articles

img

பொதுப் போக்குவரத்தை சீரழிக்கும் மத்திய, மாநில அரசுகள்....

நாட்டில் திறமையான பொதுப்போக்குவரத்தை வழங்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.  பொதுமக்கள் பயணம் செய்ய உதவுவதோடு மட்டுமில்லாமல், “பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.”

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக்கழக கோட்டங்களின் மூலம் சற்று ஏறக்குறைய 20,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  24 மணி நேரமும் போக்குவரத்துக்கழக பேருந்துகள் கிராமங்கள், நகரங்களை இணைத்து மக்களின் சமூக, பொருளாதார வாழ்வை மேம்படுத்துகிறது என்றால் மிகையல்ல.  இந்தியாவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்ற பெயரை ஈட்ட போக்குவரத்துக் கழகங்களின் பங்கு அளப்பரியது.மாநிலம் முழுவதும் 8 கோட்டங்களாக அதன் கீழ் எம்டிசி, எஸ்இடிசி, டிஎன்எஸ்டிசி-விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் தர்மபுரி என 21 மண்டலங்களாகப் பிரித்து மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகிறது.

மக்கள் பயன்பாட்டிற்கு
மாநில போக்குவரத்துக்கழகங்களின் மூலம் 31.3.2019 அன்று உள்ளவாறு 2053 ஸ்பேர் பேருந்துகள் உட்பட, 21542 பேருந்துகளின் எண்ணிக்கையாக உள்ளது.  வரையறுக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை 19489 ஆகும்.  இதே 2015-2016 ஆண்டின் 23078 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்பட்டு வந்தன. போக்குவரத்துக் கழகங்களின் இயக்க எல்லை அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதியான புதுச்சேரி வரை பரவியுள்ளது.

செயல்பாட்டுத்திறன் குறியீடுகள் சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளன.  மார்ச் 2011இல் ஒரு லிட்டருக்கு 5.25 கி.மீ ஆக இருந்த எரிபொருள் இயக்கத்திறன் மார்ச் 2019இல் 1 லிட்டருக்கு 5.33 கி.மீ ஆக உயர்ந்துள்ளது.  கழிவு செய்யப்பட்ட டயர் (ரீபில்ட் டயர்) 2011இல் 1.65 லட்சம் கி.மீ ஆக இருந்த அளவுகோல் மார்ச் 2019இல் 2.37 லட்சம் கி.மீ ஆக உயர்ந்துள்ளது.போக்குவரத்துக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்ற கடந்த 48 ஆண்டுகளில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 322 பணிமனைகள், இயந்திர மறுசீரமைப்பு பிரிவு மற்றும் தொழிற்கூடங்கள் 20, பேருந்து கூண்டு கட்டும் பிரிவுகள்  23, டயர் புதுப்பிக்கும் தொழிற்கூடங்கள் 18, பேருந்து தரச்சான்றிதழ் அளிக்கும் பிரிவுகள் 51 என பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றுள்ளன.அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நாளொன்றுக்கு சராசரியாக 85.23 லட்சம் கி.மீ தூரத்துக்கு பேருந்துகளை தொழிலாளர்கள் இயக்குகின்றனர்.  ஏறக்குறைய நாளொன்றுக்கு ரூ. 29 கோடி முதல் 32 கோடி அளவிற்கு வருமானம் ஈட்டுகின்ற அளவில் ஓட்டுனர்,நடத்துனர், டெக்னிக்கல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு பணியாளர்களின் கடின உழைப்பில் இயங்கி வருகின்றன.

மார்ச் 2019இன் கணக்கின்படி ரிசர்வ் தொழிலாளர்கள், பதிலி பணியாளர்களையும் சேர்த்து பணியாளர்களின் எண்ணிக்கை 1,31,298 பேர் ஆகும்.  6.12.2001, 18.11.2011 மற்றும் 29.1.2018 ஆகிய தேதிகளில் பஸ் கட்டண உயர்வு அதிகரித்து பேருந்துகள் மக்களின் பயணத் தேவைக்காக தமிழக அரசு இயக்கி வருகிறது.

மத்திய அரசின் சீர்குலைவு வேலை
இந்தியாவிற்கே முன்னணியாகத் திகழ்கின்ற “தமிழகப் போக்குவரத்துக் கழகங்களை” சீரழிக்கும் வகையில் பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் செயல்படுகின்றன. மே 2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், சாலைகளில் உயிர்ப்பலி விபத்துக்களால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் இறக்கின்றனர். இதனை தடுக்கும்பொருட்டு எனக்கூறி உள்நோக்கத்துடன் மோட்டார் வாகனசட்டத்தினை மாற்றியமைக்க வேண்டுமென முடிவுக்கு வந்தனர்.சாலைப்போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா2014 என கார்ப்பரேட்டுகளுக்கும், பெருமுதலாளிகளுக்கும் பொதுப்போக்குவரத்து, சுங்கச்சாவடிகளைத் திறந்துவிடும் விதத்தில் 13.9.2014 அன்று மசோதாவினை மத்திய அரசு தாக்கல் செய்தது. AIRTWF, CITUஉள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றுதிரண்டு நாடுமுழுவதும் பல்வேறு இயக்கங்களை நடத்தியதுடன், 30.4.2015 அன்று சுமார் இந்திய நாடு முழுவதும் சுமார்3 கோடி சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி அம்மசோதாவினை கிடப்பில் போடும் சூழலை உருவாக்கினர்.


சிஐடியு, அகில இந்திய சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கடுமையான முறையில் ஆட்சேபித்தன.  ஒரு கட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி மாநிலங்களவை உறுப்பினர்கள் மசோதாவில் உள்ள பாதிப்புகளை எடுத்துரைத்தனர். அத்துடன் குலாம்நபி ஆசாத், கனிமொழி, நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட இதர எம்.பிக்களுடன் கலந்துபேசி, மாநிலங்களவையில் விவாதிக்க உட்படாமல் தள்ளிவைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.  இந்நிலையில் மத்திய அரசு மசோதாவினைத் திரும்பப் பெற்று, இருக்கும் மோட்டார் வாகன சட்டம் 1988லேயே தனியாருக்கு சாதகமாக 82 திருத்தங்களை செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, பாஜகவுக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு ஒப்புதல் பெற்றுவிட்டது. மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா காலத்தில் 
மத்திய அரசு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து தமிழக அரசும் ஊரடங்கை அமல்படுத்தியது.மே 2020 முதல் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த வழிகாட்டுதலின் பேரிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்கள் குழுவுடன் நடத்தப்படுகின்ற ஆலோசனைகளின் அடிப்படையிலும், மாதந்தோறும் கலந்து ஆலோசித்து ஊரடங்கை சில கட்டுப்பாட்டு களுடன் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்றும், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென அரசு கடித எண். 133/CH5/CH0/2020, தேதி 31.8.2020 மூலம் வழிகாட்டப்பட்டது.  ஆனால் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் இதை அமல்படுத்தாமல் தொழிலாளர்களிடம் கூடுதல் வருவாய் கொண்டுவர வேண்டுமென நிர்பந்திக்கின்றன. 2020 டிசம்பர் மாதத்தில் 100 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என அரசு அறிவித்தது.  இதேபோல் கூடுதல் பஸ்களை இயக்கவும் அனுமதி கொடுத்துள்ளது.  இரவு 9 மணிக்கு மேல் இயக்கப்பட்ட மொத்த பேருந்துகளில் 30 சதம் குறைத்திருந்தோம் என கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.  தற்போது பேருந்துகளின் சேவையை படிப்படியாக அதிகரித்து 90 சதவீத பேருந்துகளை இயக்கி வருவதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சொல்லும் நிலை உள்ளது.  தற்போதைய கொரோனா காலத்தில் சற்று ஏறக்குறைய 14,000 பேருந்துகள் அளவிற்குதான் மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது.

மோட்டார் வாகனச் சட்டம்
மோட்டார் வாகனச் சட்டத்தில் பிரிவு 6 மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கான சிறப்புப் பிரிவாகும்.  இந்தப் பிரிவின்படி ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது வழித்தடத்தில் அரசு போக்குவரத்து இயங்கும் என முடிவு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டால் அதில் எந்த தனியாரும் இயக்க முடியாது. தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களில் பெர்மிட் வழங்குவதற்குரிய விதிதான் மோட்டார் வாகன சட்ட விதி 288 ஆகும். 

