articles

img

சமூக நீதிக்கு இனம் மட்டும்தான் வரையறையா? - க.கனகராஜ்

பாஜக தலைமையிலான கூட்டணியின் குடி யரசுத் தலைவர் வேட்பாளராக திருமதி திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதை யொட்டி சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் - தாங்கள் சமூக நீதியை முற்றிலுமாக கடைபிடிப்பவர்கள் என்று  பீற்றித் திரிகிறார்கள். ஒரு இஸ்லாமியரான அப்துல் கலாமையும், பட்டியலினத்தவரான ராம்நாத் கோவிந்த்தையும் குடியரசுத் தலைவராக்கியதைப் போலவே தற்போது முர்மு என்கிற பட்டியல் - பழங்குடி யினத்தவரை குடியரசுத் தலைவராக ஆக்கப்போகிறது பாஜக கூட்டணி. எனவே, சமூக நீதியின் உச்சம் தொட்டவர்கள் நாங்கள் தான் என்று தங்களைத் தாங்களே கொண்டாடிக் கொள்கிறார்கள்.

பழங்குடியினரா? வனவாசியா?

முர்முவின் குடும்பத்தை பழங்குடியினர் என்றோ, ஆதிவாசிகள் என்றோ சங் பரிவாரத்தினர் அவர்களை அழைப்பது கிடையாது. மாறாக, ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது என்று ஒருவருக்கு தோன்றக் கூடும். ஆனால் பெயரை ஒருவருடைய கண்ணோட்டமும் பிரதிபலிக்கிறது. பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகள் என்று சொல்கிற போது இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் என்கிற ஆழ மான பொருள் அதற்குள் புதைந்திருக்கிறது. ஆனால், வனவாசிகள் என்று சொல்கிற போது அவர்கள் வனத்தில் வசிப்பவர்கள், வனத்தில் வசிப்பதற்கு என்றே  உருவாக்கப்பட்டவர்கள் என்கிற கருத்தும் ஆழமாக  பொதிந்து கிடக்கிறது. இரண்டிற்கும் உள்ள அடிப்படை யான வேறுபாடு அப்பெயரை இட்டவர்களின் சமூகப் பார்வையில் பிரதிபலிக்கிறது.

அப்துல்கலாமும், ராம்நாத் கோவிந்தும்

2002ல் குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அப்துல்கலாம் குடியரசுத் தலை வராக இருந்தார். ஆனால் குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீது வன்கொடுமை ஏவப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் காய மடைந்து, லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங் களை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட போது என்ன பேசினார் என்பதை நாடறியும். சொல்லப்போனால் ஓய்வுபெற்ற பிறகு தனது புத்தகத்தில் தான், ‘‘குஜராத் அட்டூழியங்களுக்கு பிறகு அந்த மாநிலத்திற்கு செல்வதை வாஜ்பாய் விரும்பவில்லை’’ என்று புலம்பி யதைத் தவிர வேறு என்ன செய்ய முடிந்தது? ராம்நாத் கோவிந்த் 2016ல் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா கொல்லப்பட்ட போது வாய் திறந்தாரா? அவர் தலித் என்கிற காரணத்தினால் ஒடுக்குதலுக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளானதால் கொல்லப்பட்டவர் தானே. அதே ஆண்டில் குஜராத்தின் உனாவில் மாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகள் கட்டி வைக்கப்பட்டு தோலுரிக்கப்பட்ட போது ராம்நாத் கோவிந்த் வாய் திறந்தாரா?, கண்ணீர் விட்டாரா? கண்டித்துப் பேசினாரா? 2020ம் ஆண்டில் அவர் குடியரசுத் தலைவரான பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ்ஸில் 19வயது பட்டியலின பெண் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவம் மறுக்கப்பட்டு, அவர் அளித்த புகார் மறுக்கப்பட்டு அவர் உயிர் பறிபோன பிறகும், அவரது பெற்றோர் கூட நெருங்க முடியாதபடி இரவு நேரத்தில் அநாதைப் பிணம் போல எரிக்கப்பட்ட போது ராம்நாத் கோவிந்தால் பேச முடிந்ததா? வருத்தமடைந்தாரா? கண்டனம் தெரிவித்தாரா? ஒருவேளை மூடிய கதவுகளுக்கு பின்னால் கண்ணீர் வடித்திருப்பாரா என்பது கூட கேள்விக்குறியே!

