articles

img

பொன்விழா கண்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் - ஆறுமுக நயினார்

பொதுத்துறையின் சிறப்பு கடந்த 30 ஆண்டுகளாக மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யும் அரசின் திட்டத்தை போக்கு வரத்து கழகங்கள் நிறைவேற்றி வருகின்றன.  மாணவர்கள் பயணத்திற்கான கட்டணத்தில் 56 சதவீதத்தை மட்டுமே அரசிடமிருந்து போக்குவரத்து கழகங்கள் பெற்று வருகின்றன.  மீதி 44 சதவீதத்தை சமூகபொறுப்பு என்ற அடிப்படையில் போக்குவரத்து கழகங்களே ஏற்று வருகின்றன. நஷ்டம் என்று தெரிந்தும் கிராமபுற மலைவாழ் மக்களுக்கு 10,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  சென்னை பெருமழையின்போது மூன்று நாட்கள் பயணிகளை இலவசமாக அரசு பேருந்துகள் ஏற்றி சென்றன. புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் அரசு போக்குவரத்து மட்டுமே இயங்கின.  தொழிலாளர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து பணி செய்தனர். கொரோனா காலத்தில் 50 சத பயணிகளுடன் போக்குவரத்து கழகங்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கின. பயணிகள் குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.  லாபமின்றி சேவையே குறிக்கோள். இதற்கெல்லாம் அரசு தனியாக எவ்வித நிதியுதவியும் செய்வதில்லை.  இருப்பினும் மக்கள் சேவைக் காக லாப நஷ்டம் பார்க்காமல் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு போக்குவரத்து கழகங்கள் பொதுத்துறையாக இருப்பதே காரணம். இதுதான் பொதுத்துறையின் சிறப்பும் ஆகும்.  இடஒதுக்கீட்டு கொள்கையின் மூலம் தமிழகத்தின் 1 1/4 லட்சம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வேலை அளித்து, பொருளாதார மேம்பாட்டிற்கு போக்குவரத்து கழகங்கள் வழி வகுத்துள்ளன.

போக்குவரத்து இன்றி மனிதகுல வளர்ச்சி இல்லை.  ஆதிமனிதன் பிறந்த இடத்தைவிட்டு வாழ்வைத் தேடி பயணமானான்.  கால்நடையாகவே கண்டம் விட்டு கண்டம் சென்றான்.  இடப்பெயர்ச்சி தான் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கால்நடையில் துவங்கிய மனிதனின் பயணம் இன்று ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கிறது.  போக்குவரத்து வசதி எங்கு குறைவாக உள்ளதோ, அங்கு மனித நாகரிக மும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமற்றது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து

தனியாருக்குச் சொந்தமான பேருந்துகள் வியாபார அடிப்படையில் சுயலாபத்திற்காக இயங்குவதால் போக்குவரத்தை நாட்டுடமையாக்க வேண்டும் என போக்குவரத்தை ஆய்வுசெய்ய ஆங்கிலேய அரசு நிய மித்த குழு பரிந்துரை செய்தது.  எனவே சென்னையில் இயங்கிய தனியார் பேருந்துகளை அரசுடமையாக்கி 1946ஆம் ஆண்டு  ஆங்கிலேய அரசு உத்தரவு பிறப்பித் தது. அதையொட்டி அரசுத்துறை பேருந்துகள் சென்னையில் இயங்க ஆரம்பித்தன.  நாடு சுதந்திரம் அடைந்தபின்பு பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த 1950ஆம் ஆண்டு ‘சாலைப்போக்குவரத்து சட்டம்’ கொண்டுவரப்பட்டது.  மோட்டார் வாகனச் சட்டத்தி லும் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பின்பு பயணிகள் பேருந்து தேசியமயக் கொள்கை மேம்படுத்தப்பட்டது.  இதுவே அரசு போக்கு வரத்துக் கழகங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது. சென்னையில் இயங்கிய ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை’ 1972ஆம் ஆண்டு கழகங்க ளாக மாற்றப்பட்டது. சென்னையை தலைமையக மாகக் கொண்டு‘பல்லவன் போக்குவரத்துக் கழகம்’ உருவாக்கப்பட்டது.

