articles

img

விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்! - பி.கிருஷ்ண பிரசாத்

கேள்வி: 1991க்கு பிந்தைய நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்கம் என்ன? 2021 ஆம் ஆண்டு தலைநகர் தில்லியில் நடைபெற்ற ஒரு வருட போராட்டம் பாஜக அரசை பின்வாங்க  வைத்துள்ளது. அரசு முக்கிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றுக்கொண்டது. அரசு உறுதியளித்தபடி இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி விட்டதா? இல்லையெனில் விவசாய சங்கங் களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில்: 1991 ஆம் வருடத்திற்கு பிறகு நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இதுவரையிலும் 22 பொது வேலைநிறுத்தங்களை மத்திய தொழிற்சங்கங்கள் செய்துள்ளன. பிஎம்எஸ் தொழிற்சங்கத்தை தவிர ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இந்த  வேலை நிறுத்தங்களில் வெற்றிகரமாக கலந்து  கொண்டுள்ளன. கடைசியாக நடந்த வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழி லாளிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் தான்  இன்னும் பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாக விற்கப்படவில்லை. அரசு  இன்சூரன்ஸ் நிறு வனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. வங்கி, இரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல பொதுத் துறை நிறுவனங்கள் இன்னமும் பொதுத்துறை யாகவே தொடர்கின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைகளை மாறி, மாறி வந்த முதலாளித்துவ அரசு களால் நினைத்தபடி அமல்படுத்த முடியவில்லை. ஆனால், இந்திய நிலவுடைமையாளர்கள் (land  lords) நவீன தாராளமயக் கொள்கைகள், நிலவுரிமை யாளர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்று நம்பினார்கள். சர்வதேசச் சந்தையில் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு நல்ல  விலை கிடைக்கும் என்று சொல்லப்பட்ட பொய் வாக்குறுதிகளை நம்பினார்கள். அதனால் தான் இன்று வேளாண் துறையில் கார்ப்பரேட்களின் ஆதிக்கம் நிலவுவதற்கு காரணம்.

ஆனால் அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிலவுரிமையாளர்களை போராட்ட களத்திற்கு அழைத்தது. அவர்கள் எடுத்திருக்கும், நவீன தாராளமய ஆதரவு முடிவு தற்கொலை முடிவு என்று  எச்சரித்தது. இப்பொழுது தான் அவர்கள் புரிந்து கொண்டு போராட வரத் துவங்கியுள்ளார்கள். ஆனால், நவீன தாராளமயக் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்க்கையில் சொல்லொண்ணாத் துயரங்களை தந்துவிட்டது. விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் நிலங்களை விட்டு அப்புறப்படுத்தி, அவர்களை புலம்பெயரும் தொழி லாளர்களாக நகர்ப்புறங்களுக்கு தள்ளிவிட்டது. விளைநிலங்களை கையகப்படுத்துதல், குறைந்த பட்ச கொள்முதல் விலையை அமல்படுத்தாமை, பிரதமர் மோடி அவர்களால் முதன்மை திட்டமாக (Flagship) அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்ட பசல் பீமா யோஜனா திட்டம் தோற்றுப்போனது, அத னால் பருவம் தப்பி பெய்யும் மழைகளால், வறட்சி யால் ஏற்படும் நஷ்டம்- இவையெல்லாம் விவசாயி களையும் விவசாயத் தொழிலாளர்களையும் புலம் பெயரும் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது. இந்தியா வில் 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி, 9 கோடி விவசாயிகள் தான் உள்ளனர். 11 கோடி விவசாயத் தொழி லாளர்கள் உள்ளனர். ஆனால் 23 கோடி பேர் புலம்பெயரும் தொழிலாளியாக உள்ளனர்.

