articles

img

“கரடி கூட காரித் துப்பும்...” - சா.பீட்டர் அல்போன்ஸ்

“கரடி கூட காரித் துப்பும்...”

கீழடியில் தமிழர் தொன்மை நாக ரிகம் பற்றிய வரலாற்று முக்கி யத்துவம் நிறைந்த செய்திகளை தனது ஆய்வறிக்கை மூலம் வெளிக் கொணர்ந்த தொல்லியல் துறை அதி காரி அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை மீண்டும் ஒருமுறை அதிகார மும், செயல்பாடுகளும் இல்லாத ஒரு பணியிடத்திற்கு ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. கீழடி அகழாய்வு வடக்கே உள்ளவர்க ளுக்கு ஏன் பதற்றத்தையும், பரி தவிப்பையும் தருகிறது என்பதை தமிழ கத்திற்கும், உலகிற்கும் எடுத்துச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். கீழடி அகழாய்வின் போது கிடைத் துள்ள மிக அரிதான பொருட்கள் இது வரை ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகள் கட்டமைத்து வைத்திருந்த வரலாற்றுப் புனைசுருட்டுகளின் போலி முகங்களை உலகிற்கு உணர்த்தி யுள்ளன. 

இருட்டடிப்பு முயற்சி

வேதகால நாகரிகமே இந்திய துணைக்கண்டத்தின் ஆதி நாகரிகம் என்றும் சமஸ்கிருதமே இந்திய மொழிக ளுக்கெல்லாம் தாய் மொழி என்றும் சொல்லி வந்தவர்கள் தலைகளில் கீழடி தகவல்கள் பேரிடியாக விழுந்தன.  தமிழர்  நாகரிகமும், தமிழ் மொழியும் வேதகால நாகரிகத்திற்கும் முந்தியவை என்ற அறிவியல்ப்பூர்வமான உண்மையினை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. குற்றவாளிகள் தடயங்களை அழித்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது போல கீழடி நாகரிகத்தின் தொன்மையினையும் சிறப்பையும் வெளி யுலகிற்கு தெரியாமல் இருட்டடிப்புச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் “அவர்கள்” செய்து பார்த்தார்கள். உண்மைகளை எத்தனை நாளுக்கு திரையிட்டு மறைக்க முடியும்? சரியான நேரத்தில் கீழடியை கைவசம் எடுத்துக் கொண்ட தமிழக அரசுக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக் கும் தமிழ்ச் சமூகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

அதிக தரவுகளும்  ஆதாரமும் தேவையாம்

உலகெங்கும் உள்ள வரலாற்று அறி ஞர்கள் கீழடி நாகரிகத்தின் தொன்மை யையும்,அதனது பிரம்மாண்டத்தையும் பார்த்து பிரமித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் துவங்கியுள்ள தால் மூக்கறுபட்ட ஒன்றிய அரசு கீழடி அகழ்வாய்வு அறிக்கையின் தகவல்கள் இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக் கப்படவில்லை என்று சொல்லி அறிக்கையை வெளியிட மறுக்கின்றது. தொல்பொருள் அகழ்வாய்வு ஆராய்ச் சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை சார்பில் இரண்டு கட்டமாக கீழடியில் அக ழாய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் அந்த அறிக்கையினை ஏற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடு வதற்கு மேலும் அதிகமான தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகின்றன என்றும் அவைகளை அவர் தந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்றும் ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன ஒரு செய்தி மிகவும் முக்கியமானது: “Let them come with more results, data and evidence because a single finding can not change the entire discourse”- ஆங்கில இந்து பத்திரிகைக்கு ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அளித்த பேட்டி. அதாவது, “எங்களுக்கு இன்னும் ஏராளமான தரவுகளும், சான்றுகளும் வேண்டும். ஒரு அகழாய்வின் தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு இதுவரை சொல்லப் பட்ட வரலாற்றை மாற்ற முடியாது”. அமைச்சர் எதையும் ஒளிக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. தற்போது கீழடி யில் கிடைத்துள்ள தகவல்களை ஒன்றிய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித் துறை ஏற்றுக்கொண்டால் இதுவரை சொல்லப் பட்டுவந்த வரலாற்றை மாற்ற வேண்டிய திருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதே அமைச்சர் சொல்லும் செய்தி.

