வேள்பாரி வென்றது எப்படி?
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான, தமுஎகச மதிப்புறு தலைவர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் விற்பனையில் புதிய எல்லையைத் தொட்டுள் ளது. ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆனதை விகடன் குழுமம் வெள்ளிக்கிழமை (11-07-2025) அன்று விழா எடுத்துக் கொண்டாடுகிறது. தோழர் ஜீவானந்தம்,கே.முத்தையா, அருணன், கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ் போன்ற இடதுசாரி எழுத்தாளர்கள் துவக்கி வைத்த முற்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தில், ஜெயகாந்தனுக்குப் பிறகு இத்தனை மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு படைப்பு வேள்பாரிதான்.ஒரு லட்சம் பிரதிகள் விற்ற புத்தகங்கள் இதற்கு முன்னரும் பல உண்டுதான்.என்றாலும் 2000 ரூபாய் விலை யுள்ள இந்நாவல் ஒரு லட்சம் விற்பனை ஆகி 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தந்துள்ளது என்பது முதன்முறை அல்லவா?
மக்கள் மனங்களில் ஆழமான தாக்கம்
இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை 2000 க்கும் மேற்பட்ட குழந்தை களுக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளனர் வாசகர் களான பெற்றோர்கள். இதெல்லாம் அந்த நாவல் தமிழ் வாசக மனங்களை எப்படி வென்றுள்ளது என்பதற்கான சான்று.பல்வேறு வயதினரும் இந்நாவலின் வாசகர் களாகவும் ரசிகர்களாகவும் ஆகியுள்ளனர். வேள்பாரி வாசகர்கள் தம்மை ஒரு தனிச் சமூக மாக உணர்ந்து வாசகர் மன்றங்களை உல கெங்கும் உருவாக்கியிருப்பதும் முன்னெப் போதும் எந்த நாவலுக்கும் நடந்திராத ஒன்று.
காலச்சூழலும் வெற்றியின் வேர்களும்
இப்படி ஒரு வெற்றி கிடைத்தது எப்படி? என்று ஆராய்வதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் (படித்த சமூகத்தின்) உளவியலைப் புரிந்து கொள்ள முயலலாம். இந்த நாவல் 111 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வந்தது.அது வந்த காலச்சூழலில் வைத்து இந்த வெற்றியின் வேர்களை நாம் தேட வேண்டும். பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்ற பிறகு 2016 ஆம் ஆண்டு விகடன் தீபாவளிச் சிறப்பித ழில் இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இத்தொடர் நாவல் வடிவம் பெற்றது. 1408 பக்கங்களோடு இரண்டு பாகங்களைக் கொண்ட இந்நூலினை அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட முதல் பாகத்தைத் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ண னும், இரண்டாம் பாகத்தைச் சூழலியலாளர் கோ.சுந்தர்ராஜனும் பெற்றுக்கொண்டனர். அந்த வெளியீட்டு விழா மேடையில் சிந்து வெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் பங் கேற்றார். நானும் கலந்துகொண்டு பேசி னேன். இந்த ஆளுமைகள் பங்கேற்றதற்கும் நாவலின் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு உள்ளது. நாவல் முன்னெடுத்த அரசிய லுக்கும் இந்த வெளியீட்டு விழா ஆளுமை களுக்கும் தொடர்பு உள்ளது.
பாரியின் பாத்திரப் படைப்பு
நாவல், சங்க இலக்கியத்தில் பாடல் பெற்ற வேளிர்குலத்தலைவன் பாரியைக் கதை நாயகனாகக் கொண்டு எழுதப்பட் டது. பேராசை கொண்ட நில உடமை அரசு களான மூவேந்தர்களின் பண்பாட்டுக்கும் அரசியலுக்கும் மாற்றாக இயற்கை சார்ந்த வாழ்வியலும் மானுட அறமுமே அடிப்படை யாகக் கொண்டு வாழ்ந்தவனாக பறம்பின் குடித்தலைவன் பாரி இந்நாவலில் படைக்கப் பட்டுள்ளான். வியாபார தந்திரத்தோடு பறம்பு மலையில் கைநீட்டிய சேரமன்னனின் தூதுவனின் கை வெட்டப்படுகிறது.இயற்கை நியாயமே பாரியின் ஆட்சியின் நியாயமாகக் கோலோச்சுகிறது.
