பட்டினிப் பட்டாள போராட்டத் தலைவர் தோழர் பெரியசாமி
நூற்றாண்டு காணும் மக்கள் போராளி
தமிழ்நாட்டின் வரலாற்றில் பொறிக்கப் பட்ட மிகச் சிறந்த போராட்டங்களுள் ஒன்று கைத்தறி நெசவாளர்களின் பட்டினி பட்டாள பாதயாத்திரை. 1952 அக்டோ பர் 25ல் திருவில்லிபுத்தூரில் இருந்து சென்னை வரை 45 நாட்கள் நடைபெற்ற இந்த வீரச்செய லுக்கு தலைமை தாங்கியவர் தோழர் எஸ். பெரிய சாமி. அவரின் பிறந்த நூற்றாண்டு துவங்கும் இந்த வேளையில், அந்த மாவீரனின் போராட்ட வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியமானது. இளமைக் காலமும் புரட்சி விதையும் 1926 செப்டம்பர் மாதம், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள ராமச்சந்திரா புரம் கிராமத்தில் எளிய கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார் எஸ். பெரியசாமி. 1942 ஆகஸ்ட் மாதம் “வெள்ளையனே வெளி யேறு” போராட்டம் அறிவிக்கப்பட்டபோது, வெறும் 16 வயதில் தனது புரட்சிகர உணர்வை வெளிப்படுத்தினார். சில இளைஞர்களை இணைத்துக்கொண்டு மெயின் ரோட்டில் இருந்த தந்திக் கம்பிகளை வெட்டி எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இளம் வய திலேயே அவரது மனதில் விதைக்கப்பட்ட விடு தலை உணர்வு இதன் மூலம் வெளிப்பட்டது. காங்கிரஸிலிருந்து கம்யூனிசத்திற்கு துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்ட பெரியசாமி, கிராம காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக தேர்வாகி னார். ஒரு நாள் வத்திராயிருப்பில் தோழர் பி. சீனிவாசராவின் பொதுக்கூட்ட உரையைக் கேட்டார். அந்த உரையால் ஈர்க்கப்பட்ட அவர், பின்னர் சீனிவாசராவைச் சந்தித்து உரையாடி யதில் கம்யூனிசத்திற்கு மாறினார். இது அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. வத்திராயிருப்பு பகுதியில் நடைபெற்ற வீரஞ்செறிந்த சுத்த வார போராட்டத்தில் தீவிர மாகப் பங்கேற்றார். 1946ல் வத்திராயிருப்பில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றினார். நாடு விடுதலை அடைந்த பின்பும் தொழிலாளர்கள், விவசாயிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படாத நிலையில் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் போராட்டங்களில் எல்லாம் மிகத் தீவிரமாக பங்கேற்றார். சதி வழக்கில் சிறைவாசம் 1949ல் இராமநாதபுரம் மாவட்ட சதி வழக்கில் 59 பேருள் ஒருவராக சேர்க்கப்பட்டு மதுரை சிறையில் மூன்றரை ஆண்டுகள் அடைக்கப் பட்டார். சிறையில் தோழர்கள் பி. ராமமூர்த்தி போன்ற தலைவர்களின் பேச்சுகளும் அரசியல் வகுப்புகளும் அவரை மேலும் செம்மைப் படுத்தின. பட்டினி பட்டாள போராட்டம் - வரலாற்றுச் சாதனை 1952ல் விடுதலையான பிறகு, கைத்தறி நெசவாளர்கள் நூல் கிடைக்காமல் வேலை யின்றி வறுமையில் தவித்ததைக் கண்ட பெரிய சாமியின் உள்ளம் கொதித்தது. நெசவாளர்களை ஒன்றுதிரட்டி பல போராட்டங்கள் நடத்தினார். 1952 அக்டோபர் 25ல் திருவில்லிபுத்தூரில் இருந்து 103 கைத்தறி நெசவாளர்களுடன் பட்டினி பட்டாள பாதயாத்திரை போராட்டம் துவங்கி யது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த வீரப் போராட்ட த்தின் செல்லும் வழியெல்லாம் விவசாயிகளும் தொழிலாளர்களும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். ராஜாஜியை எதிர்த்த துணிச்சல் சென்னை சென்று அன்றைய முதல்வர் ராஜாஜியை கைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கே.எஸ். பார்த்தசாரதியுடன் சேர்ந்து சந்தித்தபோது, “வேலையில்லை, கடுமை யான வறுமையில் தவிக்கிறோம், வாழ வழி இல்லாத நிலையில் உள்ளோம்” என்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். முதல்வர் ராஜாஜி கோரிக்கைகளை ஏற்க மறுத்து, “வாழ வழி இல்லையெனில் கடலில் குதித்து சாகுங்கள்” என்று கூறினார். அப்போது தோழர் பெரியசாமி எழுந்து நின்று, “நாங்கள் ஏன் சாக வேண்டும்? மக்க ளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியாத அரசாங்கம் நடத்தும் நீங்கள்தான் சாக வேண்டும்” என்று கடுமையாகக் கூறினார். இந்த துணிச்சலான பதில் ராஜாஜியை கோபத்துடன் அங்கிருந்து வெளியேற வைத்தது. வெற்றியின் சுவையும் சாதனையும் பின்னர் சட்டசபை முன் மறியல் நடத்தி கைதானார். தமிழ்நாடு முழுவதும் ஆதரவு போராட்டங்கள் வெடித்தன. இறுதியாக பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டன: - நெசவாளர் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சித் தொட்டிகள் திறப்பு - தேங்கிக் கிடந்த ஜவுளி துணிகள் கொள்முதல் - கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல் வழங்கல் - பண்டிகை காலங்களில் கைத்தறி துணிகளுக்கு ரிபேட் முறை வணிக வாழ்க்கையும் சமூக அக்கறையும் 1957ல் சொந்த ஊர் திரும்பி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதற்கு முன்பு 1953 முதல் 1957 வரை ஐந்து ஆண்டுகள் சென்னை யில் தங்கி தோழர் கே.எஸ். பார்த்தசாரதியுடன் இணைந்து கம்யூனிஸ்ட் இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவற்றில் மூன்று ஆண்டு கள் தாம்பரம் பகுதியின் கட்சி கிளைச் செயலாள ராகவும் செயல்பட்டார். பின்னர் குடும்ப வாழ்க்கையைத் துவங்கி, கும்பகோணம் சென்று ஜவுளி வியாபாரம் துவங்கி னார். படிப்படியாக கும்பகோணம் மற்றும் அரக்கோணத்தில் வளர்ச்சி அடைந்தார். 2002ல் கைத்தறி தொழிலில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டபோது, பட்டினி பட்டாள போராட்டத்தின் பொன்விழா கொண்டாடப் பட்டது. அந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட தோழர் பெரியசாமி, திருவில்லிபுத்தூரில் போரா ட்ட நினைவகம் அமைத்துக் கொடுத்தார். வெண்மணி நினைவகத்திற்கு உதவி செய்தது உட்பட பல்வேறு சமூக சேவை களைத் தொடர்ந்து செய்துவந்த தோழர் பெரியசாமி, 2014 நவம்பர் 21ல் தனது 90வது வயதில் காலமானார். எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, வர லாற்றில் தன் பெயரைப் பொறித்த தோழர் பெரியசாமியின் வாழ்க்கை ஒரு உத்வேகமான கதை. அவரது தியாகமும் துணிச்சலும் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக நிற்கிறது.