articles

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் செய்தித்தாள் ‘வான்கார்டு’ நூற்றாண்டு- ஸ்ரீகுமார் சேகர்

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் செய்தித்தாள் ‘வான்கார்ட் (Vanguard)’ வெளியாகி ஞாயிறன்று (மே 15) நூறு ஆண்டு கள் நிறைவடைந்தது. 3 ஆண்டுகள் பல பெயர்களில் புரட்சிகரச் செய்தியைப்  பரப்பிய வான்கார்ட் பற்றி 1922 ஜூலை 18 இல் வங்காளத்தின் தலைமைச் செயலாளரால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின்  உள்துறைச் செயலர் எஸ்.பி.ஓ.  டொனால்டுக்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கை, ஜூலை  1922 முதல் பாதியில் வங்கத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலையை விவரிக்கிறது: “வான்கார்ட் ஆப் இந்தியன் இன்டிபென்டன்ஸ்” என்கிற செய்தித்தாளின் மூன்று இதழ்கள் இதுவரை வங்காளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர கம்யூனிசக் கண்ணோட்டத்தைக் கொண்ட இந்த செய்தித் தாள் பெர்லினில் இருந்து வெளியாகிறது. இந்தியாவில் புரட்சியைப் பரப்புவதே அவர்களின் நோக்கம். இந்தி யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செய்தித்தாளின் ‘பிறப்பை’ அறிவிக்கும் இந்த செய்தியில் மேலும் பல விசயங்கள் எழுதப்பட்டுள்ளன

‘புரட்சிக்காக மக்கள் என்பதல்ல; மக்களுக்காக புரட்சி’  என்கிற முழக்கத்துடன்  ஒவ்வொரு இதழும் வருகிறது.  மூன்றாவது இதழில் சந்தாதாரர்களை சேர்க்க வேண்டு கோள் விடுக்கப்பட்டு உள்ளது. சந்தாதாரர்களாகும் வாய்ப்புள்ள சிலரது பெயர்களும் செய்தித் தாளுடன்  இணைக்கப்பட்டிருந்தது’’ - இவ்வாறு தெரிவிக்கப் பட்டிருந்தது. சரியாக 100 வருடங்களுக்கு முன்பு, 1922 மே 15 அன்று வான்கார்ட் முதல் இதழ் வெளியிடப்பட்டது. இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ வெளி யீடாகக் கருதப்படும் இந்த செய்தித்தாள் குறித்த  எச்சரிக்கைகளை அந்த மாத பம்பாய் மற்றும் மெட்ராஸ் தலைமைச் செயலாளர்களின் அறிக்கையிலும் காண லாம்.

நாட்டில் கம்யூனிசத்தைப் பரப்ப போல்ஷிவிக் ரஷ்யாவின் துணையுடன் ஐரோப்பாவின் பல்வேறு பகுதி களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் முயற்சி யை தொடங்கினர் என்பதை பத்திரிகையின் வருகை நிரூ பித்தது. இதனை ஆங்கிலேய அரசு சரியாக ஒப்புக் கொண்டது. செய்தித்தாளின் பின்னால் இருந்த முக்கிய நபரையும் கண்டுபிடித்தனர். அவர் மானவேந்திரநாத் ராய் என்கிற எம்.என்.ராய். மே 15, 1922 இல் பெர்லினில் முதல் இதழ் வெளியிடப் பட்டாலும், பாரீஸ், லண்டன், ஜூரிச் மற்றும் ரோம்  நகரங்களின் பெயர்களும் முதல் பக்கத்தில் அச்சிடப் பட்டன. பின்னர் இந்த நகரங்களில் எல்லாம் அடிக்கடி அச்சிடப்பட்டது. சோவியத் யூனியனின் தாஷ்கண்டில் 1920 அக்டோபர் 17, அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முதல் கிளை உருவாக்கப்பட்டு ஒன்றரை ஆண்டு களுக்குப் பிறகு, எம்.என்.ராய் அவர்களால் வான்கார்ட் பத்திரிகை தொடங்கப்பட்டது. அப்போது ரஷ்யப் புரட்சி நடந்து ஐந்து வருடங்கள்தான் ஆகியிருந்தது.

