இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்
மீண்டும் டிரம்ப் பேச்சு : அமைதி காக்கும் மோடி
நியூயார்க், ஆக.27- இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையிலான போர் உட்பட 7 போர்களை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடனான சந்திப்பின் போது இதனை டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, உலகின் பல போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் ஏற்பட்டிருக்கும். நான் தலையிட்டு இதுவரை இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே ஆயுதப் போராகவும் வெடிப்பதற்கு நேர்ந்தது. அப்போது ‘நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? இல்லையா? இப்படி நீங்கள் சண்டையிட்டுக்கொண்டால், உங்களுடன் எந்தவிதமான வர்த்தகத்தையும் நாங்கள் மேற்கொள்ள மாட்டோம்’ என்றோம். அந்த சண்டையை நிறுத்த நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தினேன், நான் நிறுத்திய 7 போர்களில் 4 போர்கள், வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பை காட்டி நிறுத்தப்பட்டவை. எனவே தான் அவர்கள் போரைக் கைவிட்டுவிட்டனர். போர்களை நிறுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான டாலரை வரிவிதிப்பாக நாங்கள் பெற்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.