articles

img

எது தேசப்பற்று? - நீடா சுப்பையா

தில்லி இந்தியா கேட்டில் உருவாக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம் இந்தியாவின் முப்படைகளுக்கான முதல் போர் நினைவு சின்னம் ஆகும். இந்திய அரசியலமைப்பில் பிரிவு 53-இன்படி முப்படைகளின் தலைமைத் தளபதியான  நாட்டின் குடியரசுத் தலைவர்தான் முப்படைகளுக்கான நாட்டின் முதல் போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்திருக்க வேண்டும். இதன் தார்மீக நெறியை  அலட்சியப்படுத்திவிட்டு 25.2.2019 அன்று தேசிய போர் நினைவுச்சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடியின் உரையில்  பெரும் பகுதி கட்சி அரசியலாகவே இருந்தது. 

கவர்ச்சிகர தேசியவெறி

அனைத்து நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகளை யும் புறந்தள்ளி  எதேச்சதிகார ஆணவத்தோடு ராணுவ பலத்தை மட்டும் போற்றும் நாடக பாணியி லான அலங்கார உரை வீச்சால் பெருமிதம் கொள்வது தான் கவர்ச்சிகர தேசிய வெறியாகும். மோடியின் அன்றைய உரை அப்படித்தான் இருந்தது. இந்திய வீரர்களின் துணிச்சலால் ‘புதிய இந்தியா’ சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று அப்போது மோடி பேசினார். விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தம் உள்ளிட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழல் வழக்குகளில் ஈடுபட்ட தலைவர்கள்தான் ரஃபேல் கொள்முதலை நிறுத்தியதாக மறைமுகமாக மோடி குற்றம் சாட்டினார். ராணுவத்திற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று முந்தைய அரசை தாக்கிப் பேசினார். நமது வீரர்களின் தியாகத்தின் பெயரால் தேசிய வெறியை விசிறிவிடும் சாகசமான அரசியல் பிரச்சாரமாக அவரது உரை இருந்தது.  அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் திறப்பு விழாவின் அந்த தருணத்தில் அங்கிருந்த மக்களுக்கும் பெரும் பாலான பாதுகாப்புப் படையினருக்கும் சங்கடத்தை யும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  மீடியாக்களில் பார்த்த ஓய்வு பெற்ற முன்னாள்  படைவீரர்களுக்கு கோபத்தையும் உருவாக்கியது. அவர்களது அதிருப்தியிலும் கோபத்திலும்தான் உண்மையான நாட்டுப்பற்று இருந்தது. 

20 நினைவுச் சின்னங்கள்

19வது நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உள்பட ஏராளமான ஆயுத மோதல்கள் போர்களின்  நினைவுச் சின்னங்கள் இந்தியாவிலும் இந்திய வீரர்கள் பங்கேற்ற வெளிநாட்டு  போர்களின் நினைவு சின்னங்கள் பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரிலும் உள்ளன. சிங்கப்பூர் எஸ்பிளனேட் பூங்காவில் உள்ள முன்னாள் இந்திய தேசிய இராணுவ (ஐஎன்ஏ) நினைவுச்சின்னம், இம்பால் போர் கல்லறை, இந்தி்யா கேட் போர் நினைவு சின்னம், ஜார்க்கண்ட் போர் நினைவுச் சின்னம், திராஸ் நகரில் உள்ள கார்கில்  நினைவுச் சின்னம், டேராடூன் காளங்கா போர் சின்னம், புனே யில் உள்ள கிர்கி போர் கல்லறை, திருச்சிராப்பள்ளி காந்தி சந்தைக்கு எதிரே அமைந்துள்ள உலகப் போர் திருச்சி வீரர்கள் நினைவிடம்,  புனே நகரில் உள்ள சதர்ன் கமாண்ட் தேசிய போர் நினைவுச் சின்னம், விசாகப்பட்டினம் கடல் வெற்றி நினைவுச் சின்னம் என இந்திய வீரர்களின் இருபது போர் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு நினைவுச் சின்னங்களுக்கும் தனித்தனி நோக்கங்க ளும் வரலாற்றுப் பின்னணியும் உண்டு. 

