந்தன. ஜவுளித் தொழில் தற்போதும் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது. மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
ஏற்றியது 50 ரூபாய் குறைத்தது 10 ரூபாய்
ஏற்கனவே ஜவுளித் தொழில் முடங்கிய நிலையில் தற்போது கடந்த ஆண்டு நவம்பரில் நூல் விலை கிலோ வுக்கு ரூ.50 அதிகமானது. நூற்பாலைகள் தவிர ஜவுளித் தொழில் துறையினர் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள். திருப்பூரில் 1 நாள் பொது வேலை நிறுத்தம், வேலூர், கரூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், சங்கரன் கோவில், இராஜபாளையம், கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் நூல் விலையை குறைக்க ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ரூ.50 விலை ஏற்றிய நிலை யில் டிசம்பரில் கிலோவுக்கு ரூ.10 மட்டுமே குறைத்தனர். நூல் விலை உயர்வுக்குக் காரணம் ஒன்றிய மோடி அரசுதான் என்று ஜவுளி உற்பத்தியாளர்களே பகிரங்கமாக அறிக்கை மூலம் சொல்லி ஒன்றிய அரசுக்கு மனுக்கள் ஏராளமாக அனுப்பினார்கள்.
பஞ்சு, நூலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக் கூடாது. நாட்டின் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் ஒன்றிய அரசை வலி யுறுத்தினார்கள். குளிர்கால நாடாளுமன்ற கூட்ட தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நூல் விலை உயர்வை குறைக்கப் பேசினார்கள். ஒன்றிய அமைச்ச ரிடம் வலியுறுத்தினார்கள். என்ன நடந்தது? நூல்விலையை குறைக்காமல், மோடி அரசு ஜவுளித் தொழிலுக்கு ஜி.எஸ்.டியை 5சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியது.இப்பிரிவினருக்கு இது பேரிடியாக விழுந்தது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு வந்த நிலையில் தற் காலிகமாக ஜிஎஸ்டி உயர்வை நிறுத்தி வைத்துள் ளது.
மோடி அரசின் புத்தாண்டுப் பரிசு?
ஜனவரி -1 நாடுமுழுவதும் புத்தாண்டு கொண்டாட் டங்கள் நடந்தது. இந்த ஆண்டு மக்களுக்கு மோடி அரசின் அடக்குமுறைச் சட்டத்தில் இருந்து விடியல் கிடைக்குமா என்று ஏங்கி எதிர்பார்த்த நிலை யில்தான் மீண்டும் நூல்விலை ரூ.30 உயர்ந்துள்ளது என்பது பாஜக அரசின் புத்தாண்டு பரிசாகும். இது ஜவுளி உற்பத்தியாளர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. மோடி நாட்டு மக்களுக்கு பிரதமர் அல்ல, ஒரு சில கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு நண்பர் என்பதை நிரூபித்துள்ளார். ஜவுளித் தொழில் இவ்வாறு நலிந்த நிலையில் உள்ளபோது பாரம்பரியத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை படுமோசமாக உள்ளது. கைத்தறித் தொழிலாளர்கள், சமூகப் பாதுகாப்பு இல்லாமல் வறுமையின் பிடியிலிருந்து மீள முடியா மல் வாழ்ந்து வருகிறார்கள். விசைத்தறித் தொழிலா ளர்கள், தினசரி 12 மணி நேரம் வேலை செய்தாலும் வருமானம் பற்றாக்குறையால் வட்டிக்குக் கடன் வாங்கு வதால் சுரண்டப்படுகிறார்கள். சட்ட - சமூகப் பாதுகாப்பு இல்லை, ஊதிய உயர்வு பல ஆண்டு களாக வழங்கப்படவில்லை. தினசரி வருமானம் ரூ.300, 400 தான் அதுவும் வேலை நிரந்தரமாக இல்லாமல் பசி பட்டினியுடன் வாழ்க்கை நடத்த வேண்டும். ஆயத்த ஆடை பனியன் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு சில சட்டங்கள் இருந்தும் அமலாவதில்லை என்ற நிலை நிரந்தரத் தன்மையுள்ள பனியன் தொழிலில் இன்று நிரந்தரத் தன்மையற்ற தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஜவுளித் தொழிலில் தற்போது நூற்பாலைகள்தான் ஓரளவு நூல்விலை உயர்வால் பயன் பெற்றுள்ளார்கள். இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் கூட அமலா வதில்லை. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் உழைப்புச் சுரண்டல் நடந்து வருகிறது. ஊதிய உயர்வு இல்லை, சட்ட சமூகப் பாதுகாப்பு இல்லாமல் தொழி லாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
ஒன்றுபட்ட போராட்டமே வழி
தில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், தியாக மும் வெற்றி பெற்றதன் மூலம் மோடி அரசை அசைக்க முடியும் என்று புதிய நம்பிக்கை வந்துள்ளது. ஒன்று பட்ட போராட்டம், ஒற்றுமை, உறுதித்தன்மை, நாடு தழுவிய தொழிலாளர்களின் ஆதரவு, வேளாண் சட்டங் களை திரும்பப் பெற வைத்துள்ளது. புத்தாண்டில் கிடைத்த வெற்றியாகும். அதே திசை வழியில் ஜவுளித் தொழிலில் உள்ள அனைத்துப் பிரிவினரும், நூற்பாலைகள் தவிர பனியன் ஆயத்த ஆடை, கைத்தறி, விசைத்தறி மற்றும் உப தொழில் சார்ந்த அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். நூல் விலை உயர்வை குறைக்க, அடையாளப்பூர்வ போராட்டம் மட்டும் போதாது, தில்லி விவசாயிகள் போராட்டம் நமக்கு வழிகாட்டியுள்ளது. ஜவுளித் துறை சார்ந்த நண்பர்கள் அமைப்புகள், நீடித்த போராட்ட மாக தீவிரமான போராட்டமாக நடத்த முன்வர வேண்டும். தனித் தனிப் பிரிவாக இல்லாமல் ஜவுளித் தொழில் முழுமையாக ஒரே குரலில் நூல் விலை முற்றாக குறைகிற வரையில் போராட்டம் நடத்த முன்வர வேண்டும். அதற்கு சிஐடியு ஆதரவு வழங்கும். தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் இடைவிடாமல் போராடி வரும் தமிழ் மாநில சிஐடியு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.
கட்டுரையாளர் : மாநில உதவித் தலைவர்,சிஐடியு