‘இயற்கை எதிர் நுகர்வியம்’ - கி.ஜெயபாலன்,
1947 முதல் 1989 வரை கம்யூனிச நாடாக இருந்த ருமேனியா 1990 இல் சந்தை பொருளாதாரத்தைத் தழுவியது.நாட்டில் இனிமேல் பாலாறும் தேனாறும் ஓடுமென கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் கொக்கரித்தனர்.அதே வேளையில், வாழ்க்கைத் தரம் முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியைவிட குபீரென உயருமென்ற போலியான எதிர் பார்ப்பை, தொலைக்காட்சிகளின் வணிக விளம்பரங்கள், மக்கள் மனங்களில் நுணுக்கமாக கட்டமைத்தன. அக்காலத்தில் வந்த விளம்பரங்களையே ஒரு கலவை அழகியலாக தொகுத்து (Collage), எவ்வித பின்னணி விளக்கமுமின்றி இதிலுள்ள நுண் அரசியலைச் சாடுவதே “கற்பனை உலகிலிருந்து எட்டு அஞ்சல் அட்டைகள்” என்ற ஆவணப் படம்.
விளம்பரங்களின் உள்ளடக்கத்தை வைத்து படம் எட்டு பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. ருமேனியா வின் வரலாறு என்ற முதல் பாகத்தில் பெப்ஸி,செல் போன்கள்,துரித உணவுகள் போன்றவற்றின் விளம்ப ரங்கள் மூலம்,ருமேனியாவின் வரலாறே கேலிக்குரிய தாகிறது. ரோமானியர்களின் பிரத்யேக உடையில் கால் பந்தாட்ட வீரனாகத் தோன்றும் ஒரு ருமேனியன், கால்பந்தை கொண்டு,பெப்ஸி பாட்டில்கள் நிரம்பிய பெரிய பெட்டகக் கதவை நோக்கி உதைக்கிறான்.பந்து பூட்டை உடைக்கிறது.உடைந்த கதவின் வழியாக ஆயிரக்க ணக்கான பெப்ஸி பாட்டில்கள் ருமேனியா மண்ணில் கொட்டுகின்றன. அடுத்து, ருமேனியாவின் ஒரு பகுதியான மால்டோவை உருவாக்கிய ஸ்டீபன் தி கிரேட்டின் சிலையருகில் நின்று கொண்டிருக்கும் ஒரு ருமேனியன், ஸ்டீபன் தி கிரேட்டின் வாரிசாக தன்னைத்தானே அறிவித்துக் கொள்கி றான். பில்லியன் டாலர் மதிப்புடைய மால்டோவை தனக்குச் சொந்தமானதென, ருமேனியா அரசு மீது வழக்குப் போட வுள்ளதாகவும் கூறுகிறான். அப்போது கேளிக்கை விடுதியில்(City Bingo) சிலியாட்டர் சூதாட்டத்தை விளை யாடுங்கள். பணம் கொட்டும் எனப் பின்னணிக்குரல் கேட்கி றது. மேற்கத்திய பொருட்கள்,பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்ட ருமேனியா தனது வரலாற்று அடையாளத்தை இழப்பதாக இக்காட்சிகள் உணர்த்துகின்றன. கம்யூனிஸ்ட் அதிபர் சீசெஸ்கு, கட்சி மாநாட்டில் பேசுகிற சமயத்தில், ஒருவரின் செல்பேசியில் ரிங் டோன் ஒலிக்கி றது. அதிபரின் பேச்சு தடை படுகிறது. அப்போது, “முதலில் நீங்கள் சுதந்திரமான பேச்சை உறுதிப்படுத்துங்கள்” என்ற விளம்பரக்குரல் கேட்கிறது. அடுத்த காட்சியில் கட்சி யினர் ஆளுக்கொரு செல்பேசியுடன், “ஹலோ, தோழர்!” எனப் பேசியவாறு கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறு கிறார்கள். இது குறிப்பிட்ட செல்பேசிக்கான விளம்பர மாகவும், பேச்சு சுதந்திரத்தினை தோழர்களே முதலா ளித்துவ காலத்தில் தான் அனுபவிப்பதாகவும் கேலி செய்கிறது. விடுமுறையைக் கொண்டாடுவதற்கு வரும் கணவன் தனக்கு, விலையுயர்ந்த கைக்கடிகாரம், தங்க நகை அல்லது வாசனைத் திரவியம் என ஏதேனும் ஒன்றை அன்புப் பரிசாகத் தருவான் என மனைவி எதிர்பார்த்து இருக்கிறாள்.ஆனால் அவளுக்கு வியப்பூட்டும் விதமாக ஒரு கம்பெனியின் மூன்று மில்லியன் லீய் மதிப்புள்ள பங்கு பத்திரங்களைப் பரிசளிக்கிறான். அன்பின் அடையாளமாய் மனதோடு உறவாடும் மரபான பரிசுப்பொருட்கள் பணமதிப்பு சார்ந்த பங்குப் பத்தி ரங்கள் என்ற மூலதனக் கலாச்சாரமாக மாறுவதை இக்காட்சி குறிக்கிறது. பொதுத்துறை,பொது மக்களிடையே பங்கிட்டுக் கொடுக்கப்படும் என்ற பெயரில் தனியார்மயமாக்கப்படு கிறது. கூப்பன் முறையை அரசு அறிமுகப்படுத்துகிறது. “எல்லோருக்கும் சொந்தமானது; உண்மையில் யாருக்கும் சொந்தமானதாக இல்லை.”