வேலைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் வருமானங்கள் ஆகியவற்றின் பெரும் இழப்பு காரணமாக, உலகின் பெரும் பாலான நாடுகளில் பசி மற்றும் உணவுப் பாதுகாப் பின்மை கடுமையான அதிகரிப்பைக் கண்டுள்ளது. இன்று கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களின் எண்ணிக்கை, தொற்று நோய்க்கு முன்பு இருந்ததை விட இரு மடங்காக, அதாவது 276 மில்லியனாக (27.6 கோடி) அதிகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பின்மையில் பாலின இடை வெளியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021ஆம் ஆண்டில் உலகில் 31.9 சதவீத பெண்கள் உண வுப் பாதுகாப்பின்றி கடுமையான சூழலில் சிக்கினர். 27.6 சதவீத ஆண்கள், உணவுப் பாதுகாப்பின்றி உள்ள னர். சரிவிகித சத்துணவு இன்றி ஐந்து வயதுக்குட் பட்ட 149 மில்லியன் (14.9 கோடி) குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்.
பல பொருளாதார வல்லுனர்களும் நிதிநிறுவனங்க ளும் இன்றைய பொருளாதார மந்த நிலை என்பது மிகவும் மோசமானதாக உள்ளது என்று கூறுகின்ற னர். உலகளாவிய நுகர்வோர் நம்பிக்கை முந்தைய உலகளாவிய மந்த நிலையை விட கூர்மையான சரிவைக் கண்டுள்ளது.
77 சதவீதம் அதிகரித்த ரொட்டி விலை
இங்கிலாந்தில் 40 ஆண்டுகளில் முதல் முறையாக பணவீக்கம் 10 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. அமெ ரிக்காவிலும் இது கடந்த நாற்பது ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது. ஐரோப்பாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டில் ஒரு பிரட் பாக்கெட்டின் விலை 19 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹங்கேரியில் பிரட் பாக்கெட்டின் விலை கடந்தாண்டை விட 77 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு மற்றும் உண்மை ஊதியம் குறைவதன் காரணமாக தொழிலாளர்களின் வாழ்நிலை தேய்ந்து வருகிறது. உல கெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தீவிரப் பட்டினிக்கு தள்ளப்படுகின்றனர். பசி மற்றும் ஊட்டச் சத்துக் குறைவு என்பது அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளி லும் மோசமான நெருக்கடியின் தாக்கம் காணப்படுகி றது. நமது அண்டை நாடுகளான இலங்கை, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகரித்து வரும் வெளிநாட்டுக் கடன்களை எதிர்கொள்கின்றன. ஐஎம்எப் மற்றும் உலக வங்கி ஆகியவை இந்த நெருக்கடியை குறிப்பிடுகிற அதே வேளையில், அதை எதிர்கொள்ள அவை வழங்கும் அறிவுரைகள் எவையும் மக்களின் துயரங்களைத் தீர்க்க உதவவில்லை. மாறாக மக்கள் மீது துயரங்களை அதிகப்படுத்தியுள்ளன.
செல்வக்குவிப்பு- யாரிடம்?
இன்றைய உலக மக்கள் தொகையில் சரி பாதி ஏழை மக்களின் வருமானம் என்பது 1820களில் இருந்த நிலையை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உலக மொத்த வருவாயில் 52 சதவீதத்தை, உலக மக்கள் தொகையில் வெறும் 10 சதவீத செல்வந்தர் கள் தனதாக்கிக் கொள்கின்றனர். அதே சமயம் உலகின் ஏழைகளில் பாதிப் பேர் மொத்தத்தில் வெறும் 8.5 சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கப் பெறு கின்றனர். உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் மொத்தச் செல்வத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அதே சமயம் பெரும் பணக்கா ரர்களான 10 சதவீதம் பேர் மொத்தச் செல்வத்தில் 76 சதவீதம் வைத்திருக்கிறார்கள்.
