articles

img

“காதப் பொத்துனா, உலகமே விரிஞ்சுது”

“சார்...  இன்னிக்கு நான் ஒரு கதை சொல்லட்டா..”
“ஓ... தயாராதான் வந்துருக்க போலருக்கு.”
“ஆமா சார்.. நீங்க சொன்ன ஜெராக்ஸ் மாதிரி தேடுனேன்... வேற ஒண்ணு கிடைச்சுது..”
“முன்னாடி வா.. எல்லாருக்கும் சொல்லு.”
“எங்கள மாதிரி பையன் ஒ ருத்தன டீச்சர் ரொம்ப சத்தம் போட்டுருக்காங்க... அவனப் பாத்து அடிக்கடி அவங்க சத்தம் போடுவாங்களாம்.. “
“வகுப்ப விட்டு வெளியே போய், ரெண்டு காதையும் பொத்திக்
கிட்டானாம்.. வேற உலகம் விரிஞ்சுச்சாம்.. அவனுக்கு எல்லாமே புடிச்சுருந்துச்சாம்..”
“ரொம்ப நேரம் வெச்சுருந்தா கை வலிக்குமே..”
“ஆமா.. இதத்தான் அவனும் யோசிச்சானாம்..  அந்தப் பையனோட கண்டுபிடிப்புதான் காதுறை(ear-muff).” 
“இப்போ நாம பாட்டு கேக்குறதுக்கு கூட அந்த வடிவத்துல வெச்சுருக்கோம்..”
“ஆமா சார்... குளிர் தாங்குறதுக்கும்தான்.. முதல்ல எங்க வீட்டுக்கு ஒண்ணு வாங்கணும் சார்... எங்க தாத்தாவும், பாட்டியும்
அத மாட்டிக்கிட்டாங்கன்னா சண்டையே வராது..”
“சண்டை போடுறப்ப கவனம் சிதறாம இருக்குறதுக்கும் அதுதான பயன்படுது.”
“ஆமா... உலகப் போருல கூட வீரர்கள்லாம் மாட்டிக்கிட்டாங் களாம்..  எதுக்கு சார் சண்டை போட்டாங்க.”
“எதுக்கு... பணத்தாசைதான்.” மாணவர் ஒருவர்.
“நிறைய இருக்கு.. பிற நாட்டுல இருக்குற கச்சாப் பொருட்கள்,
அப்புறமா சரக்குக்கான சந்தைனு ரெண்டு முக்கியமான காரணங்கள்லான உலகப் போர்கள் வந்துச்சு.”.
“இந்தியா அப்புடி இதுவரைக்கும் சண்டை போட்டுருக்கா சார்.”
“இல்லை.. விடுதலைக்குப் பிறகு நடந்த சண்டை எல்லாமே நம்ம நிலப்பகுதியைப் பாதுகாக்கத்தான்.”
“இதுக்காக வருஷா வருஷம் போர்ப்பயிற்சி நடத்திக்
கிறோமா..?”
“பொதுவா நாம அமைதியை விரும்புற நாடு... இருந்தாலும் பாதுகாப்புக்காக பயிற்சி பண்ணிக்குறோம். அமெரிக்கா வருஷா வருஷம் போரையே நடத்திக்குது.” 
“அவங்களுக்கு செலவாகாதா சார்..?”
“ஆகும்.. அந்தச் செலவ ஏதாவது ஒரு நாட்டு மேல போட்டுருவாங்க... ஒரு தடவ இராக் மேல படையெடுத்தாங்க... அதுக்கான செலவ சவூதி அரேபியா மேல போட்டாங்க.”
“ஓ... இப்ப கூட உக்ரைனுக்கு ஆதரவா நிக்குறாங்களே.”
“ஆமா... அமெரிக்காவோட ஆயுத உற்பத்தி நிறுவனங்கள்லாம் பரபரப்பா ஆயுதங்கள உற்பத்தி பண்ணிட்டே இருக்காங்க.. அவங்
களுக்கான சந்தையா உக்ரைன் இருக்கு... உலகத்துல எங்க 
சண்டை நடந்தாலும் அதுல அமெரிக்காவுக்குப் பங்கு இருக்கும்.”
“சண்டை நின்னா அமெரிக்காவுக்கு நஷ்டமாயிருமோ சார்.”
“பொருளியல் வகுப்புல சார் சொன்னாரே... பட்ஜெட்டுல துண்டு விழும்னு. அதான சார்..”
“ஆனா ஆயுதம் வாங்குற நாட்டுக்கு பெரிய போர்வையே விழும் போலருக்கே சார்.”
“ஆமா.. உலகம் முழுக்க 2022ல மட்டும் 1,79,20,000 கோடி ரூபாய் ராணுவத்துக்கு செலவு பண்ணிருக்காங்க.”
“ஒரு கோடியே 79 லட்சத்து 20 ஆயிரம் கோடியா... அடேங்கப்பா.. இதுக்கு எத்தனை சுழி வரும் சார்.”
“எழுதிப் பாத்தா வந்துருமே.. இத வெச்சு உலகம் முழுக்க சுகாதாரம், கல்வி, காவல்துறை, மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவ பண்ணிர முடியும்னு சொல்றாங்க.” 
“மக்கள் கேக்கலாம்ல சார்.”
“மக்கள்னா யாரு.”
“எங்க அப்பா, அம்மா, பக்கத்து வீட்டுக்காரங்க... நீங்க.. எச்.எம்., நம்ம சயின்ஸ் சாரு”
“ஏன்.. நீ இந்த லிஸ்ட்ல வர மாட்டியா..?”
“எனக்கு 18 வயசாகனும்ல சார்... அப்ப கேப்பேன்.”
“சார்... அவன் ஓட்டுப் போடுறதச் சொல்றான் சார்.”
“ஓட்டு போட்டா மட்டும் போதாது... இது மாதிரி விஷயம்லாம் நாம பேசிட்டே இருக்கணும்.. அதான் ஜனநாயகம்.”
“அமெரிக்காதான் ஜனநாயகத்தப் பத்தி அதிகமா பேசுற மாதிரி இருக்கு சார்.”
“டேய்... இதுக்கும் சேர்த்துதான் அந்தக் காதுறை கண்டு
பிடிச்சாங்க.. இனிமே அவங்க பேசுறப்ப காதப் பொத்திக்கிட்டா உலகமே விரியும்.”
“அது சரி.. டீச்சர் கிட்ட திட்டு வாங்குனஅந்தப் பையன் பேரயே சொல்லலையே.”
“செஸ்டர் கிரீன்வுட். சார்.”