articles

img

உள்ளூர்களின் உண்மை முகம்! - சி.பாலசந்திரபோஸ்

மே 2 தேதியிட்ட இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.60 சதவீதத்திலிருந்து 7.84 சதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.28  சதவீதத்திலிருந்து 9.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதிலிருந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ என நான்கு முனைகளில் துவங்கி திருச்சியை நோக்கி ஏப்ரல் 21முதல் மே 1 வரை நடத்திய சைக்கிள் பிரச்சாரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரிந்து கொள்ள முடியும். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பவுண்டரியில் வேலை செய்யும் சேகரிடம் பேசியபோது, கட்டுமான பொருட்களினுடைய கடுமையான விலை உயர்வு காரணமாக வேலைவாய்ப்பு பறி போய் வருகிறது எனக் கூறினார். மேலும் ஒரே வருடத்தில் ஒரு கிலோ கம்பியின் விலை 63 ரூபாயிலிருந்து 92 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ காப்பரின் விலை கடந்த ஆறு மாதத்தில் 950 ரூபாயிலிருந்து 1,200 வரை உயர்ந்துள்ளது. இதனால் சிறு, குறு தொழில் நடத்துவோர் ஆர்டர் எடுத்த பின்பு விலை உயர்வு காரணமாக லாபம் குறைந்து அல்லது நஷ்டம் ஏற்படுவதால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் துயரத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இதை நம்பி வாழும் கோயம்புத்தூரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பை அசுரவேகத்தில் இழந்துவருகின்றனர் என்கிறார்.

வீடு கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு முன்பு ரூ.1450 முதல் 1700 வரை இருந்தது. தற்போது ரூ.1800 லிருந்து 2000 ஆக உயர்ந்துள்ளதால் பொறியாளர்கள் தற்போது வீடு கட்ட முன்வருவதில்லை. மேலும் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருள்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு கூலியை மட்டும் கொடுத்தால் போதும், வேலை செய்து தருகிறோம் என்று ஒதுங்குகிற நிலை வந்துவிட்டது. கட்டுமான பொருள்களின் தாறுமாறான விலை உயர்வின் காரணமாக பல லட்சக்கணக்கான பேர் இதில் வேலை இழந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.  திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் சஞ்சய் என்கின்ற சகோதரனைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். பனியன் தொழிலில் ஈடுபடும் அவருக்கு ஒரு பனியனுக்கு 1.50 ரூபாய் மூலம் வாரம் 6000 கிடைத்து வந்திருக்கிறது. இப்போது நூல் விலை உயர்வு காரணமாக கம்பெனி முதலாளி தன்னுடைய லாபத்தை எந்தவிதத்திலும் குறைத்துக் கொள்ள விரும்பாமல் ஒரு பனியனுக்கு ஒரு ரூபாய் முதல் ஒரு ரூபாய் பத்து பைசா வரைதான் தர முடியும் என சொல்கிறார். மறுத்தால் இதே வேலையை செய்ய வெளியில் ஏராளமானோர் வேலையில்லாமல் இருக்கின்றனர். மேலும் பனியன் அயர்னிங் வேலைவாய்ப்பை நம்பி மட்டும் 3 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இவர்களின் வேலையும்  மேலும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவரித்தார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சென்றடைந்தபோது அங்கு இருக்கக்கூடிய மக்கள் காவிரி ஆற்றில் சுற்றி இருக்கக் கூடிய சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தொடர் நடவடிக்கையால் தோல் சார்ந்த எண்ணற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம் எனத் தெரிவித்தனர். விசைத்தறிக்கு பெயர் பெற்ற பள்ளிபாளையத்தில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டியால் நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறியில் ஈடுபட்டுவந்த 30 ஆயிரம் குடும்பங்கள்; அதைச் சார்ந்த இதர பணிகளோடு சேர்த்து 60 ஆயிரம் பேருடைய வேலைவாய்ப்பு, வாழ்க்கையை இழந்து விட்டதாக தெரிவித்தார்கள். இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தி, விசைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு போதுமானதாக இருக்கின்றது. வெறும் 150 ரூபாய்க்கு பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு இறக்குமதி செய்வதற்கு 250 ரூபாய் எனக் கொள்ளையடிக்கின்றனர். இதில் 32 சதவீதம் கூடுதல் வரி காரணமாக விசைத்தறிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா நடந்து வருகிறது என்றும் வேதனையுடன் தெரிவித்தனர். இதேபோன்றுதான் நூல் விலை ஏற்றம் காரணமாக தொழில் நடத்த முடியாமல் சிறு,குறு தொழில் செய்பவர்கள் தங்களது மிஷின்களை உடைத்து விற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி விட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

