articles

img

கொடுபடா ஊதியத்தைக் கொடு.....

தமிழ்நாட்டில் சத்துணவு - ஐசிடிஎஸ் (ICDS) திட்டங்களில் 38 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ள சுமார் 1 லட்சம் பேரில் 95% பெண்கள், விதவைகள், நிராதரவானவர்கள். கர்ப்பிணியின் கருவறையில் வளரும் சிசு முதல் வளர் இளம் பருவம் வரையிலான மனிதப்பயிர்களின் ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட பல்திறன் மேம்பாட்டுக்காக வாழ்நாள் உழைப்பை அர்ப்பணித்ததோடு, அரசு அவ்வப்போது அறிவிக்கும் திட்டங்களின் சுமை தாங்கிகளாக வாழ்ந்தவர்கள்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பணியமைப்பு விதிகளின்படி பணி நியமனம், நிர்வாகம், நடத்தை விதிகள், ஊதிய முறை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பொருந்தப்பட்ட பணியாளர்கள்.

கொடிய வறுமையில்... 

ஆனால் ஓய்வு பெற்ற இவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், குடிநீர், மருத்துவம் போன்ற வாழ்வாதாரப் பாதுகாப்பு ஏதுமில்லை. பணி ஓய்வுக்குப் பின் இவர் தம் குடும்பம் நிராதரவாகியுள்ளது. குடும்பப் புறக்கணிப்பு, மனப்பிறழ்வுகளால் பலர் பிச்சை எடுக்கும் அவலம். நகரத்தில் உள்ளோர்நரக வேதனையில் செத்துப் பிழைக்கின்றனர். மருத்துவம்பெற்றிட வழிச் செலவுக்கு கூட பணம் இல்லை. இறந்த பின் சவ அடக்கம் செய்ய ஏதுமற்ற அனாதைகளாயுள்ளனர். கோவிட் - 19 சமூக முடக்கம் வேறு இவர்களின் குரல்வளையை நெரித்துள்ளது.

முதல் பென்சன் பெற்றிட மாதக்கணக்கில் காத்திருப்பு; மாத பென்சன் பெற்றிட நிர்ணயமான தேதியின்றி மாதம்முழுவதும் இழுத்தடிப்பு; 2019, 2020- பொங்கல் போனஸ்முடக்கம் (ICDS), முகாந்திரமின்றி  தணிக்கைத் தடைக்கெனரூ.5000 முதல் 30000 வரை பிடித்தம், 30 ஆண்டு தேக்க நிலை ஊதியம் 2015க்கு முன் உள்ளோருக்கு மறுப்பு; பின் உள்ளோருக்கு உத்தரவிருந்தும் ஓய்வு பெற்றோருக்கு மறுப்பு; பதவி உயர்வில் சென்ற முக்கியசேவிகா, மேற்பார்வையாளர், ஆசிரியர்; விஏஓ-வுக்கு சிபிஎஸ், ஜிபிஎப் முடக்கம்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் முறையான பென்சன் மறுப்பு; SPF, Lumpsum, GPF வழங்குவதில் மாதங்கள், ஆண்டுகள் கணக்கில் நிறுத்தி வைப்பு; வாழ்வுறுதிச் சான்று மாதந்தோறும் சமர்ப்பிக்க நிர்பந்தம் என நீள்கிறது சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களின் அவலங்களின் பட்டியல்...

சம தகுதி நிலைப் பணிகளில் பாகுபாடு நியாயமா?
நில உடமை மேம்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற திட்டப்பணியாளர்கள், நகராட்சி உள்ளிட்ட அரசின்அனைத்துத் துறையிலும் 10 ஆண்டு தினக்கூலிகளாக பணியாற்றியவர்கள், சத்துணவுத் திட்ட மதிப்பூதிய பணியில்சேர்ந்து பதவி உயர்வில் விஏஓ, ஆசிரியர், விஎச்என் - ஆகசென்றவர்கள், அரசுத் துறையில் இரவுக் காவலர் பணியில்சேர்ந்தோர் என அனைவரும் அரசுப் பணியில் ஈர்க்கப்பட்டு முறையான பென்சன் பெறுகின்றனர். பாண்டிச்சேரி அங்கன்வாடிப் பணியாளர்கள் பென்சன் பெறுகின்றனர். காவல்துறையில் பணியாற்றி, மோப்ப சக்தி இழந்த நாய்க்குமாத பென்சன் ரூ.6000. ராணுவத்தில் பொதி சுமக்கும் கழுதைக்கும், ஒட்டகத்துக்கும் வாழ்வாதார பாதுகாப்பு பென்சன் உண்டு. ஆனால், சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியருக்கு மட்டும் வெறும் ரூ.2000/- சமூக பாதுகாப்புத் திட்ட பென்சன்.  தமிழக அரசே, இதுதான் ஜீவகாருண்யமா.? 

