articles

img

ஏங்கெல்ஸ் எழுத்துக்களில் சோசலிசம் - என்.குணசேகரன்

இன்றைய சமூக அமைப்பு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் அமைப்பு. மனித சமூகத்தில் பெரும் பகுதி துன்ப துயரங்களில் வாடுகிற சூழல் கொண்ட அமைப்பாக இது நீடித்து வருகிறது.   சமனற்ற சமூக அமைப்பை அகற்றி, ஒரு புதிய சமூகத்தைப் படைத்திட வேண்டும் என்கிற வேட்கை  ஆண்டாண்டுக் காலமாக இருந்து வருகிறது. ‘எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்’ என்ற விருப்பமும், மேலோர் கீழோர்,  உயர்வு தாழ்வு எதுவும் இல்லை என்ற கருத்தினை ஒலிக்கின்ற “பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்”  என்ற குறளும் சமத்து வத்தின் தேவையை எடுத்துரைக்கின்றன. 

19-ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் வளர்ந்த சூழலில்தான் சோசலிசம் பற்றிய கருத்தோட்டங்கள் கூர்மையாக வெளிப்பட்டன.எனினும் அவை கற்பனை கலந்ததாகவே இருந்தன.  முதலாளித்துவம் ஏற்படுத்துகிற கொடூர விளைவு களை கண்டித்த 19-ஆம் நூற்றாண்டு கற்பனாவாத சோசலிஸ்ட்களால் அந்த அந்த அமைப்பை அகற்றி சோசலிச இலக்கை அடைவதற்கான அறிவியல் பூர்வ மான கோட்பாடுகளை உருவாக்க இயலவில்லை. அன்று நிறைவேற்றப்படாமல் இருந்த அந்த மகத்தான பணியை காரல் மார்க்சும்,ஏங்கெல்சும் நிறை வேற்றினார்கள். 

அறிவியல் அடிப்படை

பல்லாயிரம் ஆண்டுகளாக வெளிப்பட்டு வந்த மனிதநேய, மனித சமத்துவ விருப்பங்களுக்கு எல்லாம் அறிவியல் அடிப்படையை அளித்து மனித சமூகம் அடையக்கூடிய இலக்காக சோசலிச லட்சியத்தை வடிவமைத்தவர்கள் மார்க்சும்,ஏங்கெல்சும். முதலாளித்துவம் வளர்ந்திருந்த ஐரோப்பாவில் சான் சிமோன்,ஃபூரியே,ராபர்ட் ஓவன் போன்றவர்கள் முதலாளித்துவத்தை கடுமையாக சாடினார்கள்.ஆனால் அந்த அமைப்பை அகற்றி உருவாகும் சோசலி சம் பற்றி, கற்பனை கனவுகளைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர். புதிய சமூகம் “புதிய கிருத்துவ” பாதையில் செல்ல வேண்டும் என்ற சமய கருத்தாக்கத்தை முன்வைத்து தீர்வு காண முயன்றார் சிமோன்.  தொழிலாளிகளை நிர்வகிக்கும் ஆலைகள், மக்களே நிர்வகிக்கும் குடியிருப்புகள் என முதலாளி கள் இல்லாத ஒரு சமூக ஏற்பாட்டை நிர்மானிக்க முயன்று தோல்வி பெற்றவர் ராபர்ட் ஓவன். 

இவர்களது சிந்தனைகளைப் பற்றி உயர்வாகப் பேசுகிற ஏங்கெல்ஸ், அவர்களது குறைபாடுகளையும், நடைமுறை சாத்தியமில்லாத கற்பனையான கருத் துக்களையும் விமர்சிக்கிறார். “கற்பனாவாத சோசலி சம்: விஞ்ஞான சோசலிசம்”என்ற நூலிலும் “டூரிங்குக்கு  மறுப்பு “நூலிலும் விஞ்ஞான சோசலிசத்தின் கோட்பா டுகளை மிகவும் சீரிய முறையில், அறிவியல் துல்லி யத்துடன் ஏங்கெல்ஸ் எடுத்துரைக்கிறார். “கற்பனாவாத சோசலிசம்: விஞ்ஞான சோசலி சம்”நூலில் இயக்கவியல், வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற இரு தலைப்புகளில் மார்க்சின் தத்துவக் கோட்பாடுகளை விளக்குகிறார் ஏங்கெல்ஸ்.  இந்த இரு தலைப்புகளும் நூலில் சேர்க்கப்பட்ட தற்கான நோக்கம் என்ன? 

