articles

சிபிஎம் சட்டப் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வெற்றி!

சிபிஎம் சட்டப் போராட்டத்திற்கு  குறிப்பிடத்தக்க வெற்றி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்திருந்த வழக்கை ஏற்று, மறு உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 3 நீதிபதிகள் அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி என்று மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் பெ. சண்முகம் கூறியிருப்பதாவது:

3 நீதிபதிகள்  அமர்வு விசாரணை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகள், இயக்க கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார், அதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தோம்.  அந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வானது, தனி நீதிபதி  பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும், கட்சிக் கொடி கம்பம் குறித்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தது.  அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (22.7.2025) அன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், விஜயகுமார், எஸ். சௌந்தர் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்தது.

அரசியலமைப்பு உரிமைக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவு

அப்போது, “இந்த வழக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட முக்கிய வழக்கு. பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையில் முக்கிய அம்சமாக கட்சிகளின் கொள்கைகளை வெளிப்படுத்துவதில் கொடிக் கம்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனி நீதிபதி அரசியல்  அமைப்பு உரிமையைக் கருத்தில் கொள்ளாமல், பிறப்பித்த உத்தரவு சட்டப்படி நிலைக்கத் தக்கதல்ல. மேலும் இத்தகைய உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். எனவே, மூன்று நீதிபதிகள் அமர்வானது, பத்திரி கைகளில் பொது விளம்பரம் வெளியிட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை யும் கேட்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சிபிஎம் வாதத்தை ஏற்ற  3 நீதிபதிகள் அமர்வு

அதனை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வானது, “இந்த வழக்கில், அனைத்து அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை அணுகி அவர்கள் கருத்துகளை சொல்வதற்கு ஏதுவாக அமையும் வகையில் - வருகிற 25.7.2025 அன்று, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பிரபலமான இரண்டு ஆங்கில மற்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்”, என்றும்; “கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவால் பாதிக்கப்படு வதாக கருதினால் அரசியல் கட்சிகள் 5.8.2025 க்குள்  இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம்” என்றும் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.  அதுவரை தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எந்தக் கொடிக்கம்பங்களும் அகற்றப்படக் கூடாதென இடைக்கால உத்தரவும் பிறப்பித்துள்ளனர். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த இந்த இடைக்கால உத்தரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நீதிமன்றத்தில் நடத்தி வரும் போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும். இதற்காக நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்குரைஞர் திருமூர்த்தி உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.