3 நம்பிக்கையாளர்கள்

1921 முதல், ராய் கம்யூனிச இலக்கியங்களை இந்தியா விற்கு கொண்டு வரத் தொடங்கினார். புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் என பல ஆவணங்கள் இங்கு கொண்டு வரப்பட்டன. இவை தபால் மூலமாகவும், பல்வேறு துறை முகங்களுக்கு வரும் கப்பல்களின் பணியாளர்கள் மூலமாகவும் வரத் தொடங்கின. சிலர் பிடிபட்டனர். உளவுத்துறை உஷார் நிலையில் இருந்தது. கம்யூ னிஸ்டுகள் நாட்டிற்கு இலக்கியங்களையும் ஆயுதங்களை யும் கடத்துகிறார்கள் என்ற அறிகுறிகளால் ஆங்கிலேய அரசு பீதியடைந்தது. இதுகுறித்த எச்சரிக்கைகளும் ரகசிய  குறிப்புகளும் தேசிய ஆவணக் காப்பகத்தில் ஏராள மாக உள்ளன. எம்.என்.ராய் புரட்சியின் செய்தியை இந்தியாவிற்கு கொண்டு வர நம்பகமான வழிகளைத் தேடினார். பத்திரிகை  வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. இதனால் பெர்லினில் வாரம் இருமுறை ‘வான்கார்ட் ஆப் இந்தியன் இன்டி பென்டன்ஸ்’(இந்திய சுதந்திரத்தின் முன்னணிப் போராளி) அச்சிடப்பட்டது. ஆரம்ப இதழ்களில் இது கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடாக குறிப்பிடப்படவில்லை. பல கட்டுரை களை எம்.என்.ராயும் அவரது மனைவியும் அமெரிக்க கம்யூ னிஸ்ட்டுமான ஏவ்லின் ராயும் எழுதினர். இதற்கு முன்பு சாந்தா தேவி என்ற புனைப்பெயரில் ஏவ்லின் இந்திய வெளியீடுகளில் எழுதியுள்ளார். செய்தித்தாள் சர்வதேச கம்யூனிஸ்ட் ஆவணங்களையும் கொண்டிருந்தது. இந்தியாவில் செய்தித்தாளின் விளம்பரதாரர்களாக மூன்று விசுவாசிகளை ராய் இறுதியில் கண்டறிந்தார். பிற்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய முசாபர் அகமது ஒருவர். அப்போது அவர் வங்காளத்தில் ‘நவயுக்’ என்ற மாலைப் பத்திரிகை யைத் தொடங்கியிருந்தார். மற்றொருவர் ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரான எஸ்.ஏ.டாங்கே. இவர் அப்போது மும்பையில் ‘சோசலிஸ்ட்’ என்கிற பத்திரிகை யின் வெளியீட்டாளராக இருந்தார். மூன்றாவது நபர் ம.சிங்காரவேலு செட்டியார். அவர் தன்னை ஒரு சுய கம்யூனிஸ்ட் என்று அறிவித்து பல தொழிற்சங்கங்களை உருவாக்கினார். 1923 இல், அவர் இந்தியாவில் முதல் மே தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தார்.

காங்கிரஸில் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’

இதற்கிடையில், 1921 அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும், 1922 கயா மாநாட்டிலும் கம்யூ னிஸ்ட் குரல் ஓங்கி ஒலித்தது. அதற்குப் பின்னால் எம்.என்.ராய் இருந்தார். முதன்முறையாக இந்தியாவுக்கான ‘பூர்ண  ஸ்வராஜ் (முழு விடுதலை)’ கோரிக்கையை எழுப்பி, காங்கிரஸ் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் அதை நிராகரித்தது. ஆனால், பின்னர் அந்த முழக்கத்தை ஏற்க வேண்டியதாயிற்று. அந்த அறிக்கையை எம்.என்.ராய் தயாரித்தார். அவர் இந்தியாவுக்கு வழங்கிய ஆவணத்தை காங்கிரஸ் கூட்டங்களில் மவுலானா ஹஸ்ரத் மொஹானி மற்றும் சுவாமி குமாரானந்தா ஆகியோர் வழங்கினர். இருவரும் காங்கிரசுக்குள் செயல்பட்ட சோசலிச சிந்தனையாளர்கள். இந்த அறிக்கை வான்கார்டில் வெளியிடப்பட்டது. இந்த  ஆவணம் அடங்கிய வான்கார்டு இந்தியாவை வந்தடையும்  என காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வழி யெங்கும் தடுக்க முயன்றனர். ஆனால் இந்த நடவடிக்கை  லண்டனிலேயே கைவிடப்பட்டது. வான்கார்டில் சேர்க்கப்பட்ட இந்த ஆவணம், பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வயர் சேவை மூலம் இந்திய செய்தித்தாள்களுக்கு கிட்டத்தட்ட முழுமையாக கசிந்தது. அதை வங்கத்தின் அம்ருத் பஜார் பத்திரிகை முழுமையாக அச்சிட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட ஆவணத்தின் உள்ளடக்கம் வெளியிடப்பட்டது.

