articles

img

மார்க்ஸைத் தவிர வேறு யாரும் இல்லை - டி.கே.ரங்கராஜன்

மனித குலத்தை சுரண்டலின் கோரப்பிடியி லிருந்து விடுவிப்பதற்கும், பாட்டாளி மக்க ளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை படைப்பதற்கும் முற்றிலும் விஞ்ஞானப்பூர்வமான வழியை - கொள்கையை, உலக வரலாற்றில் மாமேதை காரல் மார்க்சை தவிர வேறு எவரும் இதுவரை முன் வைக்கவில்லை. உலக பாட்டாளி வர்க்கத்தின் மீது கொடிய சுரண்டலை மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகிற ஏகபோக முதலாளித்துவத்தின் மூலதனம் எத்தனை கொடியது என்பதை மார்க்ஸைத் தவிர வேறு எவரும் துல்லியமாக வரையறுக்கவில்லை.

“போதுமான லாபத்தை பெற முடியும் எனும்போது மூலதனம் மிகுந்த துணிச்சலைப் பெறுகிறது. நிச்சய மாக 10 சதவீதம் லாபம் கிடைக்கும் எனில் அது எங்கு  வேண்டுமானாலும் களமிறங்கத் தயாராகிறது. 20 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றால் அதன் ஆர்வம் மேலும் தூண்டப்படும். 50 சதவீத லாபம் என்பது மிகவும் வெளிப்படையான துணிச்சலை அதற்கு கொ டுக்கும். 100 சதவீதம் லாபம் கிடைக்கும் எனும்போது அனைத்து மனிதச் சட்டங்களையும் அது மிதிக்கத் தயாராகும். 300 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றா லோ, அதனால் அதன் உரிமையாளரை தூக்கில் இடு வதற்கான சூழல் ஏற்படும் என்றாலும் கூட அதை மீறி அந்த குற்றத்தை இழைக்காமல் இருக்கவோ, தயங்கவோ செய்யாது.” - இதுதான் மூலதனத்தைப் பற்றிய மார்க்சின் கணிப்பு.  மூலதனம் ஈவிரக்கமற்றது. மனிதத்தன்மை இல்லாதது. இன்றைய உலகில் நிதி மூலதனமாக மாறி பயணித்துக்கொண்டிருக்கிற மூலதனத்தின் கொடிய சுரண்டல் முன்னெப்போதையும் விட தீவிரமடைந்துள்ள நிலையில், மூலதனத்தைப் பற்றி மார்க்ஸ் கூறியது இன்றும் சாலப்பொருத்தமானதாக உள்ளது.  ஈவிரக்கமற்ற இந்த மூலதனம், முதலாளித்து வத்தை மேலும் மேலும் லாப வேட்கையோடு பய ணிக்கச் செய்கிறது. முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ஏகாதிபத்தியம் என்று மாமேதை லெனின் குறிப்பிட்டார்.அந்த கட்டத்தை நோக்கிய பயணத்தில் ஏகபோக நிதி மூலதனம் என்ற கட்டத்தில்  தற்போ தைய உலகப் பொருளாதாரம் இயங்குகிறது.

ஏகாதிபத்தியம் என்றால் என்ன?

அரசியல் பொருளாதாரத்தில், ‘ஏகாதிபத்தியம்’ (Imperialism) என்ற பதம் அடிக்கடி பயன்படுத்தப்படு கிறது. ஆங்கிலச் சொல்லான இம்பீரியலிசம், லத்தீன் மூலத்தில் இருந்து உருவானது. அதன் பொருள் ஆதிக்கத்தை குறிக்கும் எதிர்மறையானது. செல்வத்தி லும், ஆற்றலிலும் குறைந்த நாடுகளின் மீது ஆதிக் கத்தைச் செலுத்தும் பேரரசு ஆட்சிமுறையையே இது  குறிக்கிறது.  நாம் தமிழில் ஏகாதிபத்தியம் என்கிறோம்; வல்லாதிக்கம் என்றும் சொல்கிறார்கள். உலகில் தொழிற்புரட்சிக்குப் பின் ஏற்பட்ட வளர்ச்சியே ஏகாதிபத்தியம் உருவாக அடித்தளம் அமைத்தது. தொழிற்புரட்சிக்குப் பின் உற்பத்தி  அபரி மிதமாகியது; எனவே சந்தையை விரிவாக்கும் தேவை யும் ஏற்பட்டது. ஏகபோக நிறுவனங்கள் உருவாகின.  குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் உலகின் பல்வேறு தொழில் நிறுவனங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தன. ஒரே தொழிலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். பல்வேறு தொழில்களை ஒருசேர நடத்தினார்கள். இதன் அரசாங்க வடிவமா கவே ஏகாதிபத்தியமும் உருப்பெற்றது.