இந்த பெரும் எண்ணிக்கையிலான புலம்பெய ரும் தொழிலாளர்களால், ஒட்டுமொத்த தொழிலாளர் களுக்கு, நிரந்தர வேலை என்பது பறிபோய்விட்டது. அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களாக, பென்ஷன், கிராஜூவிட்டி உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களெல்லாம் பறிக்கப்பட்டுள்ளன. ஆக, புதிய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயி களின் பிரச்சனைகளைத் தனியாகவும்,தொழில்துறை தொழிலாளர்களின் பிரச்சனையை தனியாகவும் பார்க்க முடியாது. எனவே, விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், தொழில்துறை தொழிலாளர் களும் இணைந்து தான் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பாஜக அரசு தில்லி போராட்டக் களத்தில் ஒப்புக் கொண்ட அம்சங்களை எதுவும் அமல்படுத்த விரும்ப வில்லை. குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.2800/- கோரிக்கை. கேரளாவைத் தவிர வேறு எந்த இந்திய மாநிலத்திலும் இந்த ஒப்புக் கொண்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை தரவில்லை. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 1100 முதல்  1800 வரை தான் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களைத் தான் மோடி  அரசு ஆதரிக்கிறது; அவர்களுக்காக நல்ல நிலங் களை சரியான இழப்பீடுகள் கூட இல்லாமல் பிடுங்கித் தருகிறது. ஆக இதற்கெதிரான போராட்டங்கள் நிச்சயம் தொடரும்.அனைத்து விவசாய சங்கங்களிடமும் பேச்சு வார்த்தையினை அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்திக் கொண்டுள்ளது.

தில்லியில் ஒரு வருடம் நடைபெற்ற, பாஜக கொள்கைகளுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தவுடன் நடைபெற்ற தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக-வுக்கு மரண அடி மக்கள் கொடுத்தனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருகிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? 

பதில்: இது மிகப்பெரிய கேள்வியாக இந்தியா முழுவதும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிப்பதற்கு முன்னால், இந்த ஒரு வருட விவசாயிகளின் போராட்டத் தின் குணாம்சம் என்ன? இந்த போராட்டத்தின் மையப்பகுதி எங்கிருந்தது? என்ற கேள்விகளுக்கு முதலில் விடை பெறுவோம். இந்த போராட்டம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிகப் பெரிய போராட்டம் மட்டுமல்ல, மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுத்  தந்தது. ஆனால் போராட்டத் தின் மையப்பகுதி பஞ்சாப். போராட்டத்திற்கு பெரு மளவில் கலந்து கொண்டவர்கள் பஞ்சாப், ஹரியானா  மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள விவ சாயிகள் மட்டுமே. கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிர தேசத்தில் இருந்து விவசாயிகள் யாரும் வரவில்லை. ஏன்... இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கூட  யாரும் வந்து பங்கேற்கவில்லை. வெறும் ஆதர வாளர்களாக மட்டுமே இருந்தனர். அதற்கு காரணம் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இந்த மூன்று இடங்களில் மட்டுமே அதிகம். இந்த மூன்று  இடங்களில் மட்டுமே ரூ. 2,100 என்று இருந்தது. மேற்கு உத்தரப்பிரதேசத்தைத் தவிர மற்ற இடங்களில் மிகவும் குறைவு. உ.பி. முதல்வர் தொகுதியான கோரக்பூர் தொகுதியில் கூட குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1100 மட்டுமே. பீகாரில் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.800 மட்டுமே. எனவே தான் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து மட்டுமே பெருமளவில் விவசாயிகள் ஒரு வருட போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

எந்தெந்த பகுதிகளில் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி னார்களோ, அந்த இடங்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் வாக்கு விகிதம் 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.  போராட்டம் நடத்தாத இடங்களில் விவசாயிகள் இந்துத்துவ, பாசிச அமைப்புகளின் பொய் பிரச்சாரத்திற்கு பிரிவினைவாத கருத்துகளுக்கு இரையாகிறார்கள். 

முன்பு ‘நிலச்சீர்திருத்தம்’ என்பது இடதுசாரிகள் முன்வைத்த முக்கிய முழக்கமாக இருந்தது.  கம்யூனிஸ்டுகள் தலைமையில் அமைந்த மாநில அரசுகள், ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற கொள்கையின்பால் நின்று, மிகச் சிறப்பான முறையில் நில விநியோகத்தைச் செயல்படுத்தி யதும் ஒரு மகத்தான சாதனையாக உணரப் பட்டது. ஆனால், இன்று ஆட்சியாளர்கள் ‘நிலம் கையகப்படுத்தல்’ என்பதற்கான நடவடிக்கை யை மிகுந்த முனைப்புடன் மேற்கொண்டு வரு கிறார்கள். ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் விவ சாயிகள் பலவந்தமாக அவர்கள் நிலத்தைவிட்டு வெளியேற்றப்படுகிற கொடுமை நாட்டின் பல பகுதிகளிலும் நிலவுகிறது. இத்தகைய மாறுபட்ட சூழலை எவ்வாறு எதிர்கொள்வது? 