மதுரையை தலைமையகமாகக் கொண்டு செயல் பட்ட டிவிஎஸ்-க்கு சொந்தமான  ‘சதர்ன் ரோடு வேய்ஸ்’ தேசியமயமாக்கப்பட்டு ‘பாண்டியன் போக்குவரத்துக் கழகம்’ உருவாக்கப்பட்டது. பொள்ளாச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட்ட ஆனைமலை போக்குவரத்து (ABT) மற்றும் சில தனியார் நிறுவன பேருந்துகள் தேசியமயமாக்கப் பட்டு கோயம்புத்தூரை தலைமையகமாகக் கொண்டு ‘சேரன் போக்குவரத்து கழகம்’ உருவாக்கப்பட்டது.  கும்பகோணத்தில் செயல்பட்ட ராமன் அண்ட் ராமன் கம்பெனி, ராமவிலாஸ் கம்பெனி, பொறையார் சக்தி விலாஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு ‘சோழன் போக்குவரத்து கழகம்’ உருவாக்கப்பட்டது.

போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சி

சுமார் 2000 பேருந்துகளுடன் 100 கோடி மூலதனத்து டன் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல். தினமும் 1 கோடி கிலோ மீட்டருக்கு மேல் இயங்கி இரத்த நாளங்கள் போல் தமிழகத்தின் கிராமங்களை யும், நகரங்களையும் இணைக்கின்றன.  கொரோனா காலத்திற்கு முன்பு தினமும் 2 கோடி பேர் பயணம் செய்தனர்.  இந்தியா  முழுவதும் செயல்படும் ரயில்வேயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இரண்டே கால் கோடி பேர்தான்.  அந்தளவிற்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.  இந்தியாவில் செயல் படும் மற்ற மாநில போக்குவரத்து நிறுவனங்களைவிட வாகன பயன்பாடு, டயர் பயன்பாடு, எரிபொருள் சிக்கனம், அதிக பயணிகளை ஏற்றிச்செல்வது போன்ற செயல்பாட்டிற் காக பல்வேறு விருதுகளைப் பெற்று வருகின்றன.

தமிழக வளர்ச்சியிலும், பொதுமக்கள் சேவையிலும் முன்னிலை

இந்தியாவில் அரசுபோக்குவரத்து வலுவாக உள்ள மாநிலங்கள்தான் பொருளாதார வளர்ச்சியில் முன்ன ணியில் உள்ளன.  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மாநிலங்க ளில் மட்டுமே வலுவான அரசு போக்குவரத்து நிறுவனங் கள் உள்ளன.  எனவே  போக்குவரத்து கழகங்களின் வலுவான செயல்பாடும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.  மற்ற மாநிலங்க ளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பயணக்கட்ட ணம் குறைவு.  மாணவர்கள், மகளிர், சென்னையில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உதவியா ளர்களுடன், மூன்றாம் பாலினத்தவர், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அவர்களின் வாரிசுகள், மொழிப் போர் தியாகிகள், புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர், அங்கீக ரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும் அரசின் நலத்திட்டங்களைப் போக்குவரத்துக் கழகங்கள் நிறைவேற்றி வருகின்றன.  மாணவர்கள் இலவசப் பயணம் காரணமாக கடைக்கோடி கிராமத்தில் இருப்பவருக்கும் கல்வி சாத்தியமானது. சாலை உள்ளவரை பேருந்து வசதி (Last Mile Connectivity) என்பதே உலகம் போக்குவரத்து வசதி பற்றி உலகம் ஏற்றுக்கொண்ட உச்சபட்ச வாசகம்.  தமிழக போக்குவரத்துக் கழகங்கள் இதை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றன.  இரத்த நாளங்கள்போல் தமி ழகத்தின் கிராமங்களையும், நகரங்களையும் இணைக் கும் அடிப்படையில் கழக பேருந்துகள் இயங்கி வரு கின்றன.  மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக சுமார் 500 மலை வழித்தட பேருந்துகள் இயங்குகின்றன.