தபால் நிலையத்தில் போலீஸ்

பத்திரிகையை முடக்குவதற்கான நடவடிக்கையை ஆங்கிலேய உளவுத்துறை தீவிரப்படுத்தியது. வெளிநாட்டு தபால் நிலையங்களில் அதிகாரிகளுடன் போலீசார் பணி யில் இருந்தனர். சந்தேகத்திற்கிடமான உறைகளை போலீ சார் உடைத்தனர். பல தபால் நிலையங்களில் போலீசாரின் ஆதிக்கத்தால் தங்களது பணி பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களை ஆவண காப்பகங்கள் பதிவு செய்துள்ளன. துறைமுகங்களில் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை விட, வான்கார்ட் சோதனை தீவிர மாக நடத்தப்பட்டது. கடல் சுங்கச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் வான்கார்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் செய்தித்தாள் வந்துகொண்டே இருந்தது. ‘போல்ஷிவிக் இலக்கியத்தின்’ இந்த ஓட்டத்தைத் தடுக்க என்ன செய்யலாம் என்று அறிக்கை தயாரிக்க ஒரு ஆய்வை நடத்துவது என்று உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வங்காளத்தில் அப்போது உளவுத்துறைப் பொறுப்பில் இருந்த பி.சி. பாம்ஃபோர்ட் இதற்காக நியமிக்கப்பட்டார். (பின்னர் அவர் உளவுத்துறையின் துணை இயக்குநரானார். இந்தியாவைப் பற்றி பல புத்தகங்களை எழுதினார்.)

1923 மார்ச் 3 முதல் மூன்றரை மாத காலம் 16 துறைமுக நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து பாம்ஃபோர்ட் அறிக்கை தயாரித்தார். கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையில் கம்யூனிச சித்தாந்தம் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. இந்த அறிக்கையில் வான்கார்ட் பற்றிய  விரிவான குறிப்பும் உள்ளது. தி மார்னிங் போஸ்ட்,  லண்டன் டைம்ஸ் உட்பட பிரிட்டிஷ் செய்தித்தாள்களுக் குள் மறைத்து வைத்து வான்கார்ட் அனுப்பி வைக்கப்படு கிறது. மேலும் இது ஒரு செய்தித்தாள் என்ற குறிப்பைக் கொடுக்காமல் சாதாரண உறையில் வைத்து அனுப்பப்படுகிறது என்றும் அறிக்கையில் அவர் கூறி யிருந்தார். அந்த நேரத்தில் வலுவாக இருந்த சீமென்ஸ்  தொழிற்சங்க உறுப்பினர்களும் பத்திரிகை கடத்தலுக்கு உதவியதாகக் கண்டறியப்பட்டது.

பல பெயர்களில்

பாம்ஃபோர்ட் அறிக்கை காரணமாக, வான்கார்டுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்தது. அதற்கு முன்னதாகவே, தடையை மீறி பத்திரிகையை நடத்த பெயரை மாற்ற வலியுறுத்தி முசாபர் அகமது, எம்.என்.ராய்க்கு கடிதம் எழுதினார். ஒன்பது இதழ்கள் வெளியான நிலையில் 1922 அக்டோபர் 1 முதல், ‘அட்வான்ஸ் கார்ட்’ என மறுபெயரிடப்பட்டது. அதுவும் பிடிபட்டது.  தடை செய்யப்பட்ட வெளியீடுகளின் பட்டியலில் இந்த பெயர் சேர்க்கப்பட்டதாக ஆங்கிலேய அரசாங்கம் அறி வித்தது. வான்கார்ட் என்று பெயரை சுருக்கி மீண்டும் செய்தித்தாள் வெளியானது. பின்னர் பழைய பெயருக்கே திரும்பியது. இப்பத்திரிகை 1924 டிசம்பர் 15 வரை  நீடித்தது. பின்னர் 1925 வரை ‘மாஸஸ் ஆப் இந்தியா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், 1923 மே  15 அன்று, அதன் வெளியீட்டின் முதல் ஆண்டு விழாவில், செய்தித்தாள் அதன் முதல் பக்கத்தை கம்யூனிஸ்ட் அகி லத்தின் ஒரு பகுதியான ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் இதழ்’ என அச்சிடத் தொடங்கியது. 1922 முதல் 1925 வரை, இந்தியாவில் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்புவதில் வான்கார்ட் பெரும் பங்கு வகித்தது. இந்தியாவிலிருந்து டாங்கே மற்றும் சிங்கார வேலர் மற்றும் லாகூரில் முதன்முறையாக கட்சியில் இருந்த பேராசிரியர் குலாம் முகமது ஆகியோர் கட்டுரை களை எழுதினர். இந்தியாவில் கட்சியின் நிலையை சர்வதேச அளவில் தெரிவிக்கவும் இந்த செய்தித்தாள் உதவியது. செய்தித்தாளை பல நாடுகளில் இருந்து மாறி மாறி எம்.என்.ராய் வெளியிட்டார். இந்திய நகரங்களில் இருந்தும் அவ்வப்போது அச்சிடப்பட்டது. 1924இல், பாரீஸி லிருந்து சிறிது காலம் வெளியிடப்பட்டது. வான்கார்ட் பிரெஞ்சு மொழியிலும் அச்சிடப்பட்டது. பிரான்ஸ் அரசு செய்தித்தாளை தடை செய்து ராயை பிரான்சில்  இருந்து வெளியேற்றியது. இதற்கிடையில், 1924ல் கான்பூர் சதி வழக்கு வந்தது.  முசாபர் அகமது,  எஸ்.ஏ.டாங்கே, சவுகத் உஸ்மானி, நளினி குப்தா, சிங்கார வேலர், குலாம் உசேன் ஆகியோர்  கைது  செய்யப் பட்டனர். எம்.என்.ராய் வெளிநாட்டில் இருந்ததால் பிடிபடவில்லை. வான்கார்ட் பத்திரிகை வெளியிட்டது அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். 