தமிழ்ச் சமூகத்தின் மனநிலையும் அரசியல் சூழலும்
அநியாயமே அறம் எனக்கொண்ட பாஜக ஆட்சியால் நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு தமிழ்ச் சமூக உளவியலில் உருத்திரண்டு வந்துகொண்டிருந்த காலம் அது, கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு நடுவழியில் கைவிட்ட கோபம் படித்த மக்க ளிடம் இருந்தது.அலோபதி மருத்துவத்தின் வியாபார தந்திரங்களால் சலிப்புற்ற மக்கள் இயற்கை உணவு,இயற்கை மருத்துவம் என்று திசை திரும்பியிருந்த நேரம்.ஆனந்த விக டனில் மருத்துவர் கு.சிவராமன் எழுதிக் கொண்டிருந்த இயற்கை உணவு சார்ந்த தொடர்கள், பூவுலகின் நண்பர்கள் எழுப்பிக் கொண்டிருந்த சூழலியல் கேள்விகள் போன்ற எல்லாம் சேர்ந்து தமிழ் வாசகர் களில் கணிசமான பகுதியினர் ஒன்றிய அர சால் புறக்கணிக்கப்படும் தங்கள் தமிழ் அடை யாளத்தைத் தேடும் மனப்போக்கில் இருந்த னர்.இலங்கைத்தமிழர்கள் கொத்துக் கொத் தாகக் கொல்லப்பட்ட துயரம் தமிழ் மனங்களில் கொடுங்கனவாக நீண்டுகொண்டிருந்ததும் இதில் சேர்ந்துகொண்டது.
வாசகர்களின் குரல்
மேற்சொன்ன எல்லாப் புள்ளிகளையும் ஒரே நூலில் கோர்த்துக் கொடுத்தது வேள்பாரி நாவல். “ஒவ்வொரு வாரமும் விகடன் இதழை வாங்கியதும் வேள்பாரி தொடரைத்தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தத் தொடர் எனக்கு ஈழப்போரை நினைவூட்டி யது. தற்போது சூழலுக்கான போராட்டங் களை இந்தத் தொடர் எனக்கு நினைவுபடுத்து கிறது. அதுமட்டுமல்லாமல், எத்தனை தமிழ்ப் பெயர்களை இந்தத் தொடர் அறிமுகப்படுத்தி யிருக்கிறது என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. தவிர, சங்க காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களையும் இந்தத் தொடர் மிகச் சுவையான முறையில் சொல்லிவருகிறது. யார் வீட்டில் ஆனந்த விகடன் இதழைப் பார்த்தா லும் அவர்கள் வேள்பாரி படிக்கிறார்களா என்று தான் முதலில் கேட்பேன்” என்கிறார் இந்தத் தொடரின் தீவிர வாசகர்களில் ஒருவரான இலங்கை வேந்தன். அறம் தேடும் மக்கள் மனம் தமிழ் வாசக மனங்களில் உருவாகி யிருந்த வெற்றிடங்களையும் ஏக்கங்களை யும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதாக வேள்பாரி நாவல் அமைந்ததே இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம் எனத்தோன்று கிறது. அறம் அழிந்து சீர்கெட்ட ஓர் அரசியல் வாழ்க்கையைத் தமிழ் மக்கள் சந்தித்துக் கொண்டிருந்தனர்.பொய்யைத்தவிர வேறேதும் மூலதனமாக இல்லாத ஒன்றிய பாஜக ஆட்சி ஒருபுறம் என்றால், தங்கள் தங்கத் தலைவியின் மர்ம மரணத்துக்கே விளக்கம் சொல்ல முடியாத அதிமுகவினரின் பதவி வெறி ஆட்டங்களும் கூவத்தூர் குழப்படிகளும் தவழ்ந்து சென்று பிடித்த காலையே கவிழ்த்து விடும் பகடை ஆட்டங்களும் கண்டு மனம் வெறுத்திருந்த தமிழ் வாசகர்கள் மாசு மரு வில்லாத உண்மையின் வடிவமான மழையை விடக் கருணை மிக்கவனான வேள்பாரியை இதுதானடா நாங்கள் தேடிய அறம்,அரசியல், வாழ்வியல் என்று பாரி என்னும் மாமனிதனை உச்சந்தலையில் ஏற்றிக் கொண்டாடத் துவங்கினார்கள்.
