articles

img

கள்ளக் கூட்டாளியைப் பாதுகாக்கத் துடிக்கும் பிரதமர் மோடி

நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏழு நாட்களாக சீர்குலைத்த பின்னர், இப்போது அரசாங்கம் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை, பட்ஜெட் மற்றும் நிதிச் சட்டமுன்வடிவுகளை விவாதம் எதுவுமின்றி நிறைவேற்றி, மேலும் வெட்டிச் சுருக்கிடத் திட்டமிட்டிருக்கிறது. ராகுல் காந்தி, வெளிநாட்டில் இருந்தபோது நம் நாட்டின் ஜனநாயகத்தின் நிலை குறித்து கூறிய சில கருத்துக்களுக்காக, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி, மார்ச் 13இலிருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எவ்வித நடவடிக்கையையும் நடத்தவிடாது விசித்திரமான முறையில் ஆளும் கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதிர்ச்சியளிக்கும் விவரங்கள்

அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சனை பற்றி எவ்விதமான விவாதமும் நடைபெறாமல் தடுத்திட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு இரு அவைகளையும் ஆளும் கட்சியினர் சீர்குலைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகவே தெரிகிறது. பட்ஜெட் அமர்வு தொடங்கிய பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தே, எதிர்க்கட்சியினர் அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ள விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தொடர்ந்து  கோரி வருகின்றனர்.   அதன் பின்னர், கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானியின் பங்களிப்பு குறித்தும், அவர் எண்ணற்ற போலி (ஷெல்) கம்பெனிகளிலும், அம்புஜா சிமெண்ட்-ஏசிசி கம்பெனிகளிலும் செய்துள்ள தில்லுமுல்லுகள் குறித்தும் ஏராளமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. மேலும் இப்போது, அதானி குழுமத்தில் கேந்திரமான முதலீட்டைச் செய்தி ருக்கக்கூடியதும், அதானியுடன் ராணுவம் சம்பந்தப்பட்ட கம்பெனி ஒன்றில் சக உரிமை யாளராக இருக்கக்கூடிய எலாரா (Elara) என்று அழைக்கப்படும் அந்நிய நிறுவனம் ஒன்று குறித்து அதிர்ச்சியளிக்கக்கூடிய விவரங்கள் வெளி வந்திருக்கின்றன.   இந்த சங்கதிகள் அனைத்து குறித்தும்  அரசிடமிருந்து விளக்கம் தேவைப்படு கிறது. இவை குறித்து நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமாகின்றன.

அரசின் செயல்பாட்டை விமர்சிப்பது நாட்டை விமர்சிப்பதாகாது

அதைச் செய்வதற்குப் பதிலாக, நாடாளு மன்றம் கூடிய முதல் நாளன்றே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி மீது தாக்குதலைத் தொடுக்கும் விதத்தில், அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியதை நாம் பார்த்தோம். எப்படி எலாரா போன்ற கம்பெனி இந்தியாவில் அதானியின் ராணுவ நிறுவனத்துடன் கூட்டு  உரிமையாளராக மாற முடியும் என்ற முக்கிய மான கேள்விக்கெல்லாம் பதில் கூறுவதைத் தவிர்ப்பதற்கான உத்தியாகவே இது இருக்கிறதா? ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது என்றும், மோடி அரசாங்கம் அதனை நசுக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறிய விமர்சனம்,  கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூறப்படுவதுதான். அவர் இதனை வெளிநாட்டில் கூறியதால் அவர் தேசப்பற்று அற்றவர் என்று குற்றஞ்சாட்டுவது, போலித்தனமான ஒன்றேயாகும். ஏனெனில், ஓர் அரசாங்கத்தின் செயல்பாட்டைத் தாக்கு வது, அந்த நாட்டையே தாக்குவதாகக் கூற முடியாது. கிரேட் பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில் ராகுல்காந்தி அமெரிக்க பாணி ஜனநாயகத்தை அப்பாவித்தன மாகப் பாராட்டிப் பேசியது உட்பட அவர் கூறிய அனைத்துக் கருத்துக்களுடனும் ஒருவர் ஒத்துப்போக முடியாது. எனினும், அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் போக்கை விமர்சிப்பதற்கான உரிமை, அது நம் நாட்டிற்குள் செய்தாலும் சரி அல்லது வெளிநாட்டில் செய்தாலும் சரி, அது பிரிக்க முடியாத ஒன்றாகும்.

