articles

img

தமிழருவிக்கு ‘சாய்வற்ற’ நியாயமான கேள்வி...

தினமணியில் (7.12.2020) தமிழருவி மணியனின் கட்டுரை வந்துள்ளது. 

பிம்பங்களை பாமரர்கள் விசில் அடித்து உருவாக்குவார்கள். படித்தவர்கள் நபி,ஏசு, காந்தி,ராமானுஜர், வேதம் என மேற்கோள் காட்டி, கட்டுரை எழுதி, உருவாக்கப்பட்ட பிம்பங்களைமேலும் பிரம்மாண்டமாக ஊதி பிம்பமாக்குவார்கள்.
மணியனின் தெய்வீகம் நிறைந்த ஆன்மீக அபிஷேகம் தினமணியில் வழிந்து ஓடுகிறது. படிக்கும்போதே கை பிசுபிசுத்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

காமராசரை அவர் அளவுக்கு காமராசரே தெரிந்திருக்க மாட்டார்.

மணியன் நம் காமராசர் (உங்கள் காமராசர் என்று   ஒருநாளும் எனக்குச்  சொல்ல மனசு வராது) தன் வாழ்நாள் சாதனையான  பகல் உணவு திட்டத்தை நிறைவேற்ற நாத்திகரான பெரியாரின் சீடரான, தாலி  கட்டக்கூட மறுத்த அய்யா நெ.து.சுந்தர வடிவேலுவை ஏன் நம்பினார்? ஒருவேளை ஆன்மீகிகள் பகல் உணவைபிரசாதம் என விழுங்கி விடுவார்கள் என்ற பயமோ?

என் முதல் புரிதல்- நீங்கள் கசப்பின் உச்சியிலிருப்பதால், உங்களுக்கு வேறு சுவைகளைஉணர முடியவில்லையோ என்பதுதான்.

உங்களிடம் இல்லாத சரியான புரிதல் காமராசருக்கு இருந்தது.நேர்மைக்கும் ஒழுங்குக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் அது.உன்னை விற்காதே என்று வாழ்நாள் முழுதும் வாழ்ந்த பெரியாரின் பிள்ளை நெ.து.சு வின் படத்தைத்தான் நம் (?) காமராசர்திறந்து வைத்தார். அய்யய்யோ உங்களிடம்போயா  நான் வரலாறு பேசுவது?

உங்கள் வாயே வரலாற்று வாயாச்சே!

சரி விசயத்துக்கு வருவோம். ஓங்கி ஒலித்த உங்கள் (தின)மணியின் நாத ரீங்காரம் என்ன?

எளிமை=காமராசர்=ரஜினி. சரி, வெறும் எளிமை தானா காமராசர்? 

நீங்கள் கட்டுரையில் சொல்லியுள்ள பட்டியலில் எவராவது ஓய்வு பெற்ற பின்பா சிஸ்டம் பற்றி மைக் பிடித்தார்களா? உங்கள் இயக்கத்தின் பெயராய் மட்டுமே இருக்கும் காந்தி சிஸ்டத்தை சரிசெய்ய முதன் முறையாக தமிழ்நாடு வந்த போது  வயசு 27.
நாளை எடுக்கப்போகும் அவதாரத்தின் சூட்சுமம் (உங்கள் அநேக பிரயோகம்) கட்டுரையில் விஸ்வரூபம் எடுக்கிறது. அது “இந்த சிஸ்டத்தை சீரழித்தவர்கள் இரண்டு திராவிடக் கட்சிகள்.  அவர்களின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை காப்பதே என் (மணியன்) 50 ஆண்டுத்தவம்.”  இந்த தவம் உண்மையா? சரியா?

இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் ஆகாத நோபல் வின்னர் (ரஜினி ஸ்டைல்) அமர்த்தியா சென் ஆதாரங்களோடு உங்களைமறுக்கிறாரே என்ன செய்யலாம்? 

உங்கள் மேலான ஆன்மீக பார்வைக்குஅமர்த்தியாசென் கூற்றுப்படி  கேரளாவும் தமிழ்நாடும் அல்லவா சர்வதேச தரத்தின்படி முன்னால் நிற்கின்றன? 

திராவிடமே இல்லாத பீகாரும், உ.பியும் இன்னபிற பாஜக ஆளும் மாநிலங்களும் செழித்து கொழுத்ததாக இந்த கொரோனா காலம் சொல்லவில்லையே.

உங்களுக்குத் தெரியாத அரசியல் சட்டமா?

அதிகாரம் அளவுக்கு மீறி அதிகமாகவே குவித்துவைத்துள்ள மத்திய அரசை விடவா சிஸ்டத்தை மாநில அரசால் கெடுக்க முடியும்?

இதோ கெடுத்து நாறுவதைத் துடைக்கவே தில்லியில் உழவர்கள் 11 நாட்களாக போராடுகிறர்கள். (உங்கள் ஆன்மீக பாபாவுக்கு போராட்டமே பிடிக்காது. அவரின் தூத்துக்குடி கோப உபதேசம் வேறு ஞாபகம் வருகிறது)

உங்களின் வார்த்தையின்படியே நீங்கள் செப்புக்காசை தொடாதவர். உங்களை மட்டுமல்ல எவரையும் அசிங்கப்படுத்தி என்னாகப் போகிறது?அடிக்கடி உங்கள் உரைகளில் நீங்கள் சொல்லும் மனசாட்சிக்கு சுருக்கமாக சில வினாக்கள்:

1. நேர்மைக்கும் நீங்கள் முன்வைக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?

2. சிஸ்டம் கெட்டதால்தான்  கோபம் தவம்எல்லாம்  என்றால்- சிஸ்டத்தை  சர்வ நாசம் செய்யும் பாஜகவை என்ன செய்ய உத்தேசம்? (தேவையானால் அர்ஜூன  மூர்த்தியைக் கேளுங்கள்)

3. நீங்கள் நேரு பெருமானின்    உலக வரலாறு படித்தவர்.   உலகை மாற்றிய எந்த உத்தமராவது ரிட்டயரான   பின்பா சிஸ்டத்தை சரி  செய்ய வந்தார்கள்?

4. அதிக அதிகாரம் பெற்ற    மைய சிஸ்டத்தை ஏன் சரி செய்ய முயலவில்லை?

 (அதிகார பயமா  பாட்சாவுக்கு?)

உங்கள் கடைசி நம்பிக்கை என்று ரஜினியை நீங்கள் சொல்வது ஒருவிதமான கழிவிரக்கத்தை உங்கள் மீது உருவாக்கவா? அதன்மூலம் நல்லவர் என்ற பிம்பத்தை உங்களுக்கு கட்டமைக்க பார்ப்பதாக புரிந்து கொள்ளலாமா?
வெற்றி மட்டுமே குறிக்கோளா?  வெல்லாத

வர்களை நல்லவர்களாக ஏற்க மாட்டீர்களா?

மணியன் அவர்களே பிம்பச் சிறையை உருவாக்காதீர்கள். உடையுங்கள்.

கட்டுரையாளர் : தமுஎகச மாநிலத் துணைத் தலைவர்
 

;