பெண்ணுரிமை

திரௌபதி முர்மு அவர்கள் ஒரு பெண் என்பதால்  ‘பெண்களுக்கு கொடுத்த மரியாதை’ என்றும் சங் பரிவாரத்தினர் பேசித் திரிகிறார்கள். பெண்கள் பற்றிய சங்பரிவாரின் பார்வை என்ன? அரசமைப்புச் சட்டத்தில் மநுஸ்மிருதியின் அம்சங்கள் இணைக்கப் பட வேண்டும் என்பவர்கள் தானே சங்பரிவாரக் கும்பல்கள். மநுஸ்மிருதி, பெண்களை எப்படி மதித்திருக்கிறது. மனுசியாகவா? புழுவிலும் கீழாக அல்லவா? புழு தவறு செய்தால் தண்டிக்கச் சொல்லி  மநுஸ்மிருதி கூறவில்லை. ஆனால், பெண் ஒரு சுய மரியாதை கொண்ட மனுசியாக நடந்து கொண்டால் என்ன தண்டனை என்று எழுதியிருப்பதை வாசிக்கவே மனம் நடுங்குகிறது. சமீபத்தில் கூட ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன் பகவத் ‘‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம். ஆண் வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டும். பெண்  குழந்தை பெற்று குடும்பத்தை பராமரிக்க வேண்டும்.  பெண் வேலைக்குச் சென்றால் இந்த சமூக ஒப்பந்தம் சீர்குலைக்கப்படும். குடும்பம் சிதைந்து போகும்’’ என்று தானே சொன்னார். அவருடைய கூற்றுப் படி குடியரசுத் தலைவர் பொறுப்பிற்கு பெண் வருவதையே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பாசிசத்தில், வெட்டினால் கூட பிரிக்க முடியாத குணம் சந்தர்ப்பவாதம். அந்த சந்தர்ப்பவாதம் தான்  இந்திய மக்களை ஏமாற்ற இப்படியொரு முடிவெடுக்க வைத்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்கிற இளம்பெண் இறந்துபோன கணவனை எரிக்கும் தீயில் உயிரோடு தூக்கி வீசப்பட்டார். எரிந்தே சாம்ப லாகி போனார். அவளது கூக்குரல் இந்தியா முழுவதிலு மிருந்து மனசாட்சியுள்ள மனிதர்களை தட்டியெழுப்பி உரத்து பேச வைத்தது.  உடன்கட்டை என்கிற கொடுஞ்செயலை உடனே நிறுத்து என்று ஓங்கி பேச  வைத்தது.  இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த - பாஜக தலைவராக இருந்த ராஜ மாதா விஜய ராஜே சிந்தியா உடன்கட்டை ஏறுதல் குறித்து என்ன கூறினார்? ‘‘உடன்கட்டை பெண்களின் பெருமையை காப்பா ற்றுவதற்காக நாங்கள் கடைபிடிக்கும் உன்னதமான நடைமுறை. கற்பைப் பாதுகாக்க அதன் மூலம் பெண்களின் கண்ணியத்தையும், மேன்மையையும் பாதுகாக்க கடைபிடிக்கப்படும் நடவடிக்கை இது. அரசு  தடுக்கக் கூடாது. அதிகாரிகள் அரசின் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது’’ என்று கூப்பாடு போட்டு ஊர்வலம் போனார். சங்பரிவாரின் அங்கம் அல்லவா  அவர்! எனவே, ஒரு பெண்ணை குடியரசுத் தலைவர்  வேட்பாளராக நிறுத்திவிட்டதால் பெண்களை பெருமைப் படுத்திவிட்டோம் என்று பேசுவது அப்பட்டமான அபத்தக் களஞ்சியம். பெண்ணை முன்னிறுத்தி பெண்ணடிமைத்தனத்தை திணிப்பதும், கொண்டாடுவதும் சங்பரிவாரின் இயல்பு.

