articles

img

மணி என்கிற மணியான தோழர்.....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக,  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக,  அகில
இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராக, கட்சியின் மாவட்டச் செயலாளராக என அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றிய தலைவர்களில் ஒருவரான விவசாய இயக்கத்தின் தலைவர் தோழர் ஜி. மணி மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது.

50 ஆண்டுகள் கட்சியின் முழுநேர ஊழியராக தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பை மனசுத்தியுடன் நிறைவேற்றிய தலைவர். உழைக்கும் மக்களின் சுரண்டல்களை எதிர்த்து பணிகளை திட்டமிடும் போது எல்லா தகவல்களையும் சேகரித்து அதன் மீது இயக்கத்திற்கு திட்டமிடுபவர். அப்படிப்பட்ட மகத்தான தோழரின் இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், விவசாயிகள் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.2015 ஆம் ஆண்டு திருப்பூரில் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர் ஜி. மணி உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டார். வரலாறுகாணாத கன மழையினால் சென்னை நகரமே வெள்ளத்தில்மிதந்தது. சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைநடைபெற்றது.

சென்னை திரும்பிய நாங்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் ஜி. மணியை நேரில் பார்த்த போது, முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; அதுதவிர, மேலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சையும் நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து பல மாதங்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஐந்து வருடங்கள் சிறுநீரக பையுடனே வாழ்ந்தார். இந்த ஐந்து ஆண்டுகள் அவர் அனுபவித்த வேதனைகள், சோதனைகளை சொல்லி மாளாது. அந்த சவாலை எல்லாம் சந்தித்து நெஞ்சுறுதியுடன் சிறுநீரக பையை சுமந்து கொண்டே வி.தொ.ச. மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த மாபெரும் தலைவராவர்.

தோழர் ஜி.மணி குடும்பம்
நோய்வாய்ப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த காலத்தில் அவருடைய துணைவியார் தோழர் கீதா, மகன் தினேஷ், மகள் சித்ரா ஆகிய மூவரும் தோழர் ஜி. மணியை தன் கண்ணின் இமை போல பாதுகாத்து வந்தார்கள். இந்த 5 ஆண்டு காலத்தில் அவர்களின் வேதனைகளையும், சோதனைகளையும் சொல்லி மாளாது. மருத்துவ தேவைக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் கட்சித் தோழர்கள் ஓரளவு உதவி செய்திருந்தாலும், எல்லா சுமைகளையும் அந்த குடும்பம் ஏற்றுக் கொண்டு அவரை ஒரு குழந்தையைப் போல பராமரித்தது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது.

2019 ஆம் ஆண்டு நானும், தோழர்கள் கே.வரதராசன், அ.நாகப்பன் ஆகியோர் தோழர் ஜி.மணியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்தோம். அப்போது தோழர்ஜி.மணி எங்களிடம் “எனக்கு எல்லாமே படுக்கையில் தான்.என்னால் எழுந்துநிற்க முடியாது. எனது மனைவியும்,மகனும், மகளும் என்னை கவனித்துக் கொள்ளவில்லை யென்றால் நான் இத்தனை நாட்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்’’ என்று கூறினார். இதனைக் கேட்டவுடன் எங்கள் மூவருக்கும் கண்ணீரும், இதயமும் கலங்கியது.

மாணவர் தலைவராக...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தோழர் ஜி.மணி. அவரது தந்தை நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக பணியாற்றியவர். 1971ம் ஆண்டு வாக்கில் கடலூர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் நானும் மற்ற தோழர்களும் செயல்பட்டு வந்தோம்.  பல்கலைக்கழக நிர்வாகத்தினுடைய சவால்கள், தாக்குதல்களை எதிர்த்து நெஞ்சுறுதியுடன் போராட்டம் நடத்தி வந்தோம். இந்திய மாணவர் சங்கத்தை தென்னாற்காடு மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த  திட்டமிட்டு கடலூர் சென்றபோது தான் தோழர் ஜி.மணி அறிமுகமானார். அவர் மாணவர் சங்கத்தில் இணைக்கப்பட்டு அவர் பயின்ற கலைக்கல்லூரியில் சங்கம் அமைக்கப்பட்டது. பிறகு விழுப்புரம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற இடங்களில் மாணவர் அமைப்பு உருவாக்கப்பட்டது. முதன் முதலாக மாவட்ட முழுவதும் மாணவர் சங்கக் கிளைகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பாளராக நானும், துணை ஒருங்கிணைப்பாளராக தோழர் ஜி. மணியும் தேர்வுசெய்யப்பட்டு மாணவர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டோம்.