சைக்கிள் பயணத்தில் ஒவ்வொரு நாளும் பிரச்சாரத்தின் ஊடே மக்களிடையே துண்டுபிரசுரம் கொடுப்பது, நிதி வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். எடப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேருந்தில் வந்த பெண் ஒருவர் உண்டியலில் பணம் போட்டுவிட்டு, கடந்த 15 நாட்களாக வெங்காயம் எடுக்க கூலி வேலைக்காக கேரளா சென்று வந்ததாக கூறினார். நாளொன்றுக்கு 400 ரூபாய் வீதம் கிடைத்தது என தெரிவித்தார். ஏன் உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு கிடைக்க வில்லையா என்று கேட்டதற்கு அது இருந்தால் நான் ஏன் இவ்வளவு தூரம் பயணம் செய்து வேலை செய்து வருகிறேன் என்று வினவினார்.  சேலம் இரும்பாலை அருகே உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே சேலம் இரும்பு ஆலைக்கு 1972 நிலம் கொடுத்த மக்களை சந்திக்க முடிந்தது. ஒவ்வொருவரும் ஒன்றரை ஏக்கர் முதல் ஐந்து ஆறு ஏக்கர் வரை கொடுத்துள்ளோம் என தெரிவித்தனர். தொழிற்சாலை உருவானவுடன் நிலம் கொடுத்த குடும்பங்களுக்கு வேலை கொடுக்கிறோம் என்று சொன்னதை இன்று வரை நிறைவேற்றவில்லை; எங்கள் வறுமையும் கஷ்டங்களும் தீரவில்லை எனத் தெரிவித்தனர். சேலம் இரும்பு ஆலையை விரிவுபடுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறது என்பதை தெரிவித்துவிட்டு தொடர்ந்து தலையீடு செய்வோம் என்று சொல்லிவிட்டு வந்தோம். சேலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று லட்சம் பேர் வேலைவாய்ப்பில் பலனடைந்து வந்த வெள்ளி தொழில் இன்று ஒன்றிய அரசின் வரிவிதிப்புக்  கொள்கைகளாலும், ஆன்லைன் வர்த்தகத்தாலும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என வெள்ளி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற கந்தசாமி, வெங்கடேஷ் ஆகியோர் தெரிவித்தனர். 

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், புதன் சந்தையைச் சுற்றி 500 குடும்பங்கள் உள்ளன. கல் உடைக்கும் தொழில் தான் பிரதான தொழிலாக உள்ளது. விவசாய நிலங்களில் உள்ள கற்களை அகற்றும் போது எடுக்கப்படுகின்ற கற்களை வைத்து கல்லை உடைத்து எடுத்து மிக சொற்ப வருவாயை ஈட்டி வருகின்றனர் உழைப்பாளிகள். ஒரு கல்லுக்கு 14 முதல் 15 ரூபாய் வரை கிடைக்கிறது. விவசாயமும் பெரிதாக இல்லை இதனால் கர்நாடகா,கேரளா போன்ற மாநிலங்களில் வேலைக்காக இடம் பெயர்ந்து வருகிறோம் என வேதனைக்  குரலில் சொல்கின்றனர். அங்கு இருக்கும் பெண்கள் அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு துப்புரவு வேலைக்கு செல்கின்றனர். காலையில் ஒன்பது மணிக்கு சென்றால் மாலை ஐந்தரை மணிவரை இருந்து விட்டு வர வேண்டும். மாதச் சம்பளம் 8000 ரூபாய் மட்டுமே, வேறு வழியில்லை எங்களுக்கு என்று சொல்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு  சராசரியாக  மூன்று கோடி முட்டை உற்பத்தி நடக்கிறது. இந்த முட்டையை பயன்படுத்தி அருகிலேயே முட்டை பவுடர் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. முட்டை உற்பத்தி அதிகமுள்ள மாவட்டம் என்பதால் முட்டை சார்ந்து தொழிற்சாலைகள் உருவாக்கினால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள நிலவரம்.

உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இவர்களின் உழைப்பையும், திறமையையும் முழுமையாக பயன்படுத்திட கொள்கைகளை வகுக்குமாறு ஆட்சியாளர்களை நிர்பந்திக்க களமாடுவோம். உண்மையான மாற்று என்பது இளைஞர்களுக்கான சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பு என்பதை ஊருக்கு சொல்லும் பணியை மேலும் முன்னெடுப்போம்! வெற்றி பெறுவோம்!

;