வட்டம்
தோசை பாரு வட்டம் -நிலவின் தோற்றம் அதுபோல் வட்டம். ஆசை மிக்க காசும் -முறுக்கின் அமைப்பும் கூட வட்டம். அம்மா அப்பளம் பொரிப்பாள் - அதன் அமைப்பைப் பாரு வட்டம். அம்மா நெற்றிப் பொட்டு - அது அழகுச் சின்ன வட்டம். அக்கா காதில் வளையம் -அதில் அமைந்தே இருக்கும் வட்டம். தம்பி சக்கரம் விடுவான் -அது தரையில் உருளும் வட்டம். குடத்தின் வாயும் வட்டம் - கோழி கூடை வாயும் வட்டம். இடக்கை வலக்கை வளையல் - அதில் இருந்தே மின்னும் வட்டம். கருவி ழிக்குள் வட்டம் - கடி கார முகமும் வட்டம் உருவில் முற்றுப் புள்ளி -அதில் ஒளிந்தே இருக்கும் வட்டம். சதுரம் உள்ளே இருக்கும் - நீ சரியாய் வரைந்தால் வட்டம். அதிகம் கல்வி கற்றால் - உன்னுள் அமையும் அறிவு வட்டம்.
