பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் நோக்கி பெல்ஜியம்
ஐரோப்பாவின் பல நாடுகள் தங்கள் மக்களின் நிர்பந்தங்களுக்கு அடி பணிந்து பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் பெல்ஜியமும் பாலஸ்தீன அங்கீகாரம் குறித்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இஸ்ரேலின் குடியேறிகள் மற்றும் சில அரசு அதிகாரிகளை இலக்காகக்கொண்டும், ஹமாசை ஒடுக்க வேண்டும், இஸ்ரேலின் பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் கூடியது பெல்ஜியத்தின் அங்கீகார அறிவிப்பு. பெல்ஜியம் தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பீட்டர் மெர்டன்ஸ் (Peter Mertens) அரசு அறிவிப்பு குறித்து ஒரு விமர்சனம் முன்வைத்துள்ளார். அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் அதன் உள்ளடக்கம் ஏமாற்றம் அளிக்கிறது. பாலஸ்தீன மக்களைப் பாதுகாப்பது அரசின் குறிக்கோள் அல்ல. அரசைப் பாதுகாப்பதற்கானது என்று கூறியுள்ளார். முற்போக்குக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து பெல்ஜியம் தொழிலாளர் கட்சி, பெல்ஜியத்திற்கான இஸ்ரேலின் தூதரை வெளியே அனுப்ப வேண்டும், இஸ்ரேலுடன் உறவுகளை பெல்ஜியம் அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என மாதக்கணக்கில் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. ‘காசாவில் மோசமான மனிதாபிமான நிலை’ என பெல்ஜியம் அதிகாரிகள் பொதுவாகக் கூறி வந்த போதிலும், பெல்ஜியம் அரசும் ஐரோப்பிய யூனியனும் (European Union) இஸ்ரேலுக்குத் தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆதரவளித்து வருவதை பெல்ஜியம் தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளது.