articles

img

நாற்பது ரூபாய்க்கு பென்சில் நாங்கள் எப்படி வாங்க முடியும்? - மீரா சீனிவாசன்

இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போருக்கு  பிறகும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளா தார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் சந்திக்கும் சொல்லொண்ணா வாழ்வியல் துயரங்கள் கவலை தருவதாக உள்ளன.

பட்டினியின் விளிம்பில்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்க் காவல்துறை தீவினைச் சார்ந்த தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூர்வகுடிகளான தமிழ்ப் பெண்கள் இன்றும் வறுமையின் விளிம்பில் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுடைய அன்றாடத் தேவைகளை சமாளிக்க குறைந்த தினக்கூலிக்கு நண்டு உடைக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச்  மாதம் நண்டுப் பிடிப்புக்கான நல்ல பருவம் என்பதால் அந்த மாதம் முழுவதும் உள்ளூர் நண்டு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அத்தியா வசிய பொருட்களின் செலவுகளை சமாளிக்க நீண்ட  நேரம் வேலை செய்கிறார்கள் அவர்கள். வடக்கு யாழ்ப்பாணம் தீபகற்பத்திற்கு வெளியே, ஒரு சதுப்பு நிலத்தின் குறுக்கே உயர்ந்திருக்கிற பாதை வழியே இணைக்கப்பட்டுள்ள கய்தஸ் தீவில் உள்ள  இந்த கடற்கரை கிராமத்தில் வசிக்கின்ற இம்மக்கள் பட்டினியின் விளிம்பில் இருக்கிறார்கள்.  நசுங்கிப்போன பொருளாதாரத்தின் மத்தியில்  இலங்கை  தொடர்ந்து கடுமையான உணவுப்பொருள், மருந்து, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்தித்து வருவதால்,  மக்களின் வாழ்வாதாரமானது அழிந்து வருகிறது. சந்தையில் மண்ணெண்ணெய் கிடைக்காததால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க  தங்களது படகுகளை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். மீன்பிடி இல்லாததால், நண்டு உடைக்கும் தொழிற்சாலைகளில் வேலைசெய்து வரு மானம் பெற்று வந்த பெண்கள் வேலையற்றவர்களாக மாறி இருக்கிறார்கள். உள்ளூரில் மீன் விற்பது அல்லது எடுத்துச் செல்வது, சுத்தம் செய்வது போன்ற அது சார்ந்த வாழ்வாதாரங்களை நம்பி பிழைப்பு நடத்தி  வந்த மற்ற கிராமங்களின் நிலையும் இதே தான்.  இலங்கை தீவின் தெற்கில் இருக்கின்ற மீனவர்களில் பெரும்பான்மையினர் டீசலில் இயங்கும் இராட்சத படகுகளை பயன்படுத்தி வருகிற நிலையில், மீனவர்களில் 90 சதவீதத்தினர் வாழுகிற வடக்குப் பகுதியில் மண்ணெண்ணெய் பயன்படுத்தியே படகுகளை இயக்கும் நிலையில் உள்ளார்கள். 

நிலைகுலைந்த வாழ்வாதாரம்

2009-ல் முடிந்த உள்நாட்டு போருக்குப் பிறகு  வறுமையும், வேலையின்மையும்  வேரூன்றி இருந்த  நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியும் அவர்களுடைய வாழ்வாதாரத்தையே நிலை குலையச் செய்திருக்கிறது.  போரின் போதும்  மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகளைத் தேடி  குறைந்தபட்சம் இரண்டு முறையாவது அங்கிருந்து  இடம் பெயர வைக்கப்பட்டனர். இன்னும் சில  குடும்பங்கள் வேறு வழியின்றி விடுதலைப்புலி களுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் உச்சகட்ட போர் நடந்த கிழக்கு கடற்கரைப் பிராந்திய பகுதியான முள்ளிவாய்க்காலுக்கு  இடம்  பெயர்ந்தனர். அங்கு தான் அனைத்து வன்முறைக்கும் வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் பலியாகினர். இன்று வரை காணாமல் போனவர்கள் குறித்த எந்த ஆதார சுவடும் கிடைக்கவில்லை.