தீவிரமடையும் வேலை பறிப்பு
பொருளாதார மந்தநிலை உருவாகி வருவதால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், செலவுகளைக் குறைப் பதற்கும், தங்கள் லாபத்தைப் பாதுகாப்பதற்கும் அல்லது மேலும் அதிகரிப்பதற்கும் பெரிய அளவில் தொழிலா ளர்களின் வேலைகளைக் குறைக்கத் திட்டமிடுகின்றன. அமெரிக்க பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 13 சதவீதம் வேலை நீக்கம் அறிவித்துள்ளதன் விளைவு, கடந்த 2020 அக்டோபரில் மட்டும் 33,843 தொழிலா ளர்கள் வேலையிழந்துள்ளனர். அமேசான், லேஆப் (வேலை பறிப்பு) அறிவித்து 20,000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தகவல் தொடர்புத் துறை யில் அமெரிக்க நிறுவனங்களில் முதல் ஐந்து நிறுவ னங்களில் ஒன்றான முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டா கிராம் போன்ற துணை நிறுவனங்களைக் கொண்ட மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை நீக்கியுள்ளது. அதே போன்று மைக்ரோசாப்ட் 1000 ஊழியர்கள்; ஊபர் 13 சதவீத ஊழியர்கள், ஓலாவும் தனது ஊழியர்களில் 35 சதவீத பேரை வெளியேற்றியுள்ளது. டிவிட்டரின் புது முதலாளியான உலக பணக்காரர்களில் ஒருவரான எலன்மஸ்க், டிவிட்டரை வாங்கியதும் அவரின் முதல் முடிவாக ஐம்பது சதவீத ஊழியர்களை வெளியே அனுப்பியதும்; மற்ற ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் கூடுதலான பணிகளை செய்ய வேண்டுமென்றும் ‘கட்டளை’யிட்டார். அவ்வாறு செய்ய இயலாத ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என்றும் மிரட்டினார். 1200 ஊழியர் கள் வெளியேறினர். மற்ற ஊழியர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள்.
தொழிலாளி வர்க்கத்தின் பதில்
இவ்வாறாக முதலாளித்துவம் தனது மூர்க்கமான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகளில் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க மற்றும் நீடித்த போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த முதலாளித்துவ சமூகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பலமுனைத் தாக்குதல்க ளுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் பதில் இதுதான். கடந்த காலத்தைப் போன்று இல்லாமல், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைக ளுக்காகவும் கடந்த முப்பது ஆண்டுகளாக அமல் படுத்தப்பட்ட நவீன தாராளமய நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மிகவும் வீரியத்துடன் வேலை நிறுத் தங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த காலகட்டத்தின் ஒரு தனிச்சிறப்பு என்ன வென்றால், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான போராட்டங்கள், அதே பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை- விலைவாசி உயர்வு, ஊதியங்கள், வேலை நிலைமைகள், அடிப்படை (தொழிற்சங்க) மற்றும் பணியிட உரிமைகள் போன்ற வற்றைக் கோரி ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. 1990களில் இருந்து உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்களின் அதிகரித்து வரும் கோபத்தை இது பிரதிபலிக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் வசம் உள்ள அனைத்து அதிகாரங்களையும், அடக்குமுறைகளையும் ஏவிய போதிலும் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் தொழி லாளர்கள் உறுதியுடன் தங்கள் போராட்டங்களைத் துணிச்சலாகத் தொடர்கின்றனர். தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கும் வரை காத்திருக்காமல் பல இடங்க ளில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் வெடிக் கின்றன. இது முதலாளிகளுக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே தீவிரமடைந்துள்ள முரண் பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
போராட்டமும் சரியான சித்தாந்தமும் இணைய வேண்டும்
