articles

img

மகாராஷ்டிர பெரிய வெங்காயம் பெரம்பலூரில்... பெரம்பலூர் சின்ன வெங்காயம் மும்பையில்... பதுக்கல்காரர்களுக்கு உதவும் பாதகச்சட்டம்...

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிவிவசாயிகளுக்கு தான் வாக்குறுதி அளித்தபடி 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கப்போவதற்காக மூன்று வேளாண் சட்டங்களைநிறைவேற்றி உள்ளதாக பெருமிதத்தோடு கூறினார். விவசாயிகள் இனிமேல் சுதந்திரமாக தாங்கள் விளைவிக்கும் விவசாய பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று கூடுதல் விலைக்குவிற்று லாபம் சம்பாதிக்கலாம் என்று  கூறினார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம் என்ற பழமொழிக்கேற்ப விவசாயிகளைப்பற்றி கவலைப்படுவதாக கூறி கொரோனா காலத்தில் இச் சட்டங்களை அவசரம் அவசரமாக எதிர்க்கட்சி உறுப்பினர் களையெல்லாம் வெளியேற்றி விட்டு கடும் எதிர்ப்புகளையும் மீறி எவ்வித விவாதமும் இன்றி ஜனநாயக விரோதமான முறையில் இந்த நாசகார வேளாண் சட்டங்களை பாஜகமோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிஉள்ளது. தமிழக அதிமுக எம்பிக்கள் இச்சட்டங்கள் நிறைவேற கைதூக்கி ஆதரவளித்துள்ளனர்.
இச்சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு குடியரசு தலைவர் காட்டிய அவசரம் ஆச்சரியம் அளிப்பதாகவுள்ளது. பல மசோதாக்கள் மாதக்கணக்கில் குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்காக காத்துக்கிடக்கும் போதுஞாயிற்றுக்கிழமையாக இருந்த போது கூடஇச்சட்டம் நிறைவேற உடனடியாக கையெழுத்திட்டுள்ளார். இச்சட்டங்கள் நிறைவேற் றப்பட்ட விதம் விவசாயிகளுக்கு பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.இந்த நாசகர சட்டங்களை எதிர்த்து நாடுமுழுவதும் விவசாயிகள் பெரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) இனிமேல்மத்திய மாநில அரசுகள் வழங்கப்போவதில்லை. இதுகுறித்து தற்போது நிறைவேற்றிஉள்ள மூன்று வேளாண் சட்டங்களில் எந்த இடத்திலும் ஒரே ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை.

முதலாவது சட்டம்..
விவசாயி உற்பத்தி பொருட்கள் வர்த்தகம் மற்றும் தொழில் மேம்படுத்துதல் சட்டப்படிவிவசாயிகளை விடுதலை செய்து  சுதந்திரமானவர்களாக ஆக்குவதாக அரசு சொல்கிறது. இனிமேல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று யாரிடம் வேண்டுமானாலும் விற்பதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக் கிறதாம். கேழ்வரகில் நெய்வடிகிறதென்று சொல்வதைப் போல் இது உள்ளது. 

ஏபிஎம்சி கமிட்டி 
இதுவரை ஏபிஎம்சி கமிட்டி மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்றுவந்தனர். எனினும் ஏழை விவசாயிகள் தங்களுக்கு விவசாயம் செய்ய கடன் கொடுத்தவர்களிடமே தங்கள் விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை சரிசெய்து அனைத்து விவசாயிகளையும் ஏபிஎம்சி கமிட்டியிடம் விற் பனை செய்வதற்கு வழி ஏற்படுத்தாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை விவசாயத்தின் மீது திணிக்கவே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போது பிரதமர் மோடி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு எம்எஸ்பி விலை தரப்போவதாகவும் இன்னும் இரண்டுஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தைஇரண்டு மடங்காக உயர்த்தப் போவதாகவும்தானியங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தமாட்டோம் என்றும் வாய்ஜாலம் பேசிக்கொண் டிருக்கிறார். இந்த உறுதிமொழிகளில் எதுவுமே இச்சட்டத்தில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

இரண்டாவது சட்டம்
தற்போதுள்ள சட்டப்படி அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைக்க முடியாது. ஆகவே இச்சட்டத்தை பதுக்கல்காரர்களுக்கு ஆதரவாகவே அரசு திருத்தியுள்ளது. அறுவடை நேரத்தில் விவசாயிகளிடம் விளைபொருள் இருக்கும் போதுதிட்டமிட்டு விலைவீழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. அதே பொருள் மொத்த வியாபாரிகளிடம் சென்ற உடன் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம். வாங்கி சாப்பிடும் மக்களுக்கும் கூடுதல் விலை பதுக்கல்காரர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது.

