பேரா.விஜய் பிரசாத் ஏப். 18 -20 தேதிகளில் வெனிசுலா தலைநகர் காரகஸ்ஸில் ‘சமூக மாற்றத்திற்கான உலக சங்கமம்’ நடைபெற்றது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, பொலிவியா முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ், ஹோண்டுரஸ், கியூபா தலைவர்கள் உட்பட உலகம் முழுவதும் இன்று 500க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று, மார்க்சிய அறிஞர் பேரா.விஜய் பிரசாத் ஆற்றிய உரையின் சுருக்கம்:
சீரழிவை நிராகரித்து உறுதியான வாழ்க்கைக்கான வழியாக கம்யூனிஸ்ட்களின் மாற்று திட்டத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பார்க்க வேண்டும். சீரழிவைத் தரும் முதலாளித்துவத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், சோசலிசத்தை தழுவிக்கொள்ளவும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் காட்டுமிராண்டித்தனமானவை. கொடூர மானவை. ஏகாதிபத்தியம் என்ற வார்த்தை எவ்வளவு கொடூர மானது, எவ்வளவு மிருகத்தனமானது, எவ்வளவு காட்டு மிராண்டித்தனமானது. அது எளிய மக்களின் வாழ்க்கை யைப் பற்றி சிந்திக்காதது. தற்போது அந்த ஏகாதி பத்தியத்தால் காசாவில் 15 ஆயிரம் குழந்தைகள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை. மேலும் அதிகாராப்பூர்வ கணக்கைத் தாண்டி 50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மிகை ஏகாதிபத்தியம்
இது தான் ஏகாதிபத்தியத்தின் கொடூரமுகம். நாங்கள் தற்போது ‘மிகை ஏகாதிபத்தியம் (Hyper imperilism)’ என்ற வார்த்தையை பயன்படுத்த துவங்கியுள்ளோம். ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனத்தை, அந்த காட்டு மிராண்டித்தனத்தை குறிப்பிடுவதற்காக இந்த பதத்தை பயன்படுத்துகிறோம்.
75 சதவீதம் ராணுவச் செலவு
அமெரிக்கா தலைமையிலான ‘மிகை ஏகாதிபத்தியம்’ (மிக மிக அதீதமான, மிகக் கொடூரமான ஏகாதிபத்தியம்) என்பது ஆபத்தானது ; அது உலகிற்கு சீரழிவுகளை கொடுத்து வருகிறது. உலகளவில் ராணுவத்திற்காக மட்டுமே அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளி நாடுகளும் 75 சதவீதம் வரை செலவிடுகின்றன. உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, சீனாவும் ரஷ்யாவும் அச்சுறுத்தலை உருவாக்குகின்றன எனக் கூறுகிறார்கள். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இந்த பிரச்சாரத்தில் உண்மை இல்லை. உலக ராணுவச் செலவில் 10 சதவீதம் தான் சீனா செய்கிறது. 75 சதவீதம் வரை செலவு செய்யும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளை விட சீனாவும் ரஷ்யாவும் எப்படி அச்சுறுத்தல் தரும் நாடுகளாக மாறும்? வெனிசுலாவும் கியூபாவும் எப்படி அச்சுறுத்தல் தரும் நாடுகளாக மாறும் ? இந்த உலகத்திற்கு ஒரே ஒரு அச்சுறுத்தல் தான் உள்ளது. அது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாலும் முன்னெடு க்கப்பட்டு வரும் ‘மிகை ஏகாதிபத்தியமே’ ஆகும். இந்த உலகத்தில் உள்ள ஒரே பயங்கரவாதி ‘அமெரிக்க அரசும் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் நெருங்கிய நட்பு நாடுகளும்’ மட்டுமே . அவர்கள் மட்டும் தான் பயங்கரவாதிகள். இன்று நமது பூமி எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலே அவர்கள் தான். அந்த அச்சுறுத்தலின் உச்சக்கட்ட வடிவம்தான் மிகை ஏகாதிபத்தியம்; அதாவது அதிபயங்கர ஏகாதிபத்தியம்.