கனவுகளின் இடத்தில் அறிவியல்  

இயற்கையின் இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் இரண்டு எதிர்மறைக் கூறுகள் ஒன்று பட்டும், போராடியும் வருகின்றன. இது “முரண்பாடு”  எனும் விதி. பொருளில் மாற்றத்தையும், வளர்ச்சியை யும் ஏற்படுத்துவது முரண்பாடுகளின் இயக்கம்தான்.அதேபோன்று, முதலாளித்துவத்தில் உள்ள முரண்பா டுகளே சோசலிச மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மையை விளக்குவதற்காக “இயக்கவியல்” “வரலாற்றுப் பொருள் முதல்வாதம்” என்ற இரண்டு தலைப்புகளும் நூலில் சேர்க்கப் பட்டுள்ளன. எனவே, சோசலிசம் என்பது கற்பனைக் கருத்து  அல்ல. அது, மானுட வரலாறு தவிர்க்க முடியாமல் எட்டுகிற இலக்கு  என்பதை ஏங்கெல்ஸ் விளக்கி யுள்ளார்.    முதலாளித்துவத்தில் முக்கிய முரண்பாடு ஒன்று உண்டு. தொழிலாளர்களின் கூட்டான உழைப்பால் உற்பத்தி நிகழ்கிறது.ஆக, உற்பத்தி சமூக மய மாக்கப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தியின் பலன் தனி  ஒரு கூட்டத்தால் அபகரிக்கப்படுகிறது. முதலாளிக ளின் இலாபமாகவும், சொத்து குவியலாகவும் உற்பத்தி யின் பலன்கள் உருவெடுக்கின்றன.

உற்பத்தி  சமூகமயமாகியிருக்கிறது; ஆனால் உற்பத்தியின் பலன் தனி உடமையாகிறது. இந்த முரண்பாடு முதலாளிகளின் ஏற்றத்திற்கும், உழைக் கும் மக்களின் வாழ்க்கை   சரிவிற்கும் இட்டுச்செல் கிறது. இதனால் முதலாளித்துவ வர்க்கத்திற்கும்  பாட்டாளி வர்க்கத்திற்குமான வர்க்கப் பகைமை தீவிர மடைகிறது. வேலை இழப்பு, வறுமை, வாழ்வாதாரப் பறிப்பு என அத்தனையும் முதலாளித்துவத்தில் அன்றாட நிகழ்வுகளாக அமைந்துள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்கு சோசலிசம் தீர்வாக அமை கிறது. இவ்வாறு அறிவியல் பூர்வமாக சோசலிசமே தீர்வு  என்பதை ஏங்கெல்ஸ் நிறுவுகிறார். இதனால்தான், லெனின், “கனவுகளின் இடத்தில் அறிவியலைக் கொண்டு வந்தவர் ஏங்கெல்ஸ்” எனவும் தொழிலாளி வர்க்கம் தனது பாத்திரத்தை அறிந்து வர்க்க உணர்வு கொள்ள வழிகாட்டியவர் ஏங்கெல்ஸ் எனவும் குறிப்பிடுகிறார்.

சோசலிசமே மேன்மையானது

தானாக சோசலிசம் மலர்ந்திடும் என்கிற கருத்தும் தவறானது என்பதை மார்க்சிய மூலவர்கள் விளக்கி யுள்ளனர். இதற்கு பாட்டாளி வர்க்கம் அணி திரள  வேண்டும். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையே முதலாளித்துவத்தை வீழ்த்துகிற புரட்சியை முன்னெடுக்கும்.அதன் வழியாக அரசு அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும். பொருளாதாரத்தின் மீது பாட்டாளி வர்க்கம் தனது கட்டுப்பாட்டை நிலை நாட்டிய பிறகு, திட்டமிட்டு மக்கள் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பாட்டாளி வர்க்க அரசு மேற்கொள்கிறது.  கடந்த நூற்றாண்டில் ரஷ்யப் புரட்சிக்கு பிறகு அமைந்த சோவியத் யூனியன் திட்டமிட்ட சோசலி சப் பொருளாதாரத்தை கடைபிடித்து, பெரும் சாதனை களை நிகழ்த்தியது. சோசலிச அடிப்படையிலான திட்டமிட்ட பொருளா தாரம் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக சோவியத் நாடு திகழ்ந்தது.

