articles

img

கேரளாவில் மகத்தான வெற்றி.... பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்....

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடைபெறும் நிறுவனங்களுக்கான தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது., மாவட்டப் பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 14 இடங்களில் 11 இடங்களையும், வட்டார பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 152 இடங்களில் 108 இடங்களையும், கிராம பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 941 இடங்களில் 514 இடங்களையும்  இடதுஜனநாயக முன்னணி வென்றிருக்கிறது. ஆறு மாநகராட்சிகளில் ஐந்து இடங்களையும், 86 நகராட்சிகளில் 35 நகராட்சிகளையும் வென்றிருக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன் 2015இல் நடைபெற்ற தேர்தல்களைவிட அனைத்து விதங்களிலும் இடது ஜனநாயக முன்னணி வெற்றியைக் கணிசமான அளவிற்கு மேம்படுத்தியிருப்பது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த சமயத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியஜனநாயக முன்னணியின் மாநில அரசாங்கம் ஆட்சியிலிருந்தது. இந்தத் தேர்தல் இடது ஜனநாயக முன்னணியின் நாலரை ஆண்டு ஆட்சிக் காலத்திற்குப்பின்னர் நடந்துள்ளது. எனவே, இந்த வெற்றியின் மூலம், பினராயி விஜயன்அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் நடைபெற்று வரும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் மக்கள் அபரிமிதமான முறையில் ஆதரவு அளித்துள்ளனர் என்று பார்க்கப்பட முடியும்.கேரள மக்களுக்கு வீட்டு வசதித் திட்டம் (Life Mission),  சுகாதாரம், அரசுப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்தி, நவீனப்படுத்தியிருப்பது மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைகளை உயர்த்தி இருப்பது முதலானவை  மக்களின் மகத்தான ஆதரவுக்கு பங்களித்திருக்கிறது.  

அதிகாரமும் பொறுப்பும் 
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடைபெறும் நிறுவனங்கள், நாட்டின் பிற பகுதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்குமுன்பு, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம்தான், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கியது. அவற்றுக்கு நிதிகளை ஏற்படுத்திக்கொள்ள சட்டஅங்கீகாரத்தையும்  அளித்தது. கேரளாவில் மூன்று அடுக்குபஞ்சாயத்து அமைப்புமுறை, அந்நிறுவனங்களுக்கு அதிகாரங்களையும், பொறுப்புகளையும் மிகவும் திறமையான முறையில் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. 

மாவட்ட அளவு வரையிலும் செயல்பட்டு வருகின்ற அரசுப் பள்ளிகளும், மருத்துவமனைகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கிடும் நிறுவனங்களும் வேளாண்மை, மீன்வளம், நுண்ணிய நீர்ப்பாசனம் மற்றும் சிறிய அளவிலான தொழில் துறைகள் போன்ற மக்களின் வாழ்க்கையுடன் நாள்தோறும் பிணைப்பினை ஏற்படுத்திக்கொண்டிருப்பவையின் செயல்பாடுகள் இந்த வெற்றியில் தடம் பதித்திருக்கிறது. அவைதான் சாலைகளைச் செப்பனிடுவதற்கும், வீட்டு வசதி, துப்புரவு மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தருவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா காலச் செயல்பாடு
இவ்வாறு மக்களுக்கு அடிப்படை சேவைகளைச் செய்துதந்ததுடன், கடந்த நாலரை ஆண்டு கால இடது ஜனநாயகமுன்னணி அரசாங்கத்தின் ஆட்சியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2018 மற்றும் 2019இல் ஏற்பட்ட கடும் வெள்ள நிலைமையைச் சமாளித்திடவும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை சமாளித்திடவும் அதிகாரங்களை அளித்தது.  கோவிட் தொற்று குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட, மாநில அரசாங்கத்துடன் இணைந்துநின்று, சுமார் 1200 உள்ளாட்சி அமைப்புகளும் மிகச்சிறந்த முறையில் செயல்பட்டன. கோவிட்-19ஆல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்தும், அவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான நெறிமுறைகளை அமல்படுத்தியும், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு குறிப்பாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உத்தரவாதப்படுத்தியதிலும்  மிகவும் சிறந்து விளங்கின.

அவதூறுகளும் பொய்ப்பிரச்சாரங்களும்
ஆனால் இத்தகைய செயல்பாடுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கோ, பாஜக-விற்கோ கவலையில்லை. அவற்றின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக அவதூறைவாரி இறைப்பதிலும், பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் முறையிலுமே இருந்தன. பிரதான ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் தங்கக் கடத்தல் சம்பந்தமாகவும், வீட்டு வசதி திட்டம் மற்றும் பல்வேறு அரசாங்கத் திட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளை தவறான முறையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகள், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின்மீது அவதூறுச் சேற்றை வாரி இறைத்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், வேண்டுமென்றே ஊடகங்களுக்குபுலனாய்வு விவரங்களைக் கசியவிட்டன. இத்தகைய தவறான  பொய்ப் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியும், பாஜக-வும் ஒன்றோடொன்று போட்டி போட்டன. இடது ஜனநாயக முன்னணியை மதிப்பிழக்கச் செய்வதற்கு அவை கையாண்ட ஒரேவழி இதுதான். இதன் மூலம் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் நாலரை ஆண்டுகால ஆட்சியும், உள்ளாட்சி அமைப்புகளின் நிறுவனங்களும்,  மக்களுக்கு செய்திட்ட அளப்பரிய சேவைகளை மக்கள்மனதிலிருந்து அகற்றிவிடலாம் என்றும், அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்றும் நினைத்தனர்.  

கேரள மக்கள் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் மூலமாகத் தங்களுக்கு ஏற்பட்ட சொந்தஅனுபவங்களிலிருந்து, இவர்களின் இத்தகைய எதிர்மறையான மற்றும் இழி பிரச்சாரத்தை நிராகரித்துவிட்டனர்.  தேர்தல் முடிவுகள், ஐக்கிய ஜனநாயக முன்னணி, கோட்டயம் மாவட்டம் மற்றும் கொச்சி மாநகராட்சி  போன்றுகோட்டைகளாக விளங்கிய இடங்களிலும் தோற்கடிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

தலைகீழாக நின்ற பாஜக
 பாஜக, திருவனந்தபுரம் மாநகராட்சியை  எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று தலைகீழாக நின்று பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், அது முன்பு பெற்றிருந்த இடங்களைவிட ஓரிடம் இப்போது குறைவாகப் பெற்றிருக்கிறது.இது இடது ஜனநாயக முன்னணிக்கு மிகவும் தகுதியான வெற்றியாகும். இது உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கிடும் நிறுவனங்களை மேலும் புத்துயிரூட்டி வலுப்படுத்திடும். கேரளாவின் வளர்ச்சியில் இவற்றின் உயிர்த்துடிப்புடனான பங்கு மகத்தானவைகளாகும். இந்த வெற்றிஅடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கு நம்பிக்கையையும், மனவலிமையையும் ஏற்படுத்திடும்.

டிசம்பர் 16, 2020, 

தமிழில் : ச.வீரமணி

;