போரின்போது பூர்வ குடிகளான தமிழர்களில் ஆண்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு கடுமையாக தாக்கப் பட்டார்கள். இதனால் அந்த குடும்பங்களில் ஆண்கள்  வேலைக்கு செல்ல இயலாமல் பெண்கள் குறைந்த கூலிக்கு நண்டு  உடைக்கும் வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகளும் படிப்பைத் தொடர முடியாமல் அவர்களும் நண்டு உடைக்கும் வேலைக்கு தள்ளப்பட்டார்கள்.  இன்றும் அந்த  நிலை மாறவில்லை. வேலைக்குச் சென்றாலும் கூட,  அந்த குடும்பங்கள் பல நேரங்களில் உயிர் வாழ்வதற்கு  ஒரு வேளை உணவை மட்டுமே எடுத்துகொள்கிறார் கள். அங்கு இருக்கக் கூடிய பெண்கள் மாதத்தில் 25 நாட்கள் வேலைக்குச் சென்றாலும் அவர்களுடைய மாத வருமானமாக இலங்கை ரூபாய் மதிப்பில் 16,500 அதாவது இந்திய மதிப்பில் வெறும் 3,590 ரூபாய் மட்டுமே கூலி பெறுகின்றனர். அவர்களின் உழைப்பு  அங்கு சுரண்டப்படுகிறது என்று தெரிந்தும் வேறு வழி யின்றி பெண்கள் குடும்ப சுமையை சமாளிக்க வேலைக்கு செல்கின்றனர்.  அந்த பகுதியை சார்ந்த  பெண்கள் தொழிற்சாலையில் ஒரு நாள்  முழுவதும் ஏ.சி அறையில் கால் கடுக்க நின்று வேலை செய்தால்  மட்டுமே அவர்களுடைய குறைந்தபட்ச மாத வருமானத்தையாவது  எட்ட முடியும்.   எப்போதாவது கிடைக்கும் இந்திய மக்களின்  உதவியால்  வந்தடைந்த எரிபொருளைக் கொண்டு கடந்த மாதம் இப்பகுதி மீனவர்களால் கடலுக்குச் செல்ல முடிந்தது.  ஆனால், எத்தனை காலம்  வெறும்  உதவியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த முடியும் என்று பெண்கள் தங்கள் வேதனை குரலை  பதிவு செய்கிறார்கள்.

யார் பொறுப்பு?

தமிழ் மக்கள் குறித்தும் அவர்களுடைய வாழ்வியல் மற்றும் அந்நாட்டின் ஒட்டு மொத்த  பொருளாதாரம் குறித்தும் இலங்கை அரசிடம் போதிய  திட்டமிடல் இல்லாத நிலையை அங்குள்ள விவசாயிகள்  மிகுந்த ஆக்ரோசத்தோடு தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில்  கரிம உரங்கள் விநியோகம் தொடர்பான அரசாங்கத்தினுடைய மோசமான  திட்டத்தினால்  விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவாக, பயிர்கள் பயிரிடுவதில் 50 சதவீதம்  சரிவு ஏற்பட்டு, மீண்டும் விவசாயம் செய்ய முடியாத  நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். போருக்கு பிறகு நெல் விளைச்சலில் தன்னிறைவு பெற்று இருந்தாலும், கொரோனா காலத்தில் அரசாங்கத்தினுடைய கொள்கைகளால்  இலங்கையின் முக்கிய வாழ்வாதார மான கிராமப்புற கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி என்பது முற்றிலும் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக அரிசி கிடைப்பது என்பதும் கூட அரிதாக மாறியிருக்கிறது.

வளங்கள் குவிந்து கிடந்தாலும்

வியக்க வைக்கும் அளவிலான கடல் வளங்களை  கொண்டிருக்கக் கூடிய தீவுகளில் வசிக்கும் மக்கள் கூட அவர்களின் முக்கிய உணவான மீன் உணவு களை எடுத்துக்கொள்வது அரிதாக இருக்கிறது. அவர்களுடைய ஒரே புரத உணவான இறைச்சியும்  சந்தையில்  இந்திய விலைக்கு ரூபாய் 435-ஆக   இலங்கை விலைக்கு 2,000 ரூபாயாக விற்கப்படுவ தால் மாமிசம் எடுத்துக் கொள்வதும் குறைந்துள்ளது. இதனால் குழந்தைகள் எடை குறைந்துள்ளனர். முதி யவர்கள் மேலும் நோய்வாய்ப்படுகிறார்கள். மற்றொரு புறம், 60 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிக மான வட்டி வசூலிக்கும் கொள்ளை நிறுவனங்களான நுண் நிதி நிறுவனங்கள் பெண்களை  சுற்றி வளைத்துள்ளன. வேலை வாய்ப்புகள் இல்லாததால் அவர்களை நம்பி யாரும் கடன் கொடுக்க இயலாத நிலையில், நுண்நிதி நிறுவனங்கள் கூடுதல் வட்டி வசூலிக்கிறார்கள் என்று தெரிந்தும், கடன் வாங்கி யாவது  குடும்பத்தை சமாளிக்க   வேறு வழி இல்லாமல் கடன் வாங்குவதாக  பெண்கள் கூறுகிறார்கள். 