வெங்காயம் பதுக்கல்..
வெங்காயத்தை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கியஉடனே வெங்காய விலை திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. கிலோ 10 மற்றும் 15 ரூபாய்க்கு விலை குறைந்த உடன் மும்பையிலிருக்கும் பாஜகவை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவர் திருச்சியிலிருக்கும் பாஜகவின் மொத்தவியாபாரியுடன் கூட்டு சேர்ந்து மகாராஷ்டிராவிலிருந்து 15ஆயிரம் டன் பெரிய வெங்காயத்தை கொள்முதல் செய்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணைகளில் பதுக்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 15ஆயிரம் டன் சின்னவெங்காயத்தை கொள்முதல் செய்து மும்பையில் உள்ள குடோன்களிலும் பதுக்கி வைத்தனர். தீபாவளி பண்டிகை நேரத்தில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி வெங்காய விலை கிலோ 120 ரூபாய் வரை உயர்த்தி பொது மக்களிடம் விற்று கொள்ளை லாபம் அடித்துள்ளனர். இதன் மூலம் இச்சட்டம் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் என விவசாயிகள் கருதுவது நிரூபணமாகி உள்ளது.

மூன்றாவது சட்டம்...
விவசாயிகள் தங்கள் விளைபொருட் களின் விலையை தாங்களே நிர்ணயிக்கும் ஒப்பந்த சட்டப்படி விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவன பிரதிநிதிகளிடம் நாட்டின் எந்தப் பகுதிகளில் வேண்டுமானாலும் விற்க ஒப்பந் தம் செய்து கொள்ளலாம். அரசாங்கம் இந்தஒப்பந்தங்களுக்கு மூன்றாவது தரப்பாக நின்று எவ்வித உத்தரவாதமும் அளிக்காது.இந்த நிலையில் ஒப்பந்தம் மீறப்படும் போதுஏழை விவசாயி என்ன செய்யமுடியும். தீர்ப்பாயம் மூலம் தகராறுகள் தீர்க்கப்படும் என இச்சட்டம் சொல்கிறது. ஏழை விவசாயியால் வாய்தாவிற்காக எத்தனைமுறை அலையமுடியும்? கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் வழக்கறிஞரை விவசாயிகளால் எதிர்கொள்ள முடியுமா? விவசாயிகளை பலவீனப்படுத்தி நிரந்தரமாக கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து விவசாயிகள் இருந்தாக வேண்டிய நிலைக்கு ஆளாக்குவதே இச் சட்டத்தின் நோக்கமாகும்.விவசாயத்தை சீரழிக்கும் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு எம்எஸ்பி விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் எம்எஸ்பி விலையை விட குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய அனுமதிக்கக்கூடாது. விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக்கடன் முழுவதையும் ரத்து செய்யவேண்டும்.

அது வரை விவசாயிகள் தங்கள் போராட் டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை. விவசாயிகள் கிளர்ச்சி நாடு முழுவதும் தீவிரமடையும். தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு தாய் 8அடி பாய்ந்தால் குட்டி 16 அடிபாயும் என்பதை போல நடந்து கொள்கிறது. இவர் மேடை தோறும் பச்சைதுண்டு தலப்பாவோடு நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொண்டு அந்த வேளாண் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசி விவசாயிகளுக்கு பச்சை துரோகம் இழைத்து வருகிறார். இந்த பின்னணியில் தான் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள டிசம்பர் 8 பாரத் பந்திற்குஎதிர்க்கட்சிகள், விவசாயிகள், தொழிலாளிகள், மாணவர்கள், மாதர்கள் என ஆதரவு பெருகிவருகிறது. பாரத் பந்தை வெற்றி பெறசெய்வோம்; மோடி அரசிற்கு பாடம் புகட்டுவோம்…

===என்.செல்லதுரை, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்===

;