ஹாரிபாட்டர் நாவலின்  தீயசக்தியின் பெயர்போல

அதானி பிரச்சனையில் பாஜக-வின் அணுகுமுறை பிரமிக்க வைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியே, நாடாளுமன்றத்தில், குடி யரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, தொகுப்புரை வழங்கிய சமயத்தில் உறுப்பினர் களால் கேட்கப்பட்ட சரமாரியான கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமலும், அதானி என்ற பெயரை ஒரு தடவைகூட உச்சரிக்காமலும் மணிக்கணக்காகப் பேசி பதிலளித்துள்ள தொனியே இதனைப் பிரதிபலிக்கிறது. இது, ஹாரி  பாட்டர் நாவல்களில் வரும், மிகவும் ஆபத்தான வனும் சக்தி படைத்தவனுமான, லார்ட் வோல்டிமார்ட் (evil Lord Voldemort) பெயரைச் சொல்லி அவனை அழைக்கக்கூடாது என்பதை நினைவுபடுத்துகிறது. ஆகையால் பலர் அவனைப் பெயர் கூறப்படக்கூடாத நபர் என்றே  குறிப்பிடுகிறார்கள். நரேந்திர மோடியை மற்றும் பாஜக-வைப் பொறுத்தவரை, கவுதம்  அதானி, பெயர் கூறப்படக்கூடாத ஒரு நபராகவே இருக்கிறார். ஏனெனில் அவர் பெயரைக் கூறி னால், மோடிக்கும் அதானிக்கும் இடையேயான கள்ளப்பிணைப்பு அம்பலமாகிவிடும். நாடாளுமன்றத்தில் இப்போது அவர்கள் பின்பற்றிவரும் உத்தி, மோடி அரசாங்கமும் பாஜகவும் அதானி குழுமம் குறித்து எவ்விதமான நாடாளுமன்ற நுண்ணாய்வையும் தடை செய்திடும் விதத்திலேயே அமைந்திடும் என்பதையே காட்டுகிறது.  இத்தனை ஆண்டு களாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கத்துறை போன்றவற்றின் மூல மாக செயல்பட்டுக்கொண்டிருந்த மோடி அர சாங்கமும் பாஜக-வும் இப்போது நாடாளுமன்றத்தி லும் அதானி சாம்ராஜ்யம் எப்படிக் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப் படுவதிலிருந்து அவர்களின் வாயை மூடச்செய்வத ற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது.

அதானியை பாதுகாக்க கொடுக்கும் சிறு விலை

அதானியும் அவரின் கம்பெனிகளும் வெளிப் படையாகவே மேற்கொண்டுள்ள சட்ட மீறல்கள் குறித்தும், இரண்டகமான நோக்கங்களுக்காக கடன்கள் பெற்றிருப்பது குறித்தும், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சரிக்கட்டுவதற்கும், நேரத்தை வாங்குவதற்காகவே மோடி அரசாங்கம் இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.   நாடாளுமன்றத்தைச் செய லிழக்கச் செய்வது, அதானியைப் பாதுகாப்ப தற்காகக் கொடுக்கப்படும் சிறிய விலை யாகும். நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து இழிவு படுத்திவருவதும், அதைப் பொருத்தமற்றதாக மாற்றவும் மோடி அரசாங்கமும் பாஜக-வும் மேற்கொண்டுவரும் வழிமுறைகள் அதானி விவகாரத்தில் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

மார்ச் 22, 2023
தமிழில்: ச.வீரமணி