articles

img

மொத்த வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்றில் ஒரு பங்கு நிதி ஒதுக்க வேண்டும்

சென்னை, மே 27- அரசின் மொத்த வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு  மூன்றில் ஒரு பங்கு நிதி ஒதுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தினார். மக்கள் அதிகாரத்தை வலுப் படுத்தி, பங்கேற்பு ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம், உள்ளாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்தத் தேவையான நிதி மற்றும் அதிகார பரவலாக்கம் குறித்து தேர்ந்தெடுக் கப்பட்ட உள்ளாட்சி  பிரதிநிதி களுடன் மாநில அளவிலான கலந் துரையாடல் நிகழ்ச்சி சென்னை யில் சனிக்கிழமை (மே 27) நடை பெற்றது.

இதில் ஜி.ராமகிருஷ்ணன்  “நமது பரிந்துரைகளும் கோரிக்கைகளும்” என்ற தலைப்பில் பேசுகையில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மன உறுதியுடன் இருக்கும் வாய்ப்பு களை பயன்படுத்தி 73, 74ஆவது சட்டப் பிரிவு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அதை நிறைவேற்ற கடுமையான முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள் என இது ஒரு மகத்தான அமைப்பு. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றிய அரசோ, மாநில அரசோ மக்களின் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியாது. மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இவற்றின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற நோக்கத்தில்தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப் பட்டது. அதில் ஊராட்சி மன்ற ங்களுக்கு 29 அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது என்றார்.

மாவட்ட திட்டக்குழுவை உருவாக்குக 

ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என தனித்தனி அமைப்புகளாக இருந்தாலும், இவை மூன்றையும் இணைக்கக் கூடியது மாவட்ட நிர்வாகம். 243 இசட் டி என்ற சட்டப் பிரிவு ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சி நீங்க லாக) அனைத்தையும் இணைக்கக் கூடிய வகையில் மாவட்ட திட்டக் குழுவை உருவாக்க வேண்டும் எனக் கூறுகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டனர். மாவட்ட திட்டக் குழுக்கள் கலைக்கப்படவில்லை.  73, 74 சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொண்டு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது 1996ஆம் ஆண்டுதான். அப்போது முதல மைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி இந்த புதிய சட்டங்களின் அடிப்படையில் உள்ளாட்சி அமை ப்புகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக எல்.சி.ஜெயின் நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவர் 200  பக்கம் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தார். உடனே 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதி காரம் வழங்குவதற்கென, ஆலோ சனை வழங்குவதற்கென ஒரு குழு அமைத்தார். அந்த குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் (ஜி.ராமகிருஷ்ணன்), காங்கிரஸ் கட்சி சார்பில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டு அனைத்து அர சியல் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பி னர்கள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் கோ.சி.மணி குழுவின் தலைவராக இருந்தார். அந்த குழு பலவற்றை பரிசீலித்து தனது பல்வேறு பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது.  1998ஆம் ஆண்டு அதை அரசு அறிக்கையாக வெளி யிட்டது. மாவட்ட திட்டக் குழுவிற்கு இனிமேல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்தான் அதற்கு தலைவர் என அறிவித்தார். 

வெறும் அதிகாரம் இருந்து பயனில்லை

ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி ஆண்டு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதை ஒருங்கிணைத்து மாவட்ட திட்டக் குழு ஒரு ஆண்டு திட்டத்தை உரு வாக்க வேண்டும். ஆண்டு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு அதிகாரமும், நிதியும் தேவை. 29 அதிகாரங்களை அளித்து விட்டு, அதற்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை என்றால் அதிகாரம் மட்டும் அளித்து பயனில்லை என்றார்.

சிறப்பு கவனம் செலுத்துக

1998ஆம் ஆண்டு பரிந்துரை அளிக்கும் போது மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்பு களுக்கு 8 விழுக்காடு நிதி ஒதுக் கப்பட்டது. ஆனால் 25 ஆண்டுகள் கடந்த பிறகும் தற்போது வெறும் 10 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப் படுகிறது. குறைந்தபட்சம் 3இல் ஒரு பங்கு நிதியாவது ஒதுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட செயல்பட்டு மக்களின் தேவை களை பூர்த்தி செய்ய முடியும். அரசு இதுகுறித்து சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெண்களுக்கான சட்ட சேவை மைய இயக்குநர் அ.காந்திமதி, முனைவர். கல்பனா, முனைவர்.பழனித்துரை, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, விசிக சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் பி.சுகந்தி, காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி  ,அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.
 

;