மோடியும்,  இதர பிற்படுத்தப்பட்டோரும்

‘‘மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர். பிரதமர் ஆனவர்களில் பலரும் உயர்சாதியினர். ஆனால், பிற்பட்ட வகுப்பினராகிய மோடி ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் பிற்பட்டோர் நலன் பாதுகாக்கப்படும் என்று  உரத்த முழக்கத்தோடு சங்பரிவார் பேசியது. மோடி  ஆட்சிக்கு வந்தார். ஆனால், பிற்பட்டோர் அதனால் பெற்ற பலன் ஏதாவது உண்டா?. மருத்துவ படிப்பு களுக்கான சேர்க்கைகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டி லிருந்த 15 சதவிகித இடங்களில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டது. மோடி கொடுத்தாரா? இல்லையே?. உச்சநீதி மன்றம் சென்று தான் உத்தரவாதப்படுத்த முடிந்தது.  அத்தனை பொதுத்துறைகளையும் அடியோடு விற்பதற்கு திட்டம் போடும், திட்டமிட்டு சிலவற்றை விற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி எங்கிருந்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உத்தர வாதப்படுத்துவார்? மோடி அமைச்சரவையிலும் முந்தைய வாஜ்பாய் அமைச்சரவையிலும் இஸ்லாமியர் சில பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அவர்கள் இந்தியா விற்கு சங்பரிவாரின் ஆட்சிதான் சரியான ஆட்சி என்று  பிரச்சாரம் செய்தார்கள். பாஜகவிற்கு வாக்குகள் கேட்டார்கள். இந்த ஆண்டு ஜூலை முடிகிற போது இந்திய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக ஆளும் கட்சியின் சார்பாக இஸ்லாமியர்கள் எவரும்இல்லாத நாடாளுமன்றம் இருக்கப்போகிறது. ஷாநவாஸ் உசேன், நஜ்மா ஹெப்துல்லா என்று இங்கொன்றும், அங்கொன்றுமாக சில இஸ்லாமியர்களை வைத்துக் கொண்டு பாம்பாட்டி வித்தைக் காட்டிக் கொண்டிருந்த பாஜக இப்போது தான் வைத்திருக்கும் 1000க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்று மகிழ்ச்சி பொங்க கொக்கரித்துக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. ஒரேயொரு அப்துல் கலாமுக்கு குடியரசுத் தலைவர் பதவியும், ஒரு சில  இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து விட்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பிரதி நிதித்துவம் அற்றவர்களாக மாற்றும் ஏமாற்று வித்தை சங்பரிவாருக்கு கைவந்த கலை.

இதுவொருபுறமிருக்க திருமதி முர்மு, ஜார்கண்டில் ஆளுநராக இருந்த காலத்தில் சுரங்கங்கள் வெட்டுவதற்காக, ஆலைகள் கட்டப்படுவதற்காக பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் லாபவெறிக் காக ஆதிவாசி மக்கள் அடித்து துரத்தப்பட்ட போது மவுனமாக வேடிக்கை பார்த்தவர் தானே! எனவே, ஆர்.எஸ்.எஸ். என்கிற பாசிசத் தன்மை கொண்ட அமைப்பால் வழிநடத்தப்படுகிற பாஜகவின் தலைவர்கள் எவரும் அவர்களின் இயல்புலேயே சமூக நீதி காப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி ஏதாவது சமூக நீதி நாடகத்தை எப்போதாவது அரங்கேற்று கிறார்கள் என்றால் அது அந்த பகுதியினரை உச்சபட்ச மாக ஏமாற்றுவதற்கான ஒரு தந்திரம் என்பதை தவிர வேறொன்றுமில்லை. 

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர்

 

;