எவ்வாறாயினும், தொழிலாளர்களின் இந்தப் போராட்டங்கள், தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக சமூக, பொருளா தார மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற மாயையில் நாம் இருக்க முடியாது. மாறாக, பெரிய போராட்டங்கள் நடைபெறும் நாடுகள் உட்பட உலகின் பல பகுதிக ளில் வலதுசாரி சக்திகள் வெற்றி பெற்று பல நாடுக ளில் ஆட்சிக்கு வருகின்றன. மக்களின் உடனடிக் கோரிக்கைகள் மட்டுமின்றி, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் நீடித்த மற்றும் போர்க்குணமிக்க போராட்டங்கள் சரியான புரிதலுடனும் சித்தாந்தத்துடனும் சரியான தலைமையின் கீழ் நடத்தப்பட்ட இடங்களில், மக்கள் இடதுசாரி மற்றும் முற்போக்கான அரசாங்கங்க ளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை இந்த அனுப வங்கள் காட்டுகின்றன. அத்தகைய முற்போக்கான கருத்தியல் தலைமை இல்லாத நிலையில், வலதுசாரி சக்திகள் அதே மதிப்பிழந்த கொள்கைகளை மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுத்தி வருகின்றன. அதே வேளை, இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பல நாடுகளில், வலது சாரிகள் மிகவும் சூழ்ச்சிகரமாக செயல்பட்டு, மக்க ளுக்கு ஆதரவான செயல்பாட்டில் தடைகளை உரு வாக்கி வருகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வலதுசாரி சக்திகளை முற்றாக வீழ்த்த வேண்டும்
வலதுசாரிகளை முழுமையாகத் தோற்கடிப்பதே இன்றைய தேவை என்பதை இந்த முன்னேற்றங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பொருளா தார நெருக்கடிகளுக்குக் காரணமான கொள்கைகளு க்கு எதிராகவும்; மக்களின் பிரச்சனைகள் மீதான நீடித்த கிளர்ச்சிப் பிரச்சாரத்துடன் தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை இணைப்பதன் மூலமும் மட்டுமே இதைச் செய்ய முடியும். இயல்பி லேயே சுரண்டும் முதலாளித்துவ அமைப்பின் கொள்கைகளையும் அவற்றின் பின்னணியில் உள்ள அரசியலையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் நாம் கற்றுக்கொண்டபடி, இது ஒரு கடினமான மற்றும் நீடித்த; ஆனால் மிகவும் அவசியமான போராட்டம் ஆகும். வலதுசாரி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியில் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ நாடுகளில் வாழும் மக்கள் படும் அதே துயரங்களை கொடுமைகளை இந்தியர்களும் அனுபவிக்கின்றனர். உலகளாவிய பசிக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 2021-இல் 121 நாடுகளில் இருந்து 2022-இல் 107 ஆக சரிந்துள்ளது.
2021-2022 ஐக்கிய நாடுகளின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 191 நாடுகளில் 132 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 131 ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஒரு இந்தியரின் ஆயுட்காலம் 69.7 வருடங்களாக இருந்தது. அது 2021-22இல் 67.2ஆக குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம். 146 நாடுகளில் இந்தியா 135ஆவது இடத்தில் உள்ளது என்று உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022 தெரிவிக்கிறது. உடல்நலம் மற்றும் உயிர் வாழும் துணைக் குறியீட்டை பொறுத்தவரை, இந்தியா மிகவும் கீழே, 146ஆவது இடத்தில் உள்ளது.
அதானியும் அம்பானியும்
இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தில் உள்ளார். கடந்த ஓராண்டில் அவரது சொத்து இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அதானி 5,88,500 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள் ளார். அதானியின் அடுத்த வரிசையில் உள்ள 9 பணக் கார வணிகர்களின் சொத்துக்களை இணைத்தால் தான் அவரை நெருங்க முடியும். 2022இல் முகேஷ் அம்பானி, அதானிக்குப் பிறகு இரண்டாவது பெரிய லாபம் ஈட்டியவர். இவர் ரூ. 76,700 கோடிகளைச் சேர்த்தார். ப்ளூம்பெர்க் பில்லியனர் கள் குறியீட்டின்படி, அதானி உலகப் பணக்காரர்க ளில் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். அதே நேரத்தில் முகேஷ் அம்பானி 10ஆவது இடத்தில் உள் ளார். அம்பானி ஒரு நாளைக்கு ரூ.210 கோடி சம்பாதிக்கி றார். அதானி தினமும் ரூ.1,612 கோடி சம்பாதிக்கிறார். 2022ஆம் ஆண்டு சமத்துவமின்மை பற்றிய கில்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள நூறு பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 2021-இன் 57.3 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. மறுபுறம், 2020 ஆம் ஆண்டில் 4.6 கோடி இந்தியர்கள் கடுமையான வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
