காய்ந்த புற்களின் கதை
இயற்கையின் நியதிகள் மனிதர் வாழ்வின் இலக்கணங்களுக்குள் அடங்காது. இருப்பினும்,அறநெறிக் கோட்பாடுகள் மனிதகுலத்துக்கு ஆற்றுப்படுகையாய் அமைந்து வழியாற்றுகின்றன.ஆண்-பெண் என்ற இருபாலார்க்கிடையான காதலை இந்த உளவியலின் அடிப்படையில் பேசுகிற துருக்கி படமே“About Dry Grasses”.
வருடத்தின் முக்கால் பகுதி குளிர் வாட்டும் வெண் பனி பொழியும் சிற்றூர் இன்ஸஷூ. இங்குள்ள நடுநிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் ஸமீட்.சலிப்பு மேலிடும் தனிமை வாழ்க்கை. பலதரப்பட்ட மனித முகங்களை புகைப்படமெடுப்பது இவரது வழக்கம்.இப்பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் ஹென்னன். ஒரே வீட்டில் தங்கியுள்ள இவ்விருவரும் மணமாகாதவர்கள். இப்பள்ளி மாணவி ஸேவிம். பதின்ம வயதுக்குரிய குறும்புக்காரி. ஸமீட்,ஹென்னன் மீதான வசீகரம், இவளை ஆசிரியர்,மாணவி உறவைத் தாண்டி அவர்களி டம் கூடுதலாக உறவாட வைக்கிறது. ஸமீட்,இவளுக்கு அன்பளிப்பு அளிக்கும் நிலைக்கும் செல்கிறது. பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளின் புத்தகப் பைகளைச் ஒரு நாள் சோதனையிடுகிறது. ஸேவிம் பையில் ஆசிரியர் பெயர் குறிப்பிடாத இவள் எழுதிய காதல் கடிதம் கண்டெடுக்கப்படுகிறது. மேல் நடவ டிக்கைக்காக வகுப்பு ஆசிரியர் ஸமீட் வசமே அக்கடிதம் வருகிறது.ஸமீட்,அதனை ரகசியமாகப் படிக்கையில், அங்கு திடீரென வந்த ஸேவிம், இக்கடிதத்தை கேட்கி றாள். கிழித்து வீசியதாகப் பொய் சொல்கிறான். கோபத்தோடு வெளியேறுகிறாள். தன்னைத் தவறான எண்ணத்தில் தொட்டதாக ஸமீட், ஹென்னன் மீது நிர்வா கத்திடம் ஸேவிமும், அவளது தோழியும் இணைந்து புகாரளிக்கின்றனர்.இரு ஆசிரியர்களும் விசாரிக்கப் படுகின்றனர்.இதுவரை வகுப்பில் அன்பாக நடத்தப்பட்ட ஸேவிமை, தற்போது பழிவாங்கும் நோக்கோடு நடத்துகிறான் ஸமீட். நுரே என்ற சமூகக் கல்வி அமெச்சூர் ஆசிரியை, ஸமீடுக்கு அறிமுகமாகிறாள்.மனித வெடி குண்டால் ஒரு முழங்காலை இழந்தவள்.மணமாகாத இவளது இன்ஸ்டாகிராம் கணக்கில் “We won’t be silent “என status வைத்திருக்கும் முற்போக்காளர். ஸமீட்,நண்பன் ஹென்னனை, நுரேயிடம் அறி முகப்படுத்துகிறான். இருவருக்குள்ளும் காதல் உரு வாகிறது.இதனை கண்டு பொறாமை கொள்கிறான் ஸமீட். நுரே, ஒரு நாள், ஸமீடிடம் அவளது வீட்டு விருந்துக்கு ஹென்னனோடு வரச்சொல்கிறாள். ஸமீடோ, இவ்வழைப்பை நண்பனுக்கு தெரிவிக்காமல்,இவன் மட்டும் செல்கிறான்.இவனோடு அரசியல், வரலாறு, மக்கள் போராட்டம் போன்ற பலதரப்பட்ட பொருண்மை களில் விவாதம் மணிக் கணக்கில் நீள்கிறது. ஸமீடின் எதார்த்தமான பேச்சால் கவரப்பட்ட நுரே, அவனை, அவளது இரவுப் படுக்கைக்கு அனுமதிக்கிறாள். இதனை, ஸமீட் ஹென்னனிடம் கூறுகிறான். ஹென்னன், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறான்.ஸமீட் மற்றும் நுரேயுடன் பேச்சைக் தவிர்க்கிறான். ஹென்னன் பேசாமைக்கான காரணத்தை நுரே, நேரில் கேட்கிறாள்.மௌனமே பதிலாகிறது.இவர்களது நட்பு பழைய நிலையை அடைய வேண்டுமானால்,இனி இவர்களைச் சந்திக்காமல் இருப்பதே சரியென அங்கிருந்து வெளியேறுகிறாள். காலம் மாறுகிறது. கோடை வந்துவிட்டது.துருக்கி யின் புராதனச் சின்னங்கள் அடங்கியதொரு நகருக்கு மூவரும் காரில் சுற்றுலா செல்கின்றனர்.மலை மீது, வெண் பனியால் போர்த்தப்பட்டிருந்த புற்கள் தற்போது உலர்ந்து காணப்படுகிறது.ஸமீட்,ஸேவிம் மீது கொண்ட காதல்,வறண்ட புற்கள் போல் போனதை நினைத்து உருகி அதன் மீது நடக்கிறான்.படம் முடிகிறது. ஸமீட் பிறருக்கு உதவ நினைக்கிறான். ஆனால் தனது பாதுகாப்பற்ற நிலை,பயம் மற்றும் பொறாமை மேலிட்டு தீங்கும் செய்கிறான்.தனது மாணவியிடம் நல் ஆசிரியனாக நடக்கின்ற அதே வேளையில்,அவள்மீது இனம் புரியா காதலும் கொள்கிறான்,அவளை அவ மானப்படுத்தி தண்டிக்கவும் செய்கிறான். நுரே, ஹென்னன் மீது காதல் கொள்கிறாள்.ஆனால் அறிவார்ந்த பேச்சை வெளிப்படுத்திய ஸமீடை படுக்கைக்கும் அனுமதி அளிக்கிறாள். சிக்கலான உளவியல் கொண்ட மனிதர்களை நல்லவர், தீயவர் என்று பிரித்து பார்க்கும் கட்ட ளைக்கல் இல்லை என்பதை உணர்த்தும்,மிக நுட்பமான திரைக்கதை மூலம் தரமாக இயக்கியுள்ளார் நூரி பில்ஜ் சிலான். படத்தின் சிறப்பம்சமாக ஒளிப்பதிவை குறிப்பிடலாம். பரந்துபட்ட வெண் பனி பிரதேசம். வெள்ளை நிறத்தை விட வேறு எதுவும் தெரியாத தூரக்காட்சி.அந்த வெண்மையை சிதைக்கும் வகையில் தூரத்தில் கருப்பு பனிக் கோட் அணிந்த ஸமீட் தனியே ஒரு கரும்புள்ளி யாக பனிக்கட்டிகள் மீது நடந்து வருகிறான்.இவ னுக்கு பின்னால் ஒரு குதிரையால் ஓடும் பனி சறுக்கு வண்டி வருகிறது. வண்டி ஸமீடை முந்துகையில், இவனையும் வண்டியின் வேகத்திலே ஏறச்சொல்கிறான் வண்டியோட்டி.இருவரின் ஒற்றைக் குதிரை சவாரி யோடு அக்காட்சி முடிவு பெறும்.மிக அற்புதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இத் தொகுப்புக்காட்சி, ஒட்டுமொத்த படத்தின் குறியீடு. விடியலில், பரந்த பனிப் போர்வையின் மேலே, பறவைகள் கூட்டமாக பறக்கின்ற காட்சி. இருளில் மூவரும் காரில் செல்கையில், முன் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் சாலையில் பனி பொழிவதும், அக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பச்சை நிற புற்கள் தெரிகின்ற கால மாற்றம்,காற்றில் மரங்கள், உலர்ந்த புற்கள் காற்றுச் சத்தத்தோடு அசைந்தாடும் காட்சி போன்றவைகளின் ஒளிப்பதிவாக்கம் அபாரம். ஸேவிமை வகுப்பை விட்டு வெளியே நிற்கச் சொல்லி தண்டனை அளிக்கும் ஸமீட், பழிவாங்கும் குணத்தை வெளிப்படுத்தும் போதும்;அதே போல்,ஆசிரியர் சென்றவுடன் சுவரில் சாய்ந்து நின்று,எதிர்ப்பை காட்டி கோபத்தை வெளிக் கொணரும் ஸேவிம்;ஸமீட், நுரே யுடன் தங்கியதை ஹென்னனிடம் கூறுகையில், அவனது முகம் படிப்படியாக இறுக்கமடைவதும்;ஸமீடிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே கலங்கிய கண்களோடு, “ஏன் ஹென்னனை விருந்துக்கு அழைத்து வரவில்லை?”என்ற பதிலற்ற கேள்வியோடு மனச் சோகத்தை கண்ணீரால் வெளிப்படுத்தும் நுரே; இப்பாத்திரங்களை ஏற்ற நால்வரும் நடிப்பில் வியக்க வைத்துள்ளனர். பெர்டோல்ட் பிரெக்ட் என்ற ஜெர்மன் நாடக ஆசிரியர் உருவாக்கிய”எபிக் தியேட்டர்”என்ற நாடக முறையில்”மெட்டா- மொமென்ட்”ஒரு முக்கியமான நுட்பம். இது பார்வையாளர்களை கதையிலிருந்து துண்டித்து சமூகப் பிரச்சனைகளைப் பேசும். நுரே, ஸமீடிடம் நடத்தும் நீண்ட நேர சமூக உரை யாடல் இப்பாணியே. இந்த உலகில் உள்ள அழகான அனைத்தும்,நாம் நெய்யும் வலைகளில், நம்மை அடைவதற்கு முன்பே சிக்கிக் கொள்கிறது, போன்ற பல ஆழமான வசனங்கள் படமெங்கும். மூன்று மணிநேரத்திற்கும் மேல் ஓடும் தொய்வடை யாத படத் தொகுப்பு. முடிவில், ஸெவிம் நினைவு களோடு, ஸமீட் மலை ஏறுகையில், அப்போதைய அவனது மன வெறுமையை, பார்வையாளர்களுக்கு கடத்தி கலங்கடிக்கும் பின்னணி இசை. 2023 கான்ஸ் விழாவில், பால்மே-டீர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு, சிறந்த நடிகைக்கான விருது நுரே பாத்திரமேற்ற மெர்வ் டிஸ்டாருக்கு வழங்கப் பட்டுள்ளது. முபியில் இப்படம் உள்ளது.