articles

img

அறிவிக்கப்படாத அவசரநிலை நடைமுறையில் உள்ளது

அறிவிக்கப்படாத அவசரநிலை நடைமுறையில் உள்ளது

நீதிபதி கே. சந்துரு எச்சரிக்கை 

“இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை நடைமுறையில் உள்ளது. அரசி யலமைப்பு உத்தரவாதமளிக்கும் அடிப்படை உரிமைகள் முறையாகப் பறிக்கப்படுகின்றன” என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18-வது மாநில மாநாட்டில் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய நீதிபதி சந்துரு, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு விபரங்களை முன்வைத்தார்.  கருத்துரிமைக்கு ஆபத்து  “’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று சொல்வதற்கே இன்று நாம் அச்சப்பட வேண்டியுள்ளது. தில்லி  மாணவர் தலைவர் உமர் காலித் ஐந்து ஆண்டுகளாக குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படாமல் சிறையில் உள்ளார். ‘புரட்சி ஓங்குக’ என்ற வார்த்தையை தில்லி உயர்நீதிமன்றம் ஆபத்தான முழக்கம் என்று  கூறியுள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.  ‘புரட்சி’ என்ற வார்த்தையே குற்றமாக்கப்படுவது வேதனையளிக்கிறது என்றார்.  மும்பையில் பாலஸ்தீன போரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, “எங்கேயோ இருக்கும் காசா பிரச்சனையை இங்கு ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று நீதிபதிகள் கேட்டனர். “காரல் மார்க்ஸ் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று சொன்னார். ஆனால் இன்று உலகளாவிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதற்கே தடை” என்று சந்துரு விமர்சித்தார்.   புறக்கணிக்கப்பட்ட பாஜக  2024 தேர்தலில் 400 தொகுதிகள் வெல்வோம் என்று கூறிய மோடி, 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று சிறுபான்மை அரசாக ஆட்சி அமைத்துள்ளார். தமிழக மக்கள் ‘சாக்கோபார்’ என்றே முழக்கமிட்டனர். பீகாரில் 65 லட்சம் வாக்கா ளர்களை பட்டியலில் இருந்து நீக்க முயன்றனர். உச்சநீதிமன்றம் தலையிட்டதால் மட்டுமே தேர்தல் நடக்கிறது.   அடிப்படை உரிமை மீறல்  சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சிஐடியு சங்கம் அமைக்க முயன்றபோது, தமிழக அரசு அங்கீகரிக்க மறுத்தது. “அரசியலமைப்பு 19(1)(c) பிரிவின்படி சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமை. 45 நாட்கள் அவர்கள் போராடி னார்கள் - ஊதியத்திற்காக அல்ல, சங்கம் அமைக்கும் உரிமைக்காக” என்று சந்துரு வலியுறுத்தினார்.  நீதித்துறைக்கு அவமதிப்பு  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், பதவி ஏற்கும்போது ‘ஜெய் பீம்’  என்று கூறிய ஒரே நீதிபதி. மகாராஷ்டிரா வந்தபோது அவரை வரவேற்க காவல்துறை தலைவரோ, தலைமைச் செயலரோ வரவில்லை.  கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறி ஞர் தலைமை நீதிபதியை செருப்பால் தாக்கினார். 75 ஆண்டு வரலாற்றில் இது முதல் முறை. எட்டு நாட்கள் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. அந்த வழக்கறிஞர், “கடவுளின் ஆணைப்படி செய்தேன். சனாதனத்தை எதிர்த்துப் பேசினார்” என்றார். நீதிபதி கேட்டது நியாயமான கேள்விதான்: “காக்கும் கடவுள் விஷ்ணு தன்னைத் தானே பாதுகாக்காமல், நாம் எப்படிப் பாதுகாக்க முடியும்?”   மதச்சார்பின்மை மீது தாக்குதல்  1948-இல் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போதே மதச்சார்பின்மை கொண்ட நாடாக அறிவித்த னர். 1994-இல் 11 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது: “இந்தியா எந்த மதத்தையும் சார்ந்த அரசு அல்ல.”  ஆனால் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி, “அர சியலமைப்பில் மதச்சார்பின்மைக்கு விளக்கமே இல்லை” என்கிறார். திருவள்ளுவருக்கு காவி  பூசுகிறார். உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசினார்: “இது பெரும் பான்மை மக்களின் நாடு. ஏற்காதவர்களுக்கு இங்கு இடமில்லை” என்றார். ஆளுநர் ரவி 12 சட்டங்களை இரண்டு ஆண்டு களாக கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்தார். “நான் ரப்பர் ஸ்டாம்பா?” என்று கேட்டார். உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியது: “ஆமாம், நீங்கள் ரப்பர் ஸ்டாம்புதான்.” ஆனால் ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை.  அரசியல் கைதிகள்  பம்பாய் சிறையில் 15 அறிவுஜீவிகள் 6 ஆண்டு களாக அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை. பாதிரியார் ஸ்டான் சுவாமி 89 வயதில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா கேட்டபோது மறுக்கப்பட்டு, சிறையிலேயே இறந்தார். 45 வருடங்கள் பழங்குடி மக்களுக்காக போராடிய அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் சந்துரு கூறினார்.  எச்சரிக்கை “பாஜக மற்றும் அதன் பின்னால் உள்ள ஆர்எஸ்எஸ் இடமிருந்து இந்த அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும். நாக்பூரில் இருந்து ரிமோட் கண்ட்ரோலில் ஆட்சி நடக்கிறது” என்று நீதிபதி சந்துரு தெளிவாகக் கூறினார்.  “1975 நெருக்கடி நிலை மோசமான காலம். ஆனால் இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது. பிடிக்காதவர்களை எந்தக் காரண மும் இன்றி சிறையில் அடைக்கலாம். இந்த அர சியலமைப்பு நமது பேச்சுரிமையை, கூட்டம் கூடும் உரிமையை, சங்கம் அமைக்கும் உரிமையை அளிக் கிறது. எனவே இதை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும்” என்றார். அரசியலமைப்பைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்களே இன்று அதை ‘புதைக்க’ முயல்கின்றனர். ஜனநாயகத்தைக் காக்க மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது என்று அவர் அழைப்பு விடுத்தார்.