மறைமுக தனியார்மய முயற்சி
மத்திய அரசுக்கு துணைபோகின்ற அதிமுக அரசு தற்போது 288 (எ) என்ற புதிய விதியை உருவாக்கியுள்ளது.  இந்த புதிய விதியின்படி அரசுப்போக்குவரத்துக் கழகங்கள் அவசர தேவைக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம்.  அவ்வாறு வாடகைக்கு எடுக்கும் பேருந்துகளுக்கு போக்குவரத்துக் கழகங்களின் பெர்மிட் வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.சட்டத்திருத்தம் என்பது மறைமுக தனியார்மய முயற்சியே.  ஏற்கனவே தமிழக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு மின்சாரப் பேருந்துகளை வாடகைக்கு எடுத்துஇயக்க உள்ளதாக அறிவித்தது.அதற்காக சாலைப்போக்குவரத்து நிறுவனம் (IRT) வாடகைக்கு மின்சார பேருந்து எடுப்பதற்கான டெண்டரையும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு மின்சார பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும்போது அவற்றுக்கு அரசுப்போக்குவரத்துக் கழகங்களின் பெர்மிட்டை வழங்குவதற்கான இந்த விதித் திருத்தம் எனஅரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது இ பஸ்ஸூக்கானதுதான்.  இந்த விதித் திருத்தத்தில் எந்த இடத்திலும் இ பஸ்என்ற வார்த்தை இல்லவே இல்லை.  இவ்விதி திருத்தத்தின்படி மின்சார பேருந்து மட்டுமின்றி அனைத்துப் பேருந்துகளையும் வாடகைக்கு எடுக்க முடியும்.

17.11.1999 தேதிய அரசு உத்தரவின்படி தமிழகத்தில் 25,716 பேருந்துகள் இயக்கத் தகுதி உள்ளன.  1991இல் அரசு போட்ட உத்தரவின்படி, ஒரு புதிய பேருந்தை வாங்கிஇயக்கினால் 6 ஆண்டுகள் அல்லது  7லட்சம் கி.மீ இயக்கினால் அந்த பேருந்து வழித்தடத்தில் இயக்க தகுதியற்றவையாகும்.தற்போதைய நிலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மாநிலம் முழுவதும் மாற்றப்பட வேண்டும்.  காலாவதியான பேருந்துகளையும் சேர்த்தால் சுமார் 16 ஆயிரம் புதிய பேருந்துகள் மாநிலம் முழுவதும் சாலையில் இயக்கத் தேவைப்படுகின்றன.  இந்த நிலையில் இந்த சட்டத்திருத்தம் 288(எ) மிகவும் ஆபத்தானது.  போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கவே பயன்படும்.

கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.  குறைந்த அளவில்தான் வருகிறார்கள்.  இதனால் கழகங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்ற பல்லவியையும் கழக அதிகாரிகள் பாடியுள்ளதை பத்திரிகை வாயிலாக அறிய முடிந்துள்ளது.புவி வெப்பமயமாதல், காற்று, மாசு ஆகியவற்றைக்கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்தவும், விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் “மேம்படுத்துவது அவசியம்” என்பதை உலகநாடுகள் உணர்த்தி வருகிறது.  இந்த நிலையில் பொதுப்போக்குவரத்தில் சிறந்த கட்டமைப்பு உருவாக்கியுள்ள தமிழக அரசு அதனைத் தொடர்ந்து நிலைநாட்டும் வகையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தி மக்களுக்குசிறப்பான சேவை வழங்க வேண்டிய கடமை  உள்ளது.  சேவைத்துறையான போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத்தொகை யை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி போக்கு வரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.  இல்லையேல்,பொதுப்போக்குவரத்தை சீரழிக்கதுடிக்கின்ற மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையை எதிர்த்து உழைப்பாளி மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட தயாராவோம்.

கட்டுரையாளர் : ஏ.பி.அன்பழகன், துணைத்தலைவர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)

;