அமர்ஜவான் ஜோதி

1971 இந்திய-பாகிஸ்தான் போரில்  உயிர் நீத்த 1400 தியாகிகளின் நினைவாக அமர் ஜவான் ஜோதி கட்டப்பட்டு  1972 இல் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு இருக்கும் எல்.1ஏ.1 தானியங்கி ரைபிளும் அதன் பாய்னெட்டும் அதன் மேல் இருக்கும் தொப்பியும் ஜெஸ்ஸோர் செக்டாரில் போரிட்டு மரணமடைந்த ஒரு இந்திய வீரரின் நினைவாக வைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகே  எரிந்து கொண்டிருந்த அணையா ஜோதியை தான் 21.1.2022 அன்று மோடி அரசு அணைத்துவி்ட்டது. நினைவுச் சின்னம் மட்டும் அங்கேயே உள்ளது.  மோடியின் இந்நடவடிக்கை வரலாற்றையும் அதன் நோக்கத்தையும் குறை மதிப்பிற்கு உட்படுத்திய எதேச்சதிகார செயலாகும். 

“இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி சுடர் அணைக்கப்படவில்லை, அது தேசிய போர் நினை வகத்தில் உள்ள சுடருடன் இணைக்கப்படுகிறது,” என்று வார்த்தை ஜாலங்களால் மோடி அரசு மறைக்க முயன்றது. ராமாயண, மகாபாரத கதைகளில் வரும் கற்பனை அம்பின் நுனி ஜுவாலை பறந்து சென்று பற்றவைத்து எரிப்பதை போல சாதுர்ய வித்தை இதிலும் பயன்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஜி. திவேதி கூறுகையில், சுடர் பற்றிய சர்ச்சையை நிறுத்த வேண்டும், ஏனென்றால் இந்திய வீரர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கௌரவிக்கும் இரண்டு தீப்பிழம்புகள் இருக்க முடியாது என்று கூறி தனது வரலாற்று விலாசத்தை காட்டிக்கொண்டார். இந்தியா கேட்டில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி ட்வீட் செய்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர முயன்றார். இவை எல்லாம் உண்மையான ஆர்எஸ்எஸ் சூழ்ச்சிகளின் உள்நோக்கத்தை வெளி உலகில் மறைக்கும் வேலைகளாக இருந்தன.  

எல்லாமே ஒற்றை...

சுதந்திரப் போராட்ட வரலாற்றை சிதைத்து திருத்தி புனைவது; ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கல்வி, ஒரே  நீதித்துறை,  தனியார் துறை உற்பத்தி யால் உருவாக்கப்பட்ட  ராணுவ  பலத்தின் மீது கட்டப் பட்ட ஒரே  சிந்தனை, புதிய  நாடாளுமன்ற கட்டிடம் என்ற வரிசையில்- இவை அனைத்தும்  ஒன்றுக்கொன்று அடிப்படையில் தொடர்பு உள்ளவைகளாகும். அந்த வரிசையில் நவீன கட்டிட எழிற்கலை கட்டுமா னத்தால்  செயற்கையாக உருவாக்கப்பட்ட நினைவு சி்ன்னமே நாட்டின் ஒரே வரலாற்று நினைவுச் சின்னமாக மாற்றப்படுவதற்கான முயற்சி இன்று  துவக்கப்பட்டுள் ளது. தனித்தனியான ஒவ்வொரு வரலாற்று  நிகழ்வு களையும் சிறப்புகளையும் பாதுகாப்பதற்கு பதிலாக திருத்தி, திரித்து, இணைத்து துண்டித்து உரு வாக்குவதுதான் தேசிய வெறியின் அரசியல் வெளிப்பாடு என்பதை நாம் அறிவோம். 

இந்திய அரசியலமைப்பில் பிரிவு 53-இன்படி   முப்படைகளின்  தலைமை தளபதியான நாட்டின் குடியரசுத் தலைவர் முப்படைகளுக்கென தனித்தனி தேசிய கமாண்ட் தலைமையகங்கள், பிராந்திய கமாண்ட் தலைமையகங்கள்,  பாதுகாப்பு அமைச்ச கம் என்ற தெளிவான கட்டமைப்பு இருக்கும்போது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் என்ற அதிகார பொறுப்பை மோடி அரசு உருவாக்கி, ஜெனரல் பிபின் ராவத்தை நியமித்தது. இதுவும் ஒற்றை தலைமையை நோக்கிய இந்துத்துவா நகர்வா கும். 