1971 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தோழர் சி.கோவிந்தராஜன் நெல்லிக்குப்பம் தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவருக்கு டெபாசிட் தொகை கட்டுவதற்காக மாணவர்கள் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி அவருக்கு டெபாசிட் கட்டினோம். தேர்தல் பணிக்கு 45 நாட்கள் அங்கேயே தங்கி மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டு வந்தோம். தோழர் ஜி.மணி உள்ளூர்காரர் என்பதால் மாணவர்கள் அனைவருக்கும் பணிகளை திட்டமிட்டுக்கொடுத்து அதனை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டது இன்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கல்லூரி படிப்பை முடித்த தோழர் ஜி.மணி, குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னைக்கு வேலை தேடிச் சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்சியுடன் தொடர்பு கொண்டு கட்சியின் முழுநேர ஊழியராக தேர்வு செய்யப்பட்டு தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதிக்கு கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்டார். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டங்களில் மனைப்பட்டாவுக்கான இயக்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கான பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து கட்சியின் வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பைச் செய்தவர். இந்த போராட்டங்களின் மூலம் அடையாளங்காணப்பட்ட எண்ணற்ற தோழர்களை கட்சிக்குள் கொண்டு வந்து அவர்களை தலைவர்களாக உருவாக்கிய மாமனிதர்.

மாவட்டச் செயலாளராக...
ஒன்றாக இருந்த செங்கல்பட்டு மாவட்டம் பிரிந்து திருவள்ளூர் மாவட்டமாக உருவான போது கட்சியின் முதல் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிவந்தார். 2000 ஆம் ஆண்டு நாங்கள் எல்லாம் விவசாயிகள் சங்க மையத்தில் செயல்பட்ட காலத்தில், அவரை மைய ஊழியராக வரவேண்டுமென்று தீர்மானித்து அவரிடம் கேட்டோம். அவரும் தனது சொந்த ஊர், தோழர்களை எல்லாம் பார்க்காமல் கட்சியின் முடிவை ஏற்று வி.ச. மாநில மையப் பணிக்கு வந்து, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளராக...
கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முகத்தோற்றத்தை மாற்றி அனைத்து விவசாயிகளையும் ஈர்க்கக் கூடிய சங்கமாக கட்டமைப்பதில் அவரின் பங்கு மகத்தானது. அப்போது, மதுராந்தகம் சர்க்கரை ஆலையைத் திறக்க நடை
பெற்ற போராட்டம், பெண்ணாடம் அருணா சர்க்கரை ஆலை போராட்டம், மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை4 ஆண்டுகள் மூடியதை எதிர்த்து தோழர் என்.பழனிச்சாமியுடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மகத்தானவை. இப்போராட்டங்களின் விளைவாக கூட்டுறவு பொதுத்துறைசர்க்கரை ஆலையை பாதுகாப்பதற்கு அழுத்தம் அதிகரித்தது. இவருடைய முன்முயற்சியில் உளுந்தூர்பேட்டை யில் மாநில அளவிலான கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று கோரிக்கை சாசனம் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயக்கங்கள் நடத்தப்பட்டன. இந்த இயக்கங்களின் விளைவாக தமிழக அரசு நஷ்டத்தில் இயங்கும் அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு தாரைவாக்கும் முடிவினை கைவிட நேர்ந்தது.  இப்படி பல பணிகளால் கரும்பு விவசாயிகள் சங்கம் புதிய தோற்றம் பெற்று விவசாயிகளை ஈர்க்கும் சங்கமாக பரிணமித்தது.

