articles

img

தென்னை மரமும் பசுமாடும்...

தென்னை மரத்தை பற்றி எழுதச் சொன்னதற்கு ஒரு புத்திசாலி பசுமாட்டை பற்றி பக்கம் பக்கமாக எழுதி விட்டு, இத்தகைய சிறப்பு வாய்ந்த பசுமாட்டை அந்த தென்னை மரத்தில் தான் கட்டி வைப்பார்கள் என்றானாம். அத்தகையதொரு புத்திசாலி(?) தான் பிரதமர் மோடியும்.கோடிக்கணக்கான விவசாயிகள் தில்லியில் திரண்டு வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென போராடிக் கொண்டிருக்க, இவரோ வானொலி வாயிலாக மனதில் குரலில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிப்பவையே என கதாகாலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக அவர் சொல்லும் உதாரணங்களை பாருங்கள். அப்படியே புல்லரிக்கிறது.

வேளாண் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டினாராம் ஒரு விவசாயி. இன்னொருவரோ உள்ளூர் அளவிலான விவசாயிகளை வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் இணைத்து அனைவரது விளை பொருட்களையும் சந்தைப்படுத்த உதவினாராம். இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்ததாம். அது சரி. இத்தகைய தனிப்பட்ட விவசாயிகளின் முன்முயற்சிக்கும், மோடி கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் ? என கேட்டால் அது பனைமரத்துக்கும் பசுமாட்டுக்கும் இடையில் அந்த புத்திசாலி போட்ட முடிச்சின் கதைதான்.

பிரதமர் சொல்வதைப் போல ஒருவேளை உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்கள் தான் இவை எனில்,  மனதில் குரலில் உரைப்பதை விடுத்து, போராடும் விவசாயிகளை  நேரடியாக சந்தித்து அவர் உரையாடலாமே..? தான் கொண்டு வந்துள்ள திருத்தச்சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்க மளிக்கலாமே..? செய்வாரா. ம்ஹூம். அவர் விவசாயிகளை சந்திக்கவும் மாட்டார். விளக்கமளிக்கவும் மாட்டார். ஏனெனில் அவர் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்கள் உண்மையிலேயே  அபத்தங்களும், ஆபத்துகளும் நிறைந்தவையேயாகும்.விவசாயிக்கு ஆங்கிலத்தில் ஃபார்மர் (Farmer) என சொல்லுவோம். அதேபோல ஃபார்மர் (Former) எனும் ஆங்கிலச் சொல்லுக்கும் “முன்னாள்” எனும் அர்த்தம் உண்டு. இவர் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்கள் என்பவை, விவசாயிகளின் நிலங்களை பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்து விட்டு அவரை ஒரு “ஃபார்மர் ஃபார்மராக”  அதாவது முன்னாள் விவசாயியாக மாற்றும் ஆபத்து நிறைந்தவையாகும். ஆகவே தான் வேளாண்  திருத்தச் சட்டங்களை எதிர்த்து உத்வேகத்தோடு கோடிக்கணக்கான விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.  வழக்கமாக பிரதமரின் ‘மனதின் குரலை’ தான் நாடு கேட்கும். இம்முறையேனும்  விவசாயிகளின் ‘மனதின் குரலை’  பிரதமர் கேட்கட்டும். வயிற்றுக்கு சோறிடுகிற விவசாயிகளின் கரங்களோடு கோடிக்கணக் கான மக்களின் கரங்களும் இணையட்டும்.

===ஆர்.பத்ரி==

;