ஆய்வை நிறுத்திய  ஒன்றிய அரசு

கீழடி ஆய்வில் ஒவ்வொரு தட்டிலும் கிடைத்த பொருட்களின் தொன்மத்தை யும், சிறப்பையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒன்றிய அரசு அகழாய்வை அப்படியே கைவிட முயற்சித்தது. அக ழாய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்க வில்லை, கிடைத்த பொருட்களுக்கு எவ்வித வரலாற்று முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி ராம கிருஷ்ணனை மாற்றி விட்டு ஆய்வை அப்படியே நிறுத்தியது. இந்திய நாட்டின் தொன்மை நாகரிகப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அறிவியல் சார்ந்து ஆய்ந்து தெரிவிக்கும் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொல்லியல் துறை தனது சிறப்பான செயல்பாட்டால் உலகம் முழுமையும் பாராட்டுகளைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால் மோடி அரசு பதவியேற்ற பின்னர் ஆர்எஸ்எஸ் இயக்கம் சொல்கின்ற வலதுசாரி (வர லாற்று) நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தங்களது செயல்பாடுகளை வைத்துக் கொள்வதுதான் இன்றைய தொல்லியல் துறையின் பணி என்று அந்த துறையில் அனுபவம் பெற்ற சிலர் சொல்வதை கவனிக்க வேண்டியுள்ளது. இதிகாசங்களை வரலாறாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் தொல்லி யல் ஆய்வு துறை துணை போகிறதோ என்ற ஐயத்தை தவிர்க்க முடியவில்லை. கீழடி தகவல்களுக்கு அறிவியல் பூர்வமான தகவல்களும் சான்றுகளும் இல்லை என்று சொல்கின்ற அமைச்சர் ஷெகாவத், உத்தரப்பிரதேசம் சின்னா லியில் நடந்த ஆய்வுகளைப் பற்றி தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு என்ன அறிவியல் ஆதாரங்கள் உள்ளன என்று சொல் வாரா? அங்கே கிடைத்த பொருட்களை வைத்துக் கொண்டு துறையின் ஆய்வா ளர்கள் அங்கே ஒரு தொன்மையான இந்து நாகரிகம் இருந்ததாக கட்டமைத்து உள்ளார்கள்.ஆனால் உண்மையில் கிடைத்த பொருட்கள், வெளியிடப்பட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட செய்தி களுக்கு எதிர் மாறான கண்டுபிடிப்புகளை ஊர்ஜிதப்படுத்துகின்றன என்று நடு நிலையான - உலகம் போற்றும் வர லாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஆய்வுகளை வளைப்பதற்கு எடுத்துக்காட்டுகள்

சம்பல், ஞானவாபி பள்ளிவாசல்க ளில் நடந்த ஆய்வுகளும், பிரதமரின் சொந்த ஊரான வாட் நகரில் நடந்த ஆய்வுகளும் தொல்லியல் துறை ஆய்வு களை ஒன்றிய அரசு விரும்பியபடி எப்படி யெல்லாம் வளைக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் என்று பெயர்களை சொல்ல விரும்பாத தொல்லியல் துறை யின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின் றனர். 2003 ஆம் ஆண்டில் தொல்லியல் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் ஆக பணியாற்றிய பி.ஆர்.மணி எனும் அதிகாரி பாபர் மசூதிக்கு கீழே பத்தா வது நூற்றாண்டைச் சார்ந்த ஒரு இந்து ஆலயம் போன்ற கட்டுமா னங்கள் இருக்கின்றன என்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். பாபர் மசூதி சம்பந்தப்பட்ட உச்ச நீதி மன்ற வழக்கின் தீர்ப்புக்கு அந்த அறிக் கையே அடிப்படையாகக் காட்டப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவரை மோடி அரசு தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமித்து கைம்மாறு செய்தது. பாபர் மசூதி சம் பந்தப்பட்ட ஆய்வறிக்கைக்கான அங்கீ காரம் தான் அந்த பதவி என்று அப் போது பரவலாக பேசப்பட்டது.  அமர்நாத் ராமகிருஷ்ணா தொல்லி யல் துறையில் நீண்ட, நிறைந்த அனுபவம் பெற்ற ஆராய்ச்சியாளர். தொல்லியல் துறையில் அகில இந்திய அளவில் பல களங்களில் பணியாற்றியவர். அப்ப டிப்பட்ட தகுதியுடைய ஒருவர் எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் உலகமே உற்று கவனித்துக் கொண்டி ருக்கும் ஒரு அகழாய்வு பற்றி தரமற்ற  ஓர் ஆய்வறிக்கையினை சமர்ப்பித்துள் ளார் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? அப்படி ஒரு தரமற்ற அறிக்கை யினை அவர் அரசுக்கு தரவேண்டிய அவ சியம் என்ன? தொல்லியல் துறையில் நடந்த பல்வேறு ஆய்வுகளுக்கு என்ன விதி முறைகளும்,வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டனவோ அதே நடை முறைகளை பின்பற்றித் தான் தனது அறிக் கையினை அவர் சமர்ப்பித்துள்ளார்.

