articles

img

காவிரி- தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்... கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுத்தார்கள்.... கலைஞர் அடிக்கல் நாட்டினார்.... நீங்கள் நாடகம் நடத்துகிறீர்கள்...

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் ரூ.6.941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு – வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3.384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் காவிரி உபரிவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஞாயிறன்று அடிக்கல் நாட்டினார்.

வெள்ளக்காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின்வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின்நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது. ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்குதற்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் கரூர், திருச்சி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ.நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம்,

தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.இரண்டாவது கட்டமாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும் 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. ரூ.14,400- கோடியில் 262 கி.மீ தூரத்திற்குநிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6330 கன அடிதண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர்த் தேவையும் பூர்த்தியாகும்.

காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும்நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறைஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர்நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.மேலும் காவிரி டெல்டாவிலுள்ள பழமைமிக்க பாசன கட்டுமானங்கள், ஸ்காடா தொழில்நுட்பம்மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம்காவிரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும். மேலும் இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர் என இத்திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

                                                                *********************

நாடாளுமன்றத்தில்  ஒலித்த முதல் குரல்

புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 30 ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்தாலும், அனைத்துமே மழைநீரை நம்பியே உள்ளது. அதன் மூலமே இங்கு விவசாயம் நடைபெறுகின்றது. கடந்த பல ஆண்டு காலமாக சரிவர மழை பெய்யாததினால் தொடர் வறட்சியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆழ் குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை. 2000 அடி, 3000 அடிக்கு கீழே நிலத்தடி நீர்போய்விட்டது. 3000 அடிக்குகீழிருந்து நீரை வெளியேற்றதிறன்பெற்ற ஆழ்குழாய் மின்மோட்டார் விவசாயிகளிடத்தில் இல்லாததினால், ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகிவிட்டன. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி வருகிறது.
இந்தப் பின்னணியில் தான் சுருங்கி வரும் விவசாயத்தை விரிவுபடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், காவிரியில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும்உபரிநீரை வறண்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருப்பி விட்டால் மாவட்டத்தின் நீர்நிலைகளை பாதுகாத்து விவசாயத்தை மேம்படுத்த முடியும் என முதல்முதலில் குரல் கொடுத்தது. தமிழ்நாடு விவசாயிகள்சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள்சங்க மாநாட்டில் முதல் தீர்மானமாக 50 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களை நடத்திவருகிறது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், எங்கள் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தில் முதலில் குரல் கொடுத்தவர் தோழர்ஆர்.உமாநாத் என்பதை இந்நாளில் நினைவுபடுத்துகிறோம்.

                                                                *********************

10 ஆண்டு காலம் கிடப்பில் போட்ட அதிமுக அரசு

பின்பு 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்த திட்டத்தை 10 ஆண்டு காலமாக கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி 21.02.2021 அன்று மீண்டும் அடிக்கல் நாட்டினார் என்பதும் இதையொட்டி படாடோபமான விளம்பரங்கள் மாவட்டம் முழுவதும் ஆளும் கட்சிக்காரர்களால் செய்யப்பட்டதும் தேர்தலுக்கான நாடகமா? அல்லது உண்மையிலேயே 5 மாவட்ட விவசாயத்தை மீட்டெடுக்கவா? என புதுக்கோட்டை மாவட்ட மக்கள் திகைப்புடன் பார்க்கிறார்கள். 10 ஆண்டு காலமாக இத்திட்டத்தை கிடப்பில் போட்டு மிகப்பெரிய விவசாய இழப்பை செய்தவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் என்று பலரும் பேசி வருகிறார்கள்.எதுவாயினும், எப்படியானும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை உறுதியாக நிறைவேற்றிட வேண்டும்.

                                                                *********************

மாயனூரில் நாட்டிய அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாகவும் புதுக் கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த எம்.செபஸ்தியான் மற்றும் இன்றுவரை இடைவிடாது தொடர்போராட்டம் நடத்தி வரும்தோழர்கள் எம்.முத்துராமலிங்கன், எஸ்.பொன்னுச் சாமி, அ.இராமையன் சா.தோ. அருணோதயன் போன்றோர் தலையீட்டால் 2006ல் ஆட்சியில் இருந்த தி.மு.க. இந்த திட்டத்திற்காக முதன் முதலில் ரூ.206 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்து காவிரியின் உபரி நீர்,திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்,மதுரையின் ஒரு பகுதி விருதுநகர் என விரிவுபடுத்தப்பட்டது. கரூர் மாவட்டம், மாயனூரில் இந்த திட்டத்திற்காக அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
 

;