வி.தொ.ச. மாநில பொதுச் செயலாளராக...
பின்னர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பணிக்கு பொருத்தமான ஊழியர் என்ற அடிப்படையில் தோழர் ஜி.மணி பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார். அடித்தட்டு உழைக்கும் வர்க்கமான விவசாய கூலித் தொழிலாளர்களை திரட்டுவதற்கும், அவர்களுக்கான இயக்கங்களை முன்னெடுப்பதற்கும் தமிழகம் முழுவதும் அவர் செல்லாத கிராமங்களே இருக்காது. பல இரவுகளில் பேருந்து கிடைக்காமல் பஸ் நிலையத்திலேயே தூங்கி விட்டு, காலையில் முதல் பஸ் பிடித்து இயக்கப்பணிக்குச் செல்வார். மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் அனைத்து விபரங்களையும் இணைய தளத்தில் தொகுத்து, உடனுக்குடன் முன்னணி தோழர்களுக்கு கொடுத்து இயக்க கோரிக்கைகளை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுத்து பங்காற்றிய மகத்தான தலைவர். இதற்கென ஒரு தனி புத்தகமே எழுதியுள்ளார்.

அரசியல், தத்துவார்த்தம், ஸ்தாபனம் உள்ளிட்ட விசயங்களில் மிகுந்த புரிதலோடும், எளிமையாக புரியும் வகையிலும் குறிப்புகள் தயாரிப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவர் பேசும் போதும், வகுப்புகளின் போதும் தோழர்களுக்குபுரியும் வகையில் பழமொழிகளை எடுத்துக் கூறி பேசுவதில் வல்லமை படைத்தவர். எந்த ஒரு பணியாக இருந்தாலும் அதற்கான பூர்வாங்கத்தை கற்றுத் தேர்ந்து அதன் பொருளைஉள்வாங்கிக் கொண்டு, அது குறித்து தகவல்களை சேகரித்து அதை நம்முடைய கட்சி அணிகளுக்கு எடுத்துச் சென்று அதை மையமாக கொண்டு இயக்கங்களை நடத்துவதையே வழக்கமான பாணியாக கொண்டிருந்தவர்.

தோழர் ஜி.மணி பொத்தாம் பொதுவாக பேசுவது என்பது அவரது பேச்சில் எப்போதும் இருக்காது. துல்லியமான விபரங்களை சேகரித்து பேசுவது, அதன் மீது இயக்கங்கள் நடத்துவதில் வல்லவராக திகழ்ந்தவர்.அவரோடு இணைந்து 15 ஆண்டுகளுக்கு மேல் விவசாய சங்க மையத்தில் பணியாற்றும் வாய்ப்பு எங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்தது. ‘உழவன் உரிமை’ நடத்துகிற பொறுப்பினை ஏற்று அதை திறம்பட நிர்வாகித்து வந்தார். ‘உழவன் உரிமை’ இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பழமொழியை வெளியிடும் முறையினை இவர் அறிமுகப்படுத்தினார். இவர் மைய ஊழியராக இருந்த காலத்தில் விவசாய சங்கம் மற்றும் பணிகளுக்குத் தேவையான அனைத்து புள்ளி விபரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் தயாரித்து கொடுப்பதில் நுணுக்கமாக பங்காற்றினார். இவருடைய ஒத்துழைப்போடு விவசாயிகள் சங்க மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்க பணிகள் மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டன என்பதற்கு இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட போது கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது விபரங்களை கேட்டால், அடுத்த அரை மணிநேரத்தில் அது சம்பந்தமான அனைத்து விபரங்களையும் தொகுத்து அனுப்பி வைக்கிற ஒரு தகவல் களஞ்சியமாகவே திகழ்ந்தார்.தோழர் ஜி.மணியின் செயல்பாடுகள் நிச்சயமாக அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக, இளம் ஊழியர்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்னுதாரணம். அவர் மறைந்திருந்தாலும் அவர் ஆற்றிய பணிகள் என்றைக்கும் நம்மை வழிநடத்திச் செல்லும்.

கட்டுரையாளர் ; கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

;