உலக மக்களின் மதிப்பைப் பெறாத மேற்கத்திய தலைவர்கள்
மேற்கத்திய நாடுகளை வழிநடத்துபவர்களான ஜோ பைடன், ஓலோஃப் ஸ்கோல்ஸ், ரிஷி சுனக், இமானுவேல் மேக்ரான் ஆகியோரில் ஒருவர் கூட உலக மக்களின் மதிப்பைப் பெற்றதில்லை. அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொண்ட இந்த நாடுகளால் ஒரு அறிவார்ந்த சிறந்த தலைவரைக் கூட உருவாக்க முடியவில்லையே, ஏன்? பாரிஸ் கம்யூன் அமைத்து புகழ்பெற்ற நாடு பிரான்ஸ். பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற நாடு பிரான்ஸ். அது மட்டுமல்ல, ஜீன் பால் சார்ட் போன்ற தத்துவவாதிகள் உருவான நாடு. அது எப்படி இம்மானுவேல் மேக்ரானை உருவாக்கியது? பிரான்ஸ் உள்ளிட்ட அத்தகைய ஐரோப்பா, இப்போது தத்துவவாதிகளை உருவாக்க வில்லை. இன்று ஜெர்மனியில் ஹெகல் இல்லை. பிரான்சில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட உண்மையான அறிவுஜீவிகள் யாரும் உருவாக்கப்படவில்லை.
முதலாளித்துவத்தில் ஆக்கப்பூர்வ திட்டம் இல்லை
ஏனென்றால் அவர்களிடம் ஆக்கப்பூர்வமான ஒரு திட்டம் கூட இல்லை என்பதுதான் பிரச்சனை. அவர்கள் மனிதகுலத்தின் இயக்கவியலைப் புரிந்து கொள்ளவில்லை. மக்களின் வறுமையை எப்படிப் போக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குப் புரியவில்லை - நம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க அல்லது உலகிற்கு உதவும் எந்த ஒரு உண்மையான திட்டமும் அவர்களிடம் இல்லை. கொரோனா பரவிய போது உலகளாவிய வடக்கு நாடுகளின் முழுமையான சரிவை நாங்கள் கண்டோம். கொரோனா தொற்றுநோய்க்கு முன் 2008 ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் நீண்ட கால பிரச்சனையில் இருந்து அவர்கள் மீளவில்லை. வீடற்ற நிலை , இனவெறி, தன்பாலினத்தவர்களின் உரிமை என பலரும் உரிமை களுக்காக போராடுவதைப் பார்க்கிறோம். ஆயினும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க ஏகாதிபத்திய சக்திகளிடம் எந்த திட்டமும் இல்லை, யோசனைகளும் இல்லை. அதி பயங்கர ஏகாதிபத்தியம் மிக ஆபத்தானது. அவர்கள் இனி மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை உருவாக்க மாட்டார்கள். மாறாக அவற்றை எப்படி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். அவர்களால் மக்களின் வளர்ச்சியை அழிக்க முடியுமே தவிர, அதை எப்படி உருவாக்குவது எனத் தெரியாது. மக்களின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை உருவாக்கும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு பள்ளிக் கூடங்களை கட்டுவதென்றால் என்னவென்று தெரியவில்லை. கல்வி என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியவில்லை. சுகாதாரம் என்றால் என்னவென்று புரியவில்லை.