ஏகபோக நிறுவனங்களின் உற்பத்தி சரக்குகளை விநியோகிக்க புதிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல வும், மலிவு விலையில் மூலப் பொருட்களைப் பெறுவ தற்கும்போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகள் வளர்ந்தன. ஐரோப்பாவில் இருந்து ஆசியா, அமெ ரிக்கா நோக்கிய பாதைகள் கண்டறியப்பட்டன. பின் மெல்ல மெல்ல புதிய பகுதிகளை  கைப்பற்றும் ஆதிக்க மும் விரிவடைந்தது.  பல்வேறுபட்ட தொழில்களிலும் கிளை பரப்பிய ஏகபோக நிறுவனங்கள் சந்தையிலும் ஆதிக்கம் செய்தன. போட்டிக்குப் பதிலாக ஆதிக்கம் உருவா னதால் அது லாபக் குவிப்பை மேலும் பெருக்கியது. நாடுகளிடையேயான யுத்தங்களும் ஏகாதிபத்திய காலகட்டத்தின் பிரதான அம்சங்கள் ஆகும். அமெ ரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் இப்போதும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்தியை பிரதான மாக மேற்கொள்கிறார்கள். அதிலிருந்து லாபம் குவிக்கிறார்கள். அதனால்தான் இரண்டு உலகப் போர்களும், அதைத் தொடர்ந்து சமீப காலங்களில் நாம் பார்த்துவரும் ஏராளமான பிராந்திய மோதல்க ளும், போர்களும் தொடர்கதையாக உள்ளன. 

ஆதிக்கமும் சுரண்டலும்


‘ஏகாதிபத்தியம்’ தன் ஆதிக்கத்திற்கு உள்ளான  நாட்டின் சுதந்திரம், இறையாண்மை உள்ளிட்டவை களை பறித்துவிடுகிறது.  அடிமைப்படுத்தப்பட்ட நாட்டின் இயற்கை வளங்களையும், மூலப் பொருட்களையும் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் ஆதிக்கம் செய்வ தோடு, மக்கள் மீதான அரசியல் ஆதிக்கத்தையும் நிலைநாட்டுகிறது.  1917 ஆம் ஆண்டிலேயே மாமேதை லெனின், முத லாளித்துவம் எவ்வாறு விரிவடைந்தது; ஏகபோகமாக மாறியது என்பதை விளக்கியுள்ளார். அது இப்போ தும் பொருத்தமானதே.  ஏகாதிபத்தியமும், ஏகபோகமும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்தடுத்து உருவாக்குகின்றன. பொருளாதாரத்தில் மந்த நிலையும், விலையேற்றமும் உருவாகின்றன. உலகப் பொருளாதாரத்தில் 1970  களில் தொடங்கிய நெருக்கடி சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது. இதனை சமாளிக்க மீண்டும் ஏகபோகங்கள் புதிய சந்தைகளைத் தேடி ஓடினார்கள். 1980களில் இருந்து, பன்னாட்டு நிறுவனங்களே உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்திகளாக இருந்தன. அந்நிய மூலதனம் என்பது உலகமெங்கும் முன் காணாத விகிதத்தில் அதிகரித்தது. 

1980 - 2008 வரையிலான காலகட்டத்தில் பன்னாட்டு  நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து  82 ஆயிரமாக அதிகரித்தது. 2017 ஆம் ஆண்டில், உலகின் மொத்தம் 60 சதவீத நிறுவன சொத்துக்க ளும், 60 சதவீத விற்பனையும் கொண்ட 100 நிதி யல்லாத நிறுவனங்கள் பன்னாட்டுச் செயல்பாடு கொண்டவையாக இருந்தன. அந்த நிறுவனங்களு டைய மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் பேர் அந்நியர்களாக இருந்தார்கள். இந்திய பெருமுதலாளிகளும் இதே போன்ற நிலையை எட்டியுள்ளார்கள். உதாரணமாக, டாடா குழுமம் தற்போது 100 நாடுகளில் செயல்படுகிறது. அதன் மொத்த சொத்து மதிப்பு 23.6 லட்சம் கோடி ரூபாய்களாக உள்ளது. டாடா நிறுவனங்களில் 9 லட்சத்து 35 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.   அம்பானி குழுமத்தின் தோராய மதிப்பு 7 லட்சம் கோடி  ரூபாய்களாக உள்ளது. அதுவும் 100 நாடுகளில் கால் பதித்துள்ளது. 3 லட்சத்து 42 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அதானி குழுமம் 15 லட்சம் கோடி ரூபாய்களாக உள்ளது . 23 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

1980 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய 28000 நிறுவனங்களது லாபம் 2 லட்சம் கோடி  டாலராக இருந்து 7.2 லட்சம் கோடி டாலர்களாக பல்கிப் பெருகியது. மொத்த உலக உற்பத்தியில் இது 7.6 சதவீதமாக இருந்தது, சுமார் 10 சதவீதமாகியது. 