போர்க்காலங்களின் போது  தடைசெய்யப்பட்ட சாலை வசதிகள், மின்சாரம், இணையம்  இவை அனைத்தும் 2009-க்கு  பிறகு மீட்டெடுக்கப்பட்டன. பொதுவாக  போருக்குப் பிறகான மறுகட்டமைப்பு  என்பது அந்த நாட்டின் வளர்ச்சி மற்றும் நிதி திரட்டு தலுக்கான  ஒரு அதிகாரத்துவ உந்துதலோடு  இருக்கும் மாறாக. இலங்கையில் நம்பிக்கையில்லா தன்மையோடும், பாதுகாப்பின்மையோடும் மட்டுமே  மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டார்கள். 

யாருமற்றவர்களாக...

கிளிநொச்சி பிராந்தியத்தை  சேர்ந்த பெண்கள் வளைகுடா  நாடுகளுக்கு வீட்டு வேலை செய்வதற்கு புறப்பட தயாராக இருக்கின்றனர். அதற்காக அவர்கள் ஏஜெண்டுகளிடம் அதிக பணம் கொடுத்து வெளி நாட்டுக்கு செல்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் உடைந்து போயிருக்கின்றன. அவர்களுடைய குழந்தைகள் யாருமற்றவர்களாக வளர்கிற  அவல நிலையும்  இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  மத்திய மற்றும் தெற்கு பிராந்தியத்தில் மலையகத் தமிழர்கள் மீண்டும் வடக்கு மற்றும்  வன்னி, யாழ்ப்பாணம் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டாலும் பத்தாண்டுகளாக வன்முறைகளை மட்டுமே சந்தித்து வருகிறார்கள். 

கிளிநொச்சி பிராந்தியத்தில் தினக்கூலிகளாக, தோட்டங்களில் நகரங்களில் வேலை செய்து வருமானம் ஈட்டுகிற  900 குடும்பங்கள் இருக்கின்றன.  எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு அவர்கள் பணிக்கு செல்வது கடின மாக மாறி இருக்கிறது. அந்நகரத்தில் வசிக்கின்ற 150 பெண்கள் மட்டும் அருகிலுள்ள துணி ஏற்று மதி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற னர்.  அந்த பெண்கள் அனைவரும் தினசரி பணிக்கு  சென்றால்  மட்டுமே  வருமானத்தை ஈட்ட  முடியும். ஒரு வர் பணியில் இருந்து விடுபட்டாலும் அவர்களின் ஒட்டு மொத்த  குழுவும் இழப்பை சந்திக்க நேரும். இதனால் இந்த பெண்கள் ஓய்வை மறந்து குழந்தை கள் மற்றும் உறவினர்களை கவனித்து கொண்டு தினமும் அதிகாலை  2 மணிக்கே எழுந்து  வீட்டு  வேலைகளை  முடித்துவிட்டு வேலைக்குசெல்கின்றனர்.

மாற்றம் நிகழ்ந்திருந்தால்...

பெண்கள் தங்களுடைய வீட்டு செலவினங் களுக்கே அல்லாடும் போது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு  மிகுந்த சிரமப்படுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு 70 ரூபாயாக இருந்த  புத்தக விலை தற்போது 160 ரூபாய். 10 ரூபாயாக இருந்த பென்சில் 40 ரூபாய். குழந்தைகளிடம் எப்படிச் சொல்வது பென்சில் வாங்கி கொடுக்க முடியாது என்று கூறுகிறார்கள் அந்த பெண்கள். 

இன்று இலங்கையை பொருளாதார நெருக்கடி முற்றுகையிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே போர் முடிந்த பிறகும் கூட இலங்கை ஆட்சி யாளர்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை எவ்வாறு நடத்தினார்கள்? இனப் பிரிவினையை பேசித் தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ன செய்தது? போருக்குப் பிந்தைய காலத்தில் மறுவாழ்வுக்காக எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிற அனைத்து முயற்சிகளும் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துவிட்டனவே! ஒரு அடிப்படை அரசியல் மாற்றம் நிகழ்ந்து இருந்தால் நாங்கள் எங்களது பொருளாதாரத்தை நெருக்கடியில் சிக்காத அளவிற்கு கட்டி இருப்போம்; இன்று நாங்கள் இப்படி இருந்திருக்க மாட்டோம் என்கிறார்கள் முல்லைத் தீவு பெண்கள்.

நன்றி : தி இந்து (ஆங்கிலம்), 18.6.22,  தமிழில் சுருக்கம் : சோயா காஸ்ட்ரோ





 

;