articles

img

பொது சிவில் சட்டம் விருப்பத் தேர்வாகவே இருக்க முடியும் - பேரா. கசாலா ஜமீல்

22ஆவது சட்ட ஆணையம் தனது பொது அறிவிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட மத நிறுவனங்களின் கருத்துக்கள், ஆலோச னைகளைக் கோரியுள்ளது.

21ஆவது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள்

இதற்கு முந்தைய 21ஆவது சட்ட ஆணையம் விரிவான ஆய்வுகள் மற்றும் அரசமைப்புச் சட்ட அறி ஞர்களிடம் கலந்தாலோசனை செய்ததன் அடிப்ப டையில், பொது சிவில் சட்டம் மிகப் பரந்து விரிந்ததா கும்; இதனால்  பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறியது. மேலும் சமத்துவத்திற்கான உரிமையோ அல்லது மதச் சுதந்திரமோ முற்று முதலானதல்ல என்றும் கூறியிருந்தது. சமூகங்களுக்குள் சமத்துவத்தை ஏற்படுத்துவதை விட, முதலில் சமூகங்களுக்குள் ஆண் -பெண்களுக்கு இடையில் சமத்துவத்தை உறு திப்படுத்துதற்கான  சீர்திருத்த சட்டங்களை இயற்ற வேண்டும் என வலியுறுத்தியது. தனிநபர் சட்டங்களில் சமத்துவமின்மையை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே , கூடவே ஒரே விதமான பொதுத் தன்மை இல்லாமல் அர்த்தப்பூர்வமான வேறுபாடுகள் பா துகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

22ஆவது சட்ட ஆணையத்தின் முறையற்ற செயல்பாடுகள்

22 ஆவது சட்ட ஆணையம் பொதுவெளியில்,  பொது சிவில் சட்டம் பற்றி எந்த விளக்கமும் வெளியிட வில்லை. சட்ட ஆணையமோ அல்லது சட்ட அமைச்சக மோ பொது சிவில் சட்டம் பற்றிய வரைவறிக்கை எதையும்  வெளியிடவில்லை. ஆனால் பொது சிவில் சட்டம் பற்றி கருத்து தெரிவிக்குமாறு மக்களை கோரு வதைப் பற்றி  விளங்கிக் கொள்ள முடியவில்லை. 21ஆவது சட்ட ஆணையம் 2018 இல் வெளியிட்ட ஆலோ சனை ஆவணம் ஏன் முற்றாக நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணங்களையும் கூறவில்லை. உச்ச நீதிமன்றம், சட்ட அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொது ஆளுமை கள், பல்வேறு அறிவு ஜீவிகள், இன்று கருத்து உரு வாக்கம் செய்யும் மீடியாக்காரர்கள் பொது சிவில் சட்டம் பற்றி விவாதித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த அரசும் இது பற்றி சரியான கருத்துக்களை முன் வைக்கவில்லை. பொது சிவில் சட்டம் எப்படிப்பட்ட தாக இருக்கும் என்று எவருமே கருத்து தெரிவிக்க வில்லை. பொது சிவில் சட்டம் என்பது முழுமையான கற்பனை என்ற அளவுக்கு நிலைமை சென்று விட்டது. ஆனால் ஒன்றிய அரசின்  பொது சிவில் சட்டம் நோக்கிய நகர்வானது  அதன் அரசியல் தந்திரத்தை வெளிப்படுத்துகிறது.

முஸ்லிம்களை  குறி வைத்து பிரச்சாரம்

2014 நாடாளுமன்றத் தேர்தலில்   பாஜக தனது தேர்தல் அறிக்கையில்பொது சிவில் சட்டம் இயற்றப் படும் என்று கூறியிருந்தது. ஆனால் பாஜக அரசு பொது சிவில் சட்டம் குறித்து ஒரு வரைவறிக்கை கூட  வெளி யிடவில்லை. இப்போது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துள்ள காலமும் அதன் பிரச்சாரமும் சமூகப் பிளவை ஏற்படுத்துவதற்கான பாஜகவின் தேர்தல் தந்திரத்தை உணர்த்துகிறது.  லவ் ஜிகாத், நிலங்கள் ஜிகாத் (Land Jihad)என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள உத்தரகண்ட்  முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உச்ச நீதிமன்ற ஓய்வு  பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமை யிலான குழு   பொது சிவில் சட்டம் குறித்து வழங்கியுள்ள ஆலோசனைகளை தனது அரசு அமல்படுத்தும் என்று அறிவித்துள்ளார். இந்த நீதிபதியின் குழுவும் எவ்விதமான வரைவறிக்கையும் இன்றி மக்களின் கருத்துக்களை கோரியுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை அச்சேறத்  தயாராக இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் பொது வெளியிலோ அல்லது உத்தரகண்ட் சட்டசபையிலோ இந்தக் குழுவின் அறிக்கையோ அல்லது சட்ட மசோதாவோ வெளியிடப்படவில்லை.

