சார்ட்டிஸம் என்பது பிரிட்டன் எனப்படும் ஐக்கிய முடியரசில் (UK) 1830களின் பிற்பகுதிக்கும் 1850களின் இடைப்பகுதிக்கும் இடையில் வளர்ந்த இயக்கம். வயது வந்த எல்லா ஆண் களுக்கும் வாக்குரிமைக்கான இயக்கம். உலகின் உழைக்கும் மக்களின் முதலாவதும் வியக்கத்தகும் இயக்கம் என்று சந்தேகத்திற்கிடமின்றி கூறலாம் சார்ட்டிஸ்ட் (சாசன) இயக்கம் சிறிது காலமே இயங்கியது. எனினும் இங்கிலாந் தில் உழைக்கும் வர்க்கத்தின் புதிய உணர்வு களை உருவாக்கிய பெருமை அதற்கு அளிக்கப்பட்டது. அந்த உணர்வே பின்னர் தொழிலாளர் இயக்கமாகவும் நலிந்தவர்கள் அதிக அரசியல் செல்வாக்கு பெறு வதற்கும் காரணமாயின. சாசன இயக்கத்தை சேர்ந்த எர்னஸ்ட் ஜோன்ஸ் அவர்கள் ‘அடித்தள மக்களின் பாடல்’ என்பதை எழுதினார். இவர் 1847இல் சாசன இயக்கம் சார்பாக நாடாளு மன்ற தேர்தலில் நின்று தோல்வியடைந் தார். இவர் மாமேதை காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் ஆர்வலர். 1848இல் தேசத் துரோக உரைகள் நிகழ்த்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் தனிமை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
சிறையில் பேனாவும் பேப்பரும் அவருக்கு மறுக்கப்பட்டது. ஆயினும் அவர் இறைவணக்க புத்தகத்தி லிருந்து தாள்களை கிழித்து அதில் தனது ரத்தத்தால் எழுதினார் என்று சொல்லப் படுகிறது. விடுதலையானபின் 1851இல் ‘மக்களுக்கான குறிப்புகள்’ எனும் வாராந்திர இதழை தொடங்கினார். அதில் 1852 மார்ச்சில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. இங்கி லாந்து, நாட்டுப்புற பாடகரும் கிதார் கலை ஞருமான மார்ட்டின் கார்த்தி (21.05.1941) இந்தப் பாடலை 1982இல் பாடினார். 1960 மற்றும் 70களில் ஐக்கிய முடியரசில் நாட்டுப்புறப்பாடல்கள் மறுமலர்ச்சி காண தொடங்கிய காலத்தில் மார்ட்டின் கார்த்தி இளம் இசைக்கலைஞராக உருவானார். அவர் பிரித்தானிய பாரம்பரிய இசையின் மிகுந்த தாக்கம் செலுத்தும் ஆளுமையாக இருக்கிறார். அவருடைய தாயார் சமூக செயற்பாட்டாளர். தந்தை தொழிற்சங்கவாதி. இவர் தனித்துவமான பாணியில் மரபான பாடல்களை பெரும்பாலும் தனியாக தனது கிடாரில் வாசிப்பார். 1998இல் பிரிட்டிஷ் அரசின் எம்பிஇ (MBE) விருது பெற்றார். 2002இல் பிபிசியின் ‘ஃபோக் சிங்கர் ஆப் தி இயர்’ விருதும் 2005இல் சிறந்த நாட்டுப்புற இசையமைப்பாளர் விருதும் பெற்றார். 2008இல் மத்திய லங்காஷயர் பல்கலைக் கழக கவுரவ ஃபெலோ ஆக ஆக்கப்பட்டார். 2014இல் பிபிசியின் வாழ்நாள் விருதும் பெற்றார்.