என்பது விளம்பர வாசகம்.தனியார்மயப் போட்டி தொடங்குகிறது. உங்களுக்கான தனிப்பட்ட கூப்பனைப் பெறுங்கள்.கூப்பனை வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு தொழில் அதிபராகலாமென கவர்ச்சியான பின்னணிக்குரல் ஒலிக்கிறது. கோட் சூட் போட்ட செல்வந்தர்கள் மற்றும் சாதாரணமானவர்கள் பங்கேற்கும் ஓட்டப்பந்தயக் காட்சி கருப்பு வெள்ளையில் வருகிறது.ஓட்ட முடிவில் ஒரு பெருந்தனக்காரனே பரிசை வெல்கிறான். நடைமுறை யில் அனைவரும் தொழில் அதிபர் ஆகலாம் என்ற கனவு கானல்நீராகிறது. சிறு பகுதியினரான செல்வந்தர் களைத் தொழில் முதலாளிகளாக்க எளிய மக்களின் சேமிப்பைக் கைமாற்றிக் கொடுக்கும் ஏமாற்று வித்தையே இது. The Ages of Man பகுதியில் குழந்தைப்பருவம் முதல் முதுமை வரைக்கான பால்பவுடர்,இதய மருந்து, சலவை தூள், பீர், ரேசர், காலணி பாலிஷ் போன்ற விளம்பரங்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்தையும் சந்தைப்படுத்து கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. “மாயஜாலக் கானல்நீர்”(Magical Mirage)என்ற பகுதியில் தேவதைகள், மின்னல், ஒளிரும் பொருட்கள் போன்ற “அற்புத” மாயஜால விளம்பரக் காட்சிகளின் மூலம் புதிய பொருட்களை வாங்குவதால், வாழ்வின் சிக்கல்களி லிருந்து விடுபடலாம் என்று நம்பவைக்கப்படுகிறது. “கண்டுபிடிக்கப்பட்ட கவிதை” பகுதியில் வினோ தமான முழக்கங்கள் மற்றும் ரைம்ஸ்(rhymes) கொண்ட அபத்தமான விளம்பரங்கள் வருகிறது.காட்டாக,”டாங்கே (Danke) பெயிண்ட் அடித்தால் நீங்கள் ஜெர்மனியாராக மாறுவீர்” என்கிறது ஒரு விளம்பரம். ஆண்மை /பெண்மை(Masculine/Feminine)பகுதியில், பீர் குடித்தால் ஆண்மை மிகும் என்றொரு அபத்த விளம்பரம்.பெண்களுக்கான பன்டிகோஸ் (pantyhose),அழகு பொருட்கள் போன்ற விளம்பரங்கள், மேற்கு நாடுகளில் இருந்த பாலியல் பாகுபாடுகளை ருமேனியாவில் எவ்வாறு இறக்குமதி செய்தன என்பதைக் காட்டுகின்றன. “நுகர்வின் உடற்கூறு”பகுதியில் உடற்பூச்சு வாசனை, சலவைத் துணியின் வாசனை,உணவு மணம் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் விளம்பரங்கள் வருகின்றன.இந்த அத்தியாயம் ஒலி இல்லாமல், மௌனப்படமாகவே வருகிறது. வெளியில் மினுமினுப்பாகத் தோன்றும் நுகர்வு கலாச்சாரம் வெறுமையானது என்பதை உணர்த்தவே, மௌனத்தை ஒரு மொழியாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். The Green Apocalypse எனும் இறுதிக் காட்சியில் காடு, மரங்கள், மான், பூனை, நாய், குதிரை, நீர்வீழ்ச்சி, பசுமையான இயற்கைக் காட்சிகள் மட்டுமே காட்டப்படு கின்றன. கடந்த காலத்தில் முதலாளித்துவம் நாடுகளைக் காலனிகளாக்கி அவற்றின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தது. நவீனயுகத்தின் கார்ப்பரேட் மூலதனம் மக்களின் மனோபாவத்தையே அடிமைப் படுத்தி கொள்ளையடிக்கிறது. மிதமிஞ்சிய நுகர்விய வாழ்க்கை உள்ளீடற்றது. அதுவொரு புலனுணர்வுப் போதை. இயற்கையுடன் இயைந்த வாழ்வே நிறைவானது; நிலை யானது; உயிர்ப்பானது என்ற செய்தியைச் சொல்கிறது இக்காட்சி. ராடு ஜூட் மற்றும் தத்துவவாதி கிறிஸ்டியன் பெரென்ஸ்- ஃபிளாட்ஸ் இணைந்து சிறப்பாக இயக்கியுள்ளனர்.ருமேனியாவின் முக்கிய இயக்குநரான ராடு ஜூட், 2023 இல் கிக் தொழிலாளர்களின் பிரச்சனையை பேசிய “Do not expect too much from the end of the world” என்ற விருதுகள் பல வென்ற படத்தை இயக்கியவர். காட லின்கிறிஸ்டியூட்-இன் விறுவிறுப்பான படத்தொகுப்பு. இப்படம் ஸ்விஸ் நாட்டின் லோகர்னோ உள்ளிட்ட உலகின் முக்கியமான 2024 உலகத் திரைப்பட விழாக் களில் பங்கேற்றுள்ளது. முபியில் கிடைக்கிறது.