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு  
7-வது ஊதிய மாற்றத்தில் அரசின் அனைத்து பிரிவினருக்கும் பெருக்கல் காரணி 2.57. ஆனால், சத்துணவு - அங்கன்வாடி ஊழியருக்கு நிராகரிப்பு, சத்துணவுப் பணியாளருக்கும் 2.57 அதே பணி செய்த ஓய்வூதியருக்கு மட்டும் மறுப்பு. 
சிறப்பு ஓய்வூதிய பிரிவினரில் 1980-ல் டிஸ்மிஸ் ஆன முன்னாள் விஏஓக்களுக்கு பென்சன் ரூ. 2000 - ரூ.6750 ஆனது. 10 ஆண்டு பணி முடித்த வருவாய் கிராமஉதவியாளர் பென்சன் ரூ.2050-ரூ.6750 ஆகிவிட்டது. 5 ஆண்டு பணி முடித்த வருவாய் கிராம உதவியாளர் பென்சன்ரூ.460 - ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டதோடு புதிதாக 5 % அகவிலைப்படியும், மருத்துவப் படி ரூ.300 ம் வழங்கப்பட்டுள்ளது. சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியருக்கு மட்டும் ரூ.1500 - ரூ.2000 ஆக உயர்வு. இது என்ன நீதி? 

உச்சநீதிமன்ற - உயர் நீதிமன்ற தீர்ப்புகள்
ராஜஸ்தான் அரசு எதிர் ராகேஷ் கே.சர்மா வழக்கில் ‘மதியஉணவுப் பொறுப்பாளர் பணி அரசுப் பணிக்கு நிகரானது(SUBSTANTIVE post) எனவும், உத்தரப் பிரதேச அரசு எதிர் சந்திரகா பிரகாஷ் பாண்டே வழக்கில் மதிய உணவுப் பொறுப்பாளர் பணி (CIVIL POST) குடிமைப்பணி’ எனவும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.தமிழ்நாடு அரசு எதிர் பெரியண்ணன் வழக்கில் “சத்துணவுப் பணி - அரசுப் பணிக்கு நிகரான பதிலிப்பணி” என சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.பால்வசந்தகுமார் தீர்ப்பு வழங்கியுள்ளார்.இவையெல்லாம் பற்றி சத்துணவுத் திட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்பூர்வ பென்சன் வழங்கிட முறையீடு செய்த போது,“முதலமைச்சர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன், அவரிடம் பேசி ஓய்வூதியம் உயர்வு குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என வாக்குறுதி தந்தார்.

முதலமைச்சரின் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் கோரி 5 முறை கடிதம் தந்தும் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.கொரோனா நெருக்கடியால் உலகமே விழி பிதுங்கிய காலத்தில் தான் கோயில் பூசாரிகளின் மாத ஓய்வூதியம் ரூ.1000 மும், எம்எல்ஏக்களின் மாத ஓய்வூதியம் ரூ.5000மும், ஐஏஎஸ் அதிகாரிகளின் மாத ஓய்வூதியம் ரூ.10,000 மும் உயர்த்தப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் மட்டும் மாற்றான் தாய் பிள்ளைகளா? “உழைக்கும் சக்தியுள்ள பருவத்தில் அரசுப் பணிக்காக அர்ப்பணித்த நீண்ட கால உழைப்புக்காக முதுமை, இயலாமை மிகுந்த ஓய்வு காலத்தில் அந்த ஊழியருக்கு கெளரவமான வாழ்க்கை, மருத்துவம், பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு போதுமான அளவிற்கு வழங்க வேண்டிய ‘கொடுபடாஊதியம்’ தான் ஓய்வூதியம்; அதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை” என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதைக் கொடு என தமிழக அரசை வலியுறுத்தி, போராட்டத்தில் இறங்குகிறது தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம். 

கட்டுரையாளர்: இ.மாயமலை, பொதுச் செயலாளர், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம்

;