articles

img

செப்டம்பர் 7-8 முழு சந்திர கிரகணம் - ஒரு அரிய வான்நிகழ்வு - பேரா.சோ.மோகனா

செப்டம்பர் 7-8 முழு சந்திர கிரகணம் - ஒரு அரிய வான்நிகழ்வு

 (Eclipse) என்பது ஒரு வானியல் நிகழ்வு. வானில் உள்ள சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது,  ஒன்றின் நிழல் மற்றொன்றின் மீது விழுவதால் ஏற்படும் மறைப்பே கிரகணம். ‘Eclipse’ என்ற கிரேக்க சொல்லுக்கு “மறைக்கப்பட்ட” என்பதே பொருள். சமஸ்கிருதத்தில் ‘கிரகன்’ என்றால் மறைப்பு என்று அர்த்தம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் ஏற்படும்.  சூரியன்-சந்திரன்- பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது தான் கிரகணம் நிகழ்கிறது. சூரியன் 7.5 டிகிரி, சந்திரன் 5 டிகிரி, பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுவதால் எல்லா அமாவாசை, முழு நிலா நாட்களிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. சந்திர கிரகணம் எப்படி நிகழ்கிறது? சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால் ஏற்படுகிறது. இதனால் சந்திரன்  மங்கலாகத் தோன்றும் அல்லது கருமை யாகும். முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் செம்பு நிறத்தில் காணப்படும். சந்திர கிரகணம் இரு வகைப்படும்: முழு சந்திர கிரகணம்: சந்திரன் முழுமை யும் பூமியின் அடர்ந்த நிழலுக்குள் (அம்ப்ரா) நுழையும்போது பகுதி சந்திர கிரகணம்: சந்திரனின் ஒரு பகுதி மட்டுமே பூமியின் நிழலுக்குள் நுழையும் போது செப்டம்பர் 7-8 முழு சந்திர கிரகணம் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தெரியப் போகும் ஒரே சந்திர கிரகணம் இதுதான். இது ஒரு மிக நீண்ட மற்றும் முழுமையான சந்திர கிரகணமாகும்.  நேர விவரங்கள் (இந்திய நேரம்): - கிரகணத் தொடக்கம்: செப்டம்பர் 7, இரவு 8:58 - முழு கிரகணம் தொடங்கும் நேரம்: இரவு 11:00 - முழுமையான கிரகணம்: இரவு 11:41 - முழு கிரகணம் முடியும் நேரம்: 12:22 (செப்டம்பர் 8) - கிரகணம் முடியும் நேரம்: அதிகாலை 2:25 மொத்த நேரம்: 5 மணி 27 நிமிடங்கள்   முழு கிரகணம்: 1 மணி 22 நிமிடங்கள் “இரத்த நிலவு” - ஏன் சிவப்பு நிறம்? முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு அல்லது செம்பு நிறத்தில் தோன்றும். இதற்குக் காரணம் பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வடிகட்டுவதுதான். நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு ஒளி பூமியின் வளி மண்டலத்தின் வழியாக வளைந்து சந்திரனை அடைவதால், சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிர்கிறது. இதனால் இதை “இரத்த நிலவு” (Blood Moon) என்று அழைக்கிறோம். எங்கெல்லாம் பார்க்கலாம்? இந்தியா, சீனா, ரஷ்யா, மேற்கு ஆஸ்திரே லியா, கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியாவின் பெரும்பகுதியில் இருப்பவர்கள் முழு சந்திர கிரகணத்தைக் காணலாம். இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில் சந்திரன் உதிக்கும்போது ஒரு பகுதியைப் பார்க்க முடியும். எப்படி பார்ப்பது? சந்திர கிரகணம் பார்க்க எவ்வித சிறப்பு கருவிகளும் தேவையில்லை. வெறும் கண்ணால் பார்க்கலாம். கண்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. சந்திரன் நன்றாகத் தெரியும் திறந்த இடத்தைத் தேர்வு செய்தால் போதும். கிரகணங்களின் அரிய தன்மை ஒரு வருடத்துக்கு அதிகபட்சம் 7 கிரகணங்கள் வரலாம், ஆனால் பொதுவாக 2-3 கிரகணங்கள்தான் ஏற்படும். அதிகமாக சந்திர கிரகணங்களே வரும். நாசாவின் கணக்குப்படி, கடந்த 5,000 ஆண்டுகளில் 25 ஆண்டுகள் மட்டுமே வருடத்துக்கு 5 சூரிய கிரகணங்கள் ஏற்பட்டுள்ளன. சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது. ஆனால் சூரியன் சந்திரனை விட 400 மடங்கு தொலைவில் உள்ளது. எனவே பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டும் ஒரே அளவில் தெரிகின்றன. இதனால்தான் சூரிய கிரகணம் சாத்தியமாகிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 மாதங்களுக்கு (6,585.32 நாட்கள்) ஒரு முறை வரும். இதை சாரோஸ் சுழற்சி என்று சொல்வார்கள். 2025-26 கிரகணங்கள்  2025: - மார்ச் 14: முழு சந்திர கிரகணம் (இந்தியா வில் தெரியாது) - மார்ச் 29: பகுதி சூரிய கிரகணம் (இந்தியா வில் தெரியாது) - செப்டம்பர் 7-8: முழு சந்திர கிரகணம் (இந்தியாவில் தெரியும்) - செப்டம்பர் 21: பகுதி சூரிய கிரகணம் (இந்தியாவில் தெரியாது)  2026: - பிப்ரவரி 17: வளைய வடிவ சூரிய கிரகணம் - மார்ச் 3: முழு சந்திர கிரகணம் - ஆகஸ்ட் 12: முழு சூரிய கிரகணம் - ஆகஸ்ட் 27-28: பகுதி சந்திர கிரகணம் அறிவியல் உண்மைகள் கிரகணத்தின்போது எந்தவித கெட்ட கதிர்களும் பூமியை அடைவதில்லை. உணவு  உண்ணக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது போன்ற நம்பிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கைகளே. கிரகணம் ஒரு இயற்கையான வானியல் நிகழ்வு. இதை அனைவரும் பார்த்து ரசிக்கலாம். செப்டம்பர் 7-8 அன்று நிகழப்போகும் இந்த அரிய முழு சந்திர கிரகணத்தை வானவியல் ஆர்வலர்கள் தவறவிடக்கூடாது. இது ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வாகும்.