அதேபோல, கூட்டாட்சி முறைமையின் மீது கட்டாரியை வீசும் வகையில், இந்திய ஆட்சிப்பணி, (கேடர்) விதிகள் 1954, விதி 6(1)ஐ திருத்துவதற்கான மோடி அரசின் முன்மொழிவு இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி(ஐபிஎஸ்) மற்றும் இந்திய வனத்துறைப்பணி (ஐஎப்எஸ்) உயர் பதவிக ளில் இந்துத்துவா ப்ரோகிராம் செய்யப்பட்ட அண்ணா மலை மூளைகளை கேரளா, தமிழ்நாடு போன்ற மாநி லங்களில் திணிப்பதற்கான ஆக்கிரமிப்பே ஆகும். ஒட்டுமொத்தத்தில் இந்திய மக்கள் புனிதமென கருதும் அரசியல் சாசனத்தின் அருமைகளையும் சுதந்திரப் போராட்ட வேள்வியில் பிறந்த எல்லா மாண்புகளை யும் சிதைப்பதே இந்துத்துவாவின் நோக்கமாகும். 

உண்மையான தேசப்பற்று...

சுயசார்புள்ள முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத் தில் இந்திய மக்கள் நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ  நாட்டிக்கல் நிறுவனம் மற்றும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ஏடிஏ) வடிவமைத்த முதல் இந்திய மல்டிரோல்  சண்டை விமானம் ‘தேஜஸ்’, தனது முதல் சோதனை பறத்தலுக்கு 4.1.2001 காலை 10.18 மணிக்கு பெங்களுர் எச்ஏஎல் விமான ஓடுதளத்திலிருந்து விண்ணில் எழும்பியது. பதினெட்டு நிமிட வெற்றிகரமான  சோதனை பறத்தலுக்குபின் நீண்ட ஓடுதளத்தில் வந்திறங்கி ஓடி இறுதியில் விமானம் நின்றது. அதன் பைலட் விங் கமாண்டர் ராஜீவ் கத்யால் தனது காக்பிட் அறையிலிருந்து வெளியே வந்து விமான தளத்தை சுற்றியிருநத கட்டிடங்களின் கூரைகளில் நிரம்பி வழிந்து பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நோக்கி மகிழ்ச்சியோடு கையசைத்தார். நாட்டின் சொந்த உற்பத்திக் கட்டுமானத்திலிருந்து பிறந்த சாதனை அது. அப்போது எழுந்த மகிழ்ச்சியிலும் ஆரவாரத்திலும்தான் உண்மையான தேசப்பற்று பொங்கி வழிந்தது. மக்கள் வரிப்பணத்தில் சர்வதேச சந்தையில் வாங்கிய விமான பறத்தலில் அது எவ்வளவு தான்  நவீனமாக இருந்தாலும் இதை நாம் உணர முடியாது. நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை, கல்வி, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட சகல துறைகளின் பொது உற்பத்தித்துறை வளர்ச்சியோடு இணைந்து செல்லும் அடிப்படைப் பெருமித உணர்வு தான் தேசப்பற்றாகும்.

நாட்டின் பெருமைமிகு வரலாற்றை, தியாகங்க ளை உண்மையாகப் போற்றி பாதுகாக்கும் உன்னத உணர்வும் இதுதான். சுதந்தி்ரப் போராட்ட  வேள்விக்கு தங்களைத் தந்து கருகிய தியாக சீலர்களால் பிறந்தது தான் இந்திய சுதந்திரம். இதன் வரலாற்றிற்கு தொடர் பில்லாதவர்களிடம் அதன் மாண்புகளை எதிர்பார்க்க முடியாதுதான். மக்கள் 2024 இல் இதற்கான திட்டமான தீர்ப்பை இறுதியாக வழங்குவார்கள். தேசப்பற்றையும் தேசிய வெறியையும் இனம் பிரிக்கும் கோடு மிக மெல்லியது. இதை நாம் கவனமாக கண்டறிந்து வேறு படுத்தி பார்க்க வேண்டும்.




 

;