இன்றைய நிலையுடன் அதிர்ச்சியளிக்கும் ஒற்றுமை
அவர் 1982இல் பாடிய ‘அடித்தள மக்களின் பாடல்’ 1993இல் மீண்டும் வெளியிடப் பட்டது. இந்தப் பாடல் குறித்து மார்ட்டின் கார்த்தி கூறுகிறார்: ‘130 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வரிகள் இன்றும் வலு வாகவும் தெளிவாகவும் பொருந்துகின்றன என்பது அசாதாரணமாக தோன்றலாம். ஆனால் அன்றைய படைப்புகள் குறித்து சிறிது ஆராய்ந்தால், இதுபோல் எழுதப் பட்ட பாடல் இது மட்டுமே அல்ல என்று தெரிகிறது. அவற்றை இன்றைய நிலைமை களுடன் ஒப்பிட்டால் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒற்றுமைகள் உள்ளன. ஜோன்ஸின் இருண்ட மற்றும் நம்பிக்கை வறட்சி கொண்ட இந்தப்பாடல் இன்னும் ஊக்கமளிக்கும் முடிவுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று மார்டின் கார்த்தியின் சக பாடகர் ஷெல்லி போசன் நினைத்தார். எனவே 2004இல் இந்தப் பாடலுடன் பாட கர் பாப் தவன்போர்ட் தன்னுடைய இரண்டு பத்திகளையும் சேர்த்து ‘மற்ற பிரிவினரின் பாடல்கள்’(song of other ranks) என்ப தாகப் பாடினார். 2010இல் பாடகர் ஃபைனஸ்ட் கைன்ட் ‘அடித்தள மக்களின் பாடல்’ஐ இசைத்தட்டாக பாடினார். 2018இல் பாடகர்கள் கேத், பில் டைலர் ஆகியோர் பாடினர். 2019இல் பாடகர் கிரீன் மேத்யூஸ் பாடியுள்ளார். இந்தப் பாடலில் விவசாயி, கட்டிடத் தொழிலாளி, நெசவாளி, சுரங்கத் தொழி லாளி என ஒவ்வொரு தொழில்பிரிவினராக எழுதியிருப்பது சிறப்பு. இதை நமது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையின்; காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’ என்கிற வரிகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.
அடித்தள மக்களின் பாடல்
ஏர்னஸ்ட் ஜோன்ஸ் நாங்கள் தாழ்ந்தவர்கள் – நாங்கள் தாழ்ந்தவர்கள்- மிக மிகத் தாழ்ந்தவர்கள், தாழ்ச்சியின் அடிமட்டம் என தாழ்ந்தவர்கள். செல்வந்தர்களோ உயர்ந்தவர்கள் நாமே அவர்களை அப்படி ஆக்கினோம். நாமோ பரிதாபமான கூட்டம் ! நாமோ பரிதாபமான கூட்டம் ! பரிதாபமான கூட்டம் நாம். நாங்கள் உழுது விதைக்கிறோம். அடிமட்ட மக்களாதலால் நாள் முழுதும் புழுதியில் உழல்கிறோம் சமவெளி முழுவதும் தானியங்களால் ஆசீர்வதிக்கிறோம். பள்ளத்தாக்கெங்கும் வைக்கோலின் மணம் பரப்புகிறோம். எங்கள் இடம் எதுவென்று அறிவோம். பண்ணையாரின் காலடியில் கிடக்குமளவு தாழ்ந்ததென்று அறிவோம். நாங்கள் தானியம் விளைவிக்க தாழ்ந்தவர்களில்லை. ஆயின் அதை உண்ணுவதற்கு தாழ்ந்தவர்களாம். அடிமட்டத்தினராதலால் கீழே கீழே செல்கிறோம். ஆழப் புதைத்த நரகமாம் சுரங்கத்தினுள் . ஜொலிக்கும் பெருமை மிகு வைரங்களை சேகரிக்கிறோம். சர்வாதிகாரியின் மணிமகுடத்தை அவை அலங்கரிக்கும். புதிய சுமைகளை எங்கள் முதுகில் அவன் சுமத்தும்போது அதை எதிர்த்து வாக்களிக்க நாங்கள் தாழ்ந்தவர்கள்; ஆனால் அந்த வரிகளை செலுத்துவதற்கு தாழ்ந்தவர்கள் இல்லையாம். நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் தாழ்ந்தவர்கள் ஒழுங்கற்ற கும்பல் என்றறிவோம் ஆனாலும் எங்கள் ஆற்றல் மிகு கை வனைந்த களிமண் ஜமீன்களின் காலடியில் அரண்மனையாகவும் தேவாலயங்களாகவும் கோபுரங்களாகவும் வளரும். பின் செல்வந்தரின் கூடத்தில் நெடுஞ்சாண்கிடையாய் வீழ்வோம். பணக்காரரின் வாசலில் கெஞ்சுவோம். அந்த சுவர்களை கட்ட நாங்கள் தாழ்ந்தவரில்லையாம். ஆனால் அந்த தரையில் நடமாட தாழ்ந்தவர்களாம்.
நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் அவ்வளவு தாழ்ந்தவர்கள். எங்கள் விரல்களிலிருந்து நழுவும் பட்டு இழைகள் செல்வ மகன்களின் உடல் தழுவி பட்டாடைகளாய் பளபளக்கின்றன. நாங்கள் என்ன பெறுகிறோம் நாங்கள் என்ன கொடுக்கிறோம். அறிவோம் நாங்கள். எங்கள் பங்கு என்னவென்று அறிவோம். ஆடை நெய்வதற்கு தாழ்ந்தவர்களில்லை. ஆடை உடுத்தத்தான் தாழ்ந்தவர்களாம். நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் அவ்வளவு தாழ்ந்தவர்கள். ஆனாலும் முரசுகள் அதிரும்போது எங்கள் புஜங்கள் துடிக்கும். பீடு மிக்க அரசனின் இதயம் கிழித்து செல்லும். நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் தாழ்ந்தவர்கள் எங்கள் இடம் என்னவென்று அறிவோம். அணிவகுக்கும் படைகள் மட்டுமே நாங்கள். எதிரிகளை அழிக்க தாழ்ந்தவர்களில்லை. வெற்றியின் பரிசுகளை தொட மட்டும் தாழ்ந்தவர்களாம். இந்தப் பாடல் கவி ஷெல்லியின் ‘மென் ஆப் இங்கிலாந்து’ பாடலை பின்பற்றுகிறது. அதன் இறுதி வரிகள் பாட்டாளி வர்க்கத்திற்கான அறைகூவல் ஆக விளங்குகிறது. விதைப்பாடு செய்வோம்; வீணர் அறுக்க விடோம்.. செல்வம் தேடுவோம்; செருக்கர்கள் குவிக்க விடோம். ஆடைகள் நெய்வோம்; அக்கிரமக்காரர்கள் அணிய விடோம். ஆயுதங்கள் செய்வோம்; அதை நாமே தரிப்போம். அடுத்தவர் வாழ அறை அலங்கரித்து பின் நீ சந்திலும் பொந்திலும். முடங்குவதோ? நீ அடித்த சங்கிலியே உன்னைப் பிணிக்கும். உன் வார்ப்படம் உன் முகம் நோக்கி நகைக்கும்……… இந்த வரிகளை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் கீழ்க்கண்ட வரிகளோடு ஒப்பிடலாம்.
‘நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்’ எர்னஸ்ட் ஜோன்ஸின் பாடலுடன் சேர்க்கப் பட்ட பாப் டாவன்போர்ட்டின் ‘மற்ற பிரிவின ரின் பாடல்கள்’ நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் தாழ்ந்தவர்கள் நேற்று வரை நமது மிகச் சிறந்த நண்பன் இன்றோ நமது எதிரியான அந்நிய நாட்டினருடன் சண்டையிட படையெடுத்து செல்லும்போது ‘கடவுள் நம் பையன்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று பத்திரிகைகள் ஓலமிடும். ‘அவர்களை பாராட்டுங்கள்’ என்று பாதிரிகள் அரற்றுவர். போரில் வெற்றி பெற்று நாடு திரும்பியதும் நாங்கள் இருக்கிறோமோ இறந்துவிட்டோமா என்று யார் கவலைப்படுவர்? நாங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் தாழ்ந்தவர்கள் வானிலுள்ள சுவர்க்கத்திற்கு அழைக்கப்படும் மகிழ்வான அந்த நாள் வரை வாழ்வில் என்றும் காணா சுதந்திரம் நாங்கள் இறக்கும் அந்த நாளில் அங்கே இருக்கும். மேலே சுவர்க்கம் உண்டென்று வாக்களிக்கப்பட்டு பூமியில் நரக துன்பம் அனுபவிப்பதில் பயனேதுமில்லை என்பீர்களேயானால் இங்கேயே கீழேயே ஒரு நாள் சுவர்க்கம் காண உங்களை அழைக்கும் போரில் ஏன் சேரக்கூடாது?