அரிய பொருட்களும்  ஆய்வு முடிவுகளும்

அகழ்வாய்வுக்காக வரையறுக் கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் 4% நிலத்தில்  மட்டுமே தற்போது ஆய்வு மேற்கொள் ளப்பட்டுள்ளது. 90மீட்டர் நீளமும் 60மீட்டர் அகலமும் உள்ள நிலப்பரப்பில் இதுவரை 13000 பழம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தந்தம், தங்கம்,கண்ணாடி,தாயக்கட்டங்கள், சுட்ட மண் பாத்திரங்கள், ஓடுகளில் எழு தப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், பாசி  மணிகள், தாமிர நாணயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிணறுகள், வடி கால் அமைப்புகள் என்று “வளமான தொழிலும், வணிகமும் செழித்து வளர்ந்திருந்த ஒரு நாகரிக சமூகத்திற்கு” அடையாளங்களாக இருக்கும் அத்தனை பொருட்களும் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கரிம பகுப்பாய்வு பரிசோதனைகளுக்கு உல கின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்க ளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு செய் யப்பட்டு ஆய்வறிக்கைகள் பெறப்பட்டுள் ளன. சில பொருட்களை பகுப்பாய்வு செய்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான பீட்டா அனெலிட்டிக்ஸ் நிறுவனம் சம் பந்தப்பட்ட பொருட்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று சான்றி தழ் தந்துள்ளது.  இது தவிர சிகாகோவின் ஃபீல்டு மியூசி யம், பூனாவின் ஆகர்கார் ஆராய்ச்சி நிறுவனம், ஹார்வர்டு பல்கலைக் கழகம், இத்தாலியின் பைஸா பல்கலைக்கழகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச் சேரி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடிஸ் பெங்களூரு போன்ற பல சர்வதேச, தேசிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் மூலமாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்கு சந்தேகங்கள் இருப்பின் பகுப்பாய்வு செய்த அந்த நிறுவனங்களிடமிருந்தே தெளிவுகளைப் பெற்றிருக்க முடியும்.  எதையும் செய்யாமல் அறிக்கை யினை வாங்கி வைத்துக் கொண்டு இரண்டு வருடங்கள் தூங்கிய தொல்லி யல் துறை, நீதிமன்றங்களின் உத்தரவு களுக்கும், நாடாளுமன்றத்தில் எழுப் பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் அறிக்கை முழுமையாக இல்லை என்று சொல்லி தப்பிக்க நினைப்பது கண்டனத்திற்குரியது. உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறு வனங்கள் தரக்கூடிய சான்றுகளை ஏற்க மறுக்கும் தொல்லியல் துறை, சில முக்கியமான ஆய்வுகளில் தந்த அறிக்கைகள்  சர்வதேச தொல்லியல் ஆய்வர்களையே அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை எந்த ஆதாரத்தில் தந்தது?

நமது பிரதமரின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை செய்த  ஆய்வுக்கும் அவர்கள் தந்த அறிக்கைக் கும் என்ன அறிவியல் ஆதாரம் என்பது யாருக்கும் தெரியாது. பள்ளிவாசலுக் குள் தொழுகைக்கு செல்லுமுன்னர் இஸ்லாமியர்கள் தங்களை ஒடுக்கம் செய்துகொள்ளும் இடமான “வாசு கானா” பகுதிக்குள் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் ஆய்வர்களைத் தடை  செய்துவிட்டது. தொழுகை நடக்கும் பகுதிகளில் தரையைத் தோண்டக்கூடாது என்றும் தடைவிதித்துவிட்டது. பூமிக்கு மேலே வைத்து பார்க்கும் நவீன ஸ்கேன் கருவிகள் மூலம் கண்டதாக ஒரு அறிக்கையினை நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்தது. அதில் “தொல்லியல் துறை, ஞானவாபி பள்ளிவாசல் கட்டிடத்திற்குக் கீழே இடிந்த நிலையில் ஒரு  இந்து கோவி லையும் சிலைகளையும் கண்டதாகவும், அது 17ஆவது நூற்றாண்டில் மொகலாய மன்னர் ஔரங்கசீப்  ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்டிருப்பதைப்போல தெரிகி றது என்றும், சில இடங்களில் கோவிலின் பகுதிகளையே பள்ளிவாசலாக மாற்றி யுள்ளனர் என்றும் அறிக்கை தாக்கல் செய்தது. 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று சொல்ல எந்த கரிமப் பகுப்பாய்வும் நடந்ததாகத் தெரியவில்லை. ஔரங்க சீப் காலத்தில் இடிக்கப்பட்டது என்று சொல்ல அறிவியல் ஆதாரம் எதையும் தரவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சரியான நேரம் பார்த்து நீதி மன்றத்தில் தொல்லியல் துறை அறிக்கை யினை தாக்கல் செய்துவிட்டு ஊடகங்க ளிலும் பெருமளவில் செய்திகள் வெளி வரும்படி பார்த்துக்கொண்டது. இந்த அறிக்கையால் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதாயம் என்பதை நம்மால் யூகிக்கமுடியும்.

