நாட்டில் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் மாநிலம் குற்றப் பிரதேசமாக மாறிவிட்டது. 19 வயதில் கல்லூரிக்குச் சென்ற பட்டியலின மாணவியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து இதனை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவரது நாக்கை வெட்டியும், கழுத்து மற்றும் பெண்ணுறுப்பை சேதப்படுத்தி இரவோடு இரவாக அவரது உடலை எரித்தும் விடுகிறார்கள். ஆனால் அவருக்கு நீதிமன்றம் ‘உயர் சாதியினர்’ இப்படி செய்ய மாட்டார்கள் என விடுதலை வழங்கியது. அதனால்தான் ஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கும் போது ஏன் சாதியை சொல்கிறீர்கள் என சில அறிவு ஜீவிகள் கேட்கிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்தால் குற்றம் சுலபமாக நடக்கிறது. ஆதாரங்கள் சுலபமாக அழிக்கப்படுகிறது. மற்ற சாதிகளில் உள்ள பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை கேட்கும்போது துடிக்கும் நாம், பட்டியல், பழங்குடியின பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிராக பல மடங்கு துடிக்க வேண்டும்.
அப்போதுதான் அந்த மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும். அநீதிக்கு முடிவு கட்ட முடியும். அந்த வகையில் தான் இந்த மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களும் பட்டியல் இன, பழங்குடியின மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறார்கள். கடந்த 1932 ஆம் ஆண்டு தந்தை பெரியார் சோவியத் ரஷ்யாவுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த நிலம், தொழிற்சாலைகள் யாருக்குச் சொந்தம் எனக் கேட்டிருக்கிறார். விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சொந்தம் என கூறியுள்ளனர். இங்கு சாதிய அமைப்புகள் இருக்கா என்று கேட்டபோது, அது என்ன என்று சோவியத் மக்கள் கேட்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் மக்கள் புரட்சி நடந்தால் சாதி, மதம் இருக்காது. சமத்துவம் , சோசலிசம், இருக்கும் இடத்திலும் சாதி இருக்காது. சாதி இருக்கும் இடத்தில் சமத்துவம் இருக்காது. இதுதான் சமூக அறிவியல் உண்மை. இந்த உண்மையை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்வோம்.