வெளிநாட்டில் அச்சிட்டு  உள்ளூரில் விநியோகம்

வான்கார்ட் ஆஃப் இந்தியன் இன்டிபெண்டன்ஸ் என்கிற முதலாவது கம்யூனிஸ்ட் பத்திரிகையின் மூன்று  முகவர்களில் ஒருவரான முசாஃபர் அகமது, செய்தித்தாளை விளம்பரம் செய்ய நடத்திய சாகசங்களை, ‘மைசெல்ஃப் அண்ட் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி  ஆப் இந்தியா’ என்கிற நூலில் விரிவாக எழுதியுள்ளார். எம்.என்.ராயின் தூதுவராக ஜெர்மனியில் இருந்து வந்த நளினி குப்தா, முசாபர் அகமதுவிடமிருந்து சில முகவரிகளைச் சேகரித்துத் திரும்பினார். மேலும் கூடுதல் முகவரிகளை முசாபர் அகமது பின்னர் அனுப்பி னார். இது முகவரிதாரரின் அனுமதியுடன் செய்யப்பட வில்லை. அன்றைய தீவிரவாத வங்காள புரட்சிகர அமைப்புகளான அனுஷீலன் சமிதி, ஜுகாந்தர் போன்ற வற்றில் செயல்பட்ட பல உறுப்பினர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்தன. இவ்வாறு தபாலில் வந்ததைத் தவிர, பல செய்தித்தாள்கள் முசாபர் அகமதுவின் முகவரிக்கு மொத்தமாக வந்தன. அதில் பலவற்றை உரியவரின் வீட்டின் முன் உள்ள தபால் பெட்டியில் ரகசியமாக வைப்பது வழக்கம். பத்திரிகையைப் பெற்றவர்கள் அதை மிகவும் பெருமையாகக் கருதினார்கள் என்கிறார் முசாபர் அகமது. சிலர் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் நேரடியாக இணைந்திருப்பதாக பாசாங்கு செய்தனர். அவர்களின் முகவரி ஜெர்மனிக்கும் பாரீசுக்கும் எப்படி சென்றது என்று அவர்களுக்கு புரியவில்லை. செய்தித்தாள் கிடைத்தவர்கள், கிடைக்காதவர்களை மிதமான புரட்சியாளர்களாக பார்க்க ஆரம்பித்தனர். இதன் மூலம் முசாபர் அகமது மேலும் பலரின் முகவரிகளை அனுப்பி அவர்களையும் ‘புரட்சியாளர்கள்’ ஆக்கினார்.

முதல் பிரதி காவல்துறையிடம் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த பிரதிகள் கிடைத்தபோதிலும், இந்தியாவில் எங்கோ அச்சடிக்கப்படுவதாக கருதி வங்காளத்தில் உள்ள பல அச்சகங்களில் காவல்துறை சோதனை செய்தது. இறுதியில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அச்சிடப்பட்ட எழுத்துருக்களில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்த போலீசார், பத்திரிகை வெளியில் இருந்து வருகிறது என்ற முடிவுக்கு வந்தனர். பல முக்கிய ஊடகங்களுக்கு பத்திரிகை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. அமிர்தா பஜார் பத்ரிகா (கல்கத்தா), சர்வன்ட் (பம்பாய்), வந்தேமாதரம் (லாகூர்) போன்ற பல வெளியீடுகள் வான்கார்ட் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்தன. இது ஆங்கிலேயர்களை மேலும் கவலையடையச் செய்தது. குறைவான பிரதிகள் வந்தாலும், அது நடத்திய பிரச்சாரம் மிகப் பெரியது.

 தேசாபிமானியில் இருந்து தமிழில்: சி.முருகேசன்



 

 

;