பதில்: ‘நிலச் சீர்திருத்தம்’ என்பது சென்ற நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் இயல்பான வளர்ச்சிக்கே அவசியமான ஒரு கருவியாகக் கருதப்பட்டது.  இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில், ஏன் அமெரிக்காவிலும் கூட, நிலச்சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் வெற்றிகர மாக முன்னெடுக்கப்பட்டன.  ஜப்பான் நாடு, இரண்டாம் உலகப்போர் தோல்விக்குப் பிறகு, தனது பொருளாதாரத்தை மறு கட்டுமானம் செய்வதற்கென எடுத்துவைத்த முதல் அடி, நிலச்சீர்திருத்தம் தான் என்பதையும் இங்கே குறிப்பிடலாம்.   நிலவுடைமையாளர்களின் பிடியிலிருந்து விவசாயிகள் விடுவிக்கப்பட்டு, அவர்களிடமே நிலம் ஒப்படைக்கப்பட்டால், வேளாண் பொருள் உற்பத்தி பெருமளவு அதிகரிக்கும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தோட்டமாக இருந்தது.  இந்தியாவில் நிலச்சீர்திருத்தத்திற்கான பெரும் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் நடத்தியதன் விளைவாக நிலக் குவியல் பெருமளவு தகர்க்கப்பட்டதும், கிராமங்களில் நிலப்பிரபுக்களின் வரைமுறையற்ற மேலாதிக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதும் நிகழ்ந்தது. விவசாயி களின் வாழ்வு நிலையிலும் மாற்றம் உருவாயிற்று.

ஆனால் இன்று நீங்கள் கேள்வியிலேயே குறிப்பிட்ட படி, ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் விவசாயி களின் நிலங்கள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கையகப் படுத்தப்படும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள் ளது.  ஆட்சியாளர்களின் முழுமையான வரவேற் போடு இந்தியாவுக்குள் நுழையும் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களின் தேவைக்காக விவசாயிகள் பந்தாடப் படும் நிலைமை உருவாகியுள்ளது.  இதை எதிர்ப்பவர் கள் யாவரும் ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.  ஆனால் இவர்கள் சொல்லும் வளர்ச்சி ‘யாருடையது?’ என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.  நிச்சயமாக இது நாட்டின் மிகப் பெரும்பான்மையினராக உள்ள  சாதாரண, நடுத்தர மக்களின் வளர்ச்சி அல்ல. மூலதனக் குவியலை உருவாக்கியுள்ள இந்த வளர்ச்சி,  உலகம் முழுவதும் ஆளுமை செலுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெருமுதலாளி களுக்கான வளர்ச்சி. அம்பானிகளையும், அதானி களையும் உருவாக்கி, அவர்தம் செல்வச் செழிப்புக்கு வித்திடும் வளர்ச்சி. ஆட்சியாளர்களால் அரங்கேற்றப் படும் இத்தகைய போக்கு, நாட்டின் இயல்பான முன்னேற்றத்திற்கும், ஜனநாயகச் செயல்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கக் கூடியது.  விவசாயிகளிடமிருந்து நிலம் பறிக்கப்படுவது, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் எதிரானது.  நிலங்களி லிருந்து வெளியேற்றப்படும் விவசாயிகள், இடம்பெயர் தொழிலாளர்களாக மாறி, தொழிலாளர் சந்தையில் மிகக்குறைந்த கூலியுடன் உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். விவசாயிகள் காலம் காலமாக தங்கள் சொந்த நிலத்தில் உழுது பயிரிட்டு  வருமானம் ஈட்டி வந்ததிலிருந்து அகற்றப்பட்டு, கூலித்  தொழிலாளர்களாக ஊர் ஊராய் அலைக்கழிக்கப் படுவதை ‘வளர்ச்சி’ என்று எப்படி வர்ணிக்க இயலும்?  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் வளர்ச்சியை யும், கோடானுகோடி மக்களுக்கு வீழ்ச்சியையும் தரும் பாஜக அரசின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றுசேர வேண்டும்.  ஒன்றுபட்ட, வலிமையான போராட்டங் களின் மூலம் தான் இத்தகைய போக்குகளைத் தடுத்த நிறுத்த முடியும்.