நாம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்
உங்களுக்கான வாழ்க்கையை தான் நீங்கள் அனுபவித்துக்கொண்டு உள்ளீர்கள் என உலகை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். சிக்கனம் என்ற பெயரில் பல மக்கள் நல திட்டங்களுக்கான நிதியை வெட்டி வருகிறார்கள். மக்களுக்கான எந்தத் திட்டமும் இல்லாத சூழலில் தான் வலதுசாரி இயக்கங்கள் வளர்கின்றன. மக்களை நம்புபவர்களாக, எதிர்காலம் சாத்தியம் என்று நம்புபவர்களாக உள்ள இடதுசாரிகளாகிய நாம் முதலாளித்துவத்தின் மீதான விமர்சனத்தோடு மட்டும் நின்று விடக்கூடாது. உலகம் முழுவதும் மிகப்பெரிய இயக்கத்தை நாம் உருவாக்க விரும்பினால் நம்மிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையை நாம் உணர வேண்டும். எதிர்காலத்திற்கான நமது திட்டத்தில் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
சோஷலிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பதிலடி
சோசலிசம் சாத்தியம் என்பதோடு அதுதான் அவசிய மானது என மக்கள் ஏற்க வேண்டும். இன்னொரு உலகம் சாத்தியம் என்று சொன்னால் மட்டும் போதாது; சோசலிசத்தின் அவசியத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். நாம் போராட வேண்டியது அதற்காகத் தான். சோசலிசம் சாத்தியமில்லை என்று பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். “சோசலிசம் என்பது நல்ல யோசனை தான், ஆனால் அது சாத்தியமில்லை” என்று கூறுபவர்களும் உள்ளார்கள். சோவியத் யூனியன் அமைந்தது, அது இப்போது எங்கே இருக்கிறது; சோசலிசத்தை காகிதத்தில் வேண்டுமானால் நன்றாக பதிவு செய்யலாம்; அனால் நீங்கள் அதை உலகில் அமைக்க முடியாது எனவும் கூறுகிறார்கள். இந்த சோசலிச எதிர்ப்பு பிரச்சாரத்தை உடைப்பது கடினமல்ல. நாம் நமது உறுதியான திட்டத்துடன் மக்களி டையே செல்ல வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை சோசலிச அரசு எவ்வாறு உருவாக்கும்; மக்களுக்கு எப்படி கொண்டு செல்லும் என்பதை நாம் மக்களுக்கு உணர்த்த வேண்டும்; அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். முதலாளித்துவம் உருவாக்கிய பல நூற்றாண்டு காலப் பிரச்சனைகளை, தனியார் சொத்துடைமைகளால் தீர்க்க முடியவில்லை. கல்வி ஏற்றத்தாழ்வு, சுகாதார ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் முதலாளித்துவத்தில் மரபுவழியாக வந்து கொண்டே உள்ள பிரச்சனைகளாகும். ஆனால் முதலாளித்துவத்துக்கு அந்த பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை.
தெளிவான திட்டம் கம்யூனிஸ்ட்டுகளிடம் உள்ளது
முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட - சரி செய்ய முடியாத பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது கம்யூனிஸ்டுகளுக்கு தெரியும். கம்யூனிஸ்டுகளிடம் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தெளிவான திட்டம் உள்ளது. உங்கள் ஸமாநாட்டு] பையில் என்ன இருக்கிறது? அதில் உள்ள ஆவணம் சமூக மாற்றத்திற்கான திட்டத்தை முன்வைக்கிறது. மக்களின் வளர்ச்சிக்கான பல்வேறு அம்சங்களைக் கொண்ட உறுதியான மாற்றுத்திட்டம்.
சோசலிசத்தை இப்போதே துவங்கலாம்
முதலாளித்துவம் இருக்கும் போது நீங்கள் சோசலிசத்தை உருவாக்க முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். அது உண்மை இல்லை. நீங்கள் இப்போது கூட சோசலிசத்தை துவங்கலாம். உண்மையில் மக்கள் ஏற்கனவே சோஷலிசத்தில் வாழ்ந்துள்ளனர். அது சோவியத் யூனியன். சோவியத்தில் அவர்கள் சோச லிசத்தை உருவாக்கினர். அங்கு குடும்பம் நடத்த அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மோசமான சுகாதாரமற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை இல்லை. அனைத்து மக்களுக்கும் வீடு இருந்தது. சோவியத் யூனியன் இருந்த 70 ஆண்டுகால வரலாற்றில் பெரிய அளவு சாதனைகளை செய்திருந்தது. கியூபப் புரட்சி அனைவருக்கும் கல்வி கொடுத்தது. சீனப் புரட்சி முழுமையாக மக்களின் வறுமையை போக்கியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். சீனா முழுமையாக வறுமையை போக்கியுள்ளது. இது சோசலிசத்தை உருவாக்குகிற செயல்பாட்டில் தான் நடந்துள்ளது. இந்த சோசலிசப் பாதை தான் மக்களுக்கு வீடுகளை வழங்கி உதவியது. அது தான் கொரோனா தொற்றுநோயை வெல்ல அவர்களுக்கு உதவியது.