மூவேந்தர்கள் வில்லன்களான காரணம்
தமிழ் மக்களின் நாடித்துடிப்பை மிகச்சரி யாகப் பற்றிக்கொண்டதே வேள்பாரி நாவ லின் வெற்றிக்கு அடித்தளம். ஆண்டாண்டுகாலமாக வெட்டியாக தமிழ்ப்பெருமிதம் பேசித்திரிந்த நம் கடந்த காலத்தின் மீதான அசூயையை மூவேந்தர் களை வில்லன்களாக்கி இந்த நாவல் வெற்றி கண்டது.எத்தனை ஆண்டுகாலமாக மூவேந்தர்களைச் சரித்திர நாயகர்களாகக் கொண்டாடிய சமூகம் நம்முடையது? இந்த நாவல் மூவேந்தர்கள் மீது காறித்துப்ப வைத்து விட்டதே?
சமூக உளவியலின் சாதுர்யம்
“டாம் அண்ட் ஜெர்ரி” கார்ட்டூன் கதையில் வலிய பூனைக்கும் எளிய எலி ஜெர்ரிக்கும் நடைபெறும் இடைவிடாத போராட்டத்தில் உலக மக்கள் எப்போதுமே எளிய எலிக்குட்டியின் பக்கம்தான் நிற்பார்கள்.அந்த சமூக உள வியலை உள்வாங்கிய வேள்பாரி நாவல் வலிய பூனைகளாகிய மூவேந்தர்களால் வெல்ல முடியாத எளிய வேளிர்குலத்தலைவனாக பறம்பின் பாரியைப் படைத்து வென்றது என்கிற கோணத்திலும் இந்நாவலை வாசிக்கலாம்.
அறத்தின் வெற்றி
இந்நாவல் முற்றிலும் ஒரு யதார்த்தவகை நாவல் அல்ல.அதிபுனைவுகள் மிகுந்த நாவல்தான். நாவலின் நோக்கம் அறத்தை மனித மனங்களில் நிலைநிறுத்துவது என்ப தால் மக்கள் அதிபுனைவுகளை அறத்தின் பக்கம் நின்று ஏற்றார்கள்.கோடான கோடி மக்களை அறத்தின் பக்கம் திருப்பிய சாத னையை வேள்பாரி படைத்துவிட்டது என்று சொல்வது மிகைக் கூற்றாகாது.
இலக்கியம் தரும் பாடங்கள்
மக்களின் மனப்போக்கைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ற முழக்கத்தை முன் வைத்தால் மக்களை வென்றெடுக்க முடியும் என்கிற பாடத்தை வேள்பாரியின் வெற்றி நமக்குத் தந்திருக்கிறது. சு.வெங்கடேசன் முற்போக்கு எழுத்தாளர் என்பதோ மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் என்பதோ வாசக உள்ளங்களுக்கு ஒரு தடையாகவே இல்லை என்கிற உண்மை நமக்கு உறைக்கிறது.
இலக்கியம் முதல் அரசியல் வரை
இலக்கியத்துக்காக வெங்கடேசனைக் கொண்டாடிய வேள்பாரி வாசகர் மன்றத்தி னர் நாடாளுமன்றத்தேர்தலில் சு.வெங்க டேசனுக்காக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்குக் கேட்டுப் பிரச்சாரத்துக் கும் வந்தார்கள் என்பது எவ்வளவு முக்கிய மான செய்தி.தேர்தலுக்கு நிதியும் கூடக் கொடுத்தார்கள்.இலக்கியத்தின் வலிமையை உணராதவர்களுக்கு இதெல்லாம் பாடமாக அமைய வேண்டும்.
கொண்டாடுவோம் !
ஒரு மார்க்சிஸ்ட் எழுத்தாளர் பெருவாரி யான மக்களால் கொண்டாடப்படும் எழுத்தாள ராகப் பொதுவெளியில் எழுந்து நிற்பதே நம்மைப்பொருத்தவரை கொண்டாடப்பட வேண்டிய முக்கியமான அசைவுதான்.