காலம் நமக்குக் கதைசொல்லப் போகிறது!
ஓலம் இடாதீர்! உதயம் பிறக்கிறது!
சின்ன அணுவாற் செகத்தை மயக்கிடலாம்
என்ன புதுமை! எலாமும் இயற்றிடலாம்!
பாலை நிலத்தைப் பழனமாய் மாற்றிடலாம்!
சோலை மலர்போற் சுகங்கண்டு போற்றிடலாம்!
வானச் சுடர்போலும் வாழ்வை
வனைந்திடலாம்!
ஞானச் சுடர்மேலும் நாமே புனைந்திடலாம்!
துயரச் சுமையைச் சுழற்றி எறிந்திடலாம்!
புயலை இடரைப் புடைத்து நொறுக்கிடலாம்!
குருட்டைக் கிழித்தெறிந்து கோலச் சுடரால்
இருட்டைக் கிழித்துநாம் இந்திரர் ஆகிடலாம்!
அளத்தற் கரிய அணுவாற்றல் நம்மால்
கிளத்தற் கரிதுகாண்! கீர்த்தி பெரிதுகாண்!
நோய்வென்று வாழ்வின் நொடிவென்று
மண்ணுலகத்
தாய்வென்று வாழும் தருமம் அணுசக்தி!
புத்துலகப் பேராற்றல்! பொங்கும் புதுமைகள்!
அத்தனைக்கும் ஊற்றாய் அமைந்த
அணுவாற்றல்!
பாசி படிந்த பழங்கருக்கல் பேர்ந்துவிழ
ஆசியா, ஐரோப்பா பேதம் அறுந்துவிட
இன்பம், இனிமை இகமே சுகமென்றும்
துன்பம் ஒழிந்து தொலைந்த யுகமென்றும்,
எல்லைப் பிரிவுகளோர் என்மூக்காய் மாறிவிட
இல்லை பிரிவினைகள் “யாதுமூர்; யாவருமே,
கேளிர்” என மாறக் கீழ்நாடும் மேல்நாடும்
தோளிணைந்து நிற்கத் தொழில்வளம்
ஊற்றெடுக்க,
யந்திரம் கொக்கரிக்க ஆலைகள் தாம்சிரிக்க
எந்திரத் தாலே எலாம்நடக்க எங்கெங்கும்
பொய், மடமை, பூதம், புராணம் தலைகவிழ
எய்தஅம்பு போலே இலக்கை அவையெய்த,
காணும் இடமெலாம் கற்பனை ஊற்றெடுக்க
ஆணும் எழிற்பெண்ணும் அன்றே
சமத்துவமாய்,
விஞ்ஞானப் பூங்கா விரித்த மலர்களாய்
அஞ்ஞானம் நீக்கி அடிமைத் தளைபோக்கி,
காணாப் புதுயுகத்தின் காதல் பிறப்பெடுக்க
நாணாப் பழங்கொடுமை, நஞ்சுண்டு
தான்மரிக்க,
ஆலயம் ஆக அணுத்தொழிற் சாலைகள்
வாலைக் குமரிபோல் வாழ்க்கை நமைத்தழுவ,
கையுழைப்பும் கால்உழைப்பும் காட்டடிமை
போல்உழைத்த
மெய்யுழைப்பும் போயொழிய விஞ்ஞானப்
பேரொளியால்
வேலை குறைய விருப்பம் நிறைவெய்த
சாலைதொறும் மக்கட் சதிராடும் நூல்கற்க,
ஆழியைப் போய்நீந்த ஆகாயம் கையேந்த
“வாழிய வையம்! வளர்க அணுவாற்றல்!
சூழிய நன்மை! சுடர்க பொதுவுடைமை!
வீழிய பேதம்! விளைக விடுதலையே!
என்றுமேல் அண்டங்கள் எல்லாம் முழக்கமிட
இன்றுநம் யாத்திரை இன்றே
தொடங்கிவிட்டோம்!
‘திங்களைப் பற்றினோம் செவ்வாயைச்
சுற்றினோம்
பொங்கும் புதன்கண்டோம்! புகன்ற
வியாழனொடு
எங்கும் சுடர்வெள்ளி ஏறும் சனிகண்டோம்!
ஞாயிற்றின் பேரொளியை நாட்கள் பிறக்கின்ற
வாயிலை நாம் கடந்து வான்கதவந்
தான்திறப்போம்!’
என்றே அணுக்கள் இடிக்குரலில் கொக்கரிக்க
இன்றுநம் யாத்திரை இன்றே தொடங்கிற்று!
பூதங்கள் யாவும் புவிப்பொருள் காட்டுகின்ற
நாதங்கள் ஆயின! நாம் மகிழ்ந் தாடுவமே!
[‘ஜனசக்தி’ – 1959இல் வெளிவந்தது]