நமக்கு எதிர்காலம் உண்டு
மக்களிடம் சென்று, எதிர்காலம் இருக்கிறது; உங்கள் குழந்தைகள் கல்வி கற்க வாய்ப்பற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை; உங்கள் பெற்றோர்கள் மற்றும் உங்கள் பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் போதிய மருத்துவ வசதிகள் இன்றியோ, சுகாதார பராமரிப்பு இன்றியோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை; பணக்காரர்களும் அவர்களின் பணமும் நமது மக்களின் வாழ்க்கையை துன்பப்படுத்துவது இனி தேவையில்லை; முதலாளித்துவத்தில் ஆரோக்கியம் இல்லை என்ற பிரச்சாரத்தை மேற்கொள்வோம். நமது மாநாட்டு ஆவணத்தைப் பார்த்து உலகில் இரண்டு சக்திகள் உள்ளன என்று மக்கள் புரிந்துகொள்வார்கள். நிச்சயமாக முதலாளித்துவம் என்ற அழிவின் சக்தி நமக்குத் தேவையில்லை. முதலாளித்துவத்திடம் இருப்பதெல்லாம் குண்டுகள், மிரட்டல்கள் , பொருளாதாரத் தடைகள், கட்டாயமான சட்ட விரோத நடவடிக்கைகள் மட்டுமே. அவர்கள் ஆபத்தான வர்கள், அவர்களின் அழிவு கொள்கைகள் நமக்குத் தேவையில்லை. சீரழிவை நிராகரித்து உறுதியான வாழ்க்கைக்கான வழியாக கம்யூனிஸ்ட்களின் மாற்று திட்டத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பார்க்க வேண்டும். சீரழிவைத் தரும் முதலாளித்துவத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், சோசலிசத்தை தழுவிக்கொள்ளவும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சோசலிசம் அல்லது அழிவு
தோழர்களே, நமக்கு இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், மார்க்சும் ஏங்கெல்சும் எழுதினார்கள்: ஒன்று நாம் சோசலிசத்திற்கு முன்னேறுவோம் அல்லது வர்க்கங்களின் போட்டியில் அழிவை சந்திக்க நேரிடும். இன்றைய உலகத்தைப் பார்த்தால், அது ஒரு இடிந்த கட்டிடம் போல தெரிகிறது. காசா அத்தகைய இடிபாடுகளில் உள்ள ஒரு இடம். காசாவில் மட்டும் 2.8 கோடி டன் குப்பைகள் உருவாகியுள்ளது. அந்த குப்பைகளை எல்லாம் மத்திய தரைக்கடலில் போட்டால், நீங்கள் ஒரு புதிய காசாவையே உருவாக்கலாம். அந்த அளவுக்கு இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் பாலஸ்தீனர்களின் சொத்துக்கள் குப்பைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதற்கு காரணம் அதி பயங்கர ஏகாதிபத்தியம். அழிவுகளை உருவாக்குவது மட்டும் தான் ‘அதி பயங்கர ஏகாதிபத்தியத்திற்கு’ தெரியும். உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அந்த அதி பயங்கர மிகை ஏகாதிபத்தியத்தை நிராகரிக்க வேண்டும் என்றால், நமது மக்கள் அந்த மிகை ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட மக்கள் அதிபயங்கர ஏகாதிபத்தியத்தில் இருந்து வெளியேற நினைத்தால் அதற்கு சரியான மாற்றுத் திட்டம் வேண்டும். அதுதான் நமது தோழர்கள் கூறும் சோசலிசம். அதற்கான ஆக்கப்பூர்வ வழிமுறைகளை உருவாக்கி உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனதிலே இந்த மாற்றுத்திட்டத்தை கொண்டு சென்று உலகத்தை காப்பாற்றுவோம்!
- தமிழில் சுருக்கம் : சேது சிவன்