அன்றைய சோவியத் யூனியனில் வேலை செய்யும்  உரிமை அடிப்படை உரிமையாக இருந்தது.அனைவ ருக்கும் வேலை உறுதி செய்யப்பட்டது.இன்று வரை  முதலாளித்துவ அமைப்பின் தீராத நோயாக வேலை யின்மை பிரச்சனை நீடித்து வருகிறது. சோவியத் யூனியனில் பொருளாதார ஏற்றத்தாழ்வு, வறுமை, சுரண்டல் உள்ளிட்ட முதலாளித்து வத்தின் தீமைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன.வீட்டு வசதி, குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து,கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இலவசப் பொது சேவைகள் என ஏராளமான நன்மைகளை சோவியத் யூனியன் மக்களுக்கு செய்தது.இவற்றில் சோவியத் சோசலிசம் உலகிற்கு முன்மாதிரியாக இருந்தது.   சோவியத் யூனியன் தகர்ந்து போய் இருக்கலாம்.ஆனால் சோசலிசமே மேன்மையானது என்ற உண்மையை வரலாற்றில் அது நிலைநிறுத்தியது.

சோசலிச மாற்றத்தை  தடுக்கும் முயற்சிகள்

பாட்டாளி வர்க்கப் புரட்சியை தடுத்து, சோசலிச மாற்றத்தை ஏற்படுத்தாமல் தடுத்திட முதலாளித்துவம் விழிப்புடன் செயலாற்றி வருகின்றது. உலகம் முழுவதும் சோசலிசத்திற்கு எதிரான பிரச்சாரமும், நடவடிக்கைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சீனாவில் சோசலிசத்தை  கட்டும் பணியில் மகத்தான முன்னேற்றங்களை சீனக் கம்யூனிஸ்டுகள் சாதித்து வருகின்றனர். அவர்களது சோசலிச பய ணத்தை தடுத்து நிறுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இடையறாது முயற்சித்து வருகிறது. சீனாவைச் சுற்றி, தைவான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில் ராணுவ தளங்களை அமெரிக்கா மேலும் மேலும் வலுப்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் சோசலிச எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறுகிறது. முதலாளித்துவத்தின் பிரதிநிதியான சுப்பிரமணிய சுவாமி இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் சோசலிசம் என்கிற சொல் கூட இருக்கக் கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளார்.சோச லிசத்தின் சுவடு கூட இல்லாது ஒழிக்க முயற்சித்து வருகின்றனர். இந்தியா, முதலாளித்துவத்தை வலுப்படுத்தும் பொருளாதாரக் கொள்கை கொண்டது.இந்திய உழைப்பாளி மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிற நிலையில் இந்தியப் பெரு முதலாளிகள், உலகப் பெரும் முதலாளிகள் வரிசை யில் முதன்மையிடம் பிடித்து வருகின்றனர்.  இந்தியாவின் பெரு முதலாளியான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலரை தாண்டி பெருகியதால், மூன்றாவது உலகப் பெரும் பணக்காரராக கடந்த ஆகஸ்ட் மாதம்  அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் ஏற்றத்தாழ்வு, எல்லை கடந்து அதிகரித்து வருகிறது. முதலாளித்துவப் பிடியிலிருந்து இந்தியா மீள்வது இன்றைய காலகட்டத்தின் தேவை.இதற்கு ஏங்கெல்ஸ் காட்டிய வழியில் பாட்டாளி வர்க்க ஒற்றுமை தேவை.  இந்திய சோசலிச இலட்சியத்தை அடைவதற்கும், ஏங்கெல்சின் எழுத்துக்கள் என்றென்றும் வழிகாட்டி யாக விளங்கிடும்.  

கட்டுரையாளர்: சிபிஐ(எம்)மாநில செயற்குழு உறுப்பினர்




 

;