பெண்கள் விடுதலை நம் வீட்டில் இருந்து தொடங்கட்டும் - எம் ஜே பிரபாகர்
பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனை கள் ஏராளம். சிறு வயது முதல் முதிய வயது வரை தினம்தினம் சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்கின்றனர். சர்வாதிகாரம் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், பெண் கல்வி, வேலை, சுகாதாரம், சட்ட உரிமைகள், பாலின சமத்துவ மின்மை, சமமற்ற ஊதியம், அரசியல் பிரதி நிதித்துவம், ஊதியம் பெறாத உழைப்பு, பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை போன்ற பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இப்பிரச்சனைகள் குறித்த விழிப் புணர்வோ அல்லது அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழிமுறைகளையோ அறியாமல் பெரும்பாலான பெண்கள் இருந்து வருகின்றனர். வறுமை, சமூகப் புறக்கணிப்பு, குடும்ப வன்முறை, பெண்கள் குறித்த எதிர்மறை மனப்பான்மை, உரிமை மறுப்பு, டிஜிட்டல் வன்முறை, பணிச்சூழலில் மறுக்கப் படும் அடிப்படை வசதிகள் என பலதரப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நூலின் சிறப்பம்சங்கள் இந்த நூல் பிரச்சனைகளை ஆராய்வது மட்டுமின்றி அவற்றிற்கான தீர்வுகளையும் முன்மொழிகிறது. களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட கள நிலவரங்களுடன், ஒவ் வொரு பிரச்சினையும் கதைகள் வடிவில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களோடு அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் வெறும் கருத்துப் பதிவுகள் அல்ல - அந்தந்த காலகட்டங்களில் நிகழ்ந்த முக்கிய சமூக சிக்கல்களை, பெண்கள் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான நிஜங்களை, சமூக அமைப்புகளில் அடங்கிய அமைதியான வன்முறைகளை மற்றும் சட்டங்களின் குறைபாடுகளை ஆழமாக ஆராய்கிறது. 14 கட்டுரைகள் கொண்ட இந்நூலில், ஆடை விற்பனை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உட்காருவதற்கு கூட உரிமை மறுக்கப்படுதல், சுமங்கலி திட்டம் என்ற பெயரில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், கிராமப்புற பெண்களின் இன்னல்கள், டிஜிட்டல் வன்முறைகள் போன்ற சமகால பிரச்சினைகள் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. உறுதியான தீர்வுகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. “எல்லா ஆண்களும் சுதந்திரமாக பிறந்தால் எல்லா பெண்களும் அடிமைகளாக பிறப்பது எப்படி?” என்ற கேள்வியுடன், உண்மையான பெண் சுதந்திரத்தின் வரையறையை நூலாசிரியர் தருகிறார். பெண் என்பவள் சிறுவயதிலேயே விட்டுக்கொடுக்க கற்றுக்கொடுக்கப்படுகிறாள். புன்னகையைக் கூட மறைவாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலை பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதுபோல், “ஒரு நாட்டின் பெண்களின் நிலைமையைப் பார்த்தாலே அந்த நாட்டின் நிலைமை சொல்ல முடியும்.” - கிராமப்புற பெண்களின் கல்வி மற்றும் தொழில் பயிற்சியை ஊக்குவித்தல்; பெண்கள் பெயரில் நிலம் வாங்குதல் - தொழில்நுட்ப வாய்ப்புகளை எளிதாக்குதல், - சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்தல், எனப் பல அம்சங்களை முன் வைக்கிறார். “பெண்கள் இயக்கங்களை வலுப் படுத்துங்கள், பெண்களின் தலைமையை ஆதரியுங்கள் - அதன்பின் மாற்றம் தானாக வரும்” என்பது நூலின் முக்கிய செய்தி. பெண் உலகம் ஆசிரியர்: வழக்கறிஞர் எஸ். செல்வகோமதி விலை: ₹120/- வெளியீடு: பட்டறிவு பதிப்பகம், மதுரை-625016 தொடர்பு: 0452 2302566