போக்குவரத்து சேவை மட்டுமின்றி கும்மிடிப் பூண்டியில் பல்வேறு வசதிகளுடன் செயல்படும் ஓட்டுநர் பயிற்சி மையமும், கழகங்களில் 26 ஓட்டுநர் பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.  பல்லா யிரக்கணக்கான இளைஞர்களை சிறந்த ஓட்டுநராக உருவாக்கி வருகின்றன. வருடத்திற்கு 2000 பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பெருந்துறையில் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் மற்றும் 3 பாலிடெக்னிக் கல் போக்குவரத்துக் கழகங்களால் உருவாக்கப் பட்டுள்ளது.  போக்குவரத்துக் கழகங்களின் முன் முயற் சியால் துவக்கப்பட்ட போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறு வனம் நம்பகமான நிதி நிறுவனமாக லாபத்துடன் செயல்பட்டு வருகிறது.  தமிழகத்தின் கட்டமைப்புக்கு உரிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படும் ‘பல்ல வன் ஆலோசனை நிறுவனம்’ கழகங்களின் சார்பு நிறு வனமாகும்.  தமிழகத்தின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்துக் கழகங்களின் பங்கு அளவிட முடியாதது.

போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும்

சிறப்பாகச் செயல்பட்டு வரும் போக்குவரத்துக் கழ கங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் உள்ளன.  ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் தொடர்ந்து உயரும் எரிபொருள், உதிரிபாக விலை உயர்வு, டோல்கேட் கட்டணம் போன்றவை கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இப்பேருந்துகளை இயக்கினால் லாபம் இல்லை, நஷ்டம் தான் ஏற்படும் என தெரிந்தே கிராமங்களுக்கும், நகர்ப்புறங்களிலும், மலைவழித்தடங்களிலும் 10,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  சரிபாதி பேருந்துகள் தினமும் 40 லட்சம் கிலோ மீட்டர்களை நஷ்டத்தில் இயக்கும்போது அதை ஈடுகட்ட அரசு எவ் வித நிதியுதவியும் செய்வதில்லை.  அதையும் தாங்கிக் கொண்டு கழகங்கள் இயங்குவதே பெரும் சாதனை. நஷ்டத்தை குறைக்க வேண்டியதுதானே என சில அறிவு ஜீவிகள் வாதம் செய்கின்றனர்.  நஷ்டத்தைக் குறைக்க சுலபமான 2 வழிகள் உள்ளன.  நஷ்டமாகும் வழித்தடங்களில் பேருந்தை நிறுத்துவது அல்லது கட்ட ணத்தை உயர்த்துவது.  இவை இரண்டும் சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும்.  ஏனெனில் நகர் பேருந்துகளை பயன்படுத்துவது சாதா ரண மக்களே.  மறுபுறத்தில் நகர்ப் பேருந்துகள் இயக்கப் படாவிட்டால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் சீர்குலையும்.

எனவே போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும்.  அரசு வழங்கும் நிதி தமிழக மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வழங்கும் மானியமாகும்.  பலவற்றிற்கு மானியம் வழங்கும் தமிழக அரசு ஏழை மக்களின் பயணத்திற்கும் மானியம் வழங்க வேண்டும்.  கழகங்களின் தலையில் சுமத்தக் கூடாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விபத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வேண்டுமெனில் பொதுப்போக்குவரத்தைப் பலப் படுத்த வேண்டும்.  போக்குவரத்து கழகங்களுக்கு நிதி வழங்கி மேம்படுத்துவதன் மூலமே இது சாத்தியம். 50 ஆண்டுகளாக தமிழக மக்களின் வாழ்வோடு பயணம் செய்யும் போக்குவரத்துக் கழகங்களை மேம் படுத்துவோம்.  தொழிலாளர், பயணிகள் உறவைப் பலப் படுத்துவோம்.  தமிழகத்தின் கல்வி, பொருளா தாரத்தை வலுப்படுத்துவோம்.

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்

 

;