புரிதல் அற்ற  பொருளற்ற விவாதம்

பொது சிவில் சட்டம் பற்றி பொருளற்ற விவாதங்க ளை முன்வைப்பது பாஜக மட்டுமல்ல. ஏராளமான அரசியல் விமர்சகர்கள், முஸ்லிம் தனிநபர் சட்டங்களை இந்திய முஸ்லிம்களின் பழமைவாதச் சின்னமாக சித்தரிக்கின்றனர். மேலும் இந்து தனிநபர் சட்டங்கள் பாலியல் சமத்துவத்தில்  முழுமை பெற்று விட்டதாகவும் கூறிக் கொள்கின்றனர். பொது சிவில் சட்ட தீவிர ஆதரவாளர்கள், பொது சிவில் சட்டம் இந்து தனி நபர் சட்ட அடிப்படையிலி ருக்கும் என்று கூறுகின்றனர். பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம் தனி நபர் சட்டங்கள் தான் ஒழிக்கப்படும் என்று சித்தரிக்கின்றனர்.விவாதங்கள் அனைத்தும் சட்ட உள்ளடக்கம் இன்றி அரசியல் வெற்றுப் பேச்சுகளாக உள்ளன. பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் இந்து சிவில் சட்டங்களை திணிப்பதே பொது சிவில் சட்டத்தின் சாராம்சமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்கு பின் பாஜகவின் தற்போதைய விவாதம் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்று வதற்கான அடுத்த கட்ட நகர்வாக இருக்கிறது. இந்தியச்  சட்டம் இந்துவாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள பெண்கள் வெவ்வேறு விதமான மரபு வழிச் சட்டங்களை பின்பற்றுகின்றனர். பகுத்தறி வுள்ள எவரும் இந்து மதத்தை பின்பற்றும் பெண்கள் அனைவரும் முழுமையாக விடுதலை அடைந்து விட்டனர் என்று சொல்ல முடியாது. ஆனால் பொது சிவில் சட்டத்தை இயற்றுவதன் மூலம் பாலியல் சமத்து வத்தை அடைந்து விடலாம் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர். இது கடுமையான பணியாகும். அவர்களுக்கு உண்மையான பாலியல் சமத்து வம் மற்றும் சமத்துவமான இந்திய சமுதாயம் பற்றிய தெளிவான கருத்து கிடையாது.

மற்ற சமூகங்களின் மரபு வழி பழக்கங்களை  இந்து சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?

நமக்கு பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் சில உள்ளன. இந்த கேள்விகளுக்கெல்லாம் நமக்கு பதில் தேவை. இந்தியா முழுவதிலும் பல்வேறு சமூகங்கள்  பின்பற்றும் வெவ்வேறு மரபு வழிச் சட்டங்களை (பிரிவு 371 ஏ, 371 ஜி இன் படி, நாகா -மிசோ மக்களின் மரபுவழிச் சட்டங்களை அரசமைப்புச் சட்டம் அங்கீ கரித்துள்ளது) பொது சிவில் சட்டம் ஒழித்துக் கட்டி  விடுமா? இந்து கூட்டுக் குடும்பங்களுக்கான சட்டம் இந்துக்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கிறது.  இதனால் இந்திய கருவூலத்திற்கு ஏராளமான செல வினம் ஏற்படுகிறது. இந்தச் சலுகை முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள், பார்சிகள், யூதர்களுக்கு பொருந்தாது. இஸ்லாமியர்க கள் திருமணத்தின் போது மனைவிக்கு வழங்கும்  பரிசு நிதி “மெஹர் “பழக்கத்தை எல்லா மத மக்களும் ஏற்றுக் கொள்வார்களா? தந்தை வழிச்  சொத்துரி மையை விட மிகவும் மேம்பட்ட மேகாலயா காசி சமூ கத்தினரின் தாய் வழிச் சொத்துரிமையை அனைத்து சமூகங்களும் ஒப்புக் கொள்ளுமா? அரசமைப்புச் சட்ட புரிதல் இன்றி பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிரானது என்று பேசப்படுகிறது. முன்பு எழுப்பிய கேள்விகள் அனைத் திற்கும் இந்துக்களின் பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும்.

அனைத்து மதங்களின் சிறப்பியல்புகளையும் உள்ளடக்கி ஒரு பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட்டா லும் கூட, அதுவும் ஒடுக்குமுறைச் சட்டமாகவே மக்க ளால் உணரப்படும். பிற மதத்தவரின் பழக்க வழக்கங் கள், கோட்பாடுகளைஅனைத்து மதத்தவரும் பின்பற்ற வலியுறுத்துவது ஒருவகை வன்முறை தான். இவை தவிர மிகவும் விரும்பத்தக்க பாலியல் சமத்துவம் கொண்ட குடும்பச் சட்டங்களுக்கு மிகவும் முற்போக்கான பெண்ணிலை விளக்கம் தேவைப்படு கிறது. ஆனால் இவையும் கூட எதார்த்தமற்ற கற்பனா வாதம் என்றே புரிந்து கொள்ளப்படும். இவைகளை எல்லாம் இன்று சட்டத்தை உருவாக்குபவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் பொது சிவில் சட்டமும் ஏன் இணைக்கப்பட்டது

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் பொது சிவில் சட்டத்தையும் சேர்த்திருப்பதன் நோக்கம் என்ன? அரசமைப்புச் சட்டம் பாகம் நான்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில், அன்று அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் முடிவெடுக்க முடியாத சர்ச்சைக்கிடமான பல்வேறு நோக்கங்களையும் இணைத்து விட்டனர். அவற்றின் மீது வருங்கால இந்திய தலைமுறைகள் முடிவெடுக்கட்டும் என்று விட்டுவிட்டனர். எடுத்துக்காட்டாக, டாக்டர் அம்பேத்கர் சாதிய மேலாதிக்கம் மிகுந்த இந்தியச் சமூகத்தில் கிராமப் பஞ்சாயத்துக்கள் ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடு களை சாதி மேலாதிக்கம் தொடர்வதற்கான அனுமதி யாகவே  பார்த்தார். எனவே அன்று ஊராட்சிகள் சட்டம் ஏற்படுத்துவதற்கான பிரிவு 40 அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் இணைக்க மட்டுமே செய்யப்பட்டது. 73 ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் காப் போன்ற சாதி பஞ்சாயத்துகளுக்கு ஒரு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கியே வந்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது என்று உணரப்படவில்லை. இது பாலின சமத்துவமின்மையை தக்க வைத்துள்ளது. அதேபோன்று சட்டப்பிரிவு 48 சர்ச்சைக்குரிய விசயங்களுக்கு சட்டப் பாதுகாப்பை அளித்துள்ளது.இது மாட்டிறைச்சி மற்றும் கால்நடை, தோல் தொழிற் சாலைகள் போன்றவற்றை சுற்றி சட்டம் இயற்றுவ தற்கு வழி வகுத்துள்ளது.

அமைதி காப்பும் புறக்கணிப்பும்

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தும் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதை தெரி விக்கிறது. சட்டப்பிரிவு 44 இல் உள்ள பொது சிவில் சட்டம் மட்டும்தான் அதன் அடிப்படைகள் பலன்கள் பற்றி எதையும் தெரிவிக்காமல் அமைதி காக்கிறது. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள உலக சமாதானம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல், வேலை செய்யும் உரிமை மற்றும் வாழ்வாதாரம் வழங்குதல், தொழிலாளர்களின் உடல்நலம், இலவச சட்ட உதவி இவை எல்லாம் புறக் கணிக்கப்பட்டே வந்துள்ளன. இவைகளை நிறை வேற்ற என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.விளிம்பு நிலை சமூகங்களின் மீது அடங்காத வெறி யுடன் பொருளாதார ரீதியான தாக்குதல்களும், கலாச்சார வன்முறையும் ஏவி விடப்படுகின்றன. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் பொது சிவில் சட்டத்தையும் ஏன் சேர்த்தார்கள் என்பதற்கான விடை தேடி சட்ட அறிஞர்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களை தீவிரமாக ஆராய்ந்து உள்ளனர். அன்றைய நிலையில்,நம் முன்னோர்கள் கூட்டாட்சி என்பது தேச ஒற்றுமைக்கு எதிரானதாக எண்ணிக் கவலையடைந்துள்ளனர்.

பிரதமர் மோடியும் சமீபத்தில் ஒரு நாட்டை இரண்டு விதமான சட்டங்கள் மூலம் ஆட்சி செய்வது எப்படி என்று பேசியுள்ளார்.  முஸ்லிம்கள்  பிரிவினை வாதத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தேசத்தில் சிறுபான்மை யினர் தங்களுக்கான சொந்த சட்டங்களை வைத்துக் கொண்டுள்ளதாகச் சீறியுள்ளார். பொது சிவில் சட்டம் என்பது நமது குடியரசை உருவாக்கிய முன்னோர்களின் கனவு என்று ஒரு மந்திரச் சொல்லாகவே தொடர்ச்சியாக சொல்லப்பட்ட காரணத்தால் அது கட்டாயத் தேவை என்பது போல ஒரு நிலை உருவாகிவிட்டது. ஆனால் அனைத்து சமூகங்கள் மீதும் ஒரே விதமான கலாச்சாரத்தை திணிப்பது தார்மீக நியாயமானதா, பகுத்தறிவு பூர்வமானதா? 

அம்பேத்கரின் உறுதிமொழி

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் முஸ்லிம் மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார். அரசு குடிமக்களுக்கான ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் என்று முன்மொ ழிவு மட்டுமே செய்கிறோம். இது பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் அனைத்து குடிமக்கள் மீதும் திணிக்கப்படும் என்று அர்த்தமாகாது. இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்.அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்வ தாக உறுதிமொழி அளிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று எதிர்காலத்தில் நாடாளுமன்றம் சட்ட வழிமுறைகளை ஏற்படுத்தலாம். தன்னார்வ அடிப்படையில் மட்டுமே பொது சிவில் சட்டம் ஆரம்ப அமலாக்கக் கட்டத்தில் நடக்கலாம் என்று அம்பேத்கர் தெளிவாக குறிப்பிட்டார். 2014 இல் இருந்து ஜிஎஸ்டி, இந்தித் திணிப்பு, மாநில அரசுகளின் அதிகாரங்களை  அபகரித்தல் என்று பாஜக அரசின் மையவாத போக்குகள்  அதி கரித்து வருகின்றன.  ஜனநாயகத்தின் மீதான வெறுப்பாக இரட்டை எஞ்சின் ஆட்சி முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. பாஜகவின் அரசியல் போர் வியூகம் ஒரு புதிய இயல்பு நிலையை அடைந்து விட்டது.

பொது சிவில் சட்டம்  பாஜக ஆட்சியில் சாத்தியமில்லாதது

முற்போக்கான சிவில் சட்டம் உருவாக்கப்படும் என்பது ஒரு மாயை தான். அரசமைப்புச் சட்ட நிர்ணய  சபையில் அம்பேத்கரின் பார்வையின்படி, பொது சிவில் சட்டம் விருப்பத்தேர்வாக இருக்க முடியும். சிறப்புத் திருமணச் சட்டம் போன்று பொது சிவில் சட்டமும் விரும்பி தேர்வு செய்து கொள்வதாகவோ அல்லது வெளியேறுவதாகவோ சட்டம் இயற்றலாம். தனிநபர் சட்டங்கள் குறித்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வது அவசியமாகும். தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் செயல்முறைகளை ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்பானதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சிறுபான்மை மக்களுக்கு உள்ளேயும் ,வெளியேயும் இருந்து தங்களுக்கு மட்டுமே விருப்பமான சீர்திருத் தங்களை கோரும் வலிமையான குரல்களின் கோரிக் கைகளை மட்டும் சட்டமாக்குவதை தவிர்க்க வேண்டும். இந்த செயல்முறைகளை அரசு நிறுவனங்கள் மூலம் ஊக்குவிக்க முடியும். ஆனால் இவை யெல்லாம் நிறைவேற அனைத்து சமூக மக்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கை நிலவும் சூழல் நிலவ வேண்டும்; அனைத்து சமூகங்களும் தமது அரசா னது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சார்பாக இல்லாமல் நடுநிலையாளர் அரசாக உள்ளது; தமது அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் செயலில் ஆக்கப்பூர்வமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்றெல்லாம் நம்பிக்கை அளிக்கும் சூழல் இருக்கும்போது தான் பொது சிவில் சட்டம் உருவாக்குவது சாத்தியம். இன்றைய பாஜக அரசின் கீழ் இவை எல்லாம் நடப்பது சாத்தியமே இல்லாதது.

ஃப்ரண்ட்லைன்,ஆக.11,2023, 
தமிழில்:  ம.கதிரேசன்