    அடுத்த ஆண்டு இந்தியாவின் மக்களவைக்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போர்க்களத்தில் ஈடுபட்டுள்ள தமிழக உழைக்கும் மக்களுக்குத் தாங்கள் விடுக்கும் செய்தி என்ன?

பதில்: தமிழ்நாடு சமூக, பண்பாட்டு ரீதியாகத் தனித்துவமிக்க வரலாற்றையும், விழுமியங்களையும் கொண்டுள்ள ஒரு மாநிலம்.  மிக நீண்ட பாரம் பரியத்துடன் சமூக சீர்திருத்த முன்னெடுப்பு நடை பெற்ற தமிழக மண்ணில் திராவிட இயக்கம், சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும், சமூக நீதியை வலி யுறுத்தியும் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர் களின் வழிகாட்டுதலோடு பல இயக்கங்களை நடத்தி யுள்ளது.  இது போன்றே, பொதுவுடைமை இயக்க மும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்த காலத்தி லேயே உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி மகத்தான  களப்பணிகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளது. தோழர் சீனிவாசராவ் போன்ற தலைவர்களின் பெருமுயற்சியால் காவிரி  டெல்டா பகுதியில் பல நூற்றாண்டு காலமாகத் தலை விரித்தாடிய பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டு, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ஒரு  கௌரவமான, சுயமரியாதையுடன் கூடிய வாழ்வைப் பெற முடிந்தது.  கீழவெண்மணியில் 44 தோழர்களின் உயிர்த்தியாகம் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

இதே போன்று கேரளமும் சாதியக் கொடுமை களுக்கு எதிராகவும், மனித நாகரிகத்திற்குப் புறம்பான பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக வும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய பெருமைக்குரியது.  ஸ்ரீ நாராயணகுரு, அய்யங்காளி ஆகியோர் துவக்கிவைத்த சமூக விடுதலைக்கான இந்தப் பணி,  அடுத்தகட்டமாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னெடுப்போடு பொருளாதார விடுதலைக்கான போராட்டமாக எழுச்சி பெற்றது.   இந்த வகையில் இரு மாநிலங்களும் சமூக  விழிப்புணர்வை நோக்கிய பயணத்தில் தேசத்திற்கே  முன்மாதிரியாய் விளங்கி வருகின்றன.  அண்மை யில் தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிகழ்விலும், வைக்கம் எழுச்சியின் 100-வது ஆண்டு துவக்க நிகழ்விலும் கேரள, தமிழக முதலமைச்சர்கள் இணைந்து பங்கேற்று, பரஸ்பர போராட்ட அனுபவங்களை நினைவுகூர்ந்தது குறிப்பிடத் தக்கது.  இத்தகைய பின்புலம் காரணமாகவே ஆர்எஸ்எஸ்-பாஜகவின் மதவெறி, பிரிவினை நிகழ்ச்சி நிரலை இரு மாநில மக்களும் ஒருசேரப்  புறக்கணித்து வருகிறார்கள் என்பதைப் பெரு மிதத்துடன் நாம் குறிப்பிட முடியும்.  இத்தகைய மத  நல்லிணக்கச் செயல்பாடு நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.  கர்நாடகத்தில் இப்போது அதற்கான பலன் கிட்டியுள்ளது.  இதன் மூலம் தென்னிந்தியா பாஜகவின் வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொள்ளாது என்கிற செய்தி வலுவாக உணர்த்தப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கும் சூழலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து வலிமையாகப் போராடு வதன் மூலம் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்.

நேர்காணல்/தொகுப்பு: 
வெ.ராகுல்ஜி, கடம்பவன மன்னன்.

;