ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுங்கள்!
தமிழக அரசு மின்வாரியத்தில் உள்ள 3 கோடி மின் மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஒன்றிய பாஜக அரசாங்கம் மாநில அரசுகளையும் மின்வாரியங்களையும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நிர்பந்தித்து வருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ற பெயரில் வரும் இந்த திட்டம், உண்மையில் மின் நுகர்வோர்களை கடுமையாக பாதிக்கும் என்பதே உண்மை. நிதிச்சுமையின் கடுமை தமிழகத்தில் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான முழுப்பணியையும் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். மீட்டர் பொருத்துவது முதல் பராமரிப்பு வரை இந்த தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள மீட்டர்களை கழிவு மதிப்புக்கு (Scrap Value )-க்கு கொடுக்க வேண்டி இருக்கும். ஏற்கனவே கடனில் உள்ள மின்வாரியத்திற்கு மேலும் கடன்சுமை அதிகரிக்கும். 3 லட்சம் மீட்டர்களை டோட்டெக்ஸ் - Totex (Total Expenditure) முறையில் பொருத்தினால் ஏற்படும் செலவு சுமார் 475 கோடி ரூபாய். ஒன்றிய அரசின் மானியம் வெறும் 52 கோடி ரூபாய் மட்டுமே. மாநில மின்வாரியத்தின் கடன்சுமை 423 கோடி ரூபாய் அதிகரிக்கும். தமிழகத்தில் 3.40 கோடி மின் இணைப்புகளில் பொருத்தினால் சுமார் 50,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இந்த பணி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிறைவு பெறும். இத னால் டெண்டர் எடுக்கும் தனியார் பெருநிறு வனங்கள் கொள்ளை லாபத்தை அடையும். அதே வேளையில் 3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பில் பொருத்தி பராமரித்து வந்தால் மூலதனச் செலவு (Capital expenditure) முறையில் வெறும் 175 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். இது 300 கோடி ரூபாய் சேமிப்பை ஏற்படுத்தும். பிற மாநிலங்களின் எதிர்ப்பு கேரள அரசு Totex முறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்ததன் விளைவாக இந்திய மின்துறை அமைச்சகம் வேறு வழியை கூறுங்கள் என்று சொன்னதின் அடிப்படையில் மூலதனச் செலவு (Capital Expenditure), முறையை வலியுறுத்தியுள்ளனர். மேற்கு வங்கத்தில் பாஜக கட்சியினரே ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மம்தா அரசு நிறுத்தி வைத்துள்ளது. மக்கள் மீதான கடுமையான பாதிப்புகள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மீட்ட ருக்கான வாடகையை தனியார் நிறுவனத்திற்கு தற்போது மின்வாரியம் செலுத்தும். நாளடை வில் மீட்டர் வாடகையை நுகர்வோர் செலுத்த நேரிடும். 7 ஆண்டுகள் செலுத்தி பின்பு மீட்டர் மாற்றினாலும் நுகர்வோரே செலுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் வசூல் செய்யப்படும். தற்போது வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பயன்ப டுத்தும் மின்சாரத்திற்கு உச்சபட்ச நேரம் என வசூல் செய்யப்பட்டு வருவது, இனி அனைத்து நுகர்வோர்களுக்கும் பொருந்தும் வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10மணி வரை உச்சபட்ச நேரமாக கருதி கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். பெரும்பாலான மக்கள் இந்த நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்துவதால் கூடுதல் கட்டணச்சுமையை மக்கள் சுமக்க நேரிடும். விவசாயிகள் மீதான தாக்கம் விவசாயிகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டுமாம். பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். பின்னர் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடி யாக செலுத்துவார்களாம். விவசாயிகளுக்கும் குடிசைகளுக்கான ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் அனுபவித்து வரும் இலவச மின்சாரம் ரத்தாகும். கைத்தறி, நெசவு ஆகியவற்றிற்கு வழங்கி வருகின்ற மானியம் கேள்விக்குறி யாகும். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறும் மின்நுகர்வோர்களின் எண்ணிக்கை 82 லட்சம். இந்த மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது பிரயோஜனம் இல்லை. மேலும் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரமும் எதிர்காலத்தில் பறிபோகும். வேலைவாய்ப்பு இழப்பு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் கணக்கீட்டு பிரிவு பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவதோடு படித்த தமிழக இளைஞர் களின் அரசு வேலை என்ற கனவு பறிபோகும். மின்வாரிய ஊழியர்களின் நலனை விட சாமானிய மக்களின் நலன் கடுமையாக பாதிக்கும். எனவே தமிழக மின்வாரியத்தில் Totex முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசால் மின்வாரியத்தால் ஸ்மார்ட் மீட்டருக்கான உலகளாவிய ஒப்பந்தத்தை கைவிடுமாறு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் நலன்களை பறிக்கும் இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். சாமானிய மக்களின் பொருளா தார நலனை காக்க வேண்டியது அரசின் கடமையாகும்.