குமட்டுவது குப்பையல்ல
‘வரலாறு மாறுவதில்லை;அது மறுபடி நிகழ்கிறது.’ என்பதைச் சில தருணங்கள் சில நிகழ்வுகள் சுட்டுகின்றன. அன்று அடிமை முறை இன்று ஒப்பந்தக் கூலி ஒப்பந்தக்காரர்கள் கல்லாக் கட்டுவது நிரந்தரம் நாங்கள் குப்பை அள்ளுவதும் நிரந்தரம் ஆனால் வேலை நிரந்தரமில்லையாம் அடிமட்டக் கூலிதான் தரப்படுமாம் மறுத்துப் போராடினால் அடித்து நொறுக்குவார்களாம் எழுத்துவேலைக்காரர்கள் போராட்டத்தை உடைக்க உங்களுக்கு அற்றைக் கூலிக்கு ஆள்கிடைக்கும் எங்களுக்குப் பதிலாய் யார் வருவார்? சாக்கடைக் குழிக்குள் சமாதியானால் பத்து லட்சம் இழப்பீடு பிள்ளைகளின் பெரிய படிப்புக்கு பண உதவி என்று சலுகைகள் காட்டிச் சமரசம் பேசுகிறீர்கள் வாயைத் தைத்துவிட்டு தேனை நக்கிக்கொள் என்கிறீர்கள் கனவு இல்லம் தருவதாய்ச் சொல்கிறீர்கள் எங்கள் கனவு பணி நிரந்தரம் சுயமரியாதைப் பணிநிலை தெருநாய்கள் சுதந்திரத்தை விவாதிக்கும் நீதிமான்கள் தெருவோரம் நின்றெங்கள் உரிமைக்குரல் எழுப்ப ஒப்பவில்லை உங்கள் தீண்டத்தகாத கழிவுகளை நாங்கள் தீண்டி அப்புறப்படுத்துகிறோம் ஆனால் எங்கள் கோரிக்கை உங்களுக்கு தீண்டத்தகாதது குப்பைகளைப் போல் எங்களை அப்புறப்படுத்துவீர்கள்? முடைநாற்றம் மூத்திரக் கவிச்சி பீநாற்றம் சகித்தோம் குமட்டும் உங்கள் கண்ணோட்டம் சகிக்கவில்லை எம்புரான்களே. ரெட்டை இலக்கத்தில் வளர்ச்சி எனக் கூத்தாடும் ஆண்டைகளே இந்தக் கடைநிலை ஊழியத்துக்கு கடைநிலை ஊதியம் எங்கள் வேலைக்கு இரவலன்கூட வரமாட்டான். ஐந்தாண்டு ஆட்சி மன்றில் இருந்தாலே ஆயுளுக்கும் ஓய்வூதியம் ஆயுளையே பணயம் வைத்த தூய்மைப் பணியாளனுக்கு வாய்க்கரிசி பத்து லட்சம் சாதிக்கொரு நீதி இது சனாதனத்தின் மறுபிறவி. வீதிகளில் நாறுவது குப்பைகளல்ல உங்கள் சமத்துவப் பசப்புகள்.