ரிக்வேத, மகாபாரத நிகழ்வுக்கு என்ன  அறிவியல் ஆதாரம்?

மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பத் மாவட்டத்தில் சொனாலி என்ற இடத்தில் தொல்லியல் துறையின் ஆய்வின்போது பழங்கால மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட 100 இடங்க ளைக் கண்டனர். வாள்,வில் அம்பு, பானை ஓடுகள் போன்ற பொருட்களோடு சக்கரம் பொருத்திய ஒரு வண்டி போன்ற ஒரு வாகனமும் கண்டுபிடிக்கப்பட்டன. சஞ்சய் குமார் மஞ்சுல் என்ற தலைமை ஆய்வர் அதனை குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட ரதம் என்றும், இதன் மூலமாக அங்கு ஒரு மாபெரும் ஷத்திரிய வம்சத்தினர் வாழ்ந்திருந்தது தெரிய வரு வதாகவும், ரிக் வேதம் மற்றும் மகா பாரத நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்படு வதாகவும் தெரிவித்தார். அடுத்த நாள் நமது பிரதமர் அந்த அகழாய்வு அறிக்கையினைப் பாராட்டியும் நமது தொன்மையான நாகரிகத்தை வியந்தும் தனது X தளத்தில் பதிவு செய்தார். கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் ஒரு வண்டி யாகவும் இருக்க வாய்ப்பு உண்டு என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குதிரைகள் இருந்ததாக அடையா ளங்கள் கிடைக்கவில்லை. கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களுக்கும் ரிக் வேதத்திற்கும், மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்புக்கு அறிவியல் ஆதாரம் ஏது என்று யாரும் கேட்கவும் இல்லை. அதையெல்லாம் வியந்து பாராட்டுகிற பிரதமருக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் இரும்பை உருக்கும் வித்தை கற்றிருந்தார்கள் என்பதை உலகுக்குச் சொன்ன அறிவியல் பூர்வமான கண்டு பிடிப்பை வியந்து பாராட்ட மனமில்லை.

ஏற்கத் தயாராகாத மனங்கள்

தற்போது சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள, நாட்டின் முக்கிய அருங்காட்சியகமான பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் சிந்து சம வெளிப் பகுதிகளில் நடந்த அக ழாய்வின்போது கிடைத்த பொருட்க ளை “திராவிட நாகரிகத்தின் எச்சங்கள்” என்ற பெயரில் காட்சிப்படுத்தியி ருந்தனர். தற்போது அதனை மாற்றிவிட்டு “அடையாளம் தெரியாத மக்களின் நாகரிக எச்சங்கள் (unknown civili sations)” என்று எழுதி வைத்துள்ளனர். திராவிட நாகரிகத்தையும், அதன் தொன்மையையும் “அவர்கள்” ஏற்றுக் கொள்ளவே தயாராக இல்லை! நமது முதலமைச்சர் சொன்னது போல தவறுகள் அறிக்கையில் இல்லை. “அவர்களது” மனங்களில் இருக் கின்றன.

கதி கலங்கச் செய்யும் யதார்த்தம்  

ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கலாச் சாரம் என்று சொல்லி அரசியல் நடத்தி வரும் அவர்களுக்கு சமஸ்கிருத மரபு மற்றும் ஆரிய நாகரிகம் தவிர வேறு பண்பாட்டுக் கூறுகளை ஏற்க முடிய வில்லை. அவர்கள் கொண்டாடும் வேத கால நாகரிகத்தை விட பலவகைகளில் சிறந்த ஒரு நாகரிகம் வேதகாலத்திற்கு முன்னரே இந்த மண்ணில் செழித் தோங்கியிருந்தது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மை அவர்களிடம் இல்லை. இதிகாசங்களை வரலாறாக கட்டமைக்கும் அவர்களது அரசியல் திட்டங்களுக்கு கீழடி மண் முற்றுப் புள்ளி வைத்துவிடும் என்ற யதார்த்தம் அவர்களை கதிகலங்கச் செய்கிறது. “அவர்களைப்” பற்றிக் கூட நாம் கவலைப்படவில்லை. திராவிடக் கட்சிகள், தமிழ் தேசியம் பேசும் கட்சிகள், தமிழ்ச் சமுதாயத்தை தூக்கி நிறுத்த அவ தானித்திருக்கும் தலைவர்கள் என்றெல்லாம் தங்களை அடையா ளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு இழைக்கப் பட்டுள்ள இப்பெரும் அநீதி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் கள்ள மவுனம் காக்கிற இவர்களை “தமிழர் விரோதி கள்” என்று ஏன் அழைக்கக்கூடாது? எங்கள் ஊர் மொழியில் சொன்னால் கரடி கூட காரித் துப்பும் இவர்களது துரோகத்தை காலம் ஒரு நாளும் மன்னிக்காது!