தீவிரமடையும் சமூக சமத்துவமின்மை
இந்தியாவின் பெண் தொழிலாளர் வருமானப் பங்கு 18 சதவீதம் என்றும் இது உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும் என்று உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை (சீனாவை தவிர்த்து) ஆசியாவின் சராசரியான 21 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் பெண்களை விட ஆண்கள் ரூ.4000 அதிகம் சம்பாதிப்ப தாகவும், முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாத வர்கள் ரூ.7000 அதிகம் சம்பாதிப்பதாகவும், சாதி அமைப்பில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் பழங்குடியினர் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது 5 ஆயிரம் ரூபாய் குறைவாகவே பெற்றுள்ளனர் என்றும் 2004 முதல் 2020 வரையிலான பல்வேறு சமூகக் குழுக்களிடையே வேலைகள், ஊதியங்கள், உடல் நலம் மற்றும் விவசாயக் கடன்களுக்கான அணுகல் குறித்த அரசாங்கத் தரவுகளை ஆய்வு செய்த ஆக்ஸ்பாம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கோவிட் 19 தொற்று நோயின் ஆரம்ப மாதங்களில், வேலையின்மை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோடியின் பாசாங்கு
இத்தகைய கடுமையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் தனது வர்க்கச் சார்பு மற்றும் திறமையின்மையை மறைக்க முயல்கிறது. சமத்துவமின்மை, பசி, வறுமை, வேலை யின்மை ஆகியவற்றை மறைத்து, அதை தனது ‘வேலை வாய்ப்பு முகாம்கள்’ மூலம் தீர்க்க முடியும் என்று பாசாங்கு செய்து வருகிறது. பல்வேறு அரசுத் துறைக ளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரந்தர ஊழியர்களைக் கொண்டு நிரப்ப மறுக்கிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்த போராட்டமும் வகுப்புவாத பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டமும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். மதம், சாதி, பிரதேசம், மொழி, பாலினம் ஆகிய வற்றைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையை வலுப் படுத்தும் முயற்சிகள், தொழிலாளர்கள் எங்கிருந்தா லும்- பணியிடங்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதி களில் - மேற்கொள்ளப்பட வேண்டும். நவீன தாராள மயக் கொள்கைகள் பணியிடங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவது மட்டுமல்ல; தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை நிலை மைகளையும் தாக்குகின்றன. வீட்டு வசதி, பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கான உரிமைகளுக்கான போராட்டங்களை, சிஐடியு குழுக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பணிபுரியும் பிற வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து மேற் கொள்ள வேண்டும். அவர்கள் எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், தொழிற்சங்கம் தமக்கென்று இருக்கிறது என்ற நம்பிக்கையை தொழி லாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வீட்டு அடிப்படையி லான தொழிலாளர்கள் விஷயத்தில், இது ஒன்றுபட்ட செயல்களில் நம்பிக்கையை உருவாக்குவதோடு, தொழிற்சங்கமயமாக்கலுக்கும் உதவும்.
அது மட்டுமல்ல; இன்று குடியிருப்புப் பகுதிகள் மதவெறி சக்திகளின் வகுப்புவாதப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் இடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. இது உள்ளூர் மக்களைத் திரட்டி, வீட்டு விவகாரங்கள் மற்றும் பண்டிகைகளை பொது நிகழ்ச்சி களாகவும் காட்சிகளாகவும் மாற்றுகிறது. கடவுள், மதம், பண்டிகைகள் போன்றவை அனைத்தும் விற்பனைப் பண்டமாக்கப்பட்டு வணிகமாக்கப்பட்டுள்ளது. வகுப்பு வாத சூழ்ச்சிகளை முறியடிக்க குடியிருப்புப் பகுதிகளில் தீவிரமாகத் தலையிட்டு அறிவியல் சிந்தனையை மக்களிடையே பரப்ப வேண்டும். இன்று நாம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பணி இது. இந்தச் சவாலை திறம்பட எதிர்கொண்டு, நமது அரசியலமைப்பின் நோக்கமான- சுரண்டலற்ற சமு தாயத்தை அடைவதற்கான பாதையில் முன்னேறிச் செல்வோம்.
பெங்களூருவில் ஜன.18அன்று துவங்கிய சிஐடியு அகில இந்திய மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து