நவீன தாராளமய மேலாதிக்கம் 

நவீன தாராளமய காலம், முழுமையான ஏகாதி பத்தியத்தை நோக்கி நகரும் முதலாளித்துவம் வர லாற்று ரீதியான கட்டமே ஆகும். இந்த காலகட்டத்தில் நிதி மூலதனம் உலகம் முழுவதும் வலம் வரத் தொடங்கியது. நிதி மூலதனத்தின் காரணமாக ஊக நடைமுறைகள் பெருகின. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மென்மேலும் அதிகரித்தது.  இந்த வரலாற்றுக் கட்டத்தில் அது ஏகபோக மூல தனத்தை நிதி வடிவம் பெறச் செய்திருப்பதுடன், பொருளாதாரத்தை உலகம் தழுவியதாக மாற்றி யுள்ளது. அதன் 5 அம்சங்களை நாம் கீழ்க்கண்ட வாறு பார்க்கலாம்:

1) உற்பத்தியும் விநியோகமும் புதிய ஏகபோக வடிவத்தை எடுத்துள்ளது. உலகின் பல பகுதிகளி லும் உற்பத்தி நடவடிக்கை ஒருசேர சில குறிப்பிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் முன்னெடுக் கப்படுவதுடன், உலகம் தழுவிய சந்தையும் அதனோடு இணைவதன் காரணமாக மூலதனத் தின் குவிப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது. மாபெரும் சர்வதேச ஏகபோக நிறுவனங்கள் உரு வாகியுள்ளன. அவற்றின் சொத்துக்களைக் கணக் கிட்டால், சில நாடுகளுடைய பொருளாதாரத்தின் மொத்த மதிப்புக்கு ஈடாக உள்ளன.

2) ஏகபோகம் நிதி மூலதனத்தின் வடிவத்தை எடுத்தி ருப்பதால், உலக பொருளாதார வாழ்க்கையிலும் அது பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. பொருளா தாரத்தில் நிதியே ஆதிக்கம் செலுத்துகிறது. வளர்ச்சியைச் சிதைக்கிறது.

3) அமெரிக்க டாலரும், அறிவுசார் சொத்துக்களும் ஏகபோகமாக ஆக்கப்பட்டுள்ளதால், சர்வதேச உற வுகளும், உழைப்புப் பிரிவினையும் ஏற்றத்தாழ்வாக மாறியுள்ளன. மறுவிநியோகமும் பாதிக்கப்படுகிறது.

4) புதிய ஏகபோகங்கள் சர்வதேச அளவில் தங்களுக் குள்ளான ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டுள் ளார்கள். அவ்வாறு அமைந்த தன்னலக் குழுக் களும், மேலாதிக்கம் செலுத்தும் ஓர் ஆட்சி யாளர், அவரோடு கைகோர்த்த பல பெரும் சக்தி கள் என்ற விதத்தில் சுரண்டலும், ஒடுக்குமுறையும் தீவிரமாகிறது.

5) இறுதியாக, முதலாளித்துவம் உலகமயமான கார ணத்தினால் அதன் உள் முரண்பாடுகள் பல்வேறு  நெருக்கடிகளை உருவாக்குகின்றன. எனவே அது மென்மேலும் ஏகபோகமாகிறது; மக்களை ஒட்டச் சுரண்டுகிறது, ஆதிக்கம் பெறுவதன் மூலம் மோசடி களை முன்னெடுக்கிறது. ஒட்டுண்ணியாகவும் அழுகல் நிலையிலும் உள்ளது. 

உலகத்தின் மொத்த உழைக்கும் சக்தி 1980 ஆம் ஆண்டுவாக்கில் 190 கோடிப் பேராக இருந்தது.  2007 காலகட்டத்தில் 310 கோடியாக அதிகரித்தது. இந்த உழைப்புச் சக்தியில் 73 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள். இந்தியா, சீனாவில் மட்டும் கணக்கிட்டாலே 40 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களால் உருவாக்கப்படும் செல்வம் இப்போதும் ஏகாதிபத்திய நாடுகளிடமே குவிகிறது. உழைக்கும் மக்களை கசக்கிப் பிழியவும், வளரும் நாடுகளின் கொள்கைகளை வளைக்கவும் ஏகாதிபத்தி யத்தால் இப்போதும் முடிகிறது. அதற்கு நவீன தாராளமயம் வழிவகுக்கிறது.

நெருக்கடியும், சுரண்டலும்

உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி தொடர்ந்து சரிவதன் காரணமாக, பல்வேறு ‘நிதி சார்ந்த’ திட்டங்கள் உருவாக்கப்பட்டு, கடன் வழியாக மக்களின் வாங்கும் சக்தி செயற்கையாக அதிகரிக்கப்பட்டது.  இதன் காரணமாகவே 2008 அமெரிக்கப் பொருளாதார மந்த நிலை உருவானது.அது உலகம் முழுவதுமே அதிர்வலைகளை உருவாக்கியது. பல நாடுகளை திவாலாக்கியது. 1987 ஆம் ஆண்டில் 11 லட்சம் கோடி டாலர் களாக இருந்த சர்வதேசக் கடன் சந்தையின் மதிப்பு 48 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்திருக்கிறது.  அதே சமயத்தில் சர்வதேசச் சந்தையின் மீது தங்க ளுக்குள்ள ஆதிக்கத்தைப் பயன்படுத்தி அதீத லாபம்  குவிப்பதை ஏகாதிபத்திய நாடுகள் தொடர்கின்றன. முக்கியமான சரக்குகளை தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்துள்ளன. பொதுச் சொத்துக்களை தனியார்மயப் படுத்தச் செய்கிறார்கள். அதற்கு தேவையான கொள்கைத் தலையீடுகளை மேற்கொள்கிறார்கள். வலிமையான மையத்தில் அதிகாரக் குவிப்பும், வலிமை குன்றிய விளிம்புகளும் தொடர்கின்றன. அதா வது வெறும் 85 பெரும் பணக்காரர் களுடைய சொத்துக் களை கூட்டினால் அந்த தொகை 350 கோடி நடுத்தர மக்களின் ஒட்டுமொத்த சொத்துக்கு ஈடாக உள்ளது.

போலித்தனம்,  பொய் முன்னெடுப்பு 

தோழர் லெனின் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஏகாதிபத்தியம் என்பது ஒட்டுண்ணி வகைப்பட்டதும், அழுகிக் கொண்டிருப்பதுமே ஆகும். உலகம் முழுவ துமே அது  பொருளாதார, அரசியல், பண்பாடு மற்றும் ராணுவ முனைகளில் போலித்தனங்களையும், பொய்க ளையும் தொடர்ந்து முன்னெடுக்கிறது.  நவீன தாராளமயம் என்பது ஏகபோக முதலாளித்து வத்தின் விளைச்சலே. அதனால்  உருவாக்கப்பட்டு வரும் உலகம், சாமானிய மக்களுக்கு சவால் நிறைந்தது.  சுரண்டல் மென்மேலும் அதிகரிக்க, நெருக் கடி மேகங்கள் சூழ்வதுமான இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அதனை எதிர்கொள்ள வேண்டுமானால் தொழிலாளி வர்க்க அரசியலை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.  இந்தியாவில் பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதர வாக மதவாதமும் சாதியவாதமும் துணைபோகும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகள் அதை தங்களுக்கு சாதக மாக பயன்படுத்திக் கொள்வதில் சற்றும் சுணக்கம் காட்டவில்லை.ஆகவே இன்றைய தொழிலாளி வர்க்கம், ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள், மூல தனத்தை எதிர்த்துப் போராடுகிற போது, சுரண்டலை எதிர்த்துப் போராடுகிற போது, மதவாதத்தையும் சாதிய வாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதுதான்  இன்றைய இந்திய சூழ்நிலைமைக்கு பொருத்தமானது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 

மதவாதமும் சாதியவாதமும், உலகத்தொழி லாளர்களே ஒன்றுசேருங்கள் என மார்க்ஸ் விடுத்த அழைப்பினை நிராகரிப்பவையாகும். மதத்தாலும் சாதியாலும் மக்களைப் பிரிப்பது இன்றைய பெரு முத லாளிகளுக்கு தேவைப்படுகிறது.பாட்டாளி மக்கள் ஒன்றுசேராமல் இருப்பதையே ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் செய்து வருகிறது.  ஒருபுறம் பெரும் முதலாளிகளின் மூலதனக்குவிப்பு க்கு சாமரம் வீசுவது; மறுபுறம் அதை எதிர்க்கும் மக்களை பிளவுபடுத்துவது என கார்ப்பரேட் மதவெறி கூட்டணியின் நிகழ்ச்சி நிரலை இந்தியாவில் முன்னெடுத்துச் செல்லும் ஆர்எஸ்எஸ்-பாஜகவை தனிமைப்படுத்தி, ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்த்து வதே, மூலதனச்சுரண்டலுக்கு எதிரான இந்தியக் கடமையின் தற்போதைய முதன்மைப்பணி ஆகும்.